Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மத்தியதரைக் கடல் சீல்கள் பிழைக்குமா?

மத்தியதரைக் கடல் சீல்கள் பிழைக்குமா?

மத்தியதரைக் கடல் சீல்கள்—பிழைக்குமா?

கிரீஸிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்

கிரீஸின் கடற்கரை வெயிலில் குளிர்காயும் சீல்கள் என இவற்றை ஒடிஸி என்ற காப்பியத்தில் ஹோமர் வர்ணித்தார். ஒருசமயம் பூர்வ ஆசியா மைனரிலுள்ள ஒரு நகரம் இவற்றின் உருவத்தை நாணயங்களில் பொறித்தது. ஒருகாலத்தில் மத்தியதரைக் கடலிலும் கருங்கடலிலும் இவை ஏராளமாய் காணப்பட்டன. ஆனால் இன்றோ இந்தப் பயந்தாங்கொள்ளி மத்தியதரைக் கடல் சீல்களில் ஒன்றை காண்பதே அரிது.

மிருதுவான உரோமம் கொண்ட பெரும்பாலான கடல்வாழ் பாலூட்டிகளைப் போலவே, மத்தியதரைக் கடல் சீலும் 18-⁠ம், 19-⁠ம் நூற்றாண்டுகளில் பெருமளவில் வேட்டையாடப்பட்டது. உரோமத்திற்காகவும் எண்ணெய்க்காகவும் இறைச்சிக்காகவும் சீல்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டன.

அதற்கு இழைக்கப்பட்ட கொடுமை இப்போது வெட்டவெளிச்சமாயிற்று. மத்தியதரைக் கடல் சீல்கள் 379 முதல் 530 மட்டுமே மீந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. அவையும் அழிவின் விளிம்பில் இருக்கலாம். இருந்தாலும், இவற்றின் எண்ணிக்கையை கணிப்பது “துளிகூட துல்லியமற்ற அறிவியல்” என்றுதான் சொல்ல வேண்டும் என மொனாக்கஸ் கார்டியன் செய்திமடல் அறிக்கை செய்கிறது.

இவற்றை காப்பாற்ற முடியாத அளவுக்கு காலம் கடந்துவிட்டதா? இந்த சீல்களை பாதுகாக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன?

கடும் போராட்டம்

இவை முக்கியமாக யாரும் நெருங்க முடியாத பாறை இடுக்குகளிலும், ஈஜியன் கடலிலுள்ள வட ஸ்போரடீஸ் தீவுகளின் கடற்குகைகளிலும் வாழ்கின்றன. வடமேற்கு ஆப்பிரிக்க கடற்கரைகளிலும் போர்ச்சுகலிலுள்ள டசர்டஷ் தீவுகளிலும் சிறு சிறு தொகுதிகளாக காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 3 மீட்டர் நீளமும், சுமார் 275 கிலோகிராம் எடையும் உள்ள சீலே உலகின் மிகப் பெரிய சீல் வகைகளில் ஒன்றாகும்.

இதன் வித்தியாசப்பட்ட அம்சங்களில் வெள்ளிநிற உரோமம் போர்த்தப்பட்ட பல்ப்-ஷேப் தலை, கன்னங்கரேலென்ற கண்கள், பெரிய மூக்குத் துளைகளைக் கொண்ட நீள்முகம், சிறிய துவாரங்களைக் கொண்ட காதுகள், தரையைப் பார்க்கும் தடித்த மீசைகள், மடிப்பு விழுந்த தாடைகள் போன்றவையும் அடங்கும். உடற்பகுதியிலுள்ள உரோமம் கருமை நிறத்தில் அல்லது சாக்லேட் நிறத்தில் குட்டையாக இருக்கிறது, அடிப்பகுதியில் அந்நிறம் சற்று மங்கலாக உள்ளது. ஆனால் புதிதாய் பிறந்த சீல் குட்டிகளின் பின்புற உரோமம் நீளமாகவும் அடர்நிறமாகவும், வயிற்றுப்பகுதியில் ஆங்காங்கே வெள்ளைநிற புள்ளிகளோடும் காணப்படுகின்றது.

