Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கொலைகார அலைகள் உண்மையும் பொய்யும்

கொலைகார அலைகள் உண்மையும் பொய்யும்

கொலைகார அலைகள்—உண்மையும் பொய்யும்

ஜூலை 17, 1998, வெள்ளிக்கிழமை அன்று ரம்மியமான மாலை நேரம். கதிரவன் அப்போதுதான் கண்ணயர்ந்தான். பாப்புவா நியூ கினியின் வடக்கு கரையோரத்திலுள்ள பல சிறிய கிராமங்கள் திடீரென்று பூமியதிர்ச்சியால் தாக்கப்பட்டன. இந்த பூமியதிர்ச்சியின் அளவு 7.1-ஐ எட்டி கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதைப் பற்றி சையன்டிபிஃக் அமெரிக்கன் பின்வருமாறு கூறியது: “அந்தப் பூமியதிர்ச்சியின் விளைவாக கரையோரத்தில் 30 கிலோமீட்டர் (ஏறக்குறைய 19 மைல்) தூரம்வரை பயங்கர நடுக்கம் ஏற்பட்டது . . . சமுத்திர தரை திடீரென நிலைகுலைந்து போனது. இதன் காரணமாக கடல்மட்டம் திடீரென்று உயரவே, பயங்கரமான சூனாமி ஏற்பட்டது.”

அதை நேரில் கண்ட ஒருவர், வெகு தூரத்தில் இடி முழங்குவதுபோல சத்தம் கேட்டது என்றும், பிறகு கடல்மட்டம் குறைந்தளவு தண்ணீர் மட்டத்திற்கும் கீழாக சென்றபோது அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது என்றும் கூறினார். சற்று நேரத்திற்குள் மூன்று மீட்டர் உயரமான முதல் அலையைக் கண்டு அவர் மிரண்டுபோனார். அந்த அலையிலிருந்து தப்பிக்க நினைத்த அவரை அது மூழ்கடித்தது. அதைப் பின்தொடர்ந்து வந்த இரண்டாவது பெரிய அலை அவருடைய கிராமத்தை தரைமட்டமாக்கி, ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த சதுப்புநில காடு வரை அவரை அடித்துச் சென்றது. “பனை மரங்களின் உச்சியில் குப்பைக்கூளங்கள் தொங்கிக்கொண்டிருந்ததால் அந்த அலைகள் 14 மீட்டர் [46 அடி] உயரம் வரை எழும்பியிருக்க வேண்டும் என தோன்றுகிறது” என்று சையன்ஸ் நியூஸ் அறிவிக்கிறது.

அன்றைய தினம் ஏறக்குறைய 2,500 பேர் ராட்சத அலைகளுக்கு பலியானார்கள். பின்னர், புதிய பள்ளிகளைக் கட்டுவதற்காக ஒரு மரக் கம்பெனி மரங்களை தானம் செய்தது. ஆனால் பள்ளிக்கூடத்திற்கு செல்ல பிள்ளைகள் தப்பவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. ஏறக்குறைய எல்லா பிள்ளைகளுமே அதாவது 230-⁠க்கும் அதிகமான பிள்ளைகள் சூனாமிக்கு இரையானார்கள்!

சூனாமி என்றால் என்ன?

சூனாமி என்பது “துறைமுக அலை” என அர்த்தம் தரும் ஒரு ஜப்பானிய சொல். “இந்த ராட்சத அலைகளால், ஜப்பானிய துறைமுகங்களிலும் கரையோர கிராமங்களிலும் ஏராளமான மரணங்களும் பேரழிவும் ஏற்பட்டிருப்பதால் இந்தப் பெயர் மிகவும் பொருத்தமானதே” என சூனாமி! என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது. அசாதாரணமான இந்த அலைகளால் எப்படி இவ்வளவு உயரத்திற்கு எழும்ப முடிகிறது, அவை எங்கிருந்து இவ்வளவு சக்தியைப் பெறுகின்றன?

