Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருமணம் ஆயிரம் காலத்து பயிரா?

திருமணம் ஆயிரம் காலத்து பயிரா?

பைபிளின் கருத்து

திருமணம் ஆயிரம் காலத்து பயிரா?

ஏன் இந்தக் கேள்வி? திருமணத்தின் போது, “மரணம் நம்மை பிரிக்கும் வரை இன்பத்திலும் துன்பத்திலும் சேர்ந்தே இருப்போம்” என மேற்கத்திய திருமண வாக்குறுதிகளில் சொல்லப்படுகிறதல்லவா? வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்கும் ஓர் ஒப்பந்தத்தை மணமகனும் மணமகளும் செய்வதாக திருமண வாக்குறுதிகள் பொதுவாக குறிப்பிடுகின்றன. ஆனால் இன்று அநேகர் இந்த வாக்குறுதிகளை பயபக்தியுடன் ஏற்க மனமில்லாதிருக்கின்றனர். விவாகரத்து செய்வோரின் எண்ணிக்கையை நினைத்தாலே பயமாக இருக்கிறது. திருமண பந்தத்தில் இணைந்து சில மாதங்களே ஆகியிருந்தாலும்சரி பல வருடங்கள் ஆகியிருந்தாலும்சரி இதே கதிதான். திருமணத்தின் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் ஏன் குறைந்து வருகிறது? அதற்கான பதிலை பைபிள் தருகிறது.

பைபிளில் 2 தீமோத்தேயு 3:1-3-⁠லுள்ள விளக்கத்தை இன்றைய உலகில் நீங்கள் காணும் நிஜத்துடன் தயவுசெய்து ஒப்பிட்டு பாருங்கள். “கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வரு[ம்] . . . எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், . . . நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், . . . இச்சையடக்கமில்லாதவர்களாயும் [இருப்பார்கள்]” என அந்த வசனங்களின் ஒருபகுதி சொல்கிறது. அந்தத் தீர்க்கதரிசனம் அச்சுப்பிசகாமல் இன்று நிறைவேறுவது கவனத்தைக் கவருகிறது. உலகம் முழுவதும் இந்த மனப்பான்மைகள் திருமண உறவை சீரழித்திருக்கின்றன, பலவீனமாக்கியிருக்கின்றன. இதற்கு எண்ணற்ற விவாகரத்துக்கள் சாட்சி பகருகின்றன.

அநேகர் திருமணத்திற்கு கொடுக்க வேண்டிய மதிப்பைக் கொடுக்காமல் இருப்பது நன்கு அறிந்ததே. அதனால் இப்போது சில கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறோம். திருமண பந்தத்தை மதிப்புடன் கருத வேண்டுமா? தாம்பத்தியம் பவித்திரமானது என்பது உண்மையா? திருமண பந்தத்தை கிறிஸ்தவர்கள் எப்படி கருத வேண்டும்? மணமுடித்தோருக்கு இன்று பைபிள் எப்படி உதவுகிறது?

கடவுளுடைய கருத்து மாறிவிட்டதா?

கடவுள் துவக்கத்தில் திருமண பந்தத்தை ஏற்படுத்தியபோது அதை தற்காலிக பந்தம் என்று குறிப்பிடவில்லை. அவர் முதல் மனித ஜோடியை திருமணத்தில் சேர்த்து வைத்ததைப் பற்றி ஆதியாகமம் 2:21-24 சொல்கிறது. அங்கு அவர் விவாகரத்தை அல்லது பிரிந்து வாழ்வதை பற்றி எதுவும் சொல்லவில்லை. “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” என்றே 24-⁠ம் வசனம் சொல்கிறது. இது எதை அர்த்தப்படுத்துகிறது?

மனித சரீரத்தை சற்று சிந்தியுங்கள். அதில் வித்தியாசப்பட்ட திசுக்கள் எல்லாம் கண்ணால் காண முடியாதபடிக்கு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன; எலும்புகள் எல்லாம் மூட்டுகளில் உறுதியாகவும் உராய்வுகள் இன்றியும் இணைந்திருக்கின்றன. என்னே ஒற்றுமை! என்னே நிலையான தன்மை! இப்படி அருமையாய் வடிவமைக்கப்பட்ட உடலில் பயங்கர காயம் ஏற்படுகையில் சகிக்க முடியாத ரண வேதனையைத் தருகிறது அல்லவா? எனவே, ஆதியாகமம் 2:24-⁠ல் ‘ஒரே மாம்சம்’ என சொல்லுகையில், அது மண வாழ்க்கையின் பரஸ்பரத்தையும் நிலையான தன்மையையும் வலியுறுத்துகிறது. இந்தப் பந்தம் முடிவுறும்போது ஏற்படும் ‘ரண’ வேதனையைப் பற்றியும் அது தெளிவாக எச்சரிக்கிறது.

காலம் மாறிக்கொண்டே இருக்க, திருமணத்தைப் பற்றிய மனிதரின் எண்ணங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் கடவுளுடைய எண்ணங்கள் மாறுவதேயில்லை, அவர் பார்வையில் திருமணம், நிரந்தரமாய் நிலைத்திருப்பதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தமே. சுமார் 2,400 வருடங்களுக்கு முன்பு சில யூத ஆண்கள் தங்கள் முதல் மனைவியை கைவிட்டுவிட்டு இளம் பெண்களை மணந்துகொள்ள ஆரம்பித்தனர். இந்தச் செயலை கடவுள் கண்டித்தார்; “ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். தள்ளிவிடுதலை [“விவாகரத்தை,” NW] நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] சொல்லுகிறார்” என தம்முடைய தீர்க்கதரிசியாகிய மல்கியா மூலம் அறிவித்தார்.​—⁠மல்கியா 2:15, 16.

இது நடந்து நானூறு ஆண்டுகளுக்கு பின்னர், ஆதியாகமம் 2:24-ஐ இயேசு, மேற்கோள் காட்டுகையில் கடவுளுடைய ஆரம்ப கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்; பின்னர், “தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்” என்று சொன்னார். (மத்தேயு 19:5, 6) இதற்கு பல வருடங்களுக்குப் பின்பு அப்போஸ்தலனாகிய பவுலும், “மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது,” “புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது” என புத்திமதி கூறினார். (1 கொரிந்தியர் 7:10, 11) இந்த வசனங்கள் திருமணத்தைப் பற்றிய கடவுளுடைய கருத்தைத் தெள்ளத் தெளிவாக படம்பிடித்துக் காட்டுகின்றன.

திருமண பந்தம் முடிவுறுவதை பைபிள் எப்போதாவது அனுமதிக்கிறதா? அனுமதிக்கிறது. மணத்துணையில் ஒருவர் இறந்துபோகையில் திருமணம் முடிவுறுகிறது. (1 கொரிந்தியர் 7:39) விபசாரத்தில் ஈடுபட்டவரிடமிருந்து விலக வேண்டும் என்று குற்றம் செய்யாத துணை தீர்மானித்தால் அந்தத் திருமணம் முடிவுறலாம். (மத்தேயு 19:9) இப்படிப்பட்ட காரணம் ஏதும் இல்லையென்றால் தம்பதிகள் சேர்ந்தே வாழ பைபிள் ஊக்குவிக்கிறது.

திருமணம் நிரந்தரமாக நிலைத்திருக்க . . .

திருமண பந்தம் நிரந்தரமாக நிலைக்க வேண்டும் என்றே கடவுள் விரும்புகிறார்; ஆனால் அந்த திருமணத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டமாக அல்ல, அது மகிழ்ச்சி பயணமாய் இருக்க வேண்டும் என்றே கடவுள் விரும்புகிறார். கணவனும் மனைவியும் தங்கள் பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொண்டு பரஸ்பர உறவில் மகிழ்ச்சி காணும்படி அவர் விரும்புகிறார். திருமண பந்தம் சந்தோஷமானதாய் நீடித்திருக்க அவருடைய வார்த்தையே வழிகாட்டி. பின்வரும் வசனங்களை தயவுசெய்து கவனியுங்கள்.

எபேசியர் 4:26: “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது. a எந்த மனஸ்தாபத்தையும் உடனடியாக தீர்த்துக்கொள்ள தனக்கும் தன் மனைவிக்கும் இந்த வசனம் உதவுவதாக மண வாழ்க்கையில் சந்தோஷம் காணும் ஒருவர் சொல்கிறார். “மனஸ்தாபத்திற்குப் பின்பு தூக்கம் வரவில்லை என்றால் எங்கோ தவறு இருக்கிறது. பிரச்சினையை நீங்கள் அப்படியே விட்டுவிட முடியாது” என்கிறார் அவர். சில சமயங்களில் அவரும் அவருடைய மனைவியும் பிரச்சினைகளை எல்லாம் அந்த இரவிலேயே வெகுநேரம் கண்விழித்து அலசியாராய்கின்றனர். அது பலனளிக்கிறது. “பைபிள் நியமங்களைப் பின்பற்றியது அற்புதமாய் கைமேல் பலனளித்திருக்கிறது” என்றும் சொல்கிறார் அவர். இவ்வாறு செய்வதன் மூலம் இவர் 42 வருட காலமாக தம்முடைய தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி காண்கிறார்.

கொலோசெயர் 3:13: “ஒருவரையொருவர் தாங்கி, . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” இதை தானும் தன் மனைவியும் எப்படி பின்பற்றினார்கள் என்பதை ஒரு கணவர் விவரிக்கிறார்: “மற்றவர்களைப் புண்படுத்திவிடும் குறைபாடுகளும் பழக்கவழக்கங்களும் எல்லாரிடமும் இருப்பதால், வேண்டுமென்றே ஒன்றை செய்யாதபோதிலும் தம்பதியினர் ஒருவரையொருவர் எரிச்சல் மூட்டலாம். இவை எங்களைப் பிரித்துவிடும் ‘சுவராக எழும்புவதற்கு’ இடமளிக்காமல் ஒருவருக்கொருவர் பொறுத்துப் போகிறோம்.” இந்த எண்ணமே தங்கள் தாம்பத்திய வாழ்க்கை 54 வருடங்கள் நீடிக்க இந்தத் தம்பதியினருக்கு உதவியிருப்பதில் சந்தேகமில்லை!

இது போன்ற பைபிள் நியமங்களைப் பின்பற்றினால், கணவன் மனைவியை இணைக்கும் பந்தம் இன்னும் பலப்படும். இவ்வாறு தம்பதியரின் மண வாழ்க்கை மகிழ்ச்சியின் பிறப்பிடமாகவும், திருப்தியின் சின்னமாகவும், நிரந்தரமாய் நிலைத்திருப்பதாகவும் திகழும்.

(g01 2/08)

[அடிக்குறிப்பு]

a முதல் நூற்றாண்டில் மத்திய கிழக்கின் நேர அட்டவணைப்படி, ஒரு நாள் சூரிய அஸ்தமனத்துடன் முடிவுறுகிறது. எனவேதான் பவுல் ஒவ்வொரு நாள் முடியும் முன்பு மற்றவர்களுடன் சமாதானம் செய்து கொள்ளும்படி வாசகர்களை உற்சாகப்படுத்தினார்.