Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நமிபியாவின் நகரும் சிற்பங்கள்

நமிபியாவின் நகரும் சிற்பங்கள்

நமிபியாவின் நகரும் சிற்பங்கள்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

இந்தச் சிற்பக் கலைஞருடைய பாணி ஓயாமல் மாறிக்கொண்டே இருக்கும், அதேசமயத்தில் அவருடைய படைப்போ பார்ப்பவருடைய இதயத்தை கொள்ளைகொள்ளும். யார் அந்தச் சிற்பக் கலைஞர்? காற்று. அவர் பயன்படுத்தும் பொருள்? மணல். நகர்ந்துகொண்டே போகும் மணற்குன்றுகளை விதவிதமாக வடிவமைக்கிறார் இந்தச் சிற்பி. பிறைவடிவமே இவருடைய படைப்பில் மிகவும் அற்புத படைப்போ! காற்று வீசும் திசையிலுள்ள “சிற்பத்தின்” ஓரம் சரிவாக காட்சியளிக்கிறது. காற்றுக்கு எதிர் திசையிலுள்ள சரிவோ செங்குத்தாக, குறுகியதாக இருக்கிறது. அந்த மணற்குன்றின் முகடு பளபளக்கும் கத்தி முனை, ஆனால் அதை காலால் ஓர் உதைவிட்டால் சுலபமாக மழுங்கிவிடும்.

இத்தகைய நகரும் சிற்பங்களைக் கண்டு களிப்பதற்கு சிறந்த இடம் நமிப் பாலைவனம். இது ஆப்பிரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் இருக்கிறது. உலகிலேயே மிகப் பெரிய மணற்குன்றுகளில் சில இங்கே ஒய்யாரமாக உயர்ந்து நிற்கின்றன. அவற்றின் உயரம் 400 மீட்டருக்கும் அதிகம். என்றாலும், நமிப் பாலைவனம் உலகிலுள்ள பெரும் பாலைவனங்களைவிட பரப்பளவில் சிறியதே. இது அட்லாண்டிக் பெருங்கடல் முதல் உள்நோக்கி அதிகபட்சமாக சுமார் 160 கிலோமீட்டர் தூரம் வரை விரிந்து காணப்படுகிறது, நீளமோ 1,900 கிலோமீட்டர்.

படைப்பில் மற்ற கலைஞர்கள்

இந்தத் தொலைதூர ‘கலைக் கூடத்தில்’ தன் கைவரிசையை காட்டும் கலைஞர் காற்று மட்டுமே என்று எண்ணிவிடாதீர்கள். மணற்குன்றுகளை கூர்ந்து ஆராய்ந்தால் மற்ற கலைஞர்களுடைய கைவண்ணங்களும் உங்கள் கண்ணில் படும். உதாரணமாக, மணலில் எதேச்சையாக வீசப்பட்ட ஒரு நீளமான அழகிய சங்கிலி போன்ற வடிவத்தை நீங்கள் காணலாம். நீங்கள் கால்கடுக்க காத்திருந்தால், படைப்பில் ஈடுபடும் அந்தக் கலைஞர்களையே காணலாம். இரவில் உல்லாசமாக மணலில் ஊர்வலம் சென்றபோது கால்தடங்களை விட்டுச்சென்ற வண்டுகளே அந்தச் “சங்கிலி”யை வடிவமைத்த கலைஞர்கள். அந்தச் “சங்கிலி”க்கு அருகிலேயே சீரான வரிசையில் சிறுசிறு துவாரங்களை நீங்கள் பார்க்கலாம். இவையும் கால்தடங்களே​—⁠ஆனால் இவை தன்னுடைய இடத்திற்கு குதித்துச் சென்ற துன்னெலியின் (Elephant shrew) கால்தடங்கள். தொலைதூரத்தில் கேட்பாரற்று கிடக்கும் இந்தக் கலைக் கூடத்தில் இன்னும் ஏராளமான கலைஞர்கள் குழுமியிருப்பது திடீரென உங்களுடைய பொறியில் தட்டுப்படுகிறது.

