உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
குப்பை தொட்டியாகும் கடல்
கண்ணாடி பாட்டில் ஒன்றை கடலுக்குள் தூக்கி எறிந்தால், அது முழுமையாய் சிதைந்து அழிவதற்கு ஆயிரம் வருடமாவது எடுக்கும். மெல்லிய காகிதங்கள் அழிவதற்கு மூன்று மாதங்களும், தீக்குச்சிகள் ஆறு மாதங்களும் எடுக்கின்றன. சிகரெட் துண்டுகள் 1 முதல் 5 வருடங்கள் வரை கடலை மாசுபடுத்திக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பைகள் 10 முதல் 20 வருடங்கள், நைலான் பொருட்கள் 30 முதல் 40 வருடங்கள், தகர டப்பாக்கள் 500 வருடங்கள், பாலிஸ்டைரீன் பொருட்கள் 1,000 வருடங்கள் என இவை கடலை மாசுபடுத்திக் கொண்டிருக்கும். இவையனைத்தும் லேகம்பைன்டெ என்ற இத்தாலிய சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று கொடுத்த தகவலில் ஒரு சிறிய துணுக்குத்தான். கடற்கரைக்கு சென்று குளித்து மகிழ்பவர்கள் சுற்றுச்சூழலையும் கொஞ்சம் கவனத்தில் வைக்கும்படி அந்த அமைப்பு அறிவுறுத்துகிறது. “இந்த அறிக்கைகளை எல்லாம் பார்த்தால், கதைவிடுவது போன்று இல்லை?” என கேட்கிறது கோரீரே டேல்லா சேரா என்ற செய்தித்தாள். “இல்லவே இல்லை என்கிறது 605 டன் குப்பைகள்; கடற்கரையை சுத்தம் செய்யும் அந்த அமைப்பின் வாலண்டியர்கள் 1990 முதற்கொண்டு இன்று வரை இத்தாலியின் கடற்கரையோரத்திலிருந்து இவற்றை அகற்றியிருக்கின்றனர்” என அதே செய்தித்தாள் சொல்கிறது.
(g01 2/08)
சூடாற காத்திருக்க வேண்டாம்
சூடான உணவை ஃப்ரிட்ஜில் வைப்பதற்கு முன் அதை ஆறவிடுவது நல்லதல்ல என்கிறார் ஐ.மா.-வின் பண்ணை கறி மற்றும் கோழி பற்றி ஹாட்லைன் தகவல் தரும் இலாகாவின் மேலாளர் பெஸீ பெர்ரீ. “அவனிலிருந்தோ (oven) அடுப்பிலிருந்தோ இறக்கிய உணவை” சுடசுட சாப்பிடவில்லை என்றால் உடனடியாக ஃப்ரிட்ஜில் வைத்துவிட வேண்டும். டப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஹெல்த் & நியூட்ரிஷியன் லெட்டர் என்ற நியூஸ்லெட்டரில் விளக்கப்பட்ட பிரகாரம், “சூடான உணவை எவ்வளவு சீக்கிரம் ஜில்லென்றிருக்கும் ஃப்ரிட்ஜிற்குள் வைக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் ஆபத்தான பாக்டீரியாக்கள் பெருகுவதை தடுக்கலாம்.” ஆனால் இதனால் ஃப்ரிட்ஜுக்கு சேதம் ஏதும் ஏற்படாதா அல்லது மோட்டாரில் கோளாறு ஏற்படாதா? ‘ஏற்படாது’ என்கிறார் பெர்ரீ. நவீனகால ஃப்ரிட்ஜுகள் எல்லாம் சூடான உணவை வைக்கும் வசதி படைத்தவை. முன்பு ஐஸ் பெட்டிகளை பயன்படுத்தி வந்த சமயத்தில்தான் சூடான உணவை வைத்தால் ஃப்ரிட்ஜ் கெட்டுவிடும் என்ற இந்த எண்ணம் பிறந்திருக்க வேண்டும். ஏனென்றால், ஐஸ் பெட்டியில் சூடான உணவு ஏதாவது வைத்தோமேயானால் ஐஸ் கட்டிகள் கரைந்தோடி விடும். ஆனாலும், நாம் இரண்டு முக்கிய காரியங்களை செய்ய வேண்டும்: முழு கோழி, பானை நிறைய சூப், சட்டி நிறைய குழம்பு போன்ற அதிகளவான உணவை ஃப்ரிட்ஜில் வைக்கும் முன்பு இரண்டு மூன்று குழிவான பாத்திரங்களில் அவற்றை பிரித்து வைக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் பாக்டீரியாவின் பெருக்கத்தை தடுக்கும் குளிர் நிலைக்கு அவை உடனே வராது. அத்துடன் ஃப்ரிட்ஜில் காற்றோட்டம் இருப்பதற்கும் உணவு சீக்கிரம் குளிர் நிலைக்கு வருவதற்கும், சூடான உணவிற்கும் மற்ற உணவிற்கும் மத்தியில் இடைவெளி வேண்டும்.
