Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருட்டுத்தனமாக இரவில் வெளியே போவது தப்பா?

திருட்டுத்தனமாக இரவில் வெளியே போவது தப்பா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

திருட்டுத்தனமாக இரவில் வெளியே போவது தப்பா?

“நாங்க நடுராத்திரியில திருட்டுத்தனமா வெளிய கெளம்பி நேரா காபி ஷாப்புக்கு போவோம். மத்த ஃபிரென்ட்ஸ்ங்க அங்க இருப்பாங்க. அதுக்கப்புறம் எல்லாருமா சேந்து பக்கத்துல இருக்குற மலைக்குப்போயி சுத்திக்கிட்டிருக்க ஆரம்பிச்சோம். மத்த பசங்க பொண்ணுங்க எல்லாம் சிகரெட்ட ஊதித் தள்ளுவாங்க, ஆனா நான் அதை தொட்டதே இல்ல. எல்லாரும் ரவுண்டா உக்காந்துகிட்டு சளைக்காம பேசிட்டிருப்போம். ஒருபக்கம் ஹெவி மெட்டல் பாட்டு அலறிட்டிருக்கும். விடிய விடிய இப்படி பொழுத கழிச்சிட்டு அப்பா அம்மா எழுந்திருக்கிறதுக்கு முன்னாடி காலைல 5 மணிக்கெல்லாம் ‘டாண்ணு’ வீட்டுக்கு போயிடுவோம்.”​—⁠தாரா. a

“எப்படா அப்பா வேலைக்கு போவாங்க, அம்மா தூங்கப் போவாங்கன்னு காத்திட்டிருப்பேன். அதுக்கப்புறம் நான் முன் பக்க கதவு வழியா பூனைபோல நழுவிடுவேன். எங்க வீட்டு கதவு இரும்பு கதவு. அதனால வெளியே போகும்போது கதவு சத்தம் கேட்டு அம்மா எழுந்துடக்கூடாதுன்னு அதை தொறந்து வெச்சிட்டே போயிடுவேன். ராத்திரி முழுக்க ஃபிரென்ட்ஸோட ஜாலியா சுத்திட்டு காலைல மறுபடியும் பூனை மாதிரி வீட்டுக்குள் நுழைஞ்சுடுவேன். ஆனா, சிலசமயம் நான் வீட்டுல இல்லாதது அம்மாவுக்குத் தெரிஞ்சு போச்சுன்னா கதவ பூட்டி வெச்சிடுவாங்க.”​—⁠ஜோசஃப்.

வீட்டுக்கு தெரியாமல் வெளியே சுற்றுவது என்றாலே தனி குஷிதான். அந்த கொஞ்ச நேரத்திற்கு நீங்களே ராஜா நீங்களே மந்திரி. உங்கள் மனம் போன போக்கில் யாருடனும் இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம், கேள்வி கேட்க ஆளில்லை. அதுமட்டுமல்ல, உங்கள் நண்பர்கள் இரவில் வீட்டுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக வெளியே போய் வந்த அனுபவங்களை உங்களிடம் சொல்லலாம். நான் அதை செய்தேன் இதை செய்தேன், சந்தோஷமாக இருந்தேன் என அவர்கள் கதைகதையாக அளக்கலாம். அதனால் ‘நானும் போய் பார்த்தால் என்ன’ என்ற கேள்வி உங்கள் மனதை குடையலாம்.

வட அமெரிக்காவில் செய்யப்பட்ட ஓர் ஆய்வில், 110 ஜூனியர் மற்றும் சீனியர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடம் இதைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அவர்களில் 55 பேர் குறைந்தபட்சம் ஒருமுறையாவது இரவில் திருட்டுத்தனமாக வெளியே சென்று நண்பர்களுடன் நேரத்தை கழித்ததை ஒப்புக்கொண்டனர். அவர்களில் பெரும்பான்மையர் 14 வயதாக இருக்கையிலேயே இப்படி செய்ய துவங்கி இருக்கின்றனர். இளைஞர்களுக்கு இது சாதாரண விஷயம். ஆனால் பெற்றோருக்கோ இது பெரிய பிரச்சினை. எனவே, பெற்றோருக்குத் தெரியாமல் பிள்ளைகள் இரவில் வெளியே செல்வதை தடுப்பதற்கு எலெக்ட்ரானிக் அலார்மை வீட்டில் பொருத்த சில நிபுணர்கள் ஆலோசனை கொடுக்கின்றனர். இவ்வாறு இளைஞர்கள் இரவில் திருட்டுத்தனமாக வெளியே சென்று தங்கள் பெற்றோரைக் கோபப்படுத்துவதேன்?

திருட்டுத்தனமாக வெளியே செல்வதேன்?

வீட்டில் போரடிப்பதால்தான் சில இளைஞர்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிக்க விரும்புகின்றனர், அதற்காக திருட்டுத்தனமாக வெளியே செல்கின்றனர். இளைஞர்கள் இவ்வாறு அப்பா அம்மாவுக்குத் தெரியாமல் வெளியே செல்வதற்கான காரணம், “கொஞ்சம் இருட்டியதுமே வெளியே செல்ல தடைவிதிப்பது, அல்லது சில விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாதபடி ஏதாவது வேலை கொடுத்து ‘தண்டிப்பது’ போன்ற கட்டுப்பாடுதான். ஆனால் என்னதான் கட்டுப்பாடு வைத்தாலும் வெளியே சுற்ற நினைக்கும் இளைஞர்கள் போய்த்தான் தீருவார்கள். சில சமயம் அவர்கள் போவதும் வருவதும் பெற்றோருக்கு தெரியாமலேயே போகிறது” என சொல்கிறது இளமையும் முதிர்ச்சியின்மையும் என்ற ஆங்கில புத்தகம். 16 வயது பெண் ஒருத்தி திருட்டுத்தனமாக வெளியே சென்று வந்ததற்கான காரணத்தை விளக்குகிறாள்: “என்னை இன்னும் சின்ன குழந்தைன்னு நினைக்கிறாங்க, என் விருப்பப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியல. சாதாரணமா மத்த வீடுகள்ல சொல்றதவிட, சாயங்காலம் சீக்கிரமே வீட்டுக்கு திரும்பிவந்துடனும்னு எங்க வீட்டுல சொல்றாங்க. என்னோட ஃபிரெண்ட்ஸ் போற இடத்துக்கெல்லாம் என்னை போக என் அப்பா அம்மா விடமாட்டாங்க . . . ஆனாலும் அவங்களுக்கு டிமிக்கி கொடுத்திட்டு எப்படியாவது வெளியே போயிடுவேன், அப்புறமா அதற்கு ஏதாவது பொய் சொல்லி சமாளிச்சிடுவேன்.” கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட ஜோசஃப், 14 வயதிலேயே திருட்டுத்தனமாக வெளியே செல்ல ஆரம்பித்தான். பெற்றோர் பேச்சை மீறி ராப் இசை நிகழ்ச்சிக்குப் போனான்.

பெரும்பாலான இளைஞர்கள் திருட்டுத்தனமாக வெளியே செல்வதற்கு தவறான உள்நோக்கம் எதுவும் கிடையாது என்பது உண்மைதான். கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட தாரா சொன்னாள்: “‘ஏதாவது ஒரு பெரிய தப்ப பண்ணிடலாம்’ அப்படின்னு நினைச்சுகிட்டு நாங்க போகல. என் அக்காவுக்கு வெளியே போய் தன் ஃபிரெண்ட்ஸோட சிரிச்சு பேசி சந்தோஷமா இருக்க ஆசை. எனக்கு அக்காவோட இருக்க ஆசை. அதனால வெளியே போக ஆரம்பிச்சோம்.” “வெறுமனே ஜாலியா சுத்திட்டிருக்கத்தான் போனோம். எனக்கு என் ஃபிரெண்ட்ஸோட பேசனும் அவங்ககூட இருக்கனும்னு ஆசை அவ்வளவுதான்” என்கிறான் ஜோசஃப். இவ்வாறு ஃபிரெண்ட்ஸுடன் வெளியே செல்லும்போது பெரிய குற்றச்செயல்கள் நடந்துவிடுவது அரிதுதான் என்றாலும் அநேக இளைஞர்கள் மோசமான பிரச்சினையில் மாட்டிக்கொள்கின்றனர்.

அபாயங்கள்

“இளைஞர்கள் அபாயங்களை துணிச்சலோடு எதிர்ப்படுவது சகஜமான விஷயமே” என்கிறார் மனநல நிபுணர் டாக்டர் லின் ஈ. போன்டன். இளைஞர்களிடம் உள்ள சுதந்திர மனப்பான்மை, ஏதாவது புதிது புதிதாக செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல், புதிய புதிய இடங்களில் சுவாரஸ்யமான சூழலில் நேரத்தை கழிப்பதற்கான விருப்பம், இவையெல்லாம் இயல்பானதே, நல்லதும்கூட என அவர் விளக்குகிறார். இவை வளரும் வயதிற்கே உரிய பண்பு. ஆனால் அநேக இளைஞர்கள் வரம்புமீறி அபாயங்களில் துணிச்சலுடன் ஈடுபடுகின்றனர். முக்கியமாக பக்கத்தில் பெற்றோர் இல்லாத சமயங்களில் இவ்வாறு செயல்படுகின்றனர். “ஃபிரெண்ட்ஸின் தூண்டுதல், சலிப்பு, கட்டுப்பாடற்ற உத்வேகம் போன்றவை அல்லது பீர் போன்ற மதுபானத்தை குடித்திருப்பது . . . இளைஞர் அபாயகரமான செயல்களில் துணிந்து ஈடுபட தூண்டிவிடுகிறது. அதில் அவர்கள் உயிரையும் பணையம் வைக்கின்றனர்” என்கிறது டீன் என்ற பத்திரிகை. அதிவேகமாக வண்டி ஓட்டுவது, ரவுடித்தனம் செய்வது, குடித்துவிட்டு ஓட்டுவது, திருடுவது போன்றவை இளைஞர் துணிச்சலுடன் ஈடுபடும் அபாயகரமான செயல்கள் என ஒரு ஆய்வு பட்டியலிட்டது.

தப்பித்தவறி கீழ்ப்படியாமை என்ற புதைகுழியில் கால்வைத்து சின்ன சின்ன தவறுகளை செய்ய ஆரம்பித்தீர்கள் என்றால் அவ்வளவுதான், எளிதாகவே மிக மோசமான தவறுகளையும் செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள். லூக்கா 16:10-⁠ல் (பொ.மொ.) இயேசு சொன்ன விதமாக: “மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.” எனவே நண்பர்களுடன் திருட்டுத்தனமாக வெளியே செல்வது பெரும் தவறுகளுக்கு அழைப்பு விடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. தாரா, வேசித்தன வலையில் சிக்கினாள். ஜோசஃப் போதை மருந்துகளை விற்க துவங்கி, போலீஸாரிடம் பிடிபட்டு சிறைக்குச் சென்றான். ஜான் என்ற ஒரு கிறிஸ்தவ இளைஞன் போதை மருந்துகளை நாட ஆரம்பித்து, கார் திருட்டிலும் ஈடுபட்டான். இப்படிப்பட்ட நடத்தையால், கருத்தரிப்பு, பாலுறவால் கடத்தப்படும் நோய், மதுபானத்திற்கும் போதை மருந்துகளுக்கும் அடிமையாதல் போன்ற உடல் பாதிப்புகளால் அநேக இளைஞர் அவதிப்படுவது வருந்தத்தக்க விஷயம்.​—கலாத்தியர் 6:7, 8.

பாதிப்பு

இவற்றால் உங்கள் உடல் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆனால் அதைவிட மிக மோசமாக பாதிக்கப்படப்போவது உங்கள் மனம். உறுத்தும் மனசாட்சியைவிட வேதனைமிக்கது வேறெதுவும் இருக்க முடியாது. (சங்கீதம் 38:3, 4) “உங்களிடமுள்ள ஒரு பொருள் கையைவிட்டு போகும்வரை அதன் அருமை தெரியாது என்று சொல்வார்கள். என்னுடைய கடந்த காலத்தை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், எந்தளவு முட்டாள்தனமாக நடந்திருக்கிறேன் என்பது புரிகிறது. நானா இப்படியெல்லாம் செய்தேன் என்று என்னால் நம்பவே முடியவில்லை” என்கிறான் ஜோசஃப்.

அத்துடன் உங்களுக்கு ஏற்படும் அவப்பெயரையும் சற்று நினைத்துப் பாருங்கள். “செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கெட்டுப்போகப் பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்” என்கிறது பிரசங்கி 10:1. முற்காலங்களில் விலைமதிப்புமிக்க தைலத்தை அல்லது நறுமணப் பொருளை ஒரு சிறிய செத்த ஈ கெடுத்துவிடலாம். அதேபோல, நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த நல்ல பெயரை “சொற்ப மதியீன”த்தால் நிமிஷத்தில் இழந்துவிடலாம். அத்துடன், நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்றால், இப்படிப்பட்ட தவறான நடத்தை, சபையில் எந்தவொரு சிலாக்கியத்தையும் பெறாதபடி உங்களுக்கு தடையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், நீங்களே பைபிள் நியமங்களை சரியாக பின்பற்றுவதில்லை என்பது மற்றவர்களுக்கு தெரிகையில் அவற்றை பின்பற்றும்படி அவர்களுக்கு நீங்கள் எப்படி சொல்ல முடியும்?​—ரோமர் 2:1-3.

கடைசியாக, நீங்கள் வீட்டில் இல்லாதது உங்கள் பெற்றோருக்கு தெரியவரும்போது அனுபவிக்கும் மனவேதனையை சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு தாய் தன் 15 வயது மகள் வீட்டில் இல்லாததை கண்டுபிடித்தபோது பயத்தால் துடித்துப்போனதாக விளக்குகிறார். தங்கள் மகள் எங்கே போயிருக்கிறாள் என்பது அறியாமல் அம்மா அப்பா ‘இருவருமே பதறிப்போனதாக’ அவர் சொல்கிறார். இப்படிப்பட்ட வேதனையையும் கவலையையும் உங்கள் பெற்றோருக்குத் தர உங்களுக்கு ஆசையா?​—நீதிமொழிகள் 10:⁠1.

சுதந்திரப் பறவையாக பறக்க

பெற்றோர் அதிக கண்டிப்புடன் இருந்தால் உங்களுக்கு எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அதற்காக நீங்கள் திருட்டுத்தனமாக வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டுமா? பெரும்பாலும் நீங்கள் மாட்டிக்கொள்வதுதான் மிச்சம். ஒருவேளை நீங்கள் புத்திசாலித்தனமாக உங்கள் பெற்றோரை ஏமாற்றினாலும் யெகோவாவை ஏமாற்ற முடியாது; உங்கள் ஒவ்வொரு செயலையும் ஏன், இருட்டில் செய்வதையும்கூட அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார். (யோபு 34:21) இன்றோ நாளையோ நிச்சயம் உங்கள் குட்டு வெளிப்படும், அப்போது பெற்றோருக்கு உங்கள்மீதுள்ள கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் மறைந்து போய்விடும். விளைவு? நீங்கள் எந்த சுதந்திரத்தை அடைய இதை செய்தீர்களோ அது உங்களைவிட்டு இன்னும் தள்ளிப்போய்விடும்!

சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்க உங்கள் பெற்றோரின் நம்பிக்கையை நீங்கள் முதலாவது பெற வேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். இதற்கு சிறந்த வழி அவர்களுக்குக் கீழ்ப்படிவது மட்டுமே. (எபேசியர் 6:1-3) ஏதாவது ஒரு விஷயத்தில் உங்கள் பெற்றோர் ரொம்ப கண்டிப்புடன் இருப்பதாக தோன்றினால் அவர்களிடம் மரியாதையுடன் மனம்விட்டு பேசுங்கள். நீங்கள் சொல்வதை ஒருவேளை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால், சில விஷயங்களில் அவர்கள் கண்டிப்புடன் இருப்பதற்கு நியாயமான காரணம் இருப்பது உங்களுக்கு தெரியவரலாம். அதை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருந்தாலும் அவர்கள் உங்கள்மீது உயிரையே வைத்திருக்கின்றனர், உங்களுக்கு எது நல்லதோ அதையே செய்ய விரும்புகின்றனர் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள்மீது அவர்களுக்குள்ள நம்பிக்கை தொடர்ந்து அதிகரிக்கட்டும். காலப்போக்கில், நீங்கள் பெற விரும்பும் சுதந்திரம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். b

‘அவர்களோடு செல்லாதே!’