சீல்களின் இனப்பெருக்க விகிதம் குறைவாக இருப்பதே அவை தப்பிப்பிழைப்பதற்கு பெரும் தடையாக உள்ளது. பெண் சீல்கள் ஓராண்டுக்கு ஒன்றிற்குமேல் குட்டி போடுவதில்லை. நிலைமையை இன்னும் மோசமாக்குவது என்னவென்றால், பெண் சீல்கள் அனைத்துமே வருடாவருடம் குட்டி போடுவதில்லை.

குறைந்த பிறப்பு விகிதம் மட்டுமே இச்சூழ்நிலைக்கு காரணமாக இல்லை. வனவிலங்கு காப்பக நியூ யார்க் நீர்வாழ் பிராணிகளின் காட்சியகத்தின் பொறுப்பாளர் டாக்டர் டென்னிஸ் தோனீ இவ்வாறு கூறுகிறார்: “மத்தியதரைக் கடல் சீல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு அவற்றின் இனப்பெருக்க விகிதம் குறைவாக இருப்பதைக் காரணம் காட்டுகிறோம், ஆனால் அதே இனப்பெருக்க விகிதமுடைய ஹார்பர் சீல்களின் எண்ணிக்கை இந்தளவுக்கு குறைவாக இல்லையே! ஆகவே, இவற்றின் எண்ணிக்கை நலிவடைவதற்கு நிச்சயமாகவே வேறுபல காரணங்கள் இருக்க வேண்டும்.”

தாக்குதலுக்கு ஆளாகுதல்

உங்கள் வீடு தீக்கு இரையானால் ஏற்படும் பெரும் சேதத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய உடைமைகள் எல்லாமே​—⁠தட்டுமுட்டு சாமான்கள், உடைகள், விலையுயர்ந்த சாதனங்கள், நினைவுப் பொருட்கள்​—⁠தீக்கு இரையாகிவிடலாம். இது உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும். சொல்லப்போனால், இப்படிப்பட்ட நிலைமையே மத்தியதரைக் கடல் சீல்களின் வீட்டிற்கும் நேரிட்டுள்ளது. தூய்மைக்கேடு, சுற்றுலாப் பயணங்கள், தொழிற்சாலைகள், மனிதரின் மற்ற நடவடிக்கைகள் எல்லாமே அநேக சீல்களின் இயற்கை வாழிடத்தை அழிக்க காரணமாக இருந்திருக்கின்றன.

மேலும், அதிகமாக மீன்பிடிப்பதால் சீல்களின் உணவு பெருமளவில் குறைந்துள்ளது. உயிரியலாளர் டாக்டர் ஸூஸன் கென்னடி-⁠ஸ்டோஸ்காஃப் இவ்வாறு சொல்கிறார்: “சீல்களுக்கு உணவு எளிதாக கிடைக்கவில்லையெனில் அவை உணவை தேடிக் கண்டுபிடிப்பதற்காக அதிக சக்தியை செலவிட வேண்டியுள்ளது.” எனவே, சீல்கள் தங்களது வாழிடத்தை இழக்க நேரிடுவது மட்டுமல்ல, வயிற்றுப்பாட்டிற்கே போராடும் நிலைக்குள்ளாகி இருக்கின்றன!

சிலசமயங்களில், சீல்கள் மீன் வலைகளில் மாட்டிக்கொண்டு நீரில் மூழ்கி இறந்துவிடுகின்றன, இது அதிகமாக மீன்பிடிப்பதால் ஏற்படும் மற்றொரு விளைவு. இருந்தாலும், இவை பெரும்பாலும் மீனவர்களாலேயே நேரடியாக கொல்லப்படுகின்றன. ஏன்? மீன் வலைகளிலிருந்து சீல்கள் தங்களுக்கு வேண்டிய உணவைத் திருடி அந்த வலைகளை சேதப்படுத்துகின்றன. மனிதனே சீல்களின் உணவாகிய மீன்களை அதிகம் பிடிப்பதில் அவற்றிற்கு கடும் போட்டியாக இருக்கிறான். இந்தப் போட்டியில் மனிதரின் கையே மேலோங்குவதால், இதுவே சீல்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு காரணமாக இருந்திருக்கின்றன.

