Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் நம்பத்தகுந்த சரித்திர பதிவா?

பைபிள் நம்பத்தகுந்த சரித்திர பதிவா?

பைபிள்—நம்பத்தகுந்த சரித்திர பதிவா?

அவர்கள் அரசர்களை கண்டனம் செய்தனர். அவர்கள் ஆசாரியர்களை கண்டித்தனர். அவர்கள் பொல்லாத மக்களை கடிந்துகொண்டனர். அவர்கள் தங்கள் சொந்த பாவங்களையும் குறைகளையும்கூட வெளிப்படையாக தெரிவித்தனர். அவர்கள் சத்தியத்தைப் பேசியதற்காகவும் எழுதியதற்காகவும் விடாது துன்புறுத்தப்பட்டனர், கொடுமைப்படுத்தப்பட்டனர், சிலர் கொலையும் செய்யப்பட்டனர். அவர்கள் யார்? அவர்கள்தான் பைபிள் தீர்க்கதரிசிகள். அவர்களில் அநேகர் பரிசுத்த வேதாகமத்தின் சில பாகங்களை எழுதினர்.​—மத்தேயு 23:35-37.

சரித்திராசிரியரும் சரித்திரமும் என்ற ஆங்கில புத்தகத்தில் பேஜ் ஸ்மித் இவ்வாறு எழுதுகிறார்: “[எபிரெயர்கள்] எதிரிகளைப் பற்றி தயவுதாட்சண்யம் பார்க்காமல் எழுதியது போலவே தங்கள் அபிமானத்திற்கு உரியவர்களைப் பற்றியும் எழுதினர். தங்கள் விரோதிகளைப் பற்றி ஈவிரக்கமின்றி பதிவுசெய்தது போலவே தங்களைப் பற்றியும் பதிவுசெய்தனர். ஏனென்றால் அவர்கள் கடவுளின் கண்ணெதிரே எழுதினார்கள். உண்மைகளை மறைப்பதால் அவர்களுக்கு எவ்வித லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை.” அவர் மேலும் கூறியதாவது: “சீரியா அல்லது எகிப்தின் போர்வீர ராஜாக்களின் சலிப்பூட்டும் கால விவரப்பதிவுகளின் பக்கத்தில், கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனத்தின் துன்பங்களையும் வெற்றிகளையும் பற்றிய பதிவு . . . மனதை வசீகரிக்கிறது. எபிரெய பதிவாளர்கள், சரித்திரத்தைப் பதிவு செய்வதில் மிக அத்தியாவசியமான அம்சத்தை கண்டுபிடித்திருந்தனர்; அதாவது சரித்திர பதிவு, நிஜமாக வாழ்ந்த மக்களை அவர்களது எல்லாவித குற்றங்குறைகளோடும் படம்பிடித்துக் காட்ட வேண்டியது அத்தியாவசியம் என்பதை உணர்ந்திருந்தனர்.”

பைபிள் எழுத்தாளர்கள் சின்ன சின்ன நுணுக்க விவரங்களையும் திருத்தமாக பதிவுசெய்தனர். சரித்திரம் மற்றும் புதைபொருளின் வெளிச்சத்தில் பைபிளை ஆராய்ந்த பிறகு, எழுத்தாளர் வர்னர் கெல்லர், சரித்திரப் புத்தகமாக பைபிள் என்ற தனது ஆங்கில புத்தகத்தின் முன்னுரையில் இப்படிச் சொன்னார்: “அதிகாரப்பூர்வமான, நன்கு உறுதியாக்கப்பட்ட அத்தாட்சிகள் இப்போது ஏராளமாக குவிந்திருப்பதை எண்ணிப் பார்க்கையில், . . . ‘என்னவிருந்தாலும் பைபிள் உண்மைதான்!’ என்ற முடிவு என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.”