(g01 2/08)
எதிர்காலத்தில் மாசற்ற பயணம்
“சர்வதேச கார் வியாபாரத்தில் பெரிய திருப்பத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் எரிபொருள் தொழில்நுட்பம் இப்போது சந்தைக்கு வருகிறது” என்று அறிவிக்கிறது தி ஆஸ்ட்ரேலியன் செய்தித்தாள். முக்கியமாக இந்த எரிபொருள் தொழில்நுட்பம், நகர பேருந்துகளுக்கு மிகவும் ஏற்றது. ஏனென்றால் இது பேருந்து என்ஜினின் சப்தத்தை குறைப்பதோடு காற்றையும் மாசுபடுத்துவதில்லை. இந்த பஸ்களில் ஒருமுறை எரிபொருளை நிரப்பினால் 70 பயணிகளுடன், 80 கிலோமீட்டர் அதிகபட்ச வேகத்தில் தொடர்ந்து 300 கிலோமீட்டருக்கு பயணம் செய்ய முடியும். இவை ஐரோப்பா முழுவதிலுமுள்ள போக்குவரத்து கழகங்களுக்கு ஒரு பஸ் 4.5 கோடி ரூபாய்க்கும் அதிக விலைக்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படும். 2002-ன் இறுதியில் இவற்றை சாலைகளில் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில், கார்களும்கூட இந்த எரிபொருள் தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படலாம். தற்சமயம் இவ்வாறு தயாரிக்கப்படவில்லை. “அவற்றின் விலையையும் கொள்ளளவையும் குறைக்க வேண்டும். அத்துடன் மார்க்கெட்டில் இது வெற்றிபெறுவதற்கு இன்றைய கார்களுடைய என்ஜினின் எடையைவிட இந்த புதிய கார்களுடைய எரிபொருள் என்ஜின்களின் எடை குறைவாக இருக்க வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ஃபெர்டீனான்ட் பானிக்.
(g01 2/08)
நோய்கள் Vs பேரழிவுகள்
வெள்ளம், பூமியதிர்ச்சி போன்ற பேரழிவுகளால் ஏற்படும் உயிரிழப்புகள்தான் உடனடியாக எல்லோருக்கும் தெரிந்துவிடுகிறது, ஆனால் அவற்றைவிட அதிகளவான உயிர்களை குடிக்கும் நோய்கள் பற்றி யாருக்கும் தெரிவதில்லை என்கிறது ஒரு செஞ்சிலுவை சங்க அறிக்கை. இதைப் பற்றி த நியூ யார்க் டைம்ஸ் சொல்கிறது: “எய்ட்ஸ், காசநோய், மலேரியா போன்ற தொற்று வியாதிகளால் கடந்த வருடம் அநேகர் உயிரிழந்தனர். ஆனால் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை, கடந்த வருடம் துருக்கியில் ஏற்பட்ட பூமியதிர்ச்சி, இந்தியாவில் ஏற்பட்ட புயல், வெனிசுவேலாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு போன்றவற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையைவிட 160 மடங்கு அதிகமாகும். . . . 1945 முதற்கொண்டு இந்த மூன்று நோய்களால் 15 கோடி பேர் உயிரிழந்திருப்பதாக கணக்கிடப்படுகிறது. ஆனால் அதே காலப்பகுதியில் போர்களில் ஏற்பட்ட உயிரிழப்போ 2.3 கோடிதான்.”