சீல்கள் உணவுச் சங்கிலியில் கிட்டத்தட்ட முதன்மையாக இருப்பதால், இந்தக் கடல் பாலூட்டியை “அறிகுறி இனங்கள்” என விஞ்ஞானிகள் சிலர் குறிப்பிடுகிறார்கள். இவை நலிவடைவது, உணவுச் சங்கிலியில் உள்ள மற்றவையும் நலிவடைவதற்கு அறிகுறியாக இருக்கிறது. இது உண்மையென்றால், மத்தியதரைக் கடலின் சூழலமைப்பை பாதுகாப்பதற்கு ஏற்ற சூழ்நிலை இல்லை என்றுதான் அர்த்தம். ஏனென்றால், சீல்களே ஐரோப்பாவில் அதிகமாக அருகிவரும் இனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

அவை பிழைக்குமா?

சீல்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மனிதர்களே அவற்றின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்பதுதான் கேலிக்கூத்தான விஷயம். சீல்களைப் பாதுகாப்பதற்காக தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவைகளுக்கு பாதுகாப்பான இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மனதைக் கவரும் இந்த விலங்குகளுக்கு உதவுவது எப்படி என்பதை கண்டறிய எண்ணற்ற கள ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

1988-⁠ல் மத்தியதரைக் கடல் சீலைப் பற்றிய ஆய்வு மற்றும் பாதுகாப்பிற்காக MOm (Study and Protection of the Mediterranean Monk Seal) என்ற கிரேக்க சங்கம் உருவானது. MOm சங்கத்தின் ஆய்வாளர்கள் சீல்களின் எண்ணிக்கையை கவனிப்பதற்கும் அவற்றை பாதுகாப்பதற்குத் தேவையான பிற தகவலை சேகரிப்பதற்கும் அவற்றின் வாழிடங்களை தவறாமல் பார்வையிடுகின்றனர்.

பாதுகாப்பு குழுவிலுள்ள காவலர்கள் அதிவேக படகுகளில் அப்பகுதியைச் சுற்றி வலம் வருகின்றனர். இக்குழு, வட ஸ்போரடீஸ் தீவுகளைச் சேர்ந்த ஆலானிஸாஸிலுள்ள கிரீஸின் தேசிய கடல் பூங்காவிற்கு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கும் மீனவர்களுக்கும் தகவல்களையும் அறிவுரைகளையும் வழங்குகிறது. சுகவீனமான அல்லது காயமடைந்த சீல்களைக் கண்டால் அவற்றை கிரேக்க சங்கத்தின் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைப்பதோடு அவற்றிற்குத் தேவையான சிகிச்சையையும் இக்குழு அளித்து வருகிறது.

அநாதையாக விடப்பட்ட, சுகவீனமான அல்லது காயமடைந்த குட்டிகளுக்கு சீல் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் ஒரு காப்பகமாக விளங்குகிறது. அவை தாங்களாகவே வாழும் பக்குவத்தை அடையும் வரை அங்கே சிகிச்சை அளிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இதுவரை அதன் பலன்கள் கைகூடிவருகின்றன. வருடங்களாக குறைந்துகொண்டு வந்த இந்த சீல்களின் எண்ணிக்கை இப்போது வட ஸ்போரடீஸில் தேறிவருவதையே அறிகுறிகள் காட்டுகின்றன.