சக்திவாய்ந்த பாடங்களை கற்பிக்கும் வலிமைமிக்க சரித்திரம்

பைபிள் எழுத்தாளர்கள் பெரும்பாலும் சாதாரண மக்களே​—⁠விவசாயிகள், மேய்ப்பர்கள், மீன்பிடிப்பவர்கள் போன்ற எளிய மக்களே. இருந்தாலும் கிட்டத்தட்ட 1,600 ஆண்டுகாலத்தில் அவர்கள் எழுதியவை, மற்ற எந்த பண்டைய அல்லது நவீன பதிவுகளையும்விட அதிகளவில் மக்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. மேலும், அவர்களது பதிவுகளுக்கு எதிராக எல்லா திசைகளிலிருந்தும் எழும்பிய தாக்குதல்கள் பயனற்றதாயின. (ஏசாயா 40:8; 1 பேதுரு 1:25) இன்று பைபிள் முழுமையாகவோ பகுதிகளாகவோ சுமார் 2,200 மொழிகளில் கிடைக்கிறது. இதில் வேறெந்த புத்தகமும் இதற்கு ஈடில்லை! பைபிள் ஏன் இந்தளவு விசேஷத்தன்மை பெற்றிருக்கிறது? இக்கேள்விக்கு பதிலளிக்க பின்வரும் மேற்கோள்கள் உதவும்.

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”​—⁠2 தீமோத்தேயு 3:16, 17.

“தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”​—⁠ரோமர் 15:⁠4.

“அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.”​1 கொரிந்தியர் 10:11, பொது மொழிபெயர்ப்பு.

ஆம், கடவுளால் ஏவப்பட்டு பாதுகாக்கப்பட்ட, உண்மையில் வாழ்ந்த மக்களைப் பற்றிய​—⁠கடவுளைப் பிரியப்படுத்திய சிலரையும் பிரியப்படுத்தாத சிலரையும் பற்றிய⁠—⁠ஒரு பதிவாக, பைபிள் மற்ற எல்லா புத்தகங்களையும்விட உயர்ந்தோங்குகிறது. என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக்கூடாது என்று வெறுமனே பட்டியலிடும் புத்தகம் அல்ல அது; சிறுபிள்ளைகளை மகிழ்விக்கும் சுவாரஸ்யமான குட்டிக் கதைகளின் தொகுப்பும் அல்ல. கடவுள் மனிதரைப் பயன்படுத்தி எழுதியது உண்மைதான். ஆனால் அது பைபிளை மெருகூட்டத்தான் செய்திருக்கிறது; சந்ததி சந்ததியாக வாசகரின் மனங்களை தொட்டு, மென்மையாக கவர்ந்திழுக்க உதவியாய் இருந்திருக்கிறது. புதைபொருள் நிபுணர் வில்லியம் ஆல்பிரைட் குறிப்பிட்டதாவது: “ஒழுக்க மற்றும் ஆன்மீக அம்சங்களில் பைபிள் அளிக்கும் ஆழமான கருத்துக்கள், மனித வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக கடவுள் வெளிப்படுத்திய ஒப்பற்ற கருத்துக்களாகும். அவை, இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு உண்மையாக இருந்தனவோ அப்படியேதான் இன்றும்.”

பைபிள் எல்லா காலங்களுக்குமே பொருந்தும் என்பதை எடுத்துக்காட்ட, மனித சரித்திரத்தின் தொடக்கத்திற்கே செல்வோம். பைபிள் மட்டுமே அத்தொடக்கத்தைப் பற்றி சொல்கிறது. ஆகவே அதிலுள்ள ஆதியாகம புத்தகத்திலிருந்து சில முக்கிய பாடங்களைக் காணலாம்.

பண்டைய விவரப்பதிவு கற்பிக்கும் காலத்துக்கேற்ற பாடங்கள்

ஆதியாகம புத்தகம் மனித குடும்பத்தின் தொடக்கத்தைப் பற்றி சொல்கிறது. முதல் மனிதர்களின் பெயர்களையும் அதுபோன்ற மற்ற எல்லா விவரங்களையும் அளிக்கிறது. இந்த விஷயத்தைப் பொறுத்ததில் வேறெந்த சரித்திர பதிவும் இவ்வளவு குறிப்பான விவரங்களை அளிப்பதில்லை. ‘ஆனால் நம் மூதாதையரான முதல் மனுஷனும் மனுஷியும் யார் என்பதை எல்லாம் இப்போது தெரிந்துகொண்டு என்ன பயன்?’ என நீங்கள் கேட்கலாம். மிகுந்த பயன் இருக்கிறது; ஏனெனில் நிறம், இனம், தேசம் என எந்த விதத்தில் வேறுபட்டிருந்தாலும் எல்லா மனிதரும் ஒரே பெற்றோரிலிருந்து வந்தவர்கள் என்பதைச் சொல்லி, ஆதியாகமம் இனவெறிக்கான எந்த அடிப்படையையும் அடியோடு அகற்றிவிடுகிறது.​—அப்போஸ்தலர் 17:⁠26.

