Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்களுக்கு காப்பீடு தேவையா?

உங்களுக்கு காப்பீடு தேவையா?

உங்களுக்கு காப்பீடு தேவையா?

ஒருசில நாடுகளில் கட்டாயமாக சில வகையான காப்பீடுகளை செய்துவைக்க வேண்டும். வேறு சில நாடுகளில் அநேக வகையான காப்பீடுகள் அறியப்படாமலேயே இருக்கின்றன. இதோடு, காப்பீட்டு தொகையும், என்னென்ன வகையான இழப்புகளுக்கு அவை ஈடுசெய்யும் என்பதும் நாட்டுக்கு நாடு மிகவும் வேறுபடுகிறது. ஆனாலும் காப்பீட்டின் அடிப்படை நியமத்தில், அதாவது இழப்பை பகிர்ந்துகொள்வது என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.

ஒருவருக்கு எவ்வளவு அதிகமான சொத்து இருக்கிறதோ, இழப்பும் அவ்வளவு அதிகமாக இருக்கும் என்பது புரிந்துகொள்ளத்தக்கதே. அதேபோல, ஒருவர் இறந்துபோனால் அல்லது ஊனமுற்றால், அவரு(ளு)க்கு குடும்ப பொறுப்பு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, பாதிப்பும் அவ்வளவு அதிகமாக இருக்கும். சொத்தை இழக்க நேர்ந்தால் அல்லது ஊனமடையச் செய்யும் விபத்துக்குள்ளானால் என்ன செய்வது என்று தேவையின்றி பயப்படுவதை காப்பீட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதால் தவிர்க்கலாம்.

என்றாலும், ஈட்டுத்தொகையை கோருவதற்கான தேவை ஏற்படாமலே போகலாம் என்பதால் காப்பீட்டிற்காக பணத்தை செலவிடுவது ஞானமான செயலா? காரில் அவசரத்திற்காக கூடுதலான ஒரு டயர் வைத்திருப்பதை, அது ஒருவேளை தேவைப்படாமலே போகும் என்பதால் வீண் செலவு என்று சொல்ல முடியுமா? கார் ஓட்டுநருக்கு அது கொடுக்கும் பாதுகாப்புணர்வை சிந்திக்கையில், கூடுதலான அந்த டையருக்கு ஆகும் செலவு நியாயமானதே. குறிப்பிட்ட சில இழப்புகளை பணத்தால் ஈடுகட்ட முடியாது என்றாலும் மற்ற இழப்புகளை பணத்தால் ஈடுகட்டலாம்.

காப்பீடு ஒப்பந்த ஆவணங்கள் அல்லது பாலிஸிகள் எந்த வகையான இழப்புகளை ஈடுசெய்கின்றன?

காப்பீட்டின் வகைகள்

சொத்து காப்பீடு, பொறுப்புநிலை காப்பீடு, உடல்நல காப்பீடு, இயலாமை காப்பீடு, ஆயுள் காப்பீடு என தனிநபர்கள் வாங்கும் காப்பீடுகள் பல்வகைப்படும்.

சொத்து காப்பீடு: இடர்ப்பாடு நிர்வகிப்பில் மிகப் பொதுவானது, சொத்து இழப்பிற்கு எதிராக காப்பீடு செய்வதாகும். வீடு, வியாபாரம், கார், அல்லது மற்ற உடைமைகள் சொத்தில் அடங்கும். முந்தின கட்டுரையில் சொல்லப்பட்ட ஜான், தன் தச்சுப் பட்டறைக்காகவும் அங்குள்ள கருவிகளுக்காகவும் இந்த காப்பீட்டைத்தான் வாங்க வேண்டாம் என்று தீர்மானித்தார்.

சில வீட்டு காப்பீட்டு பாலிஸிகள் வீட்டிலுள்ள ஒருசில சாதனங்களுக்கும் காப்பீடு அளிக்கின்றன. இப்படிப்பட்ட ஒப்பந்தத்தை செய்கிறீர்களென்றால், நீங்கள் காப்பீடு செய்திருக்கும் வீட்டு சாமான்களின் விவரப்பட்டியலை தயாரியுங்கள்; முடிந்தால் இந்த சாமான்களின் போட்டோவையோ வீடியோவையோ எடுத்து வைக்கலாம். இந்தப் பட்டியலையும் அவற்றின் விலைமதிப்பைக் குறிப்பிடும் சீட்டுகளோ, பொருளை வாங்கினதற்கான ரசீதோ இருந்தால் அவற்றையும் வீட்டில் வைக்காமல் பத்திரமான வேறொரு இடத்தில் வைக்க வேண்டும். இந்தப் பதிவுகளை வைத்திருந்தால், இழப்பை கணக்கிட்டு இழப்பீடு கோருவது சுலபமாக இருக்கும்.