இந்த பிரச்சினைக்கு அடிப்படை காரணம் பொது மக்களின் மோசமான சுகாதார பழக்கமே என இந்த அறிக்கையின் ஆசிரியர் பீட்டர் வாக்கர் சொல்கிறார். “ஏறக்குறைய எல்லா நாடுகளிலும், பேருக்காவது சுகாதார அமைப்புகள் இருக்கின்றன, ஆனால் புறநகர் பகுதிகளிலோ அவைகூட இல்லை” என்கிறார் அவர். ஒரு நபரின் சுகாதாரத்திற்கு வெறும் 200 ரூபாய் செலவு செய்திருந்தால், கடந்த வருடம் தொற்று நோயால் ஏற்பட்ட 1.3 கோடி உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். “பணத்தைக் கொட்டி கட்டும் மருத்துவமனைகளுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கும் ஆகும் செலவுகளைவிட மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றுவதற்கு ஆகும் செலவுகள் அநேக உயிர்களை காக்கின்றன” என அந்த கட்டுரை முடிவாக சொன்னது.(g01 2/08)
முதுமையிலும் கல்வி
கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தப்பட்ட வேலை செய்யும் வயதானவர்களுக்கு அவற்றிலுள்ள புதிய புதிய தொழில்நுட்ப முறைகளை கற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம் என அறிக்கை செய்கிறது டோரன்டோ ஸ்டார் செய்தித்தாள். என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதில் அல்ல, அதை எப்படி கற்றுக்கொள்கிறார்கள் என்பதில்தான் அவர்களுக்கு பிரச்சினை இருக்கிறது என வேலை முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை கையாளும் நிபுணர் ஆன் எபி. “வயதாக ஆக நம்முடைய நரம்பு மண்டல செயல்பாட்டின் வேகம் குறைகிறது, ஆனால் மூளையோ ஆரோக்கியத்துடன் பலமாக இருக்கிறது” என விளக்குகிறார் ஜூலியா கென்னடி. இவர் ஆக்ஸியோம் பயிற்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராவார். பிள்ளைகள் ஒரு காரியத்தின் அர்த்தத்தை தெரிந்துகொள்ளாமலே மீண்டும் மீண்டும் செய்வதன்மூலம் அதை கற்றுக்கொள்கின்றனர். ஆனால் பெரியவர்களோ அவ்வாறு இல்லை, “அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த விஷயத்துடன் (வாழ்க்கை அனுபவத்தில்) இப்போது புதிதாய் கற்றுக்கொள்ளும் விஷயத்தை சம்பந்தப்படுத்திப் பார்க்க வேண்டியுள்ளது” என்கிறார் கென்னடி. இதனால் பெரியவர்கள் சில சிக்கலான விஷயங்களை கற்றுக்கொள்வதற்கு அதிக நேரம் எடுத்தாலும், அவர்களுக்கு கற்றுக்கொள்ளும் ஆற்றல் இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. இவ்வாறு புதிய சிக்கலான வேலைகளை கற்றுக்கொள்ளும் பெரியவர்களுக்கு பின்வரும் ஆலோசனைகளை கென்னடி கொடுக்கிறார்: முடிந்தால், உங்கள் பயிற்சியை காலையில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சிறு சிறு குறிப்புக்கும் கவனம் செலுத்தாமல் அடிப்படை கருத்துகளை கற்றுக்கொள்ள முயலுங்கள். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தவிருங்கள்.
(g01 2/22)
பசுக்களும் பூமி உஷ்ணமடைவதும்
பூமி உஷ்ணமடைவதற்குக் காரணமான கார்பன்டையாக்ஸைடைவிட 20 மடங்கு அதிக சக்திபடைத்தது மீத்தேன் வாயு என சொல்லப்படுகிறது. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் சுமார் 200 கோடி ஆடு மாடுகளிலிருந்து 10 கோடி டன் மீத்தேன் வாயு வெளியேறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் பூமி உஷ்ணமடைவதற்கு காரணமான வாயுக்களில் 13 சதவீதம் வீட்டு விலங்குகளிலிருந்தே வருகிறது; நியூஜீலாந்தில் இதன் நிலை சுமார் 46 சதவீதம் என்கிறது த கான்பரா டைம்ஸ் என்ற செய்தித்தாள். அசைபோடும் விலங்குகளின் வயிற்றிலுள்ள நுண்ணுயிரிகள், தீவனத்தை சிதைக்கையில் மீத்தேன் வாயு உருவாகிறது. இந்த வாயு விலங்கின் வாய் வழியாக வெளிவருகிறது. விலங்குகளால் பூமி உஷ்ணமடைவதைக் குறைப்பதற்காக இப்போது விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு, ஒவ்வொரு விலங்காலும் உருவாகும் மீத்தேனின் அளவை குறைப்பதோடு பால் உற்பத்தியின் அளவை அதிகரிக்கவும் ஆய்வு செய்து வருகின்றனர்.