ஒழுக்க சம்பந்தமாகவும் ஆதியாகமம் வழிகாட்டுதல் அளிக்கிறது. சோதோம் கொமோராவையும் அவற்றின் அக்கம்பக்கத்து நகரங்களையும் கடவுள் அழித்ததைப் பற்றிய பதிவை அது அளிக்கிறது. கடவுள் அந்நகரங்களை அழித்ததற்கான காரணம், அம்மக்களின் படுமோசமான ஒழுக்கக்கேடாகும். (ஆதியாகமம் 18:20–19:29) பைபிள் புத்தகமாகிய யூதா, வசனம் 7-⁠ல் (பொ.மொ.) இப்படிச் சொல்கிறது: ‘சோதோம், கொமோரா, அவற்றின் சுற்றுப்புற நகரங்கள் ஆகியவற்றின் மக்கள் பரத்தைமையிலும் [“விபசாரத்திலும்,” NW] இயற்கைக்கு மாறான சிற்றின்பத்திலும் மூழ்கியிருந்தார்கள். . . . அவர்கள் நமக்கொரு பாடமாய் உள்ளார்கள்.’ சோதோம் கொமோராவைச் சேர்ந்த மக்கள் ஒழுக்க சம்பந்தமான எந்த சட்டங்களையும் கடவுளிடமிருந்து பெறவில்லை; இருந்தாலும் மற்ற எந்த மனுஷரையும் போலவே கடவுள் கொடுத்த வரமான மனசாட்சியைப் பெற்றிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய செயல்களுக்காக கடவுள் நியாயமாகவே கணக்குக்கேட்டார். (ரோமர் 1:26, 27; 2:14, 15) அதேவிதமாகவே இன்றும் கடவுள் எல்லா மனிதரையும் அவர்களது செயல்களுக்காக கணக்குக் கேட்பார்; அவரது வார்த்தையாகிய பைபிளை ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி கணக்குக் கேட்பார்.​—2 தெசலோனிக்கேயர் 1:7, 10.

தப்பிப்பிழைப்பது பற்றிய ஒரு சரித்திர பாடம்

ரோமிலுள்ள டைட்டஸ் வளைவின்மீது இருக்கும் ஒரு செதுக்குவேலைப்பாடு, ரோம வீரர்களை சித்தரிக்கிறது. அவ்வீரர்கள் பொ.ச. 70-⁠ல் எருசலேம் அழிந்த பிறகு அதன் ஆலயத்திலிருந்து பரிசுத்த பாத்திரங்களை எடுத்துச் செல்வதாக சித்தரிக்கிறது. அப்போது பத்து லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டனர். இருந்தாலும் கீழ்ப்படிதல்மிக்க கிறிஸ்தவர்கள் தப்பிப்பிழைத்தார்கள். ஏனெனில் இயேசு முன்கூட்டியே இந்த எச்சரிக்கையைக் கொடுத்திருந்தார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள். . . . நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.”​—லூக்கா 21:20-22.

இதை நடந்து முடிந்த ஒரு சரித்திர நிகழ்ச்சியாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியாது. எருசலேம் அனுபவித்த உபத்திரவம், முழு உலகையும் விரைவில் ஆக்கிரமிக்கப்போகும் மகா உபத்திரவத்தின் அம்சங்களை முன்நிழலிட்டுக் காட்டியது. இதிலும் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள். “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்கள்” என இவர்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இயேசு சிந்திய இரத்தத்தில் விசுவாசம் வைப்பதால் ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து [தப்பி]வருவார்கள்.’ அந்த விசுவாசம் பைபிள் சரித்திரத்தையும் பைபிள் தீர்க்கதரிசனத்தையும் உறுதியான அஸ்திவாரமாக கொண்டிருக்கிறது.​—வெளிப்படுத்துதல் 7:9, 14.