பொறுப்புநிலை காப்பீடு: ஒரு காரையோ, வீட்டையோ, நிலத்தையோ, கட்டடங்களையோ சொந்தமாக உடைய எவரும், ஒரு வியாபாரம் நடத்தும் அல்லது மற்றவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் எவரும், ஒரு விபத்து ஏற்படுகையில் பொறுப்பேற்கும் நிலையில் இருக்கிறார். அந்த விபத்து மற்றொருவருக்கு சேதத்தையோ காயத்தையோ மரணத்தையோ ஏற்படுத்தக்கூடும். காரை ஓட்டியவர் அல்லது நிலத்திற்கோ வியாபாரத்திற்கோ சொந்தக்காரர், பாதிக்கப்பட்டவரின் மருத்துவ சிகிச்சைக்காக, அவரது உடைமையை பழுதுபார்ப்பதற்காக, அல்லது அவருக்கு துன்பமும் வேதனையும் ஏற்பட்டதற்காகக்கூட நஷ்டஈடாக பணம் கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார். இந்தச் செலவுகளை கவனிப்பதற்கு உதவும்படி பொறுப்புநிலை காப்பீட்டு ஒப்பந்தம் செய்து வைத்திருப்பதை அநேக நாடுகளில் சட்டமே தேவைப்படுத்துகிறது. இந்தக் காப்பீடு சட்டப்பூர்வ தேவையாக இல்லாத இடங்களிலும்கூட, விபத்திற்குள்ளானவர்களுக்கோ அவர்களுடைய குடும்பத்தாருக்கோ உதவ வாகன ஓட்டுநர், சொத்தின் உரிமையாளர், அல்லது ஆட்களை வேலைக்கு அமர்த்தியிருப்பவர் சட்ட மற்றும் தார்மீக ரீதியில் பொறுப்புள்ளவராக கருதப்படுவார்.

உடல்நல காப்பீடு: வயதான குடிமக்களுக்கு ஓய்வூதியம் மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற வசதிகளை அளிக்கும் அரசு ஆதரவுடைய காப்பீடுகள் அநேக நாடுகளில் உள்ளன. இப்படிப்பட்ட ஏற்பாடுகள் அமலில் இருக்கும் நாடுகளில்கூட, மருத்துவ செலவில் ஒரு பங்கை மட்டும் அல்லது ஒருசில வகையான மருத்துவ செலவுகளை மட்டுமே அந்த காப்பீடுகள் ஏற்கின்றன. ஆகவே சிலர், மீதமுள்ள செலவை ஈடுகட்டுவதற்காக தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் ஒப்பந்தங்களை செய்து கொள்கிறார்கள். அநேக இடங்களில் பணியாளர்கள் வேலையில் சேரும்போது போடப்படும் நிபந்தனைகளில் ஒன்றாக உடல்நல காப்பீட்டையும் பெற வேண்டியிருக்கலாம்.

நிர்வகிக்கப்பட்ட பராமரிப்பு ஏற்பாடுகளையும் உடல்நலம் காக்கும் அமைப்புகளையும் உட்படுத்தும் சில உடல்நல கவனிப்பு திட்டங்கள், குறிப்பிட்ட மாதாந்தர அல்லது வருடாந்தர கட்டணத்துக்கு விரிவான மருத்துவ பராமரிப்பை அளிக்கின்றன. இந்த அமைப்புகள் குறைந்த செலவுள்ள மருத்துவ கவனிப்பைக் கொடுப்பதன் மூலமும் தற்காப்பு மருத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலமும் மருத்துவ செலவைக் குறைக்க முயல்கின்றன. என்றாலும் இப்படிப்பட்ட அமைப்புகளிலிருந்து பயன்பெற விரும்பும் நோயாளிகள், அவற்றால் குறிப்பிடப்படும் மருத்துவர்களையே தெரிந்தெடுத்து குறிப்பிட்ட சிகிச்சைகளையே பெற முடிகிறது; ஆனால் வழக்கமான உடல்நல காப்பீடு செய்தவர்கள் இதைவிட நீண்ட பட்டியலிலிருந்து தெரிவு செய்ய முடிகிறது.