சூனாமிகள் சில சமயங்களில் கடலேற்ற அலைகள் என்று அழைக்கப்படுகின்றன. உண்மையைச் சொன்னால், கடலேற்ற அலைகள் என்பவை சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசைகளால் கடல்மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையே குறிக்கின்றன. இவற்றையே நாம் பொதுவாக அலைகள் என்று அழைக்கிறோம். புயல் காற்றுகளால் ஏற்படும் பயங்கர அலைகளை, சில சமயங்களில் 25 மீட்டருக்கும் அதிகமாக எழும்பும் அலைகளைக்கூட சூனாமிகளோடு ஒப்பிட முடியாது. பொதுவாக கடலேற்ற அலைகளுக்கு கீழே நீங்கள் ‘டைவ்’ அடித்து பார்த்தால், ஆழமாக செல்லச்செல்ல அதன் வேகம் குறைவதைக் காண்பீர்கள். ஒரு குறிப்பிட்ட ஆழத்திற்கு கீழே தண்ணீரில் எந்தவித சலசலப்பும் இருக்காது. ஆனால் சூனாமிகள் அப்படிப்பட்டவை அல்ல. அதன் பாதிப்பு கடல் மட்டத்திலிருந்து சமுத்திரத்தின் தரை வரை செல்கிறது. அது எத்தனை கிலோமீட்டர் ஆழமாக இருந்தாலும்சரி!

சமுத்திர தரையில் ஏற்படும் பயங்கரமான புவியியல் மாற்றங்களினாலேயே சூனாமிகள் உண்டாவதால் அவற்றின் பாதிப்பு அவ்வளவு ஆழம் வரை செல்கிறது. இதன் காரணமாகவே, சில சமயங்களில் சூனாமிகளை நிலநடுக்க அலைகள் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். இச்சமயங்களில் சமுத்திர தரை கொஞ்சம் உயரமாக எழும்பலாம். இதனால் அங்குள்ள தண்ணீர் மேலே எழும்புவதால் கடல்மட்டம் அதிகரிக்கிறது. இதன் பரப்பளவு 25,000 சதுர கிலோமீட்டர் வரைகூட இருக்கலாம். அல்லது சமுத்திர தரை சற்று கீழே இறங்கலாம், அதன் விளைவாக கடல்மட்டம் கொஞ்சம் குறையலாம்.

எப்படியிருந்தாலும், இவ்வாறு பாதிக்கப்பட்ட தண்ணீர் புவியீர்ப்பின் காரணமாக மேலும் கீழுமாக சென்று வருகிறது. இதன் விளைவாக, ஒரு குளத்தில் கல்லெறிந்ததும் உருவாவதைப் போன்ற வட்டவட்டமான, தொடர்ச்சியான அலைகள் உருவாகின்றன. இந்த நிகழ்ச்சி, சூனாமிகள் பயங்கரமான தனி அலைகளே என்ற பொய்யான கருத்தை தகர்த்தெறிகிறது. அதற்கு மாறாக, அவை தொடர்ச்சியாக, விரிந்து செல்வதால் சூனாமி தொடர் அலை என்றே அழைக்கப்படுகின்றன. எரிமலை வெடிப்புகள் அல்லது கடலுக்கடியில் நிகழும் நிலச்சரிவுகள் காரணமாகவும்கூட சூனாமிகள் ஏற்படலாம்.

ஆகஸ்ட் 1883-⁠ல் இந்தோனேஷியாவிலுள்ள கிரகட்டோவா என்ற எரிமலை வெடித்ததன் விளைவாக ஏற்பட்ட சூனாமிகளே இதுவரை பதிவு செய்யப்பட்டவற்றில் மிகவும் பயங்கரமானவை. அதனால் ஏற்பட்ட அலைகளில் சில, கடல் மட்டத்தைவிட 41 மீட்டர் உயரம் வரை சென்று கரையோரத்திலிருந்த சுமார் 300 நகரங்களையும் கிராமங்களையும் அழித்துப்போட்டன. அதன் காரணமாக 40,000-⁠த்திற்கும் அதிகமானோர் இறந்திருக்கலாம்.

