Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யூகலிப்டஸ் பயனுள்ள மரம்!

யூகலிப்டஸ் பயனுள்ள மரம்!

யூகலிப்டஸ்—பயனுள்ள மரம்!

ஆஸ்திரேலியாவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

யூகலிப்டஸ் மரங்களில் சில, ராட்சதர்களைப் போல நெடுநெடுவென்று 90 மீட்டருக்கும் அதிகமாக வளர்ந்து உலகின் வானளாவிய மரங்களோடு போட்டி போடுகின்றன. மற்றவையோ, குள்ளர்களைப்போல காய்ந்துபோன பூமியை தழுவுகின்றனவோ என நினைக்குமளவுக்கு குட்டையாக இருக்கின்றன. அவற்றின் இலைகள் விசேஷித்த வடிவம் கொண்டவை. மலர்களின் கொள்ளை அழகு கண்ணைப் பறிக்கிறது. யூகலிப்டஸ் மரத்தின் பகுதியை நீங்களே எப்போதாவது கட்டாயம் உபயோகித்திருப்பீர்கள்.

அவற்றில் சிலவற்றிற்கு ஆல்பைன் ஆஷ், டாஸ்மேனியன் ஓக் போன்ற படாடோபமான பெயர்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலானவை பொதுவாக பிசின் மரம் என்றே அழைக்கப்படுகின்றன. உண்மையைச் சொன்னால், கார்போஹைட்ரேட்களாலான தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய நிஜ பிசினை எந்த யூகலிப்டஸ் மரமும் தயாரிப்பதில்லை. ஆகவே பிசின் மரம் என்ற பெயர் பொருந்தாத ஒன்றே. இந்த மரங்கள் யூகலிப்டஸ் இனத்தைச் சேர்ந்தவை என்று சொல்வதே சரியானது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இந்த தாவரக் குடும்பத்தில் 600-⁠க்கும் அதிகமான வகைகள் உள்ளன.

வெப்ப மண்டல பகுதியான ஆஸ்திரேலியாவின் வட மாநிலத்திலும் சரி புறநகர் பகுதிகளின் வறண்ட சமவெளிகளிலும் சரி இந்த மரங்கள் தழைத்தோங்குகின்றன. அதேசமயம், குளிர்ந்த அன்டார்க்டிக் காற்றுகள் வீசும் தென் டாஸ்மேனியாவிலும் கடற்கரையோரமுள்ள மூடுபனி நிறைந்த மலைத் தொடர்களிலும் இவை செழித்து வளர்கின்றன. அவை எங்கும் நிறைந்து காணப்படுவதால் 19-⁠வது நூற்றாண்டைச் சேர்ந்த ஆய்வாளரும் விலங்கியல் நிபுணருமான ஒருவர், “கண்ணுக்கு எட்டின தூரம்வரை எங்கும் பிசின் மர காடுகள்தான். எத்தனை கிலோமீட்டரை கடந்தாலும் வேறு எந்த மரத்தையும் பார்க்க முடியவில்லையே” என்று புலம்பினார்.

ஆனால், 19-⁠ம் நூற்றாண்டில் ஏராளமான ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறியதால் யூகலிப்டஸ் மரங்கள் பெரும் எண்ணிக்கைகளில் அழிக்கப்பட்டன. அவை முன்னேற்றத்தை தடைசெய்வதாக கருதப்பட்டதால் சுமார் 3,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலுள்ள மரங்கள் வேரோடு வெட்டி வீழ்த்தப்பட்டன. ஆனால், விலைமதிப்புமிக்க இந்த மரத்திற்கு எல்லாருமே இவ்வாறு ‘பாராமுகம் காட்டவில்லை’ என்பது சந்தோஷமான விஷயம். 19-⁠ம் நூற்றாண்டில் இந்த யூகலிப்டஸ் குடும்பம் உலகில் வெற்றிநடை போட ஆரம்பித்தது.

உதவிக்கு வந்த மன்னரும் மருத்துவரும்

1880-களில், இப்போது எத்தியோப்பியா என அழைக்கப்படும் அபிசீனியாவின் பேரரசராக இருந்த இரண்டாம் மெனேலிக், அடிஸ் அபாபா என்ற புதிய தலைநகரை ஸ்தாபித்தார். வறண்ட இந்தத் தலைநகருக்கு நிழலுக்கும் விறகுக்கும் மரங்கள் தேவைப்பட்டன. காடுகளை இழந்த இந்தப் பகுதியில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எந்த மரத்தையும் வளர்க்க இயலாது என பேரரசரின் ஆலோசகர்கள் கண்டனர். ஆகவே ஏற்ற ஒரு மரத்திற்காக எங்கும் தேடி அலைந்தனர். கொளுத்தும் வெயில்மிக்க ஆப்பிரிக்கா போன்றதொரு இடத்தில் பூத்துக்குலுங்கும் ஒரு மரத்தைத் தேடினர். கடைசியில் யூகலிப்டஸைக் கண்டுபிடித்தனர். “அடிஸ் அபாபா” என்றால் “புதிய பூ” என்று அர்த்தம். புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட யூகலிப்டஸ் மரத்தின் ஞாபகார்த்தமாக இந்தப் பெயர் அந்நகருக்கு சூட்டப்பட்டிருக்கலாம். எத்தியோபியாவின் பொருளாதாரம் செழிக்கவும் இந்த மரம் பெரிதும் உதவியது.

யூகலிப்டஸ் மரம் நாடுவிட்டு நாடு செல்ல உதவிய மற்றொரு நபர் டாக்டர் எட்முண்டு நவரு டெ அண்ட்ராடி ஆவார். பிரேஸிலின் காடுகள் வேகமாக அழிந்துகொண்டிருந்த சமயத்தில் அதை தடுத்து நிறுத்த நினைத்த இவர், 1910-⁠ல் ஆஸ்திரேலியாவிலிருந்து யூகலிப்டஸ் மரங்களை இறக்குமதி செய்ய துவங்கினார். சுமார் 3.8 கோடி மரங்களை அவர் பிரேஸிலில் நாட்டினார். இன்றோ 200 கோடிக்கும் அதிகமான யூகலிப்டஸ் மரங்கள் பிரேஸிலில் பயிர் செய்யப்படுகின்றன.

இவ்வாறாக பிரேஸில், மழைக்காடுகளுக்காக மட்டுமல்ல ஆஸ்திரேலியாவிற்கு அடுத்தபடியாக ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் இருப்பதற்காகவும் பெருமைப்பட்டுக்கொள்கிறது. இந்த மரத்தை இறக்குமதி செய்ததால் பிரேஸிலின் பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. ஆகவே, மதிப்புமிக்க யூகலிப்டஸை கொண்டுவந்த டாக்டர் நவருவின் சேவையைப் பாராட்டி அவரை கௌரவிக்க ஒரு விசேஷித்த பதக்கம் பரிசளிக்கப்பட்டது.

உயிரளிக்கும் மரம்

மால்லீ போன்ற சில வகை யூகலிப்டஸ் மரங்கள், அவற்றின் வேர்களில் பெருமளவு தண்ணீரை சேகரித்து வைப்பதாலேயே வறண்ட பூமியிலும் செழிப்பாக வளருகின்றன. காய்ந்து கிடந்த இந்தப் பகுதிகளில் உயிர் பிழைக்க, ஆஸ்திரேலிய பழங்குடியினரும் ஆரம்பகால ஆய்வாளர்களும் நிலத்தடி தண்ணீர் பாட்டில்கள் போலிருந்த இவற்றின் வேர்களையே நம்பியிருந்தனர். வேர்களை தோண்டியெடுத்து அவற்றை சிறு சிறு துண்டுகளாக வெட்டினர். இந்தத் துண்டுகளின் ஒரு முனையை வாயில் வைத்து ஊதினால் மற்றொரு முனையிலிருந்து வெளிர் பிரௌன் நிற சாறு வெளியே வரும். இது மற்ற பானங்களைப்போல அவ்வளவு ருசியாக இருக்காது என்பதென்னவோ உண்மைதான். ஆனாலும், 9 மீட்டர் நீளமுள்ள வேரிலிருந்து சுமார் 1.5 லிட்டர் உயிரைக் காக்கும் இந்தச் சாறை எடுக்க முடியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

யூகலிப்டஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வகைகள் சதுப்பு நிலங்களிலும் செழித்து வளர்கின்றன. இவற்றின் வேர்கள், சொதசொதப்பான நிலத்திலிருந்து ஏராளமான தண்ணீரை பேராசையோடு உறிஞ்சிக்கொள்கின்றன. இவற்றின் இந்தத் திறனை இத்தாலியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். ஒருசமயம் கொசுக்களின் சாம்ராஜ்யமாக திகழ்ந்த பான்டைன் சதுப்புநிலங்களிலிருந்து நீரை உறிஞ்சுவதற்கு யூகலிப்டஸ் மரங்களை உபயோகித்தனர். இப்போது அந்த இடம் பலன்தரும் விளைநிலமாக மாற்றப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்கா, வட மற்றும் தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா போன்ற இடங்களிலுள்ள 50-⁠க்கும் அதிகமான நாடுகள் யூகலிப்டஸ் மரத்தை அதன் அழகிற்காகவும் பொருளாதார பயன்களுக்காகவும் வளர்த்து வருகின்றன. அடர் சிவப்பு நிறமும் அடர்ந்த ஆரஞ்சு நிறமும் கொண்ட அதன் மரத்தைத் தச்சர்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஒரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “யூகலிப்டஸ் வகைகளே மிகவும் கனமான, உறுதியான, நீடித்து உழைக்கும் மரக் கட்டைகளைத் தருகின்றன. அதன் தரம், வேகமான வளர்ச்சி . . . போன்றவற்றின் காரணமாக இவை உலகிலுள்ள உறுதியான மரங்களில் மிகவும் சிறந்தவை என பெயரெடுத்துள்ளன.”

சில வகை யூகலிப்டஸ் மரங்கள் தண்ணீரால் சேதமடையாதவை. இவை, கப்பல்கள், இறக்குமதி ஏற்றுமதி மேடைகள், தொலைபேசி கம்பங்கள், வேலிகள், நடைபாதை பாளங்கள் போன்றவை தயாரிக்க உபயோகிக்கப்படுகின்றன. யெல்லோ பாக்ஸ் மற்றும் அயர்ன்பார்க் என்று அறியப்படும் மரங்களில் அழகிய பிசின் பூக்கள் மலர்கின்றன. இவற்றில் ஒரு வகை இனிய தேன் இருக்கிறது. இந்த தேனை தேனீக்கள் கூடுதல் சுவை சேர்த்து, மிகவும் இனிமையான தேனாக மாற்றுகின்றன. சமீப ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவிலிருந்து 45 லட்சம் டன் யூகலிப்டஸ் மரத்துண்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதனால் வருடத்திற்கு சுமார் 25 கோடி டாலர் வருமானம் கிடைக்கிறது.

கீனோ, எண்ணெய், டானின்

யூகலிப்டஸ் மரத்திலிருந்தும் பட்டையிலிருந்தும் செக்கச்செவேல் என்ற, பிசின் போன்ற கீனோ என்ற திரவம் கசிகிறது. கீனோவின் சில வகை, கப்பல் புழுக்கள் மரத்தை சேதப்படுத்துவதைத் தடுக்க உபயோகிக்கப்படுகின்றன. இரத்தக் கசிவைத் தடுக்க உதவும் ஒரு மருந்தைத் தயாரிக்கவும் இந்த கீனோ உபயோகிக்கப்படுகிறது. சில வகை மரப்பட்டையிலிருந்து டானின் தயாரிக்கப்படுகிறது. இது தோலைப் பதனிடுவதற்கும், துணிகளைச் சாயமிடுவதற்கும் உபயோகிக்கப்படுகிறது.

இதன் இலைகள் விசேஷித்த வடிவம் கொண்டவை. விலையேறப்பெற்ற எண்ணெய்யும் இவற்றில் நிறைந்துள்ளது. உறுதியற்ற ஒரு கையிலிருந்து லொடலொடவென்று தொங்கிக்கொண்டிருக்கும் சக்தியற்ற விரல்களைப் போல அவை தொங்குகின்றன. அவற்றின் நுனிகளோ மரத்தின் அடிப்பாகத்தை நோக்கியுள்ளன. இந்த வடிவத்தின் காரணமாக இலைகள் எல்லாம் ஒரு பெரிய புனலைப் போல சேவிக்கின்றன. மரத்திற்குத் தேவையான காற்றிலிருக்கும் ஈரப்பதம் இலைகளின் மேற்பரப்பில் படிகிறது. பின்னர் இது நீர்த் திவலைகளாக மாறி இலைகளின் நுனியிலிருந்து, ஆவலோடு ஏங்கிக்கொண்டிருக்கும் வேர்கள் மீது விழுகிறது.

நீராவி மற்றும் வடித்தெடுத்தல் முறைகள் மூலம் உயிர்ப்பூட்டும் வாசனைக் கொண்ட யூகலிப்டஸ் எண்ணெய் அதன் இலைகளிலிருந்து எடுக்கப்படுகிறது. இது, வாசனைப் பொருட்கள், சோப்புகள், மருந்துகள், தின்பண்டங்கள், சுத்தம் செய்யும் பொருட்கள் போன்றவற்றில் உபயோகிக்கப்படுகிறது. அதன் இயற்கை சூழலில், இலைகளிலிருக்கும் இந்த எண்ணெய் ஆவியாகி காற்றில் சிறு சிறு துளிகளாக மிதக்கிறது. சூரிய ஒளி இவற்றில் பட்டு சிதறுவதால் யூகலிப்டஸ் காடு முழுவதுமே நீலநிறத்தில் காணப்படுகிறது. இதன் காரணமாகவே, சிட்னி நகரின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள நீல மலைகள் அந்த வினோதமான பெயரைப் பெற்றன.

கோலா மற்றும் ஓபோஸத்தின் வீடு

கோலா என அழைக்கப்படும் மென்மயிர் நிறைந்த, அழகிய விலங்குதான் இந்த யூகலிப்டஸ் காடுகளில் அதிகம் வாழ்கிறது. தாவரப்பட்சினியான இது சுமார் 12 விதமான யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே சாப்பிட விரும்புகிறது. இப்படி ஒரேவிதமான உணவை சாப்பிடுவது அநேக விலங்குகளின் உயிருக்கே உலை வைத்துவிடும், ஆனால் கோலாவிற்கு இதனால் எந்த ஆபத்துமில்லை. ஏன்?

ஏனென்றால், கோலாவின் செரிமான மண்டலம் விசேஷித்த அமைப்பு கொண்டது. அதன் குடல் வால், ஒன்று முதல் இரண்டு மீட்டர் நீளமானது. அதோடு ஒப்பிட மனிதனின் குடல் வால் 8 முதல் 15 சென்டிமீட்டரே உள்ளது. இந்த சின்னஞ்சிறிய கோலாவிற்கு தேவையான அனைத்து புரதங்கள், கார்போஹைட்ரேட்கள், கொழுப்பு சத்துகள் ஆகியவற்றை யூகலிப்டஸ் இலைகளிலிருந்து உறிஞ்செடுக்க இந்த விசேஷித்த வடிவம் கொண்ட குடல் வால் உதவுகிறது.

பறக்கும் ஓபோஸங்களில் மிகவும் பெரியவை, கோலாவைப் போலவே யூகலிப்டஸ் இலைகளை மட்டுமே சாப்பிடுகின்றன. ஆஸ்திரேலியவாசியான இவற்றைப் பற்றி அநேகருக்கு தெரியாது. மென்மயிர் நிறைந்த இந்தப் பைப்பாலூட்டி, வீட்டில் வளர்க்கும் ஒரு பூனையின் அளவே இருக்கும். அதன் வால் சுமார் 40 சென்டிமீட்டர் நீளமுள்ளது, அலங்கோலமானது. அதன் முன்னங்கால்களும் பின்னங்கால்களும் தோலால் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தோலை இறக்கைகளாக உபயோகித்தே இவை பறக்கின்றன. ஒரு மரத்திலிருந்து தாவி, 100 மீட்டர் வரை காற்றில் மிதந்துசென்று, அடுத்த மரத்தைப் பற்றிக்கொள்கின்றன. இவ்வாறு மிதக்கையில் அவற்றால் செங்குத்தான கோணங்களில்கூட வளைந்து செல்ல முடியும்.

காட்டுத் தீயும் மறுவளர்ச்சியும்

ஆஸ்திரேலியாவில் புஷ்ஃபயர் என அழைக்கப்படும் காட்டுத் தீக்களால் யூகலிப்டஸ் காடுகளுக்கு எப்போதுமே ஆபத்துதான். ஆனாலும், அவற்றை தப்பித்து உயிர்வாழும் விதத்தில் இந்த மரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்படி?

அதன் மரப்பட்டைக்கு கீழே, அடிமரம் மற்றும் கிளைகள் நெடுக இலை மொட்டுகள் நிறைந்துள்ளன. நெருப்பினால் ஒரு மரத்தின் பட்டையும் இலைகளும் அழிந்துபோன பின்பே இந்த மொட்டுகள் வளர ஆரம்பிக்கின்றன. இவை, நெருப்பினால் கருகிப்போன அடிமரத்தை, புதிய இலைகளின் பச்சைப்பசேல் என்ற போர்வையால் போர்த்துகின்றன. இவ்வாறு அந்தத் தாய் மரம் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, நிலத்தில் செயலற்று கிடக்கும் அதன் விதைகளும் இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்து துளிர்க்க ஆரம்பிக்கின்றன. இவ்வாறு புதிய மரங்களும் வளர்கின்றன.

பாராட்டுக்குரிய மரம்

உங்கள் தொண்டை வலியைப் போக்க யூகலிப்டஸிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை உபயோகித்திருக்கிறீர்களா? அல்லது யூகலிப்டஸ் தேனில் தயாரிக்கப்பட்ட தின்பண்டத்தை ருசித்திருக்கிறீர்களா? யூகலிப்டஸ் மரத்தால் செய்யப்பட்ட படகில் பயணம் செய்திருக்கிறீர்களா? யூகலிப்டஸ் மரத்தால் கட்டப்பட்ட வீட்டில் குடியிருந்திருக்கிறீர்களா? அல்லது அதை உபயோகித்து குளிர்காய்ந்திருக்கிறீர்களா? இந்த விசேஷித்த மரம் ஏதாவது ஒருவிதத்தில் உங்களுக்கு பயனளித்திருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆகவே அடுத்த முறை நீங்கள் ஒரு கோலாவை, நேரிலோ போட்டோவிலோ, பார்க்கையில் எது உங்கள் நினைவிற்கு வரும்? கோலாவின் குடியிருப்பான யூகலிப்டஸ் மரத்தின் விசேஷித்த வடிவமைப்புதான் நினைவிற்கு வருமல்லவா?

உண்மையில், பல விதங்களில் பயனளிக்கும், உறுதியான மரமாகிய யூகலிப்டஸ் பயனுள்ள ஒரு மரமே.

(g01 2/22)

[பக்கம் 1617-ன் படம்]

உலகிலுள்ள மிகப் பெரிய மரங்களுள் யூகலிப்டஸ் மரங்களும் அடங்கும்

[பக்கம் 17-ன் படங்கள்]

யூகலிப்டஸ் தேனை உபயோகித்து தேனீக்கள் மிகவும் இனிமையான தேனைத் தயாரிக்கின்றன

[பக்கம் 18-ன் படங்கள்]

“யூகலிப்டஸ் வகைகளே மிகவும் கனமான, உறுதியான, நீடித்து உழைக்கும் மரக் கட்டைகளைத் தருகின்றன”

[பக்கம் 18-ன் படங்கள்]

கோலாக்களும் (இடது) பறக்கும் பெரிய ஓபோஸங்களும் (மேலே) யூகலிப்டஸ் இலைகளையே சாப்பிடுகின்றன

[படத்திற்கான நன்றி]

© Alan Root/Okapia/PR

[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]

Geoff Law/The Wilderness Society

[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]

Courtesy of the Mount Annan Botanic Gardens