கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்குப் போக வேண்டுமா?
பைபிளின் கருத்து
கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்குப் போக வேண்டுமா?
“நான் சர்ச்சுக்கு போய்ட்டிருந்தேன், ஆனா இப்போ போறதில்ல.” “கடவுள எங்க வேண்ணா வணங்கலாம், சர்ச்சுக்கு போய்தான் வணங்கனும்னு இல்ல.” “நான் கடவுளையும் பைபிளையும் நம்புறேன், ஆனா சர்ச்சுக்கு போறதுல எனக்கு நம்பிக்கை இல்ல.” இது போன்ற கூற்றுகளைக் கேட்டிருக்கிறீர்களா? குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், கிறிஸ்தவர்களென்று சொல்லிக் கொள்பவர்கள் இதுபோன்றவற்றை சொல்வது மிகவும் சகஜமாகி வருகிறது. சர்ச்சுக்கு போய் வந்து கொண்டிருந்தவர்கள் இனிமேலும் அது அவசியமில்லை என்று நினைக்கிறார்கள். சர்ச்சுக்கு போவதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
“சர்ச்” மற்றும் “சர்ச்சுக்கள்” என்ற வார்த்தைகள் கிங் ஜேம்ஸ் வர்ஷன் பைபிளில் 110-க்கும் அதிகமான முறை காணப்படுகின்றன. வேறு மொழிபெயர்ப்புகளும் இந்த பதங்களைப் பயன்படுத்துகின்றன. “சர்ச்” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம், “ஓர் அழைப்பு விடுத்தல்” என்பதாகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், மக்கள் கூடிவந்திருப்பதை அர்த்தப்படுத்துகிறது. உதாரணமாக, மோசே ‘வனாந்தரத்திலே சர்ச்சுக்குள்ளிருந்ததாக’ அப்போஸ்தலர் 7:38-ல் கிங் ஜேம்ஸ் வர்ஷன் சொல்கிறது; அதாவது, ஒன்றுகூடி வந்திருந்த இஸ்ரவேலரின் மத்தியில் அவர் இருந்ததையே அப்படி சொல்லுகிறது. வேறொரு சந்தர்ப்பத்தில், “எருசலேமிலுள்ள சர்ச்சுக்கு விரோதமாக கடுந்துன்பம் உண்டாயிற்று” என்பதாக எருசலேமிலிருந்த கிறிஸ்தவ சமுதாயத்தைக் குறித்துச் சொன்னது. (அப்போஸ்தலர் 8:1, த ஜெருசலம் பைபிள்) பவுல் தன்னுடைய கடிதத்தில் [பிலேமோனின்] ‘வீட்டிலே கூடிவருகிற சர்ச்சுக்கு’ வாழ்த்துதல் தெரிவித்தார்; அங்கு கூடிவந்த சபையை அவர் அர்த்தப்படுத்தினார்.—பிலேமோன் 2, ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன்.
தெளிவாகவே, “சர்ச்” என்பதாக பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள பதம், வணக்கத்துக்குரிய இடத்தை அல்ல, ஆனால் வணக்கத்தாரின் தொகுதியையே குறிப்பிடுகிறது. இதை ஒத்துக்கொள்பவராய், “இடத்தை அல்ல, ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களின் சபையையே நான் சர்ச் என்று அழைக்கிறேன்” என்பதாக இரண்டாம் நூற்றாண்டு மத போதகராகிய, அலெக்ஸாண்டிரியாவை சேர்ந்த க்ளெமென்ட் எழுதினார். இருந்தாலும், கிறிஸ்தவர்களுடைய வணக்கத்தை கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ கட்டடத்திலோ இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறதா?
இஸ்ரவேல் தேசத்தில் வணக்கம்
மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, மூன்று வருடாந்தர பண்டிகைகளுக்காக யூத ஆண்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. அநேக பெண்களும் பிள்ளைகளும்கூட அங்கு சென்றார்கள். (உபாகமம் 16:16; லூக்கா 2:41-44) சில சமயங்களில், திரளாய் கூடிவந்திருந்தவர்களுக்கு ஆசாரியர்களும் லேவியர்களும் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தை வாசித்து, போதித்தார்கள். அவர்கள் ‘தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை விளங்கப்பண்ணினார்கள்.’ (நெகேமியா 8:8) ஓய்வு வருடங்களுக்குரிய கடவுளுடைய கட்டளை இவ்வாறு இருந்தது: “புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், . . . ஜனத்தைக் கூட்டி, அதை வாசிக்கவேண்டும்.”—உபாகமம் 31:12, 13.