இந்த முயற்சிகள் யாவும் வெற்றி பெறுமா? பொறுத்திருந்து பார்க்கலாம். இருந்தாலும், அச்சுறுத்தலுக்கு ஆளாகும் இந்த இனங்கள் பிழைப்பதற்கு இன்னும் அதிகமான முயற்சி தேவைப்படுகிறது. நமது விழித்தெழு! பத்திரிகையாளரிடம் ஸ்மித்ஸோனியன் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் டேவிட் வைல்ட் இவ்வாறு கூறினார்: “பொதுவாக சொன்னால், கடல்வாழ் உயிரினங்களுக்கு வாழ்வதற்கேற்ற சூழ்நிலை இல்லை. பிரச்சினை என்னவென்றால், உண்மையிலேயே கடலில் என்ன நடக்கிறது என்பது நமக்கு சரிவர தெரிவதுமில்லை, அவற்றை எப்படி பாதுகாப்பது என்பது இதுவரை பிடிபடவுமில்லை.”

(g01 3/8)

[பக்கம் 13-ன் பெட்டி]

அருகிவரும் மற்ற சீல்கள்

உலகைச் சுற்றிலுமுள்ள மற்ற கடல்களிலும் சீல்கள் வாழ்கின்றன. இவையும் அருகிவருகின்றன. கரீபியன் அல்லது மேற்கிந்திய சீலே அமெரிக்க கண்டத்தில் “கொலம்பஸ் கண்ட முதல் சீல். கடற்கரையை விரும்புவதாலும் எளிதில் பிடிபடுவதாலும் சீல்கள் விரைவில் பெருமளவில் கொலை செய்யப்பட்டன. . . . பதிவு காட்டுகிறபடி, கடைசியாக கண்ணில்பட்ட கரீபியன் சீல் 1952-⁠ல்தான்” என நேஷனல் ஜியாகிரஃபிக் பத்திரிகை கூறுகிறது.

ஹவாய் தீவுகளின் தேசிய வனவிலங்கு பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த த ஃபிரெஞ்ச் ஃபிரிகேட் ஷோல்ஸ் என்ற சிறு தீவுகளே ஹவாய் அல்லது லேசனைச் சேர்ந்த சீல்களுக்கு தஞ்சம் அளிக்கும் கடைசி புகலிடமாக இருக்கலாம். உயிரோடிருக்கும் சுமார் 1,300 சீல்களையும் பாதுகாப்பதற்கு கடும் முயற்சிகள் எடுப்பது ஒருபுறமிருக்க, அவை “பிரச்சினைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன.”

1997-⁠ம் ஆண்டு இளவேனிற்காலம் முதற்கொண்டு, மேற்கு ஆப்பிரிக்காவின் மாரிடானிய கடற்கரையில் வாழும் 270 மத்தியதரைக் கடல் சீல்களில் சுமார் முக்கால் பாகம் கொள்ளை நோயால் பூண்டோடு அழிக்கப்பட்டன. சயன்ஸ் நியூஸ் பத்திரிகையில் வெளிவந்த அறிக்கையின்படி, பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான சீல்களுக்கு, “நாய்களுக்கு நோயை உண்டாக்கும் வைரஸ் போன்ற டால்ஃபின் மார்பிலி-வைரஸ்” தொற்றியிருந்தது.

[பக்கம் 12-ன் படங்கள்]

சீல்களுக்கு பல்ப்-ஷேப் தலை, பெரிய மூக்குத்துளைகள் போன்ற பல சிறப்பு அம்சங்கள் உண்டு

சீல்களைப் பாதுகாக்க பல நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன

[படத்திற்கான நன்றி]

Panos Dendrinos/HSSPMS

[பக்கம் 13-ன் படங்கள்]

வருடங்களாக வேகமாக குறைந்துகொண்டு வந்த இந்த சீல்களின் எண்ணிக்கை இப்போது வட ஸ்போரடீஸில் தேறிவருவதற்கு அறிகுறி காணப்படுகிறது

[படத்திற்கான நன்றி]

P. Dendrinos/MOm

D. Kanellos/MOm

[பக்கம் 13-ன் படம்]

ஹவாய் சீல்

[பக்கம் 13-ன் படத்திற்கான நன்றி]

Panos Dendrinos/HSSPMS