மீண்டும் ஒருபோதும் நிகழப்போகாத சரித்திரம்

ஆங்கிலோ-அமெரிக்க உலக வல்லரசு உயர்ந்தோங்கியிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். இது பைபிளின் தீர்க்கதரிசனத்தின்படி கடைசி வல்லரசு. இதுவரை நடந்திருப்பதை வைத்துப் பார்க்கையில், இந்த வல்லரசும் முன்பு இருந்த மற்ற எல்லா வல்லரசுகளைப் போலவே வீழ்ச்சியடைய வேண்டும். ஆனால் எப்படி? இந்த வல்லரசின் வீழ்ச்சி உண்மையிலேயே மிக வித்தியாசமாக இருக்கும் என பைபிள் சொல்கிறது. பொ.ச. 1914-⁠ம் ஆண்டைச் சுட்டிக்காட்டி, தானியேல் 2:44, அரசியல் அதிகாரங்களை அல்லது ‘ராஜ்யங்களை’ பற்றி இப்படிச் சொன்னது: “அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”

ஆம், கடவுளுடைய ராஜ்யம்​—⁠இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் கடவுளுடைய பரலோக அரசாங்கம்​—⁠கொடுங்கோன்மையான மனித ஆட்சியை முழுமையாக துடைத்தழித்துவிடும். இது முன்பு குறிப்பிடப்பட்ட ‘மிகுந்த உபத்திரவத்தின்’ உச்சக்கட்டமாகிய அர்மகெதோனில் நிகழும். அதன் பிறகு இந்த ராஜ்யம் ‘வேறே ஜனத்துக்கு விடப்படாது,’ அதாவது அது ஒருபோதும் வீழ்த்தப்படாது அல்லது கவிழ்க்கப்படாது. அது “பூமியின் எல்லைகள் வரைக்கும்” அரசாட்சி செய்யும்.​—சங்கீதம் 72:⁠8.

பொய் மதம், கொடுங்கோன்மையான அரசியல், பேராசைமிக்க வியாபாரம் ஆகியவை மாறிமாறி செலுத்திவரும் கொடூர ஆதிக்கம் ஒருவழியாக முடிவுக்கு வரும். “நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்” என சங்கீதம் 72:7 வாக்குறுதி அளிக்கிறது. சுயநலமோ கர்வமோ அல்ல, ஆனால் கடவுளது பிரதான குணமாகிய அன்பே இந்த பூமி முழுவதும் வியாபித்திருக்கும். (1 யோவான் 4:8) ‘ஒருவருக்கொருவர் அன்பாயிருங்கள்’ என இயேசு சொன்னார். இதைக் குறித்து சரித்திராசிரியர் வில் டியூரன்ட் சொன்னதாவது: “நான் சரித்திரத்திலிருந்து கற்றிருக்கும் மிக முக்கிய பாடம், இயேசு கற்பித்த அதே பாடம்தான். . . . இந்த உலகிலேயே மிகவும் நடைமுறையான ஒன்று அன்புதான்.”

மனிதர்கள் மீது வைத்த அன்பினாலேயே கடவுள் பைபிளை ஏவி எழுதினார். அது மட்டுமே கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. தயவுசெய்து கொஞ்சம் நேரத்தையாவது பைபிள் படிப்புக்கு ஒதுக்கி, உயிர்காக்கும் அதன் செய்தியைத் தெரிந்துகொள்ளுங்கள். இதைச் செய்ய உதவவும், இயேசுவின் கட்டளைக்கு இணங்கியும், யெகோவாவின் சாட்சிகள் ‘ராஜ்யத்தின் சுவிசேஷத்தை’ மற்றவர்களோடு பகிர்ந்துகொள்கின்றனர். இந்த சுவிசேஷம் அல்லது நற்செய்தி, தீர்க்கதரிசனமாக மட்டுமே இருக்காது, அது விரைவில் உயிருள்ள சரித்திரமாகும்.​—மத்தேயு 24:⁠14.(g01 3/8)

[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]

“என்னவிருந்தாலும் பைபிள் உண்மைதான்!” வர்னர் கெல்லர்

[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]

“ஒழுக்க மற்றும் ஆன்மீக அம்சங்களில் பைபிள் அளிக்கும் ஆழமான கருத்துக்கள், . . . இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு உண்மையாக இருந்தனவோ அப்படியேதான் இன்றும்.” வில்லியம் ஆல்பிரைட், புதைபொருள் நிபுணர்

[பக்கம் 10-ன் படங்கள்]

ரோமிலுள்ள டைட்டஸ் வளைவின்மீது இருக்கும் ஒரு செதுக்குவேலைப்பாடு, பொ.ச. 70-⁠ல் எருசலேம் அழிந்ததை உறுதிப்படுத்துகிறது

[பக்கம் 10-ன் படங்கள்]

Soprintendenza Archeologica di Roma