சூனாமியின் இரட்டை வேடம்

சூறைக்காற்றினால் உண்டாகும் அலைகள் மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் வேகமாக செல்லாது, பொதுவாக அதைவிட குறைந்த வேகத்தில்தான் செல்லும். “மறுபட்சத்தில், சூனாமி அலைகளோ சமுத்திரத்தின் ஆழத்தில்கூட ஜெட் வேகத்தில் செல்லலாம். அதாவது, மணிக்கு 800 கிலோமீட்டர் அல்லது அதையும்விட அதிகமான வேகத்தில் செல்லலாம்” என சூனாமி! புத்தகம் கூறுகிறது. இவ்வளவு வேகத்தில் சென்றாலும் அவற்றால் ஆழ்கடலில் எந்த ஆபத்தும் ஏற்படாது. ஏன்?

ஏனென்றால், ஆழ்கடலில் ஒரு அலையின் உயரம் மூன்று மீட்டருக்கும் குறைவாக இருப்பதே முதல் காரணம். இரண்டு அலைகளின் முகடுகளுக்கு இடையே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் இருப்பதால் அந்த அலையின் சரிவு மிகவும் குறைவாக இருப்பதே இரண்டாவது காரணம். ஆகவே, கப்பலில் இருப்பவர்கள் அறியாமலேயே ஒரு சூனாமி அதற்கு அடியில் கடந்துசெல்ல முடியும். உதாரணமாக, ஹவாய் தீவுகளுக்கு சற்று தொலைவில் ஒரு கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. அந்தச் சமயத்தில், ஒரு சூனாமி அந்தக் கப்பலைக் கடந்து சென்றது. ஆனால் அந்தக் கப்பல் தலைவனுக்கோ அது தெரியவே இல்லை. இராட்சத அலைகள் கரையில் மோதுவதைப் பார்த்தபோதுதான் அவருக்கு அது தெரிந்தது. ஆகவே, கடலில் இருக்கையில் பாதுகாப்பைப் பெற வேண்டுமென்றால், குறைந்தபட்சம் 100 ஃபாதம் அல்லது 180 மீட்டர் ஆழமுள்ள இடத்திற்கு கப்பலை ஓட்டிச் செல்ல வேண்டும்.

நிலத்தை நெருங்குகையில் சூனாமியின் இயல்பு முற்றிலும் மாறிவிடுகிறது. இங்கு அது தரையோடு மோதுவதால் அதன் வேகம் குறைகிறது, ஆனாலும் ஒரே சீராக குறைவதில்லை. அலையின் முன்பக்கத்தைவிட அதன் பின்பக்கம் ஆழமான தண்ணீரில் இருப்பதால் அது சற்று வேகமாகவே பயணம் செய்கிறது. இந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத முன்பக்க அலை அழுத்தத்தால் உயரமாக எழும்புகிறது. இதற்குள், ஒன்றன்பின் ஒன்றாக வந்துகொண்டிருக்கும் தொடர் அலைகள் எல்லாம் அலையின் முன்பக்கத்திற்கு வந்துசேர்ந்து அதற்கு சக்தியூட்டுகின்றன.

கடைசியாக, சூனாமிகள் கரையை எட்டுகையில் நுரை கிளம்பும் அலைபோல அல்லது போர் என அழைக்கப்படும் தண்ணீராலான ஒரு சுவர்போல கரையில் விழுகின்றன. ஆனால் அவை பொதுவாக, அதிகளவு தண்ணீர் மட்டத்திற்கும் உயரே எழும்பி வெள்ளம்போலவே கரையில் வந்து சேர்கின்றன. இவ்வாறு, கடல் மட்டத்தைவிட 50 மீட்டருக்கும் உயரே தண்ணீர் எழும்புவது கவனிக்கப்பட்டிருக்கிறது. அப்போது குப்பைக்கூளங்கள், மீன்கள், பவழப்பாறை துண்டுகள் போன்றவற்றை கடற்கரையைத் தாண்டி நூற்றுக்கணக்கான மீட்டர் வரை கொண்டு செல்லும். அதன் வழியிலுள்ள எல்லாவற்றையும் துடைத்தழித்துக்கொண்டே போகும்.

