Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடந்தகாலம் புகட்டும் பாடம் என்ன?

கடந்தகாலம் புகட்டும் பாடம் என்ன?

கடந்தகாலம் புகட்டும் பாடம் என்ன?

“காரண காரியங்களை பிட்டு பிட்டு வைப்பதுதான் சரித்திராசிரியர்களின் முக்கிய வேலை.” ஜெரல்ட் ஷ்லாபக், சரித்திர துணை பேராசிரியர்.

எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்பவையே சரித்திராசிரியர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள். உதாரணத்திற்கு, ரோம சாம்ராஜ்யம் வீழ்ந்ததாக சரித்திரம் சொல்கிறது. ஆனால் ஏன் வீழ்ந்தது? ஊழல் காரணமாக அல்லது சுகபோக நாட்டத்தின் காரணமாக வீழ்ந்ததோ? சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காப்பது பெரும் பாடாகிவிட்டதோ? படைகளை பராமரிப்பது கட்டுப்படியாகவில்லையோ? ரோமின் எதிரிகள் பெருகி, மிகுந்த வல்லமை பெற்று, இதை வீழ்த்திவிட்டனரோ?

சமீபகால உதாரணத்திற்கு கிழக்கு ஐரோப்பிய கம்யூனிஸத்தை எடுத்துக்கொள்ளலாம். மேற்கத்திய நாடுகளுக்கு அச்சுறுத்தலாக ஒருசமயம் கருதப்பட்ட இது, திடீரென ஒவ்வொரு நாடாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. ஆனால், ஏன் வீழ்ச்சியடைந்தது? அதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? இப்படிப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கத்தான் சரித்திராசிரியர்கள் முயல்கிறார்கள். ஆனால் அப்படி விடையளிக்கையில் சொந்த விருப்புவெறுப்புகள் எந்தளவுக்கு அவர்கள் முடிவை பாதிக்கின்றன?

சரித்திரத்தை நம்பலாமா?

சரித்திராசிரியர்களை விஞ்ஞானிகளுக்கு ஒப்பிடுவதைவிட துப்பறியும் நிபுணர்களுக்கு ஒப்பிடலாம். அவர்கள் கடந்தகால பதிவுகளை துருவித் துருவி ஆராய்கிறார்கள், அவற்றின்பேரில் கேள்விகளை எழுப்புகிறார்கள், அவற்றின் உண்மைத்தன்மையை ஆட்சேபிக்கிறார்கள். பதிவுகளில் உண்மையைத்தான் குறிபார்க்கிறார்கள் என்றாலும் அவர்களது குறி பெரும்பாலும் தெளிவற்று இருக்கிறது. அதற்கு ஒரு காரணம், அவர்கள் ஆராய்ச்சி செய்வதெல்லாம் பெரும்பாலும் மக்களை என்றாலும், அந்த மக்களின் மனங்களை, அதுவும் இறந்துபோன மக்களின் மனங்களை ஆராயும் திறமை அவர்களிடம் இல்லை. அதுமட்டுமல்ல ஒருசில அபிப்பிராயங்களும் தப்பெண்ணங்களும் சரித்திராசிரியர்களின் மனதில் ஏற்கெனவே பதிந்திருக்கலாம். ஆகவே, மிகச் சிறந்த சரித்திர பதிவும்கூட சிலசமயம் சரித்திராசிரியரின் சொந்த கண்ணோட்டத்தில் அளிக்கப்படும் விளக்கமாகவே இருக்கிறது.

சரித்திராசிரியருக்கு சொந்த கண்ணோட்டம் இருக்கிறது என்பதற்காக அவரது படைப்பை பொய் என்று நிச்சயமாகவே சொல்லிவிட முடியாது. சாமுவேல், இராஜாக்கள், நாளாகமம் ஆகிய பைபிள் பதிவுகளில் ஐந்து வித்தியாசமான நபர்களால் எழுதப்பட்ட ஒரே சம்பவங்கள் உள்ளன. இருந்தாலும் அவற்றில் குறிப்பிடத்தக்க எவ்வித முரண்பாடுகளோ தவறுகளோ இல்லை என்பதை காட்ட முடியும். நான்கு சுவிசேஷங்களும் இது போலத்தான். அநேக பைபிள் எழுத்தாளர்கள் தங்கள் சொந்த குற்றங்குறைகளையும் முட்டாள்தனமான தவறுகளையும்கூட பதிவு செய்தனர். இப்படிப்பட்ட ஒன்றை வேறெந்த புத்தகத்திலும் காண்பது அரிது.​—எண்ணாகமம் 20:9-12; உபாகமம் 32:48-52.