பண்டைய காலங்களில், சகாக்களுடன் சேர்ந்து முரட்டுத்தனமான பழக்க வழக்கங்களில் ஈடுபட கடவுள் பயமிக்க இளைஞர் அதிகம் தூண்டப்பட்டனர். அதனால்தான் சாலொமோன் இவ்வாறு இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார்: “பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே. . . . அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே.” (நீதிமொழிகள் 1:10, 15, பொ.மொ.) நண்பர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் திருட்டுத்தனமாக வெளியே செல்ல வற்புறுத்தினால் சாலொமோனின் இந்த அறிவுரையை நினைத்துக்கொள்ளுங்கள். சாலொமோனின் இந்த எச்சரிக்கையையும் கவனியுங்கள்: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.”​—நீதிமொழிகள் 22:⁠3.

நீங்கள் ஏற்கெனவே திருட்டுத்தனமாக செல்ல ஆரம்பித்திருந்தால், நிறுத்திவிடுங்கள்! உங்கள் வாழ்க்கையை நீங்களே பாழாக்கிக்கொள்ளாதீர்கள். இதுவரை நீங்கள் செய்து வந்ததை உங்கள் பெற்றோரிடம் ஒளிவுமறைவின்றி சொல்லுங்கள். அதற்காக அவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் அல்லது என்ன கட்டுப்பாடுகளை வைத்தாலும் அவற்றை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். தேவைப்பட்டால், புதிய நண்பர்களை, சரியான பாதையில் உங்களை நடத்திச்செல்லும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுங்கள். (நீதிமொழிகள் 13:20) அபாயம் இல்லாத, நல்ல பலன்களை அளிக்கும் காரியங்களில் ஈடுபட்டு சந்தோஷத்தை அனுபவியுங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பைபிள் படிப்பது, கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வது ஆகியவற்றின் வாயிலாக ஆவிக்குரிய தன்மையில் முன்னேறுங்கள். “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்?” என கேட்டுவிட்டு சங்கீதக்காரனே இவ்வாறு பதிலளிக்கிறார்: “[கடவுளின்] வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” (சங்கீதம் 119:9) படிப்படியாக முன்னேறி சரியானதையே செய்ய நீங்கள் தீர்மானிக்கும்போது, திருட்டுத்தனமாக வெளியே சென்று சுற்றிவிட்டு வருவது குஷிதான் என்றாலும் அநேக அபாயங்களை எதிர்ப்பட்டு அந்த குஷியை அடைவது தேவையற்றது என்பதை புரிந்துகொள்வீர்கள்.

(g01 2/22)

[அடிக்குறிப்புகள்]

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b அதிக சுதந்திரத்தை பெறுவது எப்படி என்பதைப் பற்றிய தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்​—⁠பலன் தரும் விடைகள் என்ற புத்தகத்தின் 3-⁠ம் அதிகாரத்தை பார்க்கவும்.

[பக்கம் 26-ன் சிறு குறிப்பு]

“என்னோட ஃபிரெண்ட்ஸ் போற இடத்துக்கெல்லாம் என்னை போக என் அப்பா அம்மா விடமாட்டாங்க . . . ஆனாலும் அவங்களுக்கு டிமிக்கி கொடுத்திட்டு எப்படியாவது வெளியே போயிடுவேன், அப்புறமா அதற்கு ஏதாவது பொய் சொல்லி சமாளிச்சிடுவேன்”

[பக்கம் 25-ன் படம்]

திருட்டுத்தனமாக வெளியே செல்வது பெரும்பாலும் மோசமான பிரச்சினைகளுக்கு வழிநடத்துகிறது