ஒரு சூனாமி வருகிறதென்றால் கடலேற்றம் ஏற்பட்டு, கடல்மட்டம் திடீரென்று அதிகரிக்கும். ஆனால் எப்போதுமே அதுதான் முதல் அறிகுறி என நினைத்து ஏமாந்துவிடக்கூடாது. சில சமயங்களில் அதற்கு நேர் எதிர்மாறானது நிகழலாம். அதாவது, எப்போதும் இல்லாதளவிற்கு கடலிறக்கம் ஏற்பட்டு கடற்கரைகள், விரிகுடாக்கள், துறைமுகங்கள் போன்றவை வற்றிப்போகலாம். தண்ணீர் இல்லாததால் மீன்கள் தரையில் தத்தளித்துக் கொண்டிருக்கலாம். இதில் எது முதலில் ஏற்படும் என்பது தொடர் அலையின் எந்தப் பகுதி முதலில் கரையை எட்டுகிறது என்பதைப் பொறுத்ததே. அலை அகடு ஏற்பட்டால் கடல் இறக்கமும், அலை முகடு ஏற்பட்டால் கடல் ஏற்றமும் ஏற்படும். a

கடற்கரையில் தண்ணீர் வற்றுகையில்

மாவூய் என்ற ஹவாய் தீவில் நவம்பர் 7, 1837, அந்தி சாயும் பொழுது அமைதியாக இருந்தது. அன்று மாலை சுமார் 7 மணியளவில் கடற்கரையிலிருந்து தண்ணீர் வற்ற ஆரம்பித்தது என சூனாமி! புத்தகம் விளக்குகிறது. இதனால் பவழப்பாறை வெளியில் தெரிந்தது, மீன்களும் நீரில்லாமல் தவித்தன. தத்தளித்துக் கொண்டிருந்த மீன்களைப் பிடிக்க ஆர்வமுள்ள தீவுவாசிகளில் அநேகர் கடலை நோக்கி ஓடினர். ஆனால் விவரமறிந்த மற்ற சிலரோ மேடான பகுதியை நோக்கி ஓடினர். முன்னனுபவத்தின் காரணமாக என்ன நடக்கப்போகிறது என்பதை அவர்கள் ஒருவேளை அறிந்திருக்கலாம். திடீரென்று ஒரு பெரும் அலை அடித்தது. அது, 26 புல் குடிசைகள் கொண்ட அந்த முழு கிராமத்தையும் அடித்துச் சென்று கரைக்கு அப்பால் 200 மீட்டர் தொலைவிலுள்ள ஒரு சிறிய குட்டையில் போட்டது. கிராமவாசிகள், அவர்களுடைய ஆடுமாடுகள் அனைத்துமே அடித்துச்செல்லப்பட்டன.

அன்றைய தினமே, ஒரு மத சடங்கிற்காக ஆயிரக்கணக்கானோர் மற்றொரு தீவின் கடற்கரையில் கூடியிருந்தனர். இங்கும் தண்ணீர் திடீரென குறைந்ததால் ஆர்வமுள்ள அநேகர் பெருங்கூட்டமாக கீழே இறங்கினர். பிறகு, அதிகளவு தண்ணீர் மட்டத்தைவிட 6 மீட்டர் உயரமான ஒரு ராட்சத அலை திடீரென்று எழும்பி கரையை நோக்கி விரைந்தது. “பந்தயக்குதிரையைப் போன்ற வேகத்துடன்” அது கரையை நோக்கி வந்ததாக அதைக் கண்ட ஒருவர் கூறினார். தண்ணீர் கடலுக்குள் திரும்பிப்போகையில் நன்றாக நீச்சல் தெரிந்தவர்களைக்கூட இழுத்துச் சென்றுவிட்டது. அவர்களில் சிலர் எதிர்த்துப் போராட முடியாமல் நீரில் மூழ்கி இறந்துபோனார்கள்.