சரித்திரத்தை வாசிக்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் சரித்திராசிரியரின் தப்பெண்ணங்கள் மட்டுமல்ல, அவரது உள்நோக்கமும்தான். “அதிகாரம் செலுத்துவோரால் அல்லது அதிகாரத்திற்காக அலைவோரால் அல்லது அவர்களது நண்பர்களால் சொல்லப்படும் எந்தச் சரித்திரத்தையும், முழுக்க முழுக்க சந்தேகத்திற்குரியதாக கருத வேண்டும்” என சரித்திர ஆராய்ச்சிக்கான துணைநூல் புத்தகத்தில் மைக்கல் ஸ்டான்ஃபர்ட் சொல்கிறார். சரித்திர புத்தகங்கள், மறைமுகமாக அல்லது வெளிப்படையாக தேசப்பற்றையும் தேசாபிமானத்தையும் தூண்டும்போது சரித்திராசிரியரின் உள்நோக்கத்தின்பேரில் சந்தேகம் எழும்புகிறது. சிலசமயம் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இவ்வாறு காணப்படுவது வருத்தமான விஷயம். ஒரு தேசத்தின் அரசாங்க தீர்ப்பாணை இப்படி வெளிப்படையாக குறிப்பிட்டது: சரித்திரத்தைக் கற்பிப்பதன் நோக்கம், “மக்களின் மனங்களில் தேசப்பற்றையும் தேசாபிமானத்தையும் வளர்ப்பதே. . . . ஏனென்றால் தேசத்தின் கடந்தகாலத்தை அறிவதுதான் தேசப்பற்று நடவடிக்கைகளுக்கான மிக முக்கிய தூண்டுகோல்.”

களங்கப்படுத்தப்படும் சரித்திரம்

சிலசமயம் சரித்திரம் சொந்த அபிப்பிராயங்கள் சார்ந்ததாக மட்டும் இருப்பதில்லை; அது திரித்தும் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, முன்னாளைய சோவியத் யூனியன், “ட்ராட்ஸ்கி என்பவரின் பெயரை பதிவிலிருந்தே நீக்கிவிட்டது, ஆகவே அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்பதற்கே ஆதாரமின்றி போனது” என்கிறது சரித்திரத்தின் உண்மை என்ற ஆங்கில புத்தகம். அந்த ட்ராட்ஸ்கி யார்? ரஷ்ய பொதுவுடைமை புரட்சியின் தலைவர், லெனினுக்கு அடுத்தபடியாக அதிகாரத்தில் இருந்தவர். லெனினின் மறைவுக்குப் பின்பு ட்ராட்ஸ்கி ஸ்டாலினோடு மோதினார், கம்யூனிஸ கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், முடிவில் கொல்லப்பட்டார். அவரது பெயர் சோவியத் என்ஸைக்ளோப்பீடியாக்களில் இருந்து நீக்கவும்பட்டது. இப்படி சரித்திர பதிவுகளில் கைவைப்பதும், முரண்பாடான புத்தகங்களை எரிப்பதும்கூட அநேக சர்வாதிகார ஆட்சிகளின்கீழ் சகஜமாக நடந்து வந்திருக்கிறது.

பண்டைய காலத்திலிருந்தே சரித்திரத்தை களங்கப்படுத்தும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. குறைந்தது எகிப்து, அசீரியா காலங்களிலாவது இந்த பழக்கம் ஆரம்பித்திருக்க வேண்டும். தற்பெருமையும் ஆணவமும்மிக்க பார்வோன்களும் ராஜாக்களும் மன்னர்களும் தாங்கள் விட்டுச்செல்லும் சரித்திர பதிவுகள் தங்கள் புகழை பறைசாற்ற வேண்டுமென்று விரும்பினார்கள். அதற்காக சாதனைகள் எப்போதும் ஒன்றுக்குப் பத்தாக மிகைப்படுத்தி எழுதப்பட்டன. அதேசமயம் போரில் கண்ட தோல்வி போன்ற தர்மசங்கடத்திற்குரிய அல்லது வெட்கத்திற்குரிய எந்த விஷயமும் ஒன்றுக்குப் பாதியாக பதிவு செய்யப்பட்டது அல்லது பதிவிலிருந்து நீக்கப்பட்டது அல்லது பதிவு செய்யப்படவே இல்லை. பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இஸ்ரவேலின் சரித்திரமோ இதற்கு நேர் மாறானது. ராஜாக்களாகட்டும் குடிமக்களாகட்டும் எவ்வித பாகுபாடுமின்றி இருவரது குறைகளையும் நிறைகளையும் ஒரேபோல் சொல்கிறது.

