Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மனசுக்குப் பிடிக்காதவருடைய காதலை ஏற்க மறுப்பது எப்படி?

மனசுக்குப் பிடிக்காதவருடைய காதலை ஏற்க மறுப்பது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

மனசுக்குப் பிடிக்காதவருடைய காதலை ஏற்க மறுப்பது எப்படி?

“கொஞ்ச நாளுக்கு முன்னாடி, ஒரு பிரதர் என்னை காதலிக்கிறதா சொன்னாரு, ஆனா எனக்கு அவர்மேல விருப்பமே இல்ல. இருந்தாலும், அவர புண்படுத்தாம எனக்கு விருப்பமில்லைங்கிறத எப்படி சொல்றதுன்னு தெரியாம தவிச்சேன்.”​—⁠எலிசபெத். a

“உங்ககூட க்ளோஸா பழகி, உங்களப்பத்தி அதிகம் தெரிஞ்சிக்க ஆசைப்படறேன்!” என்று எந்த வாலிபனாவது உங்களிடம் எப்போதாவது சொன்னதுண்டா? அவ்வாறு சொல்லியிருந்தால், இளம் பெண்ணா b நீங்கள் சந்தோஷப்பட்டிருப்பீர்கள், பெருமைப்பட்டிருப்பீர்கள், சொல்லப்போனால் கிளர்ச்சியும் அடைந்திருப்பீர்கள்! ஆனால் அதேசமயம், அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் குழம்பியும் இருப்பீர்கள்.

ஒருவர் உங்களை காதலிப்பதாக சொன்னால், அப்போது உங்களுக்குள் பெரும் உணர்ச்சி போராட்டமே நடக்கும். அதிலும் நீங்கள் திருமண வயதில் இருந்து, ஏற்ற துணைக்காக காத்திருக்கையில் இதைக் கேட்டால் அந்தப் போராட்டம் அதிகமாகவே இருக்கும். c இருந்தாலும், இந்த சூழ்நிலையில் நீங்கள் சொல்லும் பதில், யார் அதை உங்களிடம் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்ததே. இதை உங்களிடம் சொன்ன நபர் மனரீதியில் முதிர்ச்சி வாய்ந்தவராக இருந்து, உங்களுக்கும் அவரை பிடித்திருந்தால் ‘ஆம்’ என்ற பதில் தயாராக இருக்கும். ஆனால், துணைவராக வருபவரிடம் நீங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் அவரிடம் இல்லை என தெரிந்தால் என்ன செய்வீர்கள்? அல்லது அவருக்கு எல்லா தகுதிகள் இருந்தும், உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால்?

நாம் சிந்திக்க வேண்டிய மற்றொரு சூழ்நிலையும் இருக்கிறது: ஒரு பெண் ஆணிடம் ஈர்க்கப்படுகிறாள்; கொஞ்ச காலம் நெருங்கி பழகிய பின்பு, அந்த நபருடன் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழ முடியாது என நினைத்தால் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலையை சமாளிக்க வழி தெரியாமல் குழம்பிப் போவதால், தன் உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்கிறாள். இப்போது “அவர் என்மீது கொண்டுள்ள காதலுக்கு எப்படி குட்பை சொல்வது?” என அவள் கேட்கலாம்.

விருப்பமில்லாதபோது

முற்பிதாக்கள் வாழ்ந்த காலத்தில் பெற்றோர் யாரைத் தேர்ந்தெடுத்தார்களோ அவர்களையே இளம் பெண்களும் ஆண்களும் மறுபேச்சின்றி திருமணம் செய்துகொண்டனர். (ஆதியாகமம் 24:2-4, 8) இன்றோ, மேற்கத்திய நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் தங்களுக்கு ஏற்ற மணத்துணையை தாங்களே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த திருமண விஷயத்தில் பைபிள் ஒரு நிபந்தனையைத்தான் விதிக்கிறது. ஒரு கிறிஸ்தவர் ‘கர்த்தருக்குட்பட்டவரை’ மாத்திரமே திருமணம் செய்ய வேண்டும் என்பதே அது.​—⁠1 கொரிந்தியர் 7:⁠39.