(g01 2/22)
மின்சார திருடர்கள் ஜாக்கிரதை!
ஐக்கிய மாகாணங்களிலுள்ள எல்லா பொதுப்பணி கம்பெனிகளும் இப்போது ஒரு முக்கியமான பிரச்சினையால் அவதிப்படுகின்றன. அதுதான் மின்சார திருட்டு. இதை தடுக்க அவை முயலுகின்றன. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் திருடும் அளவிற்கு மின்சாரம் முக்கியமான ஒன்றாக கருதப்படவில்லை. ஆனால் மின்சார கட்டணம் இப்போது எக்கச்சக்கமாக அதிகரித்திருப்பதால், அதை திருடுவது சாதாரண விஷயமாக ஆகிவிட்டது என்கிறது த உவால் ஸ்ட்ரீட் ஜர்னல். உதாரணமாக, டெட்ராய்ட் எடிசன் கம்பெனி 1999-ம் ஆண்டு, 1 கோடி டாலர் மதிப்புள்ள மின்சாரத்தை மின்சார திருடர்களிடம் பறிகொடுத்ததாக கணக்கிடப்படுகிறது. இதனால் வரும் ஆபத்துகளை அறியாத திருடர்கள், மின்சாரத்தை திருடுவதற்கு வாகனங்களுக்குரிய ஜம்பர் கேபிள், வீட்டில் உபயோகிக்கும் எக்ஸ்டன்ஷன் வயர், காப்பர் குழாய் போன்ற அபாயகரமான சாதனங்களை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. சிலர் நிலத்தைத் தோண்டி மின்சார நிறுவனத்தின் நிலத்தடி கேபிள்களிலிருந்தே மின்சாரத்தை திருடியிருக்கிறார்கள்.
(g01 2/22)
யாரும் தேடவே இல்லையா?
பின்லாந்து, ஹெல்சிங்கிலுள்ள அப்பார்ட்மென்ட் ஒன்றில் இறந்துபோன ஒருவரின் எஞ்சிய உடல் பாகங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன. தீ எச்சரிக்கை கருவியை பொருத்த அந்த அப்பார்ட்மென்டுக்கு ஒருவர் சென்றார். அப்போது கதவுக்கு முன், லெட்டர்கள் மலைபோல குவிந்துகிடப்பதைக் கண்டார். உள்ளே இருந்து துர்நாற்றமும் வீசியது. அவர் கொடுத்த புகாரின்பேரில் உடனே அவ்விடத்துக்கு விரைந்த போலீஸ் அதிகாரிகள், அங்கு வாழ்ந்துவந்த 55 வயது மனிதர் இறந்துவிட்டதைக் கண்டறிந்தனர். அவர் ஓய்வூதியத்தில் வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார். ஆனால் அவர் இறந்து ஆறு வருடங்கள் ஆகியிருந்தன. ஹெல்சிங்கின் சனோமாட் என்ற செய்தித்தாளின் அறிக்கைபடி இவ்வளவு காலமாக சமூக இன்ஷுரன்ஸ் நிறுவனம் அவருக்கு ஓய்வூதியத்தையும், பொதுநல நிறுவனம் வீட்டு வாடகையையும் தவறாமல் அனுப்பி வந்திருக்கின்றன. ஆனாலும் இந்த இடைப்பட்ட காலத்தில் அவரை யாருமே போய் சந்திக்கவில்லை. தலைநகரில் வாழ்ந்துவந்த அவருடைய பிள்ளைகள்கூட அவரைப் பற்றி கவலைப்படவில்லை. “ஒருவர் எங்கே சென்றார், என்ன ஆனார், என்றெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாத மனித சமுதாயத்தில்—அதுவும் தண்ணீர் இல்லாத காட்டில் அல்ல, நகர்ப்புற சமுதாயத்தில்—ஒருவர் ஆறு வருடங்களைக் கழிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்கிறார் ஹெல்சிங்கி சமூக சேவை இலாக்காவின் இயக்குநர் திருமதி ஆலிக்கீ கானானோயா.
(g01 2/22)