உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
குழந்தைகளின் நண்பனா?
சிறு குழந்தைகள் நாயுடன் தனியே இருக்கையில் அந்த நாய் அவர்களை கடித்துவிடும் அபாயம் அதிகம் உள்ளது என சொல்கிறது எல் யூனிவர்ஸல் என்ற மெக்ஸிகோ நகர செய்தித்தாளில் வெளிவந்த ஒரு அறிக்கை. “குழந்தைகளே இதற்குப் பெரும்பாலும் காரணம். அப்போது நாய் வெறுமனே தன்னை தற்காத்துக் கொள்ளவே முயலுகிறது” என்கிறது அந்த அறிக்கை. மெக்ஸிகோவிலுள்ள மருத்துவமனை ஒன்று கடந்த ஐந்து ஆண்டுகளில் நாய் கடித்த 426 குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது. இந்தக் குழந்தைகளில், 12 சதவீதத்தினருக்கு நாய் கடியால் நிரந்தர பாதிப்பு அல்லது அவர்களுடைய உடலில் ஊனம் ஏற்பட்டது. பொதுவாக நாய்களைக் குறித்த அடிப்படை நியதிகளை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்படி அந்த அறிக்கை எல்லா பெற்றோரிடமும் பரிந்துரைக்கிறது. உதாரணமாக, நாயின் விளையாட்டு சாமான்களையும், அதன் சிறிய வீட்டையும், அதன் சாப்பாட்டு பாத்திரங்களையும் கவனமாக கையாள வேண்டும்; நாய் சாப்பிடும்போது அல்லது தூங்கும்போது அதன் அருகில் போகக்கூடாது; அதன் வாலைப் பிடித்து இழுக்கக்கூடாது அல்லது அதன் மேல் சவாரி செய்ய முயலக்கூடாது போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.
(g01 3/8)
பூச்சி கொல்ல சம்பளம்
இந்தியாவிலுள்ள உத்திரப் பிரதேச மாநிலத்தின் வன இலாகா, இப்போது பூச்சி கொல்லும் படலத்தில் இறங்கியிருக்கிறது. சுமார் 6,50,000 சால் மரங்களுள்ள காட்டை, ஹோப்லோ என்ற 2.5 சென்டிமீட்டர் நீளமுள்ள பூச்சி அழித்துவிடாமல் காப்பதற்கே இந்த போராட்டம் என அறிவிக்கிறது த டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தித்தாள். சமீப காலத்தில் இந்த பூச்சிகள் மளமளவென பெருகிவிட்டிருப்பதால் இந்த வகை மரங்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த பூச்சிகள் மரத்தின் பட்டையையும் தண்டையும் குடைந்துகொண்டு உள்ளே சென்றுவிடுகின்றன. இதனால் மரம் காய்ந்துபோய் செத்துவிடுகிறது. இந்த பூச்சிகளை பிடிப்பதற்கு இப்போது வன இலாகா “மரக் கண்ணி” முறையை பயன்படுத்துகிறது. பூச்சிகள் இருக்கும் இடங்களில் சால் மரத்தின் பச்சை தண்டுகள் போடப்படுகின்றன. தண்டுகளிலிருந்து கசியும் திரவம் பூச்சிகளை கவர்ந்திழுத்து அவற்றுக்கு போதை ஏற்றுகின்றன. இப்படித்தான் அந்த பூச்சிகள் ‘கண்ணியில்’ எளிதில் மாட்டிக்கொள்கின்றன. அப்பகுதியிலுள்ள பையன்கள் இந்த வேலையை செய்கின்றனர். இப்படி பிடிக்கப்படும் ஒவ்வொரு பூச்சிக்கும் 75 பைசா (சுமார் இரண்டு சென்டு) என்ற கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.