உங்களை காதலிப்பதாக சொன்ன அல்லது நீங்கள் காதல் உணர்வுடன் சிறிதுகாலம் நெருங்கி பழகிய உடன் வணக்கத்தாரை, அவர் யாராக இருந்தாலும் கட்டாயம் மணந்துகொள்ளத்தான் வேண்டுமா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு பைபிள் கதாபாத்திரம் அழகாக வெளிப்படுத்துகிறது. அவள் சூனேம் என்ற மத்திய கிழக்கிலிருந்த ஒரு கிராமத்துப் பெண். அவளிடம் மனதைப் பறிகொடுத்த சாலொமோன் ராஜா காதல்வயப்பட்டார். இருப்பினும், அவளை அடைவதற்கு அவர் முயன்றபோது, அவள் நிராகரித்தது மட்டுமல்லாமல், “காதலைத் தட்டி எழுப்பாதீர்; தானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்” என்று ராஜாவின் அரண்மனை பணிப்பெண்களிடம் கெஞ்சி கேட்டுக்கொண்டாள். (உன்னதப்பாட்டு 2:7, பொ.மொ.) உணர்ச்சிகளின் அடிப்படையில் திடீர் முடிவு எடுப்பதையும், அப்படி செய்ய மற்றவர்கள் தன்னை கட்டாயப்படுத்துவதையும் இந்த புத்திசாலி பெண் விரும்பவில்லை. அந்தப் பெண்ணுக்கு சாலொமோனிடம் காதல் பிறக்காததற்குக் காரணம், ஏற்கெனவே அவள் ஓர் எளிய மேய்ப்பனை காதலித்தாள்.

திருமணம் செய்துகொள்ள யோசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு இது அருமையான பாடம். அதாவது, காண்போரிடமெல்லாம் உங்களுக்கு காதல் பிறக்காது. ஒரு பெண் திருமணம் செய்யும் நோக்கத்தோடு கொஞ்சகாலம் பழகிய பின்பு அவளுக்கு ஒருவேளை அவரிடம் ஈடுபாடு இல்லாமல் போகலாம். அந்த நபருடைய சில பலவீனங்களே அதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது வெறுமனே அவரிடம் கவர்ந்திழுக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட உணர்ச்சிகளைத் தட்டிக்கழித்து விடுவது பைத்தியக்காரத்தனம். அவற்றை கண்டுகொள்ளாமல் விடுவது எந்தவிதத்திலும் அவற்றை மாற்றிவிடாது. d தாமாரா என்ற பெண் திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தில் ஒருவரோடு நெருங்கி பழகினாள். அவள் சொல்வதை கவனியுங்கள்: “அவரைப் பற்றி எனக்குள் எக்கச்சக்கமான சந்தேகங்கள். அதுவும் சின்ன சின்ன சாதாரண சந்தேகங்கள் அல்ல. அவருடன் சேர்ந்திருக்கையில் அவை பூதாகரமாக உருவெடுத்து பதட்டமடையச் செய்யும் அளவுக்கு பெரியவை.” தங்களுக்கிடையே நிலவிய இப்படிப்பட்ட சந்தேகங்களினிமித்தம், தங்கள் உறவை துண்டித்துக்கொள்வதே மிகச் சிறந்தது என முடிவு செய்தாள்.

விருப்பமில்லை என சொல்வது ஏன் சங்கடமானது

உங்களை விரும்பும் வாலிபனிடம், ‘எனக்கு விருப்பமில்லை’ என்று சொல்லிவிடுங்கள் என அறிவுரை கூறுவது சுலபம், ஆனால் அதை செய்வது கஷ்டம். கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்ட எலிசபெத்தைப் போலவே எங்கே அவருடைய மனதைப் புண்படுத்திவிடுவோமோ என நீங்களும் பயப்படலாம். மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதிக்க வேண்டும் என்பது உண்மைதான். கிறிஸ்தவர்கள் ‘உருக்கமான இரக்கத்தை . . . தரித்துக்கொண்டு,’ மற்றவர்கள் தங்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வாறே மற்றவர்களை நடத்தும்படி பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (கொலோசெயர் 3:12; மத்தேயு 7:12) அப்படியானால், உங்களை விரும்புகிறவரை புண்படுத்தக்கூடாது என்பதற்காக காதலிப்பதுபோல நடிக்க வேண்டுமா என்ன? எப்படியிருந்தாலும், அவரைப் பற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பது அவருக்கு ஒருநாள் நிச்சயம் தெரியவரும். அப்போது உண்மையான உங்கள் உணர்வுகளை வெளியே சொல்லாமல் மூடி மறைத்தது அல்லது நீங்கள் நேர்மையற்ற விதத்தில் நடந்துகொண்டது வேதனையை நிச்சயம் அதிகரிக்கும். அவரை புண்படுத்தக்கூடாது என்ற பரிதாப உணர்வால் அவரையே திருமணம் செய்துகொள்வது அதைவிட கொடுமையானது. பரிதாப உணர்வை அடித்தளமாக வைத்து உங்கள் குடும்ப வாழ்க்கையை கட்டினால் அது ஆட்டம்கண்டுவிடும்.

