பலவீனப்படுத்தும் நோயுடன் போராட்டம்
பலவீனப்படுத்தும் நோயுடன் போராட்டம்
டான்யா ஸாலே சொன்னபடி
அலபாமாவிலுள்ள லூவர்ன் என்ற சிறிய பட்டணத்தில் ஒருசில வருடங்களுக்கு முன்பு வரை மிகவும் சுறுசுறுப்பான ஒரு தாயாக இருந்தேன்; முழுநேர ஊழியமும் செய்துவந்தேன். இங்கு அமைதியான அவசரமற்ற வாழ்க்கை. எனக்கும் என் கணவர் டூக்குக்கும் எங்கள் குட்டிப் பையன் டானியேலுக்கும் எல்லாமே சுமுகமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் ஒரு சிறிய அறுவை சிகிச்சை எங்கள் வாழ்க்கை போக்கையே பெரிதும் மாற்றிவிட்டது.
அறுவை சிகிச்சைமூலம் 1992-ல் என் கருப்பை அகற்றப்பட்டபோது எங்கள் பிரச்சினைகள் ஆரம்பித்தன. அதன்பின் கொஞ்சகாலத்தில், எனக்கு வந்த தாங்க முடியாத வலி நிற்கவேயில்லை; அடிக்கடி (ஒருநாளைக்கு சுமார் 50-லிருந்து 60 முறை) சிறுநீர் கழிக்க வேண்டியிருந்தது. கடைசியாக எனக்கு வைத்தியம் செய்த பெண்நோயியல் மருத்துவர், என்னுடைய பிரச்சினையின் காரணத்தை கண்டுபிடிக்க சிறுநீரக மருத்துவர் ஒருவரை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
சில பரிசோதனைகளை செய்யும்படி மருத்துவமனைக்கு சென்றேன். முதன்முறை நான் சென்றபோது, அந்த சிறுநீரக மருத்துவர், சிறுநீரக இடைநார் திசு வீக்கம் [interstitial cystitis (IC)] அல்லது பலவீனப்படுத்தும் சிறுநீர்ப்பை வீக்கம் தான் பிரச்சினை என்று கண்டுபிடித்தார். இதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஏனென்றால், சிறுநீர் மண்டலத்தில் ஏற்படும் வேறு சில கோளாறுகளுக்கும் இதே அறிகுறிகள் காணப்படும். மேலுமாக, IC-ஐ கண்டுபிடிப்பதற்கென விசேஷித்த பரிசோதனை எதுவும் இல்லை. ஆகவே, IC-தான் என்று தீர்மானிப்பதற்குமுன் மற்ற கோளாறுகள் இல்லை என்பதை முதலில் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கு சிகிச்சை செய்வதில் அவ்வளவு பிரயோஜனம் இருக்காது என்பதால், முடிவாக சிறுநீர்ப்பையை அகற்ற வேண்டிய நிலைதான் ஏற்படும் என்று எங்கள் டாக்டர் ஒளிவுமறைவின்றி சொல்லிவிட்டார்! வேறு சிகிச்சைகள் இருந்தாலும் அவை பலன்தராது என்று அவர் சொல்லிவிட்டார். இது எங்களுக்கு பேரிடியாக இருந்தது என்பதை சொல்ல தேவையே இல்லை. அப்போது வரையாக நான் ஓரளவு நல்ல ஆரோக்கியத்துடனேயே இருந்தேன். யெகோவாவின் சாட்சிகளாக, டூக்கும் நானும் பல வருடங்கள் முழுநேர ஊழியம் செய்தோம்; இப்போதோ என்னுடைய சிறுநீர்ப்பை அகற்றப்பட வேண்டிய நிலை. அந்த சமயத்தில் என்னுடைய கணவன் மிகவும் ஆதரவாக இருந்ததற்காக சந்தோஷப்படுகிறேன்.
இன்னொரு சிறுநீரக மருத்துவரை போய் பார்க்க தீர்மானித்தோம். நிறைய டாக்டர்களிடம் போனோம். வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அந்த சமயத்தில், அநேக டாக்டர்களுக்கு IC-யைப் பற்றி அதிகம் தெரியாது. மேலும் IC-யைப் பற்றி சிறுநீரக மருத்துவர்கள் பலருக்கு அவரவருடைய சொந்த கருத்துக்கள் இருந்தன; எனவே அவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையும் வெவ்வேறுபட்டதாக இருக்கும். “இந்த நோய் தீராத நோயாகிவிடலாம்” என்று மருத்துவ பத்திரிகை ஒன்று குறிப்பிட்டது. “அறிவியலாளர்கள் IC-க்கு இன்னும் ஒரு நிவாரணத்தை கண்டுபிடிக்கவும் இல்லை, யாருக்கு எந்த சிகிச்சை பலன்தரும் என்று அவர்களால் கணிக்கவும் முடியவில்லை. . . . IC-ன் காரணங்கள் என்னவென்று டாக்டர்களுக்கு தெரியாததால் அதன் அறிகுறிகளுக்கு நிவாரணமளிக்கவே சிகிச்சைகள் செய்யப்படுகின்றன” என்பதாக வேறொரு பத்திரிகை சொல்கிறது.