எவ்வளவு அடிக்கடி ஏற்படுகின்றன?

சையன்டிபிஃக் அமெரிக்கன் கூறுவதாவது: “1990 முதற்கொண்டு 10 சூனாமிகள் 4,000-⁠த்திற்கும் அதிகமானோரை கொன்று குவித்திருக்கின்றன. பூமி முழுவதிலும் மொத்தத்தில் 82 சூனாமிகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் காட்டுகின்றன. இது, பத்து ஆண்டுகளில் 57 என்ற முன்னாளைய சராசரியைவிட மிக அதிகம்.” ஆனால், தகவல் தொடர்பில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றமே இங்கு சொல்லப்படும் அதிகரிப்பிற்கு காரணம் என்று அந்தப் பத்திரிகை கூறுகிறது. அதோடு, கரையோரத்தில் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்றும் அது கூறுகிறது.

பசிபிக் பெருங்கடலில்தான் சூனாமிகள் அடிக்கடி ஏற்படுகின்றன. ஏனென்றால் அதன் அடித்தளத்தில்தான் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது. “ஒவ்வொரு வருடமும் பசிபிக்கின் ஏதாவதொரு மூலையில் பேரழிவை ஏற்படுத்தும் ஒரு சூனாமியாவது கட்டாயம் ஏற்படும்” என்று ஒரு புத்தகம் கூறுகிறது. மேலுமாக, “ஐக்கிய மாகாணங்களில், கடந்த 50 வருடங்களில் நிலநடுக்கத்தால் இறந்தவர்களில் 62 சதவிகிதத்தினர் சூனாமிகளுக்கு பலியானவர்களே” எனவும் அது கூறுகிறது.

வருமுன் அறிய வாய்ப்புண்டா?

1948-⁠க்கும் 1998-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் ஹவாயில் கொடுக்கப்பட்ட சூனாமி எச்சரிப்புகளில் சுமார் 75 சதவிகிதம் பொய்யானவை. எனவே, மக்கள் எச்சரிப்பை அசட்டை செய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், புதிய தொழில்நுட்பத்தை உபயோகித்து சூனாமிகளைக் கண்டுபிடிக்க இன்னும் மேம்பட்ட முறைகளை இப்போது உபயோகிக்கின்றனர். பாட்டம் பிரஷர் ரெக்கார்டர் (பிபிஆர்) என்பதே இந்த மேம்பட்ட முறையில் உபயோகிக்கப்படும் முக்கிய கருவியாகும். அதன் பெயரே சுட்டிக்காட்டுகிறபடி இது நூற்றுக்கணக்கான மீட்டர் கீழே சமுத்திரத்தின் தரையில் வைக்கப்படுகிறது.

இந்தக் கருவி மிகவும் சக்தி வாய்ந்தது. ஒரு சென்டிமீட்டர் உயரமே உள்ள சூனாமி அதன்மீது கடந்து சென்றாலும் தண்ணீரில் ஏற்படும் அழுத்தத்தை அது பதிவு செய்துவிடுகிறது. பிறகு இந்த பிபிஆர், ஒலி அலைகளை உபயோகித்து இத்தகவலை ஒரு விசேஷித்த மிதவைக்கு அனுப்புகிறது; மிதவை இதை செயற்கைக்கோளுக்கு அனுப்புகிறது. செயற்கைக்கோள் இதை சூனாமி எச்சரிப்பு மையத்திற்கு கடத்துகிறது. இந்த முறை மிகவும் துல்லியமானது என்பதால் பொய்யான எச்சரிப்புகளின் எண்ணிக்கை குறையும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