‘இவரைவிட்டால் வேறு யாரும் என்னை திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள்’ என்றும் நீங்கள் நினைக்கலாம். அந்த நினைப்பு உங்களை வாட்டி வதைக்கலாம். டீன் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரை சொன்னவிதமாக, “இவர் எனக்கு ‘ஏற்ற துணை’ இல்லை என்பது தெரியும், ஆனாலும் ‘இவரை விட்டால் வேறு யாரும் இல்லையே’; தனிமரமாய் வாழ்க்கையைக் கழிக்க எனக்கு விருப்பமில்லை” என்று ஒரு பெண் நினைக்கலாம். வாழ்க்கை துணைக்கான ஏக்கமோ பலமானது என்பது உண்மைதான். ஆனால், அந்த ஏக்கத்தை சரியான விதத்தில் தணிக்க வேண்டும். அதற்கு யாரையாவது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொள்வது நிச்சயம் உதவாது. மாறாக, நீங்கள் உண்மையாகவே அவரை நேசிக்க வேண்டும், அவரும் திருமணத்திற்குரிய வேதப்பூர்வ தகுதிகள் உடையவராய் இருக்க வேண்டும். (எபேசியர் 5:33) ஆகவே, துணையைத் தேர்ந்தெடுப்பதில் அவசர அவசரமாக முடிவுகளை எடுக்காதீர்கள்! அப்படி அரக்கப்பரக்க முடிவெடுத்த அநேகர் இப்போது வருத்தப்படுகின்றனர்.

தான் காதலிக்கும் நபரிடம் சில பெரும் குறைகள் இருப்பதை அறிந்தும் சிலர் காதலைத் தொடரலாம். அப்படிப்பட்ட பெண்கள், ‘இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தால், அவர் மாறிடுவார்’ என சொல்லலாம். இவ்வாறு சொல்வது சரியா? தவறான பழக்கங்களும், நடத்தைகளும் ஒருவரில் ஊறிப்போயிருந்தால் அவற்றை மாற்றிக்கொள்ள எதிர்பார்ப்பது நாய் வாலை நிமிர்த்துவதுபோல். ஒருவேளை நீங்கள் சொன்னவுடன் உங்களுக்காக அவற்றை மாற்றிக்கொள்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள், இந்த மாற்றம் நிரந்தரமானது என உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் கேரன் என்பவள் ஞானமாக செயல்பட்டாள். தனக்கும் தன் காதலனுக்கும் வித்தியாசப்பட்ட இலக்குகள் இருப்பதை உணர்ந்தவுடன் அவள் பிரிந்துவிட முடிவு செய்தாள். “விட்டு பிரியறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஏன்னா அவரைக் கண்டு அந்தளவுக்கு மயங்கிப் போயிருந்தேன். இருந்தாலும், நான் செய்யறதுதான் சரின்னு தோனிச்சு” என அவள் ஒப்புக்கொள்கிறாள்.

கவனம் தேவை

உங்களை விரும்பும் ஒருவரை தவிர்ப்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. கண்ணாடிப் பொருட்கள் அடங்கிய பெட்டியை கவனமாக கையாளுவதைப் போல் கவனமாக நடந்துகொள்வது அவசியம். அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் உங்களுக்கு உதவ இதோ சில ஆலோசனைகள்:

இதைக் குறித்து உங்கள் பெற்றோரிடம் அல்லது சபையிலுள்ள முதிர்ந்தவர்களிடம் பேசுங்கள். உங்கள் எதிர்பார்ப்புகள் ஒருவேளை நியாயமற்றவையா என்பதை புரிந்துகொள்ள உங்களுக்கு அவர்கள் உதவலாம்.

