“பிரேக்” போட வைக்கும் மரம்
“பிரேக்” போட வைக்கும் மரம்
ஈக்வடாரிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
ஈக்வடாரின் கடலோரப் பகுதி. சுற்றிலும் மலைகள் சூழ்ந்த சமவெளி. டிசம்பர் மாதத்தின் மத்திபம். இன்னும் பருவ மழை நிலத்தை நனைக்கவில்லை. செடிகளிலும் மரங்களிலும் தூசி படிந்திருந்தது. கார் மேகம் சூழ்ந்திருக்க, மப்பும் மந்தாரமுமான நாள் அது. பயணிகளின் கூட்டம் ஒன்று தங்களுடைய உல்லாசப் பயணத்தை துவங்கியது. மேற்கிலுள்ள பசிபிக் பெருங்கடலை நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் பிரயாணப்பட்டது. திடீரென, எல்லாருடைய கண்களும் ஒரே திசையில் நிலைகுத்தி நின்றன. அவர்கள் கவனத்தைக் கவர்ந்தது, சாலைக்கு அருகிலிருந்த ஒரு மரமே. உடனே காரை “பிரேக்” போட வைத்த அது, என்ன மரம்?
பூத்துக்குலுங்கும் க்வாயாகன் மரம்! ஒரு நிமிடம் எல்லாரும் ஆச்சரியத்தில் மெளனமாகிவிட்டனர். “கொள்ளை அழகு! கண்ணைப் பறிக்கும் இப்படிப்பட்ட வண்ணத்தை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? பிங்க், வயலட், ரெட் அல்லது ஆரஞ்சு போன்ற நிறங்களில் வண்ண வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்கும் மரங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், இதுவரை இந்த மரத்தைப்போல மனதைப் பறிக்கும் அழகை நான் பார்த்ததே இல்லை!” என சொல்லி அந்த நிசப்தத்தை கலைத்தார் ஒருவர்.
மினுமினுக்கும் பொன் நிறத்தில் பூத்துக்குலுங்கும் அந்த அழகை சிறிது நேரம் கண்களால் பருகினர். பின்னர், பயணத்தை மேற்கொண்டனர். பூக்கள் மயமாக கொள்ளை அழகோடு காட்சியளிக்கும் காட்டை பார்க்கப் போவதை அப்போது அவர்கள் அறியவில்லை. சிறிது தூரம்தான் சென்றிருப்பர், பூத்துக்குலுங்கும் க்வாயாகன் மரம் இன்னொன்றை பார்த்தனர். இன்னும் சிறிது தூரத்தில் இன்னொன்று. தூங்கி வழிந்துகொண்டிருக்கும் க்வாயாகன் மரக் காடுகள் உயிர் பெற்று, கண்ணைப் பறிக்கும் நிறத்தில் ஜொலிக்கும் பருவம் அது. எனவே, அந்த மலைகளே தகதகவென பொன்போல மின்னியது!
என்றாலும், சொக்க வைக்கும் அதன் அழகை ஏதோ ஒரு நாடு மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. சொல்லப்போனால், தென் மற்றும் மத்திய அமெரிக்காவின் பல பகுதிகளில் இந்த மரம் காணப்படுகிறது. எக்காள வடிவில் காணப்படும் இதன் பொன்நிற பூக்களை வைத்து, இந்த மரத்திற்கு கோல்டன் ட்ரம்பெட், ட்ரம்பெட் மரம் என பல பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதன் விஞ்ஞானப் பெயர் டபிபியூயா கிறிஸாந்த்தா.
பல ஆண்டுகளாக, இந்த மிருதுவான, உறுதியான மரத்திலிருந்து நல்ல தரம்வாய்ந்த மரச்சாமான்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த மரங்கள் அழிந்து வருவதால், இவற்றை வெட்டுவதை சில நாடுகள் தடை செய்துள்ளன. உள்நாட்டவரும்சரி உல்லாசப் பயணிகளும்சரி, ஈடிணையற்ற இதன் அழகை தொடர்ந்து அள்ளிப் பருகவே இந்த ஏற்பாடு. வருடத்தில் ஒரு முறை, ஒருசில நாட்களுக்கே வண்ணக் கோலத்தில் காட்சியளித்தாலும், அவை அள்ளி இறைக்கும் அழகை நிலைக்கச் செய்யவே இந்த முயற்சி.
நாம் வாழும் அற்புதமான இந்த பூமியை செதுக்கிய சிற்பி, நம் படைப்பாளரே. இந்த மாபெரும் கலைஞருக்கு உயிருள்ள பாராட்டுச் சின்னமாய் விளங்குவது இந்த க்வாயாகன் மரங்கள்.(g01 3/8)