(g01 3/8)
நல்ல தூக்கம்
“நம் சமுதாயத்தில் பெரும்பாலானோர் குறைந்தளவே தூங்குகின்றனர். இது மிகவும் ஆபத்தானதே” என்கிறார் யூனிவர்சிட்டி ஆஃப் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த மனநல மருத்துவர் ஸ்டான்லி கோரென். த்ரீ மைல் தீவில் நடந்த அணுமின் நிலைய விபத்திற்கும், எக்ஸன் வால்டீஸ்-ல் ஏற்பட்ட எண்ணெய் கசிவிற்கும் ஓரளவுக்குக் காரணம் போதுமானளவு தூங்காததுதான். வட அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் தூக்கக் கலக்கத்தால், ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார் விபத்துகள் நிகழ்வதாக கனடாவின் மேக்லீன்ஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. “உண்மையில் எந்தளவுக்கு தூங்க வேண்டும் என்பதை ஜனங்கள் இன்னமும் சரிவர புரிந்துகொள்ளவில்லை” என்கிறார் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தூக்கத்தை ஆராயும் நிபுணர் டாக்டர் வில்லியம் டிமென்ட். நல்ல தூக்கத்திற்கு ஆராய்ச்சியாளர்கள் சில டிப்ஸ்களை கொடுக்கின்றனர்: நீங்கள் தூங்குவதற்கு குறைந்தபட்சம் மூன்று மணிநேரத்திற்கு முன்பே இரவு சாப்பாட்டை முடித்துக்கொள்ளுங்கள். தினமும், இத்தனை மணிக்கு தூங்க வேண்டும், இத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என நேரத்தை நிர்ணயித்து பின்பற்றுங்கள். உங்கள் படுக்கையறையில் டிவி, கம்ப்யூட்டர் போன்றவற்றை வைக்காதீர்கள். கஃபேன், மதுபானம், புகையிலை போன்றவற்றை தவிர்த்திடுங்கள். தூங்குகையில் உங்கள் பாதங்கள் வெதுவெதுப்பாக இருக்க சாக்ஸை அணிந்து கொள்ளுங்கள். தூங்க செல்வதற்குமுன் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள், ஆனால் தூங்குவதற்கு முன் செய்யாதீர்கள். “உங்களுக்குத் தூக்கம் வரவில்லையென்றால், எழுந்து ஏதாவது வேலை செய்யுங்கள். களைப்படைகையில் மீண்டும் தூங்கப் போங்கள். ஆனாலும் காலை எப்போதும் எழும் சமயத்தில் எழுந்துவிடுங்கள்” என முடிவாக சொல்கிறது மேக்லீன்ஸ்.
(g01 3/8)
சுத்தமான சமையலறை
பிஸியான சமையலறையில் நோய் உண்டாக்கும் கிருமிகள் அதிகம் ஒளிந்திருக்கும். “அவற்றை எதிர்த்து போராடுவதற்கு [சாதாரண] ப்ளீச்சே சிறந்தது” என்கிறது கனடா நாட்டு செய்தித்தாளான வான்கூவர் சன். அந்த அறிக்கை பின்வரும் ஆலோசனைகளை கொடுக்கிறது: தினமும் நான்கு லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீரில், வெண்ணீரில் அல்ல, 30 மில்லிலிட்டர் ப்ளீச்சை சேர்த்து ஒரு கரைசல் தயாரியுங்கள். வெண்ணீரில் ப்ளீச் ஆவியாகிவிடும். இந்த கரைசலில் ஒரு சுத்தமான துணியை நனைத்து உங்கள் சமையலறையை துடையுங்கள். துடைத்த பகுதியை அப்படியே காய விடுங்கள். எந்தளவுக்கு ப்ளீச் காற்றிலேயே காய விடப்படுகிறதோ அந்தளவுக்கு கிருமிகளை கொன்றுவிடுகிறது. பாத்திரங்களை சூடான சோப்பு நீரால் தேய்த்துக் கழுவுங்கள். மேலும் சுத்தமாவதற்கு ப்ளீச் தண்ணீரில் அவற்றை கொஞ்ச நேரம் ஊறவிடுங்கள். அந்த பாத்திரங்கள் காய்ந்த பிறகு, வேறெந்த கெமிக்கலும் அவற்றில் ஒட்டியிருக்காது. அதேபோல சமையலறையில் பயன்படுத்தும் ஸ்பான்ஜ், பாத்திரங்களை துடைக்கும் துணி, பிரஷ் போன்ற எல்லாவற்றையும் கழுவ தினமும் ப்ளீச்சை உபயோகியுங்கள். உணவு மாசுபடாமலிருக்க உங்கள் கைகளை நன்கு கழுவுங்கள். முக்கியமாக நகங்களுக்கு கீழ் நன்றாக கழுவுங்கள்.