தெளிவாகவும் நேரடியாகவும் பேசுங்கள். அவரைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி அவரிடம் தெள்ளத்தெளிவாக விளக்குங்கள். பெரும்பாலும், “விருப்பமில்லை” என சொன்னாலே போதும், அவர் புரிந்துகொள்வார். தேவைப்பட்டால் கண்டிப்புடன் உங்கள் மறுப்பை தெரிவியுங்கள். “சாரி, எனக்கு உண்மையிலேயே விருப்பமில்லை, மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லலாம். நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க ஒரு குறிப்பு: விடாமல் தொடர்ந்து நச்சரித்தால் நீங்கள் மனம் மாறிவிடலாம் என்ற அபிப்பிராயத்திற்கு ஒருபோதும் இடம் கொடுக்காதீர்கள். அவரை நீங்கள் காதலிக்கவில்லை என்பதை தெளிவாக சொல்லிவிடுவது வீண் மனக்குழப்பத்தை தவிர்க்கும். ஏமாற்றத்தை சமாளிக்கவும் அவருக்கு உதவும்.

நேர்மையுடன் சாதுரியத்தை சேர்த்துக்கொள்ளுங்கள். “சிந்தனையற்ற பேச்சு வாள்போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்” என்கிறது நீதிமொழிகள் 12:18 (பொ.மொ.). நீங்கள் சுற்றிவளைக்காமல் நேரடியாக பேச வேண்டும் என்பது உண்மைதான், ஆனாலும் உங்கள் பேச்சு “கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக” என்கிறது பைபிள்.​—கொலோசெயர் 4:⁠6.

எடுத்த முடிவில் உறுதியாக இருங்கள். சில சமயங்களில் உங்கள் நலனில் அக்கறையுள்ள நண்பர்கள், அந்த முடிவை நீங்கள் எடுத்ததற்கான காரணத்தை முழுமையாக அறியாமல், முடிவை மாற்றிக்கொள்ளும்படி நச்சரிக்கலாம். ஆனால், நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கப் போவது நீங்களே, உங்கள் நண்பர்கள் அல்ல.

முடிவுக்கு ஏற்ப நடந்துகொள்ளுங்கள். துவக்கத்தில் நீங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்திருப்பீர்கள்; அதனால் இனி மீண்டும் நண்பர்களாகவே இருக்கலாம் என்று நீங்கள் நினைப்பது இயல்பே. ஆனால் உண்மை என்னவென்றால், இது நடைமுறைக்கு ஒத்துவராதது மட்டுமல்ல, இயலாததும்கூட. அந்த நபருக்கு உங்களிடம் இருந்த நட்பு காதலாக மலர்ந்திருக்கிறது. அவற்றையெல்லாம் மனதிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு அல்லது தட்டிக்கழித்துவிட்டு ஒன்றுமே நடக்காததுபோல நல்ல நண்பராக நடந்துகொள்வார் என்று நினைப்பது சரியா? ஒருவரையொருவர் பரிவுடன் நடத்துவது நல்லதுதான்; ஆனால் தொடர்ந்து ஃபோனில் பேசிக்கொண்டிருப்பது அல்லது பொது இடங்களில் ஒன்றாக சேர்ந்து நேரத்தை செலவிடுவது அவருடைய வேதனை எனும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதைப் போல் இருக்கும். இது, அவருடைய உணர்ச்சிகளுடன் விளையாடுவதற்கு சமம். அது கொஞ்சமும் சரியல்ல.

ஒருவருக்கொருவர் “மெய்யைப் பேச” வேண்டும் என அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களிடம் சொன்னார். (எபேசியர் 4:25) இதை செய்வது ஒருவேளை கஷ்டமாக இருக்கலாம், ஆனால் நீங்கள் இருவரும் சரியான வாழ்க்கை பாதையில் பயணத்தைத் தொடர இது உதவும்.

(g01 3/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இந்த கட்டுரை இளம் பெண்களுக்குச் சொல்வதுபோல் எழுதப்பட்டிருந்தாலும் இதிலுள்ள ஆலோசனைகள் வாலிபர்களுக்கும் பொருந்தும்.

c சிறு வயதிலேயே காதலிப்பதில் உட்பட்டுள்ள ஆபத்துகளைப் பற்றி பிப்ரவரி 8, 2001 இதழ் கலந்தாலோசித்தது.

d விழித்தெழு! ஜூலை 22, 1988, ஆங்கில இதழில் வெளிவந்த “இளைஞர் கேட்கும் கேள்விகள் . . . நாம் பிரிந்துபோக வேண்டுமா?” என்ற கட்டுரையை பார்க்கவும்.

[பக்கம் 17-ன் சிறு குறிப்பு]

காண்போரிடமெல்லாம் காதல் பிறக்காது

[பக்கம் 18-ன் படங்கள்]

உங்கள் எண்ணங்களை தெளிவாகவும் நேரடியாகவும் வெளிப்படுத்துங்கள்