எருசலேமிலுள்ள ஆலயத்தில் மட்டுமே ஒருவர் கடவுளுக்கு பலி செலுத்த முடியும்; அங்குதான் ஆசாரியர்களிடமிருந்து போதனையை பெறவும் முடியும். (உபாகமம் 12:5-7; 2 நாளாகமம் 7:12) காலப்போக்கில், இஸ்ரவேலில் வணக்கத்திற்காக பல ஜெப ஆலயங்கள் (synagogues) கட்டப்பட்டன. இவை வேத வசனங்கள் வாசிக்கப்படுவதற்கும் ஜெபிப்பதற்குமுரிய இடங்களாய் இருந்தன. என்றாலும், எருசலேமிலுள்ள ஆலயமே வணக்கத்துக்குரிய முக்கிய இடமாக இருந்தது. பைபிள் எழுத்தாளராகிய லூக்கா எழுதியதிலிருந்து இது தெளிவாக தெரிகிறது. வயது சென்ற அன்னாள் என்ற பெண்ணைப் பற்றி அவர் குறிப்பிடுகிறார்; “தேவாலயத்தைவிட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்து கொண்டிருந்தாள்” என்று அவர் எழுதினார். (லூக்கா 2:36, 37) பக்தியுள்ள மற்றவர்களுடன் சேர்ந்து உண்மை வணக்கத்தில் ஈடுபடுவதை அன்னாள் தன் வாழ்க்கையின் மையமாக வைத்திருந்தார். கடவுள் பயமுள்ள மற்ற யூதர்களும் அந்த போக்கையே பின்பற்றினர்.
கிறிஸ்துவின் மரணத்திற்குப்பின் உண்மை வணக்கம்
இயேசுவின் மரணத்திற்குப்பின் அவரைப் பின்பற்றியவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கவில்லை; அவர்கள் தேவாலயத்திற்கு வந்து வணங்க வேண்டும் என்ற தேவையும் இருக்கவில்லை. (கலாத்தியர் 3:23-25) என்றாலும், அவர்கள் அதற்குப் பின்னரும், ஜெபம் பண்ணவும் கடவுளுடைய வார்த்தையைப் படிக்கவும் ஒன்றுகூடி வந்தனர். அவர்களுக்கு சிறப்பான கட்டடங்கள் இருக்கவில்லை; அதற்கு பதிலாக யாருடைய வீட்டிலாவது பொது இடங்களிலாவது கூடினார்கள். (அப்போஸ்தலர் 2:1, 2; 12:12; 19:9; ரோமர் 16:4, 5) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ கூட்டங்கள், சடங்காச்சாரமும் ஆரவாரமும் இல்லாமல் எளிமையால் மெருகூட்டப்பட்டிருந்தன.
ரோம பேரரசின் ஒழுக்க சீர்குலைவின் மத்தியில், அந்தக் கூட்டங்களில் போதிக்கப்பட்ட பைபிள் நியமங்கள் வைரங்களாக ஜொலித்தன. அங்கு முதன்முறையாக வந்த அவிசுவாசிகள், “தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று” சொல்லி நிச்சயம் வியந்திருப்பார்கள். (1 கொரிந்தியர் 14:24, 25) ஆம், உண்மையிலேயே கடவுள் அவர்கள் மத்தியில் இருந்தார். “அதினாலே சபைகள் [“சர்ச்சுக்கள்,” ரிவைஸ்ட் ஸ்டான்டர்ட் வர்ஷன், த ஜெருசலம் பைபிள்] விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின.”—அப்போஸ்தலர் 16:5.
புற மத கோயில்களிலோ தனிப்பட்ட விதமாகவோ வணங்குவதன் மூலம் அந்த சமயத்தில் ஒரு கிறிஸ்தவன் கடவுளுடைய அங்கீகாரத்தை பெற்றிருக்க முடியுமா? இந்த விஷயத்தில் பைபிள் தெளிவான வழிகாட்டுதலை கொடுக்கிறது. அதாவது: அங்கீகரிக்கப்பட்ட வணக்கத்தார், ஒரே உண்மை சர்ச்சின் அல்லது உண்மை வணக்கத்தாராலான ‘ஒரே சரீரமாகிய’ சபையின் பாகமாக இருக்க வேண்டும். இவர்களே கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சீஷர்கள்.—எபேசியர் 4:4, 5; அப்போஸ்தலர் 11:26.
தற்காலத்தைப் பற்றி என்ன?
சர்ச்சுக்கு போய் வணங்கும்படி நம்மை ஊக்குவிப்பதற்கு மாறாக பைபிள் நம்மை சர்ச்சுடன் சேர்ந்து, அதாவது, ‘ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளும்’ ஜனங்களடங்கிய ‘ஜீவனுள்ள தேவனுடைய சபையுடன்’ சேர்ந்து வணங்கும்படி ஊக்குவிக்கிறது. (1 தீமோத்தேயு 3:15; யோவான் 4:24) கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட மத கூட்டங்கள், ‘பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாய்’ இருக்கும்படி மக்களுக்குப் போதிக்க வேண்டும். (2 பேதுரு 3:11) இப்படிப்பட்ட போதனை, அங்கு வந்திருப்பவர்களை ‘நன்மை தீமையின்னதென்று பகுத்தறியத்தக்க’ முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக்கும்.—எபிரெயர் 5:14.
யெகோவாவின் சாட்சிகள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் முன்மாதிரியைப் பின்பற்ற முயலுகிறார்கள். உலகம் முழுவதிலும் 91,400-க்கும் அதிகமான சபைகள், பைபிளைப் படிப்பதற்காகவும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்காகவும் ராஜ்ய மன்றங்களிலும், வீடுகளிலும், மற்ற இடங்களிலும் தவறாமல் கூடுகின்றன. ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல விட்டுவிடாமல்’ இருக்கும்படி அப்போஸ்தலன் பவுல் கூறிய வார்த்தைகளுக்கு இசைவாக இது இருக்கிறது.—எபிரெயர் 10:24, 25.(g01 3/8)