(g01 3/8)
ரிடையர்மென்ட் சோகங்கள்
உரிய காலத்திற்கு முன்பாகவே ரிடையர்மென்ட்டை ஏற்றுக்கொள்வதில்
அநேக நன்மைகள் இருந்தாலும், அநேக சோகங்களும் உள்ளன. முன்னாள் அரசாங்க ஊழியர்கள் ரிடையர் ஆனபிறகு, ‘திருப்தியின்மை, எரிச்சல், பாதுகாப்பின்மை, கௌரவக் குறைச்சல் உணர்வு, மனச்சோர்வு, கப்பலே கவிழ்ந்துவிட்டது போன்ற சோகம்’ என அநேக மனரீதியிலான பிரச்சினைகளில் அல்லாடுவதாக அறிக்கை செய்தது பிரேஸிலின் டியாரியோ டி பர்னாம்புகோ. குய்டோ ஸ்சேச்னிக் என்ற முதுமைக்குரிய நோய்களை ஆராயும் மருத்துவரின் பிரகாரம், “பொதுவாக, வயதாவதற்கு முன்பே ரிடையர் ஆகிவிடும் ஆண்கள் ‘தண்ணி’க்கும், பெண்களோ மருந்துக்கும் அடிமையாகிவிடுகின்றனர்.” அப்படி ரிடையர் ஆக நினைப்பவர்களும், “கடனைத் தவிர்த்து, திறமைகளை மாற்றியமைத்துக் கொண்டு, கடன் என்ற படுகுழியில் விழுந்துவிடாமல் இருக்க அறிவுரை பெற்று வாழ வேண்டும்” என்கிறார் க்ரேஸா சேன்டோஸ் என்ற மனோதத்துவ மருத்துவர்.(g01 3/8)
மனமே இதயத்தின் எதிரி
இரண்டாம் தடவை மாரடைப்பு வரும் அபாயத்தை மன அழுத்தம் அதிகப்படுத்துகிறது என டுஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி ஹெல்த் அண்ட் நியுட்ரீஷன் லெட்டர் குறிப்பிடுகிறது. என்றபோதிலும், “இதய நோய் துவங்குவதிலும் மனம் ஒரு பங்கை வகிக்கிறது என்பதற்கு அதிக அத்தாட்சிகள் உள்ளன. மற்றவர்களைக் காட்டிலும் எளிதில் கோபப்படுபவருக்கே கிட்டத்தட்ட மூன்றுமடங்கு மாரடைப்பு வரும் அல்லது இதய நோயால் மரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் பகைமையின் பாதிப்புகள் இளமையிலேயே தெரிய ஆரம்பித்துவிடுகின்றன” என சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. மன அழுத்தத்தால் இதய தசையும், இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களும், இதயத்தைச் சுற்றியுள்ள இரத்தக் குழாய்களும் சேதமடைகின்றன. மன உளைச்சல், மாரடைப்பின் அபாயத்தை அல்லது மற்ற இதய நோய்களின் அபாயத்தை 70 சதவீதத்திற்கும் மேலாக அதிகரிக்கச் செய்யலாம். குடும்பத்தாரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஒருவருக்கு நல்ல ஆதரவு கிடைத்தால் மன உளைச்சலால் வரும் பாதிப்புகள் குறையலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
(g01 3/22)
ஆன்டிபையாட்டிக்ஸ் ஜாக்கிரதை!
“ஆன்டிபையாட்டிக் மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என உடல்நல அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிப்பதை மக்கள் காதில் வாங்குவதேயில்லை” என நியூ சயின்டிஸ்ட் பத்திரிகை குறிப்பிடுகிறது. “ஐமா-வின் ஒன்பது மாகாணங்களில் வசிக்கும் 10,000 ஜனங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீதத்தினர் ஜலதோஷத்தை ஆன்டிபையாட்டிக் மருந்துகள் சுகப்படுத்தும் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள், ஜலதோஷத்தின்போது ஆன்டிபையாட்டிக்ஸ் எடுத்தால் அது அதிக மோசமாகிவிடாமல் தடுக்கலாம் என 27 சதவீத ஜனங்கள் நினைக்கிறார்கள். 48 சதவீத ஜனங்களோ ஜலதோஷத்திற்கு, ஆன்டிபையாட்டிக் மருந்துகளை டாக்டர் எழுதிக் கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.” ஆனால் வைரஸால் தொற்றும் ஜலதோஷம் போன்றவற்றை ஆன்டிபையாட்டிக்ஸ் சுகப்படுத்தாது. பாக்டீரியாவால் தொற்றும் நோய்களை மட்டுமே அது குணப்படுத்துகிறது. ஆன்டிபையாடிக் மருந்துகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதே மாத்திரைகளுக்கு அடிபணியாத நோய்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. (டிசம்பர் 22, 1998 விழித்தெழு! பக்கம் 28-ஐக் காண்க.) “சரியான தகவலை தெரிந்துகொள்வதற்கு நாம் சிறந்த வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ப்ரையன் ஸ்பிராட் சொல்கிறார்.
