Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் தலைமுடியை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்

உங்கள் தலைமுடியை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்

உங்கள் தலைமுடியை கொஞ்சம் உற்றுப் பாருங்கள்

“எல்லா காலத்திலும் எல்லா கலாச்சாரத்திலும் ஒருவரது தலைமுடி அவரைப் பற்றி ஓரளவு வெளிப்படுத்துகிறது” என்று சொல்கிறது ஒரு நூல். அப்படியானால், தலைமயிரை ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்க பலர் தனி கவனம் செலுத்துவதில் ஆச்சரியமே இல்லை.

தலைமுடி எவற்றாலானது, அதை எவ்வாறு பராமரிப்பது​—⁠இதைப் பற்றி அனுபவமிக்க நான்கு ‘ஹேர்-ஸ்டைலிஸ்ட்’களிடம் விழித்தெழு! பத்திரிகையாளர் பொதுவான சில கேள்விகளை போட்டார். கண்ணுக்குத் தெரியும் கருமுடிக்குப் பின்னால் மறைந்துள்ள பல விஷயங்களை இந்தப் பேட்டி வெளியே கொண்டுவந்தது.

தலைமுடி​—⁠வளர்ச்சியும் உதிர்வும்

கே:முடி எவற்றால் ஆனது ?

ப:முடியில் கெரட்டின் என்ற நார்ச்சத்துள்ள புரதம் உள்ளது. ஒவ்வொரு முடியும் மண்டைத் தோலிலுள்ள மயிர்மூட்டுப்பை (follicle) என அழைக்கப்படும் குழிவிலிருந்து வளர்கிறது. ஒவ்வொரு மயிர்மூட்டுப்பையின் அடியிலும் மயிர்க்குழாய் (papilla) உள்ளது. இதில் ஏராளமான இரத்த நாளங்கள் உள்ளன. இந்த மயிர்க்குழாய் உரோமச் செல்களை உருவாக்கி, அவற்றை மேல்நோக்கி உந்துகிறது. பின் அந்த செல்கள் ஒரு மயிராக கெட்டியாகிறது.

கே:முடியை கத்தரித்தால் வேகமாக வளரும் என பரவலாக நம்பப்படுகிறதே, இது உண்மையா?

ப:இல்லை. கிளைகளுக்கு அடிமரம் ஊட்டமளிப்பது போலவே தலைமுடிக்கும் உடல் ஊட்டமளிக்கிறது என சிலர் நினைக்கிறார்கள். ஆனால் மண்டைத் தோலைவிட்டு வெளியே முடி வளர்ந்து வந்தபின் அது உயிரற்ற பொருளாக இருக்கிறது. ஆகவே, முடியை கத்தரிப்பது அதன் வளர்ச்சியை முடுக்கிவிடுவதில்லை.

கே:முடி நரைப்பது ஏன்?

ப:முடியின் உள்ளடுக்கில் நிறமி செல்கள் உள்ளன. அவை முடிக்கு நிறத்தை அளிக்கின்றன. நிறமி செல்கள் இறந்துவிடுகையில் முடி நரைத்துவிடுகிறது. இது முதுமையில் ஏற்படும் சில மாற்றங்களில் ஒன்று. பரம்பரையின் காரணமாகவோ நோயின் காரணமாகவோ இளமையிலேயே நரை தட்டலாம். இருந்தாலும், ஒரே இரவில் முடி நரைத்துவிடும் என்பதெல்லாம் கட்டுக்கதை. மண்டைத் தோலின் கீழ்ப்பகுதியில் நிறமி செல்கள் காணப்படுகின்றன. ஆகவே, நரைமுடி வளர்ந்து (ஒரு மாதத்தில் சுமார் 1.25 சென்டிமீட்டர் வளர்ந்து) தலையில் தென்படுவதற்கு அதிக நாட்கள் தேவைப்படுகிறது.

கே:முடி உதிர்வதற்கு காரணங்கள் என்ன?

ப:முடி உதிர்தல் என்பது முடியினுடைய இயற்கை சுழற்சியின் பாகமே. தினம்தினம் ஒவ்வொருவரும் சராசரியாக 50 முதல் 80 முடிகளை இழப்பதாக மதிப்பிடப்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பரம்பரை காரணமாக வழுக்கை விழுகிறது. ஹார்மோன்கள் சமநிலையற்றிருப்பது முடி தொடர்ச்சியாக உதிர்வதற்குக் காரணமாக தோன்றுகிறது. அசாதாரணமாக முடி உதிர்வது அலபீஷியா என அழைக்கப்படுகிறது. a

கே:முடியைப் பார்த்து ஒருவருடைய ஆரோக்கியத்தை தெரிந்துகொள்ளலாம் என சிலர் சொல்கிறார்களே, நீங்கள் இதை கவனித்திருக்கிறீர்களா?

ப:சரிதான், மண்டைத் தோலுக்குக் கீழே, இரத்தம் முடிக்கு ஊட்டமளிக்கிறது. ஆகவே, முடி நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது என்றால் அதிகளவு இரத்தம் சப்ளை செய்யப்படுகிறது என்றே அர்த்தம். இருந்தாலும், ஒருவர் சரியாக சாப்பிடவில்லையெனில் அல்லது மிதமீறி மதுபானங்களை அருந்துகிறார் என்றால், அவருடைய முடி வலுவற்று முறிந்துவிடலாம். ஏனென்றால் அவருடைய முடிக்கு இரத்தம் சரியாக ஊட்டமளிக்க முடியாது. முடி உதிர்வது அல்லது வலுவிழந்துவிடுவது நோய்க்கு அல்லது கர்ப்பந்தரிப்பதற்கு ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

உங்களுடைய மண்டைத் தோலையும் மயிரையும் ஆரோக்கியமாக வைத்தல்

கே:தலைக்கு ஷாம்பூ போடுவது எப்படி என்பதை விளக்குங்கள்.

ப:மண்டைத் தோல் வறண்டுவிடும் பிரச்சினையுள்ள பெரும்பாலோனோர் தலைக்கு அடிக்கடி ஷாம்பூ போடுவது தெரிய வந்துள்ளது. முடியிலுள்ள எண்ணெய் பசை காரணமாக அதில் அழுக்கு ஒட்டி, தோலில் அழுக்கு சேர்ந்து மயிர்மூட்டுப்பைக்குச் செல்லும் எண்ணெய் நாளங்களை அடைத்து விடுகிறது. ஆகவே, தவறாமல் ஷாம்பூ போடுவது தேவைதான். இருந்தாலும் இதே இயற்கையான எண்ணெய்கள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவிலிருந்தும் போதுமான ஈரப்பதம் தடைப்படுவதிலிருந்தும் உங்கள் சருமத்தை பாதுகாக்கவும் செய்கின்றன. ஆகவே, அடிக்கடி ஷாம்பூ போட்டால் மண்டைத் தோலிலுள்ள இந்தப் பாதுகாக்கும் அடுக்கு பாதிக்கப்பட்டு, மண்டைத் தோல் வறண்டுவிடுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகலாம். ஒருவருடைய தலை அல்லது முடி அழுக்கடையும்போதே ஷாம்பூ போடும்படி தலைமுடியை பராமரிப்பதைப் பற்றி நன்கு அறிந்த பலர் சிபாரிசு செய்கிறார்கள். அதிக எண்ணெய் பசையுடைய முடியை உடையவர்கள், சாதாரண அல்லது வறண்ட முடியை உடையவர்களைவிட அதிக முறை ஷாம்பூ போட வேண்டும்.

ஷாம்பூ போடும்போது தலையை மஸாