Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆரோக்கியத்தைக் காக்கும் போர் வீரர்கள்

ஆரோக்கியத்தைக் காக்கும் போர் வீரர்கள்

ஆரோக்கியத்தைக் காக்கும் போர் வீரர்கள்

கொஞ்ச நாட்களாகவே வெரோனிக்காவிற்கு உடல்நிலை சரியில்லை. அவளுக்கு அடிக்கடி சுவாசக் குழாயில் அழற்சி ஏற்படுவதால் மிகவும் சோர்ந்துபோயிருந்தாள். சமீபத்தில் அவளுக்கு காதிலும் தொற்று ஏற்பட்டிருந்தது. அதோடு சைனஸ் பிரச்சினை வேறு எரிச்சலூட்டியது. ஆகவே பல இரத்தப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருந்தது. ரிசல்டைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர், “மேடம், நோயை எதிர்க்கும் உயிரணுக்கள் உங்கள் இரத்தத்தில் மிகவும் குறைவாக இருக்கிறதே” என்று கூறினார்.

நோயை எதிர்க்கும் உயிரணுக்கள் என்றால் என்ன? அவை ஏன் அவ்வளவு முக்கியமானவை? அவை எப்படி செயல்படுகின்றன?

தாக்குதலிலிருந்து பாதுகாப்பு

மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மிகவும் சிக்கலானது. அதில் பல்வேறு மூலக்கூறுகளும் விசேஷித்த செல்களும் அருமையான விதத்தில் பின்னிப்பிணைந்திருக்கின்றன. நோய் தொற்றை எதிர்க்கும் போராட்டத்தில் இவை அனைத்தும் கைகோர்த்து வேலை செய்கின்றன. பாக்டீரியா, வைரஸ் போன்ற அன்னிய கிருமிகளின் தாக்குதலிலிருந்து நம்மை பாதுகாக்க இந்த நோய் எதிர்ப்பு சக்தியையே நாம் முழுமையாக நம்பியிருக்கிறோம்.

இதை இன்னும் நன்றாக புரிந்துகொள்வதற்கு நம் உடலை பூர்வகால நகரம் ஒன்றிற்கு ஒப்பிடலாம். பூர்வகாலத்தில் ஒரு நகரம் மேடான பகுதியிலேயே அமைந்திருந்தது. அப்போதுதான் தூரத்தில் வரும்போதே எதிரியை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். அதோடு, நகரத்தைச் சுற்றி மாபெரும் கோட்டை கொத்தளங்களும், அவற்றைப் பாதுகாக்க ஏராளமான போர் வீரர்களும் இருந்தனர். இத்தனை அநேக பாதுகாப்புகள் இருந்ததால் அந்த நகரம் அமைதியோடு வாழ்வதற்கு ஏற்ற இடமாக திகழ்ந்தது. இப்படிப்பட்ட ஒரு நகரத்திற்கு நம் உடலை ஒப்பிட்டால், தாக்குதலிலிருந்து அதைப் பாதுகாக்க என்ன தேவை என்பதை நம்மால் தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.

கிருமிகளின் தாக்குதலிலிருந்து நம் உடலைப் பாதுகாக்க முன்னணியில் நிற்கும் போர் வீரர்கள் இருவர்: ஒன்று நம் தோல், இரண்டு சீதப்படலங்கள் (உதாரணமாக மூக்கு, தொண்டை போன்ற பகுதிகளில் உள்ளவை). கிருமிகள் உள்ளே நுழைவதைத் தடுத்து நிறுத்துவதில் நம் தோல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியென்றால், நம் தோலின் மேற்புறத்தில் கோடிக்கணக்கான கிருமிகள் உள்ளன. ஆனால் தோலின் மேல் அடுக்கு உரிகையில் அதோடு சேர்ந்து இந்தக் கிருமிகளும் நீக்கப்படுகின்றன.

சீதப்படலங்களோ தோலைப் போல அவ்வளவு உறுதியானவை அல்ல; அதோடு மிக எளிதில் பாதிக்கப்பட்டுவிடும். என்றாலும், கிருமிகளோடு போரிடும் அநேக இயற்கையான பொருட்கள் அவற்றில் நிறைந்துள்ளன. அதில் ஒன்றுதான் லைஸோஜைம். இது கண்ணீரிலும் எச்சிலிலும் வியர்வையிலும் காணப்படுகிறது. பெரும்பாலான கிருமிகள் வளருவதை தடைசெய்ய வியர்வையின் அமிலத்தன்மையே போதுமானது. ஆனாலும் லைஸோஜைம் அந்தக் கிருமிகளின் செல் சவ்வுகளை அழித்து அவற்றை முழுமையாக கொன்றுவிடுகிறது. இதன் காரணமாகவே, ஒரு மிருகத்திற்கு காயம் ஏற்பட்ட உடனே தன் நாக்கால் அதை நக்கிவிடுகிறது, காயமும் சீக்கிரத்தில் குணமடைகிறது.

முக்கிய போர் வீரர்கள்—⁠இரத்த வெள்ளை அணுக்கள்

நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா, புண் அல்லது தொற்று வழியாக நம் “நகரத்திற்குள்” நுழைந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். உடனே செல்களின் ஒரு பெரும் படை, போர் களத்தில் இறங்கி யுத்தத்தை ஆரம்பிக்கிறது. அத்துமீறி உள்ளே நுழைந்த கிருமிகளை வெளியேற்றி, உடல்நிலையை குணப்படுத்துவதே இவற்றின் நோக்கம். உடலைப் பாதுகாக்க போரிடும் செல்கள் லியுகோசைட்கள் அல்லது இரத்த வெள்ளை அணுக்கள் என்று அழைக்கப்படுகின்றன. மூன்று விதமான வெள்ளை அணுக்கள் போரின் இந்தக் கட்டத்தில் களத்தில் இறங்குகின்றன. அவை மோனோசைட்கள், நியூட்ரோபில்கள், லிம்போசைட்கள் என்பவையே.

கிருமிகள் ஆக்கிரமித்த இடத்தில் அழற்சி ஏற்படுவதால் அந்த இடத்திலிருந்து இரசாயன சமிக்கைகள் அனுப்பப்படுகின்றன. மோனோசைட்கள் இந்த எச்சரிக்கையை “கேட்டதும்,” இரத்த ஓட்டத்திலிருந்து பிரிந்து அந்த இடத்திற்கு விரைந்து சென்று தாக்கப்பட்ட திசுவிற்குள் நுழைகின்றன. அங்கே மேக்ரோஃபேஸ்களாக அதாவது “சாப்பாட்டு ராமன்களாக” உருமாறி வேற்று உயிரணுக்கள் அனைத்தையும் கபளீகரம் செய்துவிடுகின்றன. அதோடு சைடோகைன்கள் என்ற முக்கியமான திரவங்களையும் சுரக்கின்றன. இவை, நோய் தொற்றை எதிர்த்து போரிட உடலைத் தயார்படுத்துகின்றன. இந்த சைடோகைன்களின் வேலையில் ஒன்று காய்ச்சலைத் தூண்டிவிடுவதாகும். காய்ச்சலும் நல்லதுக்குத்தான்; ஏனென்றால் நோய் எதிர்ப்பு படை போரிட ஆரம்பித்துவிட்டதை இது சுட்டிக்காட்டுகிறது. அதோடு, துரிதமாக குணமடைவதற்கும் நோயை கண்டறிவதற்கும் இது பெரிதும் உதவுகிறது.

பின்னர், அழற்சி ஏற்பட்ட இடத்திலிருந்து வரும் இரசாயன சமிக்கைகளை நியூட்ரோபில்கள் “கேட்டு” மேக்ரோஃபேஸ்களுக்கு உதவுவதற்காக அங்கு விரைகின்றன. இவையும் பாக்டீரியாவை அப்படியே விழுங்கிவிடுகின்றன. நியூட்ரோபில்கள் மரிக்கையில் அவை உடலிலிருந்து சீழ் வடிவில் வெளியேற்றப்படுகின்றன. ஆகவே, சீழ் வெளியேறுவதும் மற்றொரு வகையான தற்காப்பே. இந்த விஷயத்தில் டாக்டர்கள் பல நூற்றாண்டுகளாக உபயோகித்து வந்த பின்வரும் லத்தீன் சொற்றொடர் பொருந்துகிறது: பஸ் போனஸ் எட் லாடெபில். இதற்கு, “நல்ல, பாராட்டத்தக்க சீழ்” என்று அர்த்தம். இவ்வாறு நோய் தொற்று பரவுவது தடுக்கப்படுகிறது. நமது நண்பர்களான மேக்ரோஃபேஸ்கள், தாங்கள் கொன்று குவித்த அந்தக் கிருமியின் துண்டுகளை லிம்போசைட்களிடம் “காட்டுகின்றன.” தாக்கியிருக்கும் எதிரியைப் பற்றி எச்சரிப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றன.

லிம்போசைட்கள், நோய் தொற்றை எதிர்த்து போரிடுவதில் அதிக வல்லமைமிக்க விசேஷித்த செல்களாகும். அவை நோய் எதிர்ப்பொருட்களை தயாரிக்கின்றன. இந்த எதிர்ப்பொருட்கள் ஒவ்வொன்றும் கிருமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியோடு ஒட்டிக்கொள்கின்றன. லிம்போசைட்களில் இரண்டு வகைகள் உண்டு; இரண்டிற்குமே வித்தியாசப்பட்ட திறமைகள் உள்ளன. முதல் வகை, பி செல்கள் என அழைக்கப்படுகிறது. அவை தயாரிக்கும் நோய் எதிர்ப்பொருட்களை இரத்த ஓட்டத்தில் சேர்த்துவிடுகின்றன. இந்த பி செல்களை நோய் எதிர்ப்பு அமைப்பின் ஆயுத படை என்று அழைக்கின்றனர். அவை அனுப்பும் அம்புகளின், அதாவது நோய் எதிர்ப்பொருட்களின் குறி தப்பவே தப்பாது. இந்த நோய் எதிர்ப்பொருட்கள் கிருமிகளைத் “தேடிக் கண்டுபிடித்து,” கூர்மையான அம்புகளைப் போல அவற்றின் மைய பகுதியைத் தாக்குகின்றன. மற்றொரு வகை, டி செல்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை அடையாளம் கண்டுகொள்ளும் நோய் எதிர்ப்பொருட்களை அவற்றின் மேற்பரப்பிலேயே ஒட்டி வைத்துக்கொள்கின்றன. அவை எதிரியோடு நேருக்கு நேர் போரிடும்போது இதை உபயோகிக்கின்றன.

இப்போது விஷயம் இன்னும் அதிக சிக்கலாகிறது. டி செல்களில், உதவி டி செல்கள் என்ற மற்றொரு வகையும் உண்டு. இவை, அதிகளவான நோய் எதிர்ப்பொருட்களைச் சுரக்க தங்கள் தோழர்களான பி செல்களுக்கு உதவுகின்றன. அதுமட்டுமா, தாக்குவதற்கு முன்பு உதவி டி செல்கள் ஒன்றோடு ஒன்று கலந்துபேசுகின்றன. இந்தச் செல்கள், இரசாயன சமிக்கைகள் மூலமாக கிருமியைப் பற்றிய தகவல்களைத் தங்கள் மத்தியில் ஆர்வத்தோடு “கலந்துபேசுவதாக” சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. இதை விறுவிறுப்பான பேச்சு வார்த்தை என அழைக்கின்றனர்.

இப்போது, மற்றொரு முக்கிய தொகுதியான இயற்கை கொலைகார செல்களும் உதவிக்கு வருகின்றன. இவை நோய் எதிர்ப்பொருட்களை தயாரிப்பதில்லை. ஆனால், நோய் தொற்று “பாதித்த செல்களை” கொல்வதற்கு தயாராக இருக்கின்றன. இவ்வாறு உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் இயற்கை கொலைகார செல்களுக்கும் முக்கிய பங்கு உண்டு.

கடைசியாக, லிம்போசைட்களுக்கு நோய் எதிர்ப்பு நினைவாற்றல் இருப்பதால் அவை கிருமிகளின் பண்பியல்புகளை ‘ரெக்கார்ட்’ செய்து வைத்திருப்பது போல் நினைவில் வைத்திருக்கின்றன. ஆகவே, அதே வகையான கிருமி மறுபடியும் தாக்கினால் அதை உடனே அழிப்பதற்கு தேவையான குறிப்பிட்ட நோய் எதிர்ப்பொருட்கள் லிம்போசைட்களின் கைவசம் தயாராக இருக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை முடுக்கிவிட்ட செல்களான மேக்ரோஃபேஸ்களே கடைசிவரை, அதாவது அழற்சியை தணிக்கும் வரை கூடவே இருந்து உதவுகின்றன. போர் முடிந்த பிறகு, “போர்க் களத்தில்” சிதறிக்கிடக்கும் மரித்த செல்களை அல்லது செல் துண்டுகளை நீக்கி சுத்தப்படுத்துகின்றன. இவ்வாறு “நகரத்தில்” மறுபடியும் அமைதி நிலவ உதவுகின்றன.

எதிர்ப்பு சக்தி குறைகையில்

நோய் எதிர்ப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என கருதப்படுவதைப் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கத்தையே இதுவரை வாசித்தோம். ஆனால், பல காரணங்கள் நிமித்தமாக எதிர்ப்பு சக்தி குறைவுபடலாம். அதில் ஒன்று, முதல்நிலை கோளாறுகள் ஆகும்; இவை பிறவியிலேயே ஒருவரின் நோய் எதிர்ப்பு அமைப்பிலுள்ள கோளாறுகள். மற்றொன்று, இரண்டாம் நிலை கோளாறுகள் ஆகும். இவை ஒருவரின் வாழ்நாளில் அவருக்கு நோய் வருவதால் ஏற்படுபவை.

இவ்விதமான நோய்களில் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் எய்ட்ஸ்தான் மிகவும் பயங்கரமானது. இது 1980-களில் படுவேகமாக பரவியது. இந்த நோய்க்கு காரணம் ஹ்யூமன் இம்யூனோடெஃபிஷியன்ஸி வைரஸ் (ஹெச்ஐவி). இது ஒரு குறிப்பிட்ட லிம்போசைட் வகையை படிப்படியாக அழிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு அமைப்பின் மையத்தையே தாக்குகிறது. இவ்வாறு, ஒரு நபருக்கு பாதுகாப்பளிக்கும் தற்காப்பு படையின் முக்கிய பகுதியே செயலிழந்து போகிறது. அதற்கு பிறகு நோய் தொற்றுகள் மறுபடியும் மறுபடியும் தாக்கினாலும் அவை முழுமையாக நீக்கப்படுவதே கிடையாது. இப்படி நம் உடல் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போவதால் நிலைமை மிகவும் மோசமாகிறது. அது, மதிலிடிந்த ஒரு நகரத்தைப் போலாவதால் அதை யாரும் எளிதில் கைப்பற்றிவிடலாம்.

ஆனால், நோய் எதிர்ப்பு குறைபாடுகள் அனைத்துமே பெரும் பாதிப்பை ஏற்படுத்துபவை அல்ல என்பது ஆறுதலான விஷயம். ஆரம்பத்தில் பார்த்த வெரோனிக்காவிற்கு ஒரு சிறிய குறைபாடுதான் இருந்தது. அதாவது, சீதப்படலத்தில் அதிலும் முக்கியமாக மூச்சுக்குழாய்களில் இருக்க வேண்டிய ஒரு வகை நோய் எதிர்ப்பொருளின் உற்பத்தி கொஞ்சம் குறைவாக இருந்தது. அதனால்தான், அவளை அடிக்கடி நோய்த் தொற்று தாக்கியது, அதுவும் அநேக நாட்களுக்கு நீடித்தது.

இப்போது வெரோனிக்கா குணமடைய ஆரம்பித்தாள். சிகிச்சையைப் பற்றி டாக்டர் விளக்கிய பிறகு அவர் கூறுவதை அச்சுப்பிசகாமல் பின்பற்றுவது என்று முடிவு செய்தாள். சைனஸ் பிரச்சினை குணமடைந்த பிறகு, நோய் எதிர்ப்பொருட்களின் உற்பத்தியை தூண்டிவிடும் ஊசி மருந்துகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டாள். a அவள் புகைபிடிப்பதையும் விட்டுவிட்டு, அதிக நேரம் ஓய்வெடுக்க ஆரம்பித்தாள். அதற்கு பிறகு அவளுடைய உடல்நிலை நன்கு குணமடைய ஆரம்பித்தது.

நல்ல ஆரோக்கியத்தோடு வாழ்க்கையை அனுபவிக்கும்படியே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறதல்லவா? நோய் தடுப்பு அமைப்பின் சிக்கலான தன்மையையும் மனித உடலின் மற்ற நுட்பமான இயக்கங்களையும் கவனித்துப் பார்க்கையில் நம் சிருஷ்டிகரின் ஞானத்தைப் புகழ்ந்து பாராட்டி, நன்றிகூற தோன்றுகிறதல்லவா? (சங்கீதம் 139:14; வெளிப்படுத்துதல் 15:3) ஆனால், அபூரணர்களாக இருப்பதால் இப்போது நம்மால் முழுமையான ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியவில்லை. என்றாலும், வரவிருக்கும் புதிய உலகில் நாம் பரிபூரணமான மனதையும் உடலையும் பெறுவோம் என்று கடவுளால் ஏவப்பட்ட அவருடைய வார்த்தை உறுதியளிக்கிறது. அப்போது, “‘வியாதியாயிருக்கிறேன்’ என்று யாரும் சொல்லமாட்டார்கள்.”​—ஏசாயா 33:⁠24, NW.

(g01 2/08)

[அடிக்குறிப்பு]

a எந்தக் குறிப்பிட்ட சிகிச்சை முறையையும் விழித்தெழு! சிபாரிசு செய்வதில்லை. அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட தீர்மானமாகும்.

[பக்கம் 13-ன் பெட்டி]

போர் வீரர்களின் அணிவரிசை:

• தோலும் சீதப்படலங்களும்

• லியுகோசைட்கள் அல்லது இரத்த வெள்ளை அணுக்கள்

மோனோசைட்கள் தாக்கப்பட்ட திசுவிற்குள் நுழைந்து பாக்டீரியாக்களை கபளீகரம் செய்கின்றன

நியூட்ரோபில்கள் பாக்டீரியாவை விழுங்கி, சீழ் வடிவில் உடலிலிருந்து வெளியேறுகின்றன

லிம்போசைட்களுக்கு நோய் எதிர்ப்பு நினைவாற்றல் இருக்கிறது; அதே விதமான கிருமி மறுபடியும் தாக்கினால் நோய் எதிர்ப்பொருட்கள் அவற்றை உடனே அழித்துவிடுகின்றன

•பி செல்கள் குறி தப்பாத அம்புகளைப் போன்ற நோய் எதிர்ப்பொருட்களை வெளிவிடுகின்றன; இவை கிருமிகளைத் “தேடிக் கண்டுபிடித்து” அழிக்கின்றன

•டி செல்கள் கிருமிகளோடு “நேருக்கு நேர்” போரிடும் நோய் எதிர்ப்பொருட்களை தயாரிக்க உதவுகின்றன

⁠ உதவி டி செல்கள் அதிகளவான நோய் எதிர்ப்பொருட்களைச் சுரக்க பி செல்களுக்கு உதவுகின்றன

⁠ இயற்கை கொலையாளி செல்கள் நோய் எதிர்ப்பொருட்களை தயாரிக்காமலேயே பாதிக்கப்பட்ட செல்களை கொல்லுகின்றன

[பக்கம் 13-ன் படம்]

இரத்த வெள்ளை அணுக்கள் பாக்டீரியாவோடு போரிடுகின்றன

[படத்திற்கான நன்றி]

Lennart Nilsson