இயலாமை காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு: ஒருவருக்கு அடிபட்டுவிட்ட காரணத்தால் வேலை செய்ய முடியவில்லை என்றால் இயலாமை காப்பீட்டிலிருந்து கொஞ்சம் வருமானம் கிடைக்கும். அவன் அல்லது அவள் உயிரிழந்தால், அந்த நபரைச் சார்ந்திருந்தவர்களுக்கு ஆயுள் காப்பீடு நிதியுதவி அளிக்கிறது. ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் முக்கியமான நபர் அடிபட்டுவிட்டால் அல்லது உயிரிழந்துவிட்டால் எஞ்சியிருந்த கடன்களை கட்டிவிட்டு தங்கள் சகஜ வாழ்க்கையை தொடருவதற்கு இந்த காப்பீடு அநேக குடும்பங்களுக்கு உதவியிருக்கிறது.

நம்பகமான காப்பீட்டாளர்களை கண்டுபிடித்தல்

எதிர்காலத்தில் பண பாதுகாப்பை பெறுவதற்காக தற்போது பணம் கட்டும் நியமத்தை உடையது காப்பீடு. இதன் காரணமாக இந்த காப்பீட்டு தொழில் மோசடிக்காரர்களை பெருமளவில் கவர்ந்து வருவதில் ஆச்சரியமேதுமில்லை. பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் மட்டுமல்லாமல் வளர்ந்துவரும் நாடுகளிலும் இதுவே உண்மையாக இருக்கிறது. ஆகவே, குறைந்த கட்டண காப்பீடுகளைக் குறித்தும் கேள்விக்குரிய காப்பீட்டு திட்டங்களைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருப்பது அவசியம். அப்படிப்பட்ட நிறுவனங்கள் ஒப்பந்தங்களுக்குரிய பணத்தை தராதபோது அல்லது ஒரே இராத்திரியில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்போது நம்பிக்கையுடன் காப்பீடு செய்தவர்கள் பலர் ஏமாந்து போயிருக்கிறார்கள்.

எனவே, எந்தவொரு பொருளையும் வாங்குமுன் பல இடங்களில் விலையை விசாரித்து ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு வாங்குவதுபோலவே இதிலும் செய்வது ஞானமானது; இப்படி செய்வதால் பணம் மிச்சமாவதும் உண்டு. உதாரணமாக, சில நிறுவனங்கள் உடல்நல காப்பீட்டில் புகைபிடிக்காதவர்களுக்கும், கார் காப்பீட்டில் ஓட்டுநர் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் குறைந்த கட்டணத்தின் பேரில் காப்பீடு அளிக்கின்றன. ஆனாலும் காப்பீடு செய்பவர் ஒரு நம்பகமான காப்பீட்டு நிறுவனத்தை எப்படி கண்டுபிடிக்கலாம்?

பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களோடும் ஏஜன்ட்டுகளாகிய முகவர்களோடும் மற்றவர்களுடைய அனுபவம் என்ன என்பதை தெரிந்துகொள்வதே முதற்படியாகும். ஒரு நிறுவனத்தின் சேவை எப்படிப்பட்டது என்றும் ஒரு முகவர் எவ்வளவு நம்பத்தக்கவர், எவ்வளவு அக்கறையுடன் நம்மிடம் செயல்படுவார் ஆகிய விவரங்களையும் நண்பர்களும் அக்கம்பக்கத்தாரும் அறிந்திருப்பார்கள். எந்தெந்த காப்பீட்டு நிறுவனங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்பது பற்றிய செய்தி அறிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருப்பது நல்லது.

மேலுமாக, ஒரு நிறுவனத்தின் பதிவையும் நிதி நிலையையும் எடுத்துரைக்கும் காப்பீடு தரக்கணிப்பு கைடுகள் புத்தக கடையிலோ நூலகத்திலோ இன்டர்நெட்டிலோ இருக்கும். அவற்றையும் பார்த்துக்கொள்ளலாம். ஒரு நிறுவனத்தின் நிதிநிலை பாதுகாப்பானதா? அநேக வருடங்களுக்கு அது வியாபார வெற்றியை கண்டிருக்கிறதா? காப்பீட்டை கோரும்போது விரைவாகவும் சச்சரவின்றியும் கையாளுவதில் நல்ல பெயரெடுத்த நிறுவனமாக இருக்கிறதா? என்பது போன்ற கேள்விகளுக்கு அந்த கைடுகளில் பதில் கிடைக்கும்.