பண்டைய பதிவுகள் உண்மையா என்பதை சரித்திராசிரியர்கள் எவ்வாறு சரிபார்க்கிறார்கள்? அக்காலத்து வரிப் பதிவுகள், சட்டத் தொகுப்புகள், அடிமை ஏலத்திற்கான விளம்பரங்கள், வியாபார அல்லது தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் பதிவுகள், மண்பாண்ட துண்டுகளிலுள்ள எழுத்துக்கள், கப்பல் பயண விவரங்கள் அடங்கிய பதிவுகள், கல்லறைகளிலும் சமாதிகளிலும் கண்டெடுக்கப்படும் பொருட்கள் ஆகியவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். இந்தப் பல்வேறு பொருட்கள், அதிகாரப்பூர்வ பதிவுகளின்மீது கூடுதலான அல்லது வித்தியாசமான புரிந்துகொள்ளுதலை அளிக்கின்றன. தகவல் ஏதேனும் குறைவுபடும்போது அல்லது தெளிவற்று இருக்கும்போது நேர்மையான சரித்திராசிரியர்கள் அதை வெளிப்படையாக சொல்வர். அதேசமயம் தங்கள் சொந்த கருத்துக்களால் அவற்றை விளக்க முயல்வர். எப்படியோ, விவேகமுள்ள வாசகர், நியாயமான விளக்கத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்களை அலசிப் பார்ப்பார்.

சரித்திராசிரியர்கள் முன் பல சவால்கள் இருந்தாலும் அவர்களது பதிவுகள் பயன்மிக்க தகவல்களை அளிக்கலாம். “உலக சரித்திரத்தை எழுதுவது கஷ்டம்தான் என்றாலும் . . . அது நமக்கு முக்கியமானது, ஏன் அத்தியாவசியமானதும்கூட” என ஒரு சரித்திர புத்தகம் விளக்குகிறது. சரித்திரம், கடந்தகாலத்தை நம் கண்முன் காட்டும் ஜன்னல் எனலாம். அதுமட்டுமல்ல, மனிதனின் தற்போதைய நிலைமையை இன்னுமதிகமாக புரிந்துகொள்ளவும் அது உதவுகிறது. உதாரணத்திற்கு, மனிதன் இன்று வெளிக்காட்டும் அதே குணங்களைத்தான் பழங்காலத்திலும் வெளிக்காட்டினான் என்பதை உடனே புரிந்துகொள்வோம். இப்படிப்பட்ட மாறாத குணங்கள் சில சரித்திர நிகழ்ச்சிகளை வெகுவாக பாதித்திருக்கின்றன; இதனால்தான் சரித்திரம் மீண்டும் மீண்டும் நிகழும் ஒன்று என சொல்லப்படுகிறது போலும். ஆனால் அது நியாயமான முடிவா?

சரித்திரம் மீண்டும் மீண்டும் நிகழ்கிறதா?

கடந்தகாலத்தை வைத்து எதிர்காலத்தை துல்லியமாக முன்னறிவிக்க முடியுமா? குறிப்பிட்ட சில வகையான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்வது உண்மைதான். உதாரணத்திற்கு, “உலகில் இதுவரை தோன்றிய ஒவ்வொரு நாகரிகமும் முடிவில் அழிந்துபோனது” என ஐ.மா. செயலர் ஹென்றி கிஸிங்கர் சொன்னார். “தோல்வியுற்ற முயற்சிகளையும் நிறைவேறாமல் போன ஆசைகளையும் பற்றிய பதிவே சரித்திரம். . . . ஆகவே சோகம் தவிர்க்க முடியாதது என்பதை சரித்திராசிரியர்கள் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றும் அவர் சொன்னார்.

எந்த இரண்டு சாம்ராஜ்யங்களும் ஒரே விதமாக அழிந்ததில்லை. பொ.ச.மு. 539-⁠ல் பாபிலோன் ஒரே இரவில் மேதிய பெர்சியர்களால் வீழ்த்தப்பட்டது. மகா அலெக்ஸாந்தரின் மறைவுக்குப் பின் கிரீஸ் பல ராஜ்யங்களாக பிரிவுற்று, இறுதியில் ரோமிடம் பணிந்தது. ரோமின் வீழ்ச்சியோ விவாதத்திற்குரியதாக இருக்கிறது. சரித்திராசிரியர் ஜெரல்ட் ஷ்லாபக் இப்படிக் கேட்கிறார்: “ரோம் சரியாக எப்போது வீழ்ந்தது? உண்மையிலேயே அது வீழ்ந்ததா? பொ.ச. 400-⁠க்கும் பொ.ச. 600-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கத்திய ஐரோப்பாவில் ஏதோ கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டது. ஆனால் பெரும்பாலான நிலைமைகள் அப்படியேதான் தொடர்ந்தன. a ஆக, சரித்திரத்தின் சில அம்சங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன, அனைத்தும் அல்ல.