வடக்கே ஸ்கெலிட்டன் கடற்கரை நெடுக பாலைவன கலைஞர்கள் பலரையும் நீங்கள் பார்க்கலாம். அவர்கள் அந்த மணலை முரட்டுத்தனமாக பாவிக்கின்றனர், அதனால் அவர்களுடைய படைப்பு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அதோ, அவர்கள் மணல் மீது துள்ளிக் குதித்து வருவதைப் பாருங்கள்! ஆனால் ஒன்று நிச்சயம், அவர்கள் தங்களுடைய படைப்பு வேலையை அனுபவித்து மகிழ்கின்றனர். எட்டு திக்குகளிலும் மணல் பூக்களை வாரி இறைத்துக்கொண்டு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வண்ணம் அதிவேகமாக ஓடிவருகின்றனர். ஓடுவதில் திருப்திப்படாமல் அவர்கள் சறுக்கியும் விளையாடுகின்றனர், தங்களுடைய பின்னங்கால்களை இழுத்துக்கொண்டு செல்கையில் மணலில் உழவுக் கால்களை உருவாக்கிச் செல்கின்றனர். அருகிலுள்ள நீர்நிலைக்கு சாடி ஓடுகின்றனர், அதற்குள் குதிக்கின்றனர், குதூகலமான குழந்தைகளைப் போலவே கும்மாளம் போடுகின்றனர். இந்தக் கலைஞர்கள் ஒவ்வொருவரும் சுமார் ஆறு டன் எடை கொண்டவர்கள்! ஆம், ஆப்பிரிக்க யானைகளே அந்தக் கலைஞர்கள்.

மற்றொரு விசித்திரமான கலைஞர், முரட்டுத்தனமாக அல்ல ஆனால் வினோதமான பாணிகளில் படைக்கிறார். அவர்தான் கட்டுவிரியன். மணலில் அவருடைய சித்திர வேலைப்பாடு நெளிந்த குச்சிகளின் வரிசைகளைப் போல காட்சியளிக்கிறது. இந்த விசித்திர கலைஞர் பக்கவாட்டாக வளைந்து நெளிந்து செல்கையில் நெடுக கோலம்போட்டுக் கொண்டே செல்கிறார். ஆ, எங்கே அந்தப் பாதை! திடீரென மாயமாக மறைந்துவிட்டதே. அந்தக் கட்டுவிரியன் எங்கே இருக்கிறார் என்பதற்கு எந்தத் துப்பும் இல்லை. அவர் எங்குதான் போனார்? நீங்கள் மிகவும் கூர்ந்து கவனித்தால், மண்ணுக்குள்ளிருந்து இரண்டு கண்கள் உங்களை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை நோக்கலாம். அவை வேறு யாருடைய கண்களுமில்லை, அந்தப் பாம்பின் கண்களே. அவருடைய மீதிப்பாகம் முழுவதும் மண்ணுக்குள் மறைந்திருக்கிறது. இவ்வாறு தந்திரமாக இருந்துகொண்டு, இரைக்காக பொறுமையோடு காத்திருக்கிறார் அவர். பிறகென்ன! வழக்கமாக வழியில் வரும் பல்லி அவரிடம் பலியாவார்!

மணலில் இருக்கும் வேறொரு வடிவம் ஒருவேளை நம்மை கவரத்தக்க கலைநயத்துடன் இருக்காது. அவைதான் அகன்ற டயர் தடங்கள்​—⁠பாலைவனத்தைப் பாதுகாப்புடன் கடந்து செல்வதற்கு விசேஷமாக தயாரிக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்கள் போட்டு சென்றவை. இவ்வாறு மனிதனும் தனது தடயத்தை பதித்திருக்கிறான்.

மாறிக்கொண்டே இருக்கும் ஒரு கலைஞர்

இந்த மணலில் தங்களுடைய தடயங்களை விட்டுச்செல்லும் எண்ணிலடங்கா கலைஞர்கள் வேறு பலரும் இருக்கிறார்கள். யார் அவர்கள்? காண்டாமிருகங்கள், சிங்கங்கள், ஒட்டகச்சிவிங்கிகள், குள்ளநரிகள். இவர்களை ஸ்கெலிட்டன் கடற்கரை சரணாலயத்திலும் மற்ற இடங்களிலும் நீங்கள் காணலாம்.

ஆனால் காற்றே கலைஞர்களில் தலைசிறந்த கலைஞர். கலைக் கூடத்தின் பொதுவான தோற்றத்தை நிர்ணயித்து, தன்னுடைய விருப்பப்படி வடிவங்களை மாற்றுவதில் வல்லவரும் இவரே. இவர் செய்யும் மாற்றங்களுக்கு முடிவே இல்லை. ஒரு வருடம் கழித்து இந்தக் கலைக் கூடத்தைப் பார்வையிட்டால், நீங்கள் இல்லாத சமயத்தில் மணற்குன்றுகளில் சில 30 மீட்டருக்கும் அப்பால் நகர்ந்து சென்றிருப்பதை கவனிக்கலாம்! நமிபியாவின் காற்று கலைஞரால் அந்தளவுக்கு சாதிக்க முடியும்.

(g01 3/8)

[பக்கம் 13-ன் தேசப்படம்]

(For fully formatted text, see publication)

ஆப்பிரிக்கா

நமிபியா

[பக்கம் 14-ன் படங்கள்]

துன்னெலி

[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]

Des and Jen Bartlett