என்றாலும், காப்பீட்டு தரக்கணிப்பு கைடுகள் பிழையற்றவை என்று நினைத்துவிட முடியாது. நெடுங்காலமாக இயங்கிய பலகோடி டாலர் காப்பீட்டு நிறுவனம் ஒன்று நன்கு அறியப்பட்ட ஒரு கையேட்டில் தலைசிறந்ததாக கணிக்கப்பட்டது. அவ்வாறு கணிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் அந்த நிறுவனத்தின் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று!

காப்பீட்டு முகவர்கள் வகிக்கும் பங்கு

குறிப்பிட்ட ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முகவர் அந்த நிறுவனத்திற்காகவே உழைக்கிறார். ஆனால் ஒரு தரகர் அல்லது தனிப்பட்ட முகவர், பல்வேறு நிறுவனங்களின் தகவல்களைப் பெற்று, குறிப்பிட்ட கட்டணத்திற்கு ஏற்ற சிறந்த காப்பீட்டை தெரிவுசெய்ய உதவுகிறார். இந்த இருவருமே தங்கள் தொழிலை நடத்த வேண்டுமானால், வாடிக்கையாளர்களிடம் நல்ல உறவை வைத்துக்கொள்ள வேண்டும். காப்பீட்டு முகவர் நம்பகமானவராகவும் அக்கறையுள்ளவராகவும் இருந்தால், தன் வாடிக்கையாளர்களுக்கு பேருதவியாக இருக்கலாம்.

காப்பீடுகளில் ஆதாயந்தரும் ஏற்பாடுகளை ஒரு நீண்ட பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். பொருத்தமான தெரிவுகளை செய்ய வாடிக்கையாளருக்கு உதவுவதே ஒரு நல்ல தரகர் அல்லது முகவர் செய்யும் முதல் உதவியாகும். அந்த பாலிஸியின் விவரங்களையும் வாடிக்கையாளருக்கு அவர் விளக்குகிறார். காப்பீட்டு பாலிஸிகள் சிக்கல்களுக்கு பேர்போனவை என்பதும் எல்லாருக்கும் தெரிந்த விஷயமே. தன் சொந்த வீட்டிற்குரிய பாலிஸியைப் பற்றிய சில விவரங்களை தன்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை என காப்பீட்டு நிறுவனமொன்றின் தலைவரே ஒத்துக்கொண்டார்!

எதிர்பாராத விஷயங்கள் திடீரென்று வாடிக்கையாளரின் கவனத்துக்கு வருவதை தவிர்க்க ஒரு முகவரின் விளக்கம் உதவி செய்யும். எடுத்துக்காட்டாக, பெரும்பாலான சொத்து மற்றும் உடல்நல காப்பீட்டு பாலிஸிகளில் கழிவு தொகைகள் உண்டு. கோரப்பட்ட தொகையில் காப்பீட்டு நிறுவனம் அதன் பாகத்தை தருமுன், கார் ரிப்பேருக்கோ மருத்துவ சீட்டுகளுக்கோ காப்பீடு செய்துள்ள ஒருவர் தாமே கட்ட வேண்டிய குறிப்பிட்ட தொகைதான் இது. காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தீர்வுப்பணத்தை பெறுவதில் வாடிக்கையாளருக்கு கஷ்டம் இருந்தால், வாடிக்கையாளரின் வழக்கறிஞராகவும் அந்த முகவர் செயல்பட முடியும்.

காப்பீடும் கிறிஸ்தவர்களும்

கடவுள் உதவி செய்வார் என்று நம்பிக்கொண்டும் இந்த காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்காக காத்துக்கொண்டும் இருக்கிற ஒரு கிறிஸ்தவருக்கு காப்பீடு தேவைதானா? விழித்தெழு!-வின் துணை பத்திரிகையான காவற்கோபுரம் என்று இப்போது அழைக்கப்படும் பத்திரிகையின் பதிப்பாசிரியர் சார்ல்ஸ் டேஸ் ரஸலிடம் 1910-⁠ல் சிலர் இதே கேள்வியையே கேட்டனர். இன்றைய பொருளாதார அமைப்பின் முடிவை பைபிள் முன்னறிவிக்கிறது என்று ரஸல் ஒத்துக்கொண்டார். தான் ஆயுள் காப்பீடு செய்து வைத்துக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.