தசைப்பிடிப்பு காரணமாகவும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருந்ததாலும் வலியால் துடித்துப்போனேன். அதனால் டாக்டர்கள் எதைச் சொன்னாலும் அதைச் செய்து பார்க்க தயாராக இருந்தேன். 40-க்கும் மேற்பட்ட வித்தியாசமான மருந்துகளையும் மூலிகைகளையும், அக்குபங்சர், நரம்புகளை உணர்விழக்க செய்தல், முதுகில் தண்டுவடத்துக்கு அருகிலும் தண்டுவடத்திலிருந்து வரும் நரம்புகளின் அருகிலும் ஊசிமூலம் மயக்கமருந்து செலுத்துதல், சருமத்தின் ஊடாக நரம்பை தூண்டும் மின்கருவியால் (TENS) லேசான மின் அதிர்வுகளை சில நிமிடங்களுக்கோ மணிநேரத்திற்கோ உடலுக்குள் செலுத்துதல் போன்ற அனைத்தையும் முயன்று பார்த்துவிட்டேன். என்னால் முடிந்தளவு இது குறித்து ஆராய்ந்தேன்; அதன் காரணமாக என்னதான் நடக்கிறது என்பதைப் பற்றி எனக்கு கொஞ்சமாவது புரிந்துகொள்ள முடிந்தது.
தற்போது, மெத்தடோன் என்ற வலி நிவாரணியையும் அதோடுகூட இன்னும் ஆறு மருந்துகளையும் எடுக்கிறேன். வலி நிவாரண க்ளினிக்குக்கும் தவறாமல் போகிறேன். அங்கு வலியை சமாளிப்பதற்காக ஸ்டீராய்டுகளோடு முதுகுத் தண்டு நரம்புகளருகே மருந்து ஊசிகளும் போடுகிறார்கள். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சினைக்காக, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஹைட்ரோடிஸ்டென்ஷன் என்று ஒரு சிகிச்சை பெறுகிறேன்; அதில் திரவத்தை பயன்படுத்தி சிறுநீர்ப்பையை பலூன் போல ஊத வைக்கிறார்கள். பல தடவை எனக்கு இப்படி செய்திருக்கிறார்கள். இதை செய்யும்போது ஒருசில மாதங்களுக்கு எனக்கு நிம்மதி கிடைக்கிறது. கடந்த சில வருடங்களில் 30-க்கும் அதிக முறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறேன்.
இந்த நோய்க்கு முடிவான பரிகாரம், சிறுநீர்ப்பையை அகற்றுவதுதானா? ஒரு புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “ஒவ்வொரு நோயாளிக்கும் சிகிச்சை எப்படிப்பட்ட பலன் தரும் என்பதை முன்கணிக்க முடியாமல் இருப்பதால்—சிலருக்கு அறுவை சிகிச்சைக்குப் பின்னும் நோயின் அறிகுறிகள் இருக்கின்றன—அநேக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய மனமில்லாதவர்களாய் இருக்கிறார்கள்.” அதனால் நான் அதைப்பற்றி இப்போதைக்கு யோசித்து பார்க்க வேண்டாமென்று இருக்கிறேன்.
சில சமயங்களில், மிகவும் கடுமையான வலி தொடர்ந்து இருப்பது எளிதில் நம்பிக்கையிழந்து போக வைக்கும். வாழ்க்கையையே முடித்துக்கொள்ளலாம் என்ற எண்ணம்கூட என் மனதில் தோன்றாமல் இல்லை. ஆனால் அப்படி செய்தால் யெகோவாவின் பெயருக்கு எப்பேர்ப்பட்ட நிந்தனையை அது கொண்டுவரும் என்பதை நினைத்து பார்க்கவே எனக்கு கஷ்டமாக இருந்தது. ஜெபம், தனிப்பட்ட படிப்போடுகூட யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதும் எவ்வளவு முக்கியம் என்பதை என்னால் காண முடிகிறது; ஏனென்றால் நம் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு எப்போது என்ன நடக்கும் என்று நமக்கு ஒருபோதும் தெரியாது. நோயுடன் அவதிப்படுகையில், இந்த உறவுதான் என் உயிரை பாதுகாத்தது; இந்த உறவு மட்டும் இல்லை என்றால் நான் என் உயிரையே போக்கியிருப்பேன்.
கடந்த ஒன்பது வருடங்களை பின்னோக்கி பார்க்கையில், வாழ்க்கை எவ்வளவு விரைவில் மாறிவிடலாம் என்பதை காண முடிகிறது. “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்” என்பதாக பிரசங்கி 12:1-ல் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளை பெரிதும் மதித்துணருகிறேன். எனக்கு 15 வயதாக இருக்கும்போதே முழுநேர ஊழியத்தை தொடங்கி, ஏறக்குறைய 20 வருடங்கள் தொடர முடிந்ததற்காக மிகவும் நன்றியுள்ளவளாய் இருக்கிறேன். அந்த காலப்பகுதியில் யெகோவாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டேன்.
என்னுடைய கணவரும் என் மகன் டானியேலும் மிகவும் ஆதரவாக இருந்து வருவதற்காக யெகோவாவுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். மேலும், சபையிலுள்ளவர்கள் போன் செய்வதும், பார்க்க வருவதும் எனக்கு அதிக உற்சாகம் அளிக்கிறது. குளிர்காலத்தில் வெளியே போவது எனக்கு ரொம்ப கஷ்டம், ஏனென்றால் குளிரில் என்னுடைய தசைப்பிடிப்பு வேதனைகள் மோசமடைகின்றன. அப்போது தொலைபேசி மூலம் சாட்சிகொடுக்கிறேன்; பரதீஸ் நம்பிக்கையை நிலையானதாகவும் நிஜமானதாகவும் வைக்க அது எனக்கு உதவுகிறது. நோயும் வேதனையும் கடந்த கால காரியங்களாகி, மனதிற்கு வராத அந்த நாளை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன்.—ஏசாயா 33:24.
(g01 3/8)