சரித்திரம் மீண்டும் மீண்டும் கற்பித்திருக்கும் ஒரு பாடம், மனித ஆட்சியின் தோல்வியாகும். சுயநலம், குறுகிய கண்ணோட்டம், பேராசை, ஊழல், குடும்ப அங்கத்தினர்களுக்கு விசேஷ சலுகை, அதிகாரத்தைப் பெறுவதற்கும் காத்துக்கொள்வதற்குமான வெறி ஆகியவை எல்லா காலங்களிலுமே நல்ல அரசாங்கங்களின் வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருந்திருக்கின்றன. ஆகவே கடந்தகாலம் ஆயுதப் போட்டிகளும், தோல்வியுற்ற ஒப்பந்தங்களும், போர்களும், சமூக கலவரமும் வன்முறையும், நியாயமற்ற செல்வப் பங்கீடும், பொருளாதார வீழ்ச்சிகளுமே நிறைந்ததாய் இருந்திருக்கிறது.

உதாரணத்திற்கு மேற்கத்திய நாகரிகம் உலகின் மற்ற பாகங்கள்மீது எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பதைப் பற்றி த கொலம்பியா ஹிஸ்டரி ஆஃப் த உவர்ல்ட் சொல்வதை கவனியுங்கள்: “கொலம்பஸும் கார்டஸும், மேற்கத்திய ஐரோப்பிய மக்களுக்கு முன் இருந்த வாய்ப்புக்களைக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பின், மற்றவர்களை வசப்படுத்துவதற்கும், லாபம் ஈட்டுவதற்கும், புகழ் பெறுவதற்கும் அம்மக்களின் ஆசை பெரிதும் கிளறிவிடப்பட்டது. ஆக, மேற்கத்திய நாகரிகத்தை கிட்டத்தட்ட உலகெங்கும் பரப்பினர், அதுவும் வலுக்கட்டாயமாக. விரிவடைய வேண்டும் என்ற தணியாத தாகத்தோடு, இன்னும் திறம்பட்ட ஆயுதங்களைக் கொண்டு, உலகின் மற்ற பகுதிகளை ஐரோப்பிய அதிகாரத்தின்கீழ் வலுக்கட்டாயமாக கொண்டுவந்தனர். . . . சுருக்கமாக சொன்னால், அப்படிப்பட்ட கண்டங்களின் [ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்காக்கள்] மக்கள், கொடூரமாகவும் ஈவிரக்கமில்லாமலும் சுயநலத்திற்காக ஆதாயப்படுத்தப்பட்டார்கள்.” பைபிளில் பிரசங்கி 8:9 சொல்வது எவ்வளவு உண்மை: ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டிருக்கிறான்’!

துயர்மிகுந்த இப்படிப்பட்ட பதிவினால்தான் ஜெர்மானிய தத்துவஞானி ஒருவர் இவ்வாறு சொன்னார் போலும்: சரித்திரத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே பாடம், சரித்திரத்திலிருந்து மனிதன் ஒன்றுமே கற்றுக்கொள்வதில்லை என்பதே. ‘மனிதனுடைய வழி அவன் கட்டுப்பாட்டில் இல்லை, தன் நடைகளை நடத்துவதும் மனித சக்திக்கு அப்பாற்பட்டது’ என எரேமியா 10:23 (த ஜெருசலெம் பைபிள்) குறிப்பிடுகிறது. நம் நடைகளை நடத்தும் திறமை நமக்கு இல்லாதது முக்கியமாக இந்நாளில் நம் கவனத்திற்குரியது. ஏன்? ஏனெனில் முன்னொருபோதும் இல்லாத எண்ணிக்கையிலும் அளவிலும் பிரச்சினைகள் நம்மை அல்லல்படுத்துகின்றன. அப்படியென்றால் நாம் எப்படி பிரச்சினைகளை சமாளிப்போம்?

முன்னொருபோதும் இல்லாத பிரச்சினைகள்

காடு அழிப்பு, நில அரிப்பு, பாலைவனமாகுதல், தாவர, மிருக இனங்களின் ஒட்டுமொத்த மறைவு, ஓசோன் சேதம், தூய்மைக்கேடு, பூமியின் உஷ்ணம் அதிகரித்தல், சமுத்திர உயிர்களின் அழிவு, ஜனத்தொகை பெருக்கம் என அனைத்தும் சேர்ந்து மனித சரித்திரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு உலகம் முழுவதையும் தாக்குகின்றன.