முழுமையான பாதுகாப்பைப் பெற பொதுமக்களின் விழிப்புணர்வும் கல்வியுமே அதிமுக்கியமானவை. மிகச் சிறந்த எச்சரிப்பு முறைகள் இருந்தும் மக்கள் அதை அசட்டை செய்தார்கள் என்றால் என்ன பிரயோஜனம்? ஆகவே, சூனாமி தாக்கக்கூடிய, தாழ்வான கடலோரப் பகுதியில் நீங்கள் வாழ்ந்து வந்தால், சூனாமி தாக்கப்போவதாக உள்ளூர் அதிகாரிகள் அறிவித்தால் அல்லது பூமியதிர்ச்சி ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால் அல்லது என்றுமில்லாத அளவிற்கு கடலிறக்கம் ஏற்பட்டால் உடனே மேடான பகுதிக்கு ஓடிவிடுங்கள். சூனாமிகள் கடலில் ஜெட் வேகத்தில் பயணிக்கின்றன, கரையோரத்தில்கூட அதிவேகமாகத்தான் பயணம் செய்கின்றன என்பதை மறந்துவிடாதீர்கள். ஆகவே, அலை வருவதை பார்த்தபிறகு ஓடி தப்பிக்கலாம் என்பது நடக்காத காரியம். ஆனால், நீங்கள் கப்பலில் உலாவிக்கொண்டிருக்கையில் அல்லது மீன் பிடித்துக்கொண்டிருக்கையில் ஒரு சூனாமி தாக்கினால் கவலையே வேண்டாம். மேசைமீது நீங்கள் வைத்திருக்கும் காப்பி அல்லது ஒயின் பெரும்பாலும் சிந்தாமல் சிதறாமல் அப்படியே இருக்கும்.

(g01 2/08)

[அடிக்குறிப்பு]

a தண்ணீர் மட்டம் குறைவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது; அதாவது, எல்லா அலைகளிலும் காணப்படும் தண்ணீரின் வட்ட அல்லது நீள்வட்ட அசைவும் இதற்கு காரணம் என்று டிஸ்கவர் பத்திரிகை கூறுகிறது. கடலில் நீந்துபவர்கள், அலை வருவதற்கு முன்பு தண்ணீர் தங்களை கடலுக்குள் இழுப்பதை உணருகிறார்கள். சூனாமிகள் வருகையில் இந்த இழுப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால்தான், சூனாமியின் முதல் அலை வருவதற்கு முன்பு கடற்கரைகளில் அல்லது துறைமுகங்களில் உள்ள தண்ணீர் வற்றிப்போகிறது.

[பக்கம் 21-ன் படம்]

(For fully formatted text, see publication)

பெரும்பாலும் சமுத்திர தரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் காரணமாகவே சூனாமிகள் உண்டாகின்றன

பிளவு

உற்பத்தி

பரவுதல்

வெள்ளப் பெருக்கு

[பக்கம் 20-ன் படங்கள்]

U.S. Department of the Interior

[பக்கம் 23-ன் படம்]

(For fully formatted text, see publication)

ஆழ்கடல் கருவிகளை உபயோகிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சூனாமிகளை முன்னறிவிக்க முயலுகின்றனர்

செயற்கைக்கோள் இணைப்பு

மிதவை

ஹைட்ரோஃபோன்

நங்கூரம்

ஒலி இணைப்பு

சூனாமியைக் கண்டுபிடிக்கும் கருவி

5,000 மீட்டர்

[படத்திற்கான நன்றி]

Karen Birchfield/NOAA/Pacific Marine Environmental Laboratory

[பக்கம் 21-ன் படம்]

ஒரு சூனாமி இந்த டிரக் சக்கரத்திற்குள் ஒரு கட்டையை செருகியது

[பக்கம் 21-ன் படங்கள்]

U.S. Geological Survey

[பக்கம் 22-ன் படம்]

(இடது) அலாஸ்காவிலுள்ள ஸ்காட்ச் கேப் கலங்கரை விளக்கம், 1946-⁠ல் சூனாமி தாக்குவதற்கு முன்பு

(மேலே) சூனாமிக்கு பிறகு ஏற்பட்ட முழுமையான அழிவு

[படத்திற்கான நன்றி]

◀ U.S. Coast Guard photo ▲