“ஆனாலும் எல்லாருடைய சூழ்நிலையும் ஒன்றுபோல இருப்பதில்லை” என்பதை ரஸல் குறிப்பிட்டார். “தன்னையே சார்ந்திருக்கும் மனைவி மக்களை உடைய ஒரு குடும்பத் தகப்பனுக்கு​—⁠அதிலும் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் வயதுக்கு வராத சின்னஞ்சிறு பிள்ளைகளை உடைய தகப்பனுக்கு​—⁠அவர்களை கவனிக்கும் பொறுப்பு இருக்கிறது.” (1 தீமோத்தேயு 5:8) ஒருவர் தன் குடும்பத்துக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்கலாம். “ஆனாலும் அப்படி வைக்க முடியாவிட்டால், காப்பீடு செய்து கொள்வதன் மூலம் அவர்களிடமான தன் பொறுப்பை நிறைவேற்றிக் கொள்ளக்கூடும்” என்று ரஸல் குறிப்பிட்டார்.

குடும்ப பொறுப்புள்ள ஒருவர் தன் குடும்ப அங்கத்தினர்களுக்காக உடல்நல காப்பீடு, இயலாமை காப்பீடு, இன்னும் மற்ற வகை காப்பீடுகளை செய்து வைக்கலாம். மணமாகாத பலர் தங்களுக்கு தேவையான கவனிப்பை பெறவும் விபத்தோ நோயோ தாக்கும்போது கடனுக்குள்ளாகாமல் தங்களைக் காத்துக்கொள்ளும்படியும் காப்பீடு செய்துகொள்கிறார்கள்.

காப்பீடு செய்துகொள்ளும்போது நேர்மையாக இருப்பது முக்கியம். காப்பீடு ஒப்பந்த படிவத்தை பூர்த்தி செய்கையிலோ காப்பீட்டுத் தொகைக்காக கோரும்போதோ ஒரு உண்மை கிறிஸ்தவர் ஒருபோதும் காப்பீட்டு நிறுவனத்தை ஏமாற்றமாட்டார். (எபிரெயர் 13:18) இழப்பை ஈடுசெய்வதே காப்பீட்டின் நோக்கம் என்பதை அவர் அல்லது அவள் மனதில் வைத்துக் கொள்வார். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ வாய்ப்பளிக்கும் ஒரு லாட்டரி சீட்டு அல்ல அது.​—1 கொரிந்தியர் 6:⁠10.

காப்பீட்டு ஒப்பந்தத்தை வாங்கி வைத்துக்கொள்வது சட்டரீதியான தேவையாக இருந்தால், அப்படிப்பட்ட எல்லா சட்டங்களுக்கும் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிகிறார்கள். ஒரு வியாபார தொழிலை நடத்துவதற்கு அல்லது ஒரு காரை ஓட்டுவதற்கு காப்பீடு அவசியம் என்று சட்டம் தேவைப்படுத்தும் இடங்களில் அவர்கள் அதற்கு உடன்படுகிறார்கள். (ரோமர் 13:5-7) நேர்மையும் நடைமுறையான ஞானமும்கூட அவர்கள் தங்கள் பிரிமியங்கள் அல்லது கட்டணத்தொகையை செலுத்துவதைத் தேவைப்படுத்துகின்றன. பணத்தை கட்டவில்லை என்றால், அந்த நிறுவனமும் பாலிஸியை ரத்து செய்துவிடும்; இழப்பீடு கோரிக்கை தொகையையும் தராது. கட்டிய தொகைகள் குறித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று அவ்வப்போது நிறுவனத்திடம் நேரடியாக கேட்டு தெரிந்துகொள்வதும் பணம் கட்டியதற்கு சான்றாக இருக்கும் அச்சிடப்பட்டுள்ள ரசீதுகள் போன்ற எதையும் பத்திரமாக வைத்துக் கொள்வதும் விவேகமானது.

நீங்கள் வசிக்கும் இடத்தில் காப்பீட்டு வசதி இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, இழப்பை தவிர்ப்பதற்கும் எந்த காப்பீடும் ஈடுகட்ட முடியாத வேதனையை நீங்களும் உங்கள் அன்பானவர்களும் அனுபவிக்காமல் இருப்பதற்கும் அடிப்படையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை அடுத்ததாக சிந்திப்போம்.

(g01 2/22)

[பக்கம் 7-ன் படம்]

நம்பகமான முகவர், காப்பீடுகளைப் பற்றி தீர்மானிக்க உதவலாம்

[பக்கம் 7-ன் படம்]

சட்டப்பூர்வ தேவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், அநேகர் காப்பீடு செய்துகொள்கின்றனர்