“மாற்றங்கள் அதிவேகமாக நிகழ்வது, நவீன சமுதாயங்கள் எதிர்ப்படும் மற்றொரு சவால்” என்கிறது எ கிரீன் ஹிஸ்டரி ஆஃப் த உவர்ல்ட் என்ற புத்தகம். உவர்ல்ட் வாட்ச் பத்திரிகையின் பதிப்பாசிரியரான எட் ஆர்ஸ் எழுதுவதாவது: “நம் ஒட்டுமொத்த அனுபவத்திற்கு முற்றிலும் புறம்பான ஒரு பிரச்சினையை எதிர்ப்படுவதால், அதற்கான அத்தாட்சி பெருமளவில் இருந்தாலும் உண்மையில் அதை நாம் உணருவதே இல்லை. நம்மை ஆதரித்து வந்திருக்கும் உலகை பெரும் உயிரியல் மற்றும் சடப்பொருள் மாற்றங்கள் திடீரென மிகப் பயங்கரமாக தாக்கியிருப்பதே நாம் எதிர்ப்படும் அந்தப் பிரச்சினை.”

இவற்றையும் இன்னும் மற்ற பிரச்சினைகளையும் கருத்தில்கொண்டு சரித்திராசிரியர் பார்டன் ஈ. டில்லிங்காஸ்ட் குறிப்பிடுவதாவது: “சமுதாயம் போய்க்கொண்டிருக்கும் போக்கு எண்ணிலடங்கா அளவுக்கு சிக்கலாகியிருக்கிறது, நம்மில் பலரை பிரச்சினைகள் பூதாகாரமாக அச்சுறுத்துகின்றன. குழம்பிப்போயிருக்கும் மக்களுக்கு சரித்திராசிரியர்கள் எவ்வாறு உதவ முடியும்? அதிகம் உதவ முடியாது என்றே தோன்றுகிறது.”

என்ன செய்வது, என்ன ஆலோசனை வழங்குவது என தெரியாமல் சரித்திராசிரியர்கள் திண்டாடலாம், ஆனால் நம் படைப்பாளர் நிச்சயம் திண்டாட வேண்டிய அவசியமில்லை. சொல்லப்போனால், கடைசி நாட்களில் ‘கையாளுவதற்கு கடினமான கொடிய காலங்கள்’ உலகில் வரும் என அவர் பைபிளில் ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். (2 தீமோத்தேயு 3:1-5, NW) அதுமட்டுமல்ல இன்னும் ஒரு படி சென்று, சரித்திராசிரியர்களால் செய்ய முடியாத ஒன்றைச் செய்திருக்கிறார், அதாவது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பித்திருக்கிறார். இதைத்தான் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.(g01 3/8)

[அடிக்குறிப்பு]

a ஷ்லாபக்கின் கூற்று, தீர்க்கதரிசி தானியேலின் முன்னறிவிப்போடு ஒத்திருக்கிறது. ரோம சாம்ராஜ்யத்திலிருந்து முளைக்கும் இன்னொரு அரசு அதன் இடத்தைப் பிடிக்கும் என அவர் முன்னறிவித்தார். உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா பிரசுரித்த தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் அதிகாரங்கள் 4, 9-ஐக் காண்க.

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

“அதிகாரம் செலுத்துவோரால் . . . சொல்லப்படும் எந்தச் சரித்திரத்தையும், முழுக்க முழுக்க சந்தேகத்திற்குரியதாக கருத வேண்டும்.” மைக்கல் ஸ்டான்ஃபர்ட், சரித்திராசிரியர்

[பக்கம் 4-ன் படம்]

பேரரசர் நீரோ

[படத்திற்கான நன்றி]

Roma, Musei Capitolini

[பக்கம் 7-ன் படங்கள்]

எல்லா காலங்களிலும், ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆண்டிருக்கிறான்’

[படங்களுக்கான நன்றி]

“The Conquerors,” by Pierre Fritel. மற்றும் (இடமிருந்து வலம்): இரண்டாம் ராம்சஸ், அட்டிலா, ஹனிபால், டாமர்லேன், ஜூலியஸ் சீசர் (நடுவே), முதலாம் நெப்போலியன், மகா அலெக்ஸாந்தர், நெபுகாத்நேச்சார், சார்லிமேன். From the book The Library of Historic Characters and Famous Events, Vol. III, 1895; விமானங்கள்: USAF photo