(g01 3/22)
சர்ச்சைக்குரிய நபர்
ஒன்பதாம் பயஸ் (போப், 1846-78) பரலோகத்தில் பேரின்ப நிலையை எய்தியதைப் பற்றி இரண்டாம் போப் ஜான் பால் செப்டம்பர் 2000-ல் கூறினார். ஆனால் லா க்ராய் என்ற கத்தோலிக்க செய்தித்தாளில் பிரெஞ்சு சரித்திராசிரியர் ரெனே ரேமோன் அவரைப் பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “அவர் போப்-அரசராக இருப்பதை எதிர்த்த இத்தாலிய தேசபக்தர்களுக்கு [ஒன்பதாம் பயஸ்] மரண தீர்ப்பளித்தது போன்ற அவருடைய தீர்மானங்கள் ஒரு கிறிஸ்தவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.” “ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி” என அவரை லெ மாண்ட் என்ற செய்தித்தாள் அழைத்தது; மேலும், இந்தப் போப்-அரசருடைய சகிப்பின்மையையும், “மனச்சாட்சியின்படி செயல்படும் சுதந்திரம், மனித உரிமைகள், யூதர்களின் விடுதலை” ஆகியவற்றிற்கு விரோதமாக அவர் செய்த போராட்டத்தைப் பற்றியும் அதே செய்தித்தாள் குறிப்பிட்டது. அந்த செய்தித்தாள் தொடர்ந்து இவ்வாறு கூறியது: “மக்களாட்சியையும், மத சுதந்திரத்தையும், சர்ச்சும் அரசாங்கமும் பிரிவுறுவதையும்,” “எழுத்துரிமை, பேச்சுரிமை, கூட்டுரிமை” ஆகியவற்றையும் ஒன்பதாம் பயஸ் கண்டனம் செய்தார். 1869-ல் முதல் வத்திகன் ஆலோசனை சபையை ஒன்பதாம் பயஸ் திறந்து வைத்தார். விசுவாசம் மற்றும் ஒழுக்க விஷயங்களில் போப் தவறே இழைக்காதவர் என்ற கொள்கை அங்குதான் வரையறுக்கப்பட்டது.
(g01 3/22)
டான்டெலியன்—அதிசய களை
டான்டெலியன்கள் “பொதுமக்களின் முதல் விரோதி என கோல்ஃப் மைதான சூப்பரின்டெண்டென்டுகளாலும் புல் மைதானம் வைத்திருப்பவர்களாலும் சபிக்கப்படுகிறது,” அது “அழியாத களை” என்று மெக்ஸிகோ சிட்டியில் வெளிவரும் த நியூஸ் பத்திரிகை சொல்கிறது. இருந்தாலும், இந்த டான்டெலியன் “உலகிலுள்ள மருந்துச் செடிகளில் மிகவும் ஆரோக்கியமளிக்கும் ஒன்றாகும்.” இது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் உணவுக்கும் பயன்படுகிறது. ப்ரோக்கலி மற்றும் பசலைகீரையைவிட டான்டெலியனில் வைட்டமின் ஏ-யும் பொட்டாசியமும் அதிகம் உள்ளது. அதன் எல்லா பாகங்களும் பயனுள்ளதே. அதன் இளந்தளிர்களை ‘சாலடு’களில் பயன்படுத்தலாம் அல்லது பசலைகீரை தேவைப்படும் எந்த உணவோடும் சேர்த்து சமைக்கலாம். அதன் காய்ந்த, வறுத்த வேர்களை போட்டு காப்பி போன்ற பானமாக குடிக்கலாம். அதன் மலர்களை ஒயின் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். கடந்த காலங்களிலும் இது லிவர் டானிக்காகவும், இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்காகவும், இரத்தத்தை அதிகரிப்பதற்காகவும், சிறுநீரை எளிதாக வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. “சீன மக்கள் மருந்துப் பெட்டிகளில் வைத்திருந்த முக்கிய ஆறு மருந்துகளில் இதுவும் ஒன்று” என த நியூஸ் என்ற பத்திரிகை அறிவிக்கிறது. புல் மைதானம் அல்லது புல்தரை வைத்திருப்போருக்கோ டான்டெலியன்கள் இலவசமாக கிடைக்கின்றன.
(g01 3/22)