எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
புள்ளிகள் “கண்ணெதிரே தோன்றும் புள்ளிகள்!” (ஜூன் 8, 2000) என்ற கட்டுரை எனக்கு மிகவும் உதவியது. எனது வலது கண்ணில் விழித்திரை விலகல் இலேசாக ஏற்பட்டிருந்ததை கண்டுபிடிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் இந்தப் பத்திரிகையைப் பெற்றேன். அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருந்த அறிகுறிகளைப் படித்திருந்ததால் உடனடியாக மருத்துவரை சந்தித்து, லேசர் சிகிச்சைப் பெற்றேன். அதனால், பார்வையை இழக்காமல் தப்பித்தேன். நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட, நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற கட்டுரைகளைத் தரும் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
சி. வி., தென் ஆப்பிரிக்கா
(g01 3/8)
பிரச்சாரம் ஜூன் 22, 2000 பிரதியை இப்போதுதான் வாசித்து முடித்தேன். “காதில் விழுவதெல்லாம் உண்மையா?” என்ற தொடர் கட்டுரைக்கு எனது பாராட்டுக்கள். நான் வாழும் பிராந்தியத்தில், நாடோடிகளை (Gypsies) கேலி செய்வது சர்வ சாதாரணம். அவர்கள் எப்படி திருடுவார்கள் என்பதை சொல்லி ஜோக் அடிப்பார்கள். ஆனால், அப்படிப்பட்ட ஜோக்குகள் சரியல்ல என்பதை புரிந்துகொள்ளவும் இப்படி மற்றவர்களோடு சேர்ந்து ஜோக் அடிக்கக் கூடாது என்று தீர்மானிக்கவும் அந்த கட்டுரைகள் எனக்கு பெரிதும் உதவின.
கே. எம்., செக் குடியரசு
(g01 3/8)
புன்னகை “புன்னகை புரிவீர்! புத்துணர்ச்சி அடைவீர்!” (ஜூலை 8, 2000) என்ற கட்டுரையை பிரசுரித்ததற்காக மனதார பாராட்டுகிறேன். அந்த கட்டுரையில் சொல்லப்பட்ட அனைத்தும் நூறு சதவீதம் உண்மை. எல்லா நேரத்திலும் நல்லதையே நினைக்க வேண்டியதை அந்தக் கட்டுரை எனக்கு நினைவுபடுத்தியது. அப்போதுதான், என்னுடைய புன்னகை போலியாக இல்லாமல் உண்மையானதாக இருக்கும். அதுமட்டுமல்ல, புன்னகை புரிவதால் நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள். மனதிலுள்ள இறுக்கத்தைப் போக்கவும் இது உதவும்.
பி. சி., சீனா
(g01 3/8)
சான்டீரியா “சுண்டியிழுக்கும் சான்டீரியா” (ஜூலை 8, 2000) என்ற உங்கள் விழித்தெழு! கட்டுரையின் தொடக்கத்தில், சான்டீரியா பல வருடங்களாக கியூபாவின் முக்கிய மதமாக திகழ்கிறது எனவும் அது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். பின்னர், நைஜீரியாவிலிருந்து ஆப்பிரிக்க அடிமைகளால் கரீபியன் தீவுகள் அனைத்திற்கும் இந்த மதம் பரவியது எனவும் அந்தக் கட்டுரை மறைமுகமாக குறிப்பிடுகிறது. இந்தக் கட்டுரையை கியூபாவைச் சேர்ந்தவர் அல்ல, ஆனால் மெக்ஸிகோவை சேர்ந்தவர் எழுதியுள்ளார். இப்படி ‘மசாலா’ சேர்த்து தவறான தகவல்களைத் தருவது உங்கள் நற்பெயருக்கு இழுக்கு சேர்க்கும்.
வி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்
சான்டீரியா “கியூபாவின் முக்கிய மதமாக திகழ்கிறது” என்று குறிப்பிட்டுக் காட்டுவது எங்கள் நோக்கமல்ல. மாறாக, மெக்ஸிகோ மற்றும் ஐக்கிய மாகாணங்கள் உட்பட, உலகின் மற்ற பாகங்களிலும் சான்டீரியா பின்பற்றப்பட்டு வருகிறது என்றே குறிப்பிட்டுள்ளோம். ஆனால், சான்டீரியா என்பது “கியூபாவில் ஆரம்பமான ஒரு மதப்பிரிவு. அது அண்டை நாடுகள் பலவற்றிற்கும் பரவியது . . . யொருபாக்களுடைய (நவீன நாளைய நைஜீரியா மற்றும் பெனினைச் சேர்ந்த) பாரம்பரியங்களிலிருந்து வளர்ந்தது” என அந்த மதம் பரவிய விதத்தைக் குறித்து “என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா” சொல்கிறது.—ED.
(g01 3/22)
அன்டார்க்டிகா “அன்டார்க்டிகா—கடைசி எல்லை” (ஆகஸ்ட் 8, 2000) என்ற கட்டுரையை பல தடவை படித்தேன். அந்தக் கட்டுரையை எழுதிய ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விழித்தெழு! எழுத்தாளரும் சரி, டிசைன் ஆர்ட்டிஸ்ட்டும் சரி நேர்த்தியாக பணியாற்றியிருக்கின்றனர்! அது என் கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவுக்கு கொண்டு வந்தது. சுமார் 45 வருடங்களுக்குமுன், சர்வதேச புவியமைப்பியல் ஆண்டின்போது, அன்டார்க்டிகாவைப் பற்றி ஆய்வு நடத்தும்படி, ஐ.மா.-வைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் நியமிக்கப்பட்டனர். அந்த ஆராய்ச்சியின் தகவல்கள் மூன்று பெரிய தொகுப்புகளில் காலவரிசைப்படி பதிவு செய்யப்பட்டன. கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக சொந்த தொழில் செய்து வந்ததால், டிசைன் சம்பந்தமான வேலைக்காக சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டேன். இன்று, யெகோவாவின் சாட்சியாக இருக்கிறேன். கடந்த 16 வருடங்களாக நற்செய்தியை அறிவிப்பதில் முழுநேர ஊழியம் செய்து வருகிறேன். என் ஸ்டுடியோவில் நாலா பக்கமும் அன்டார்க்டிகாவின் வரைபடமும், ஃபோட்டோக்களும் இருப்பதால் ஒருவிதத்தில் இப்போதும் நான் அன்டார்க்டிகாவில்தான் இருக்கிறேன். இந்தக் கட்டுரைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
சி. எம்., ஐக்கிய மாகாணங்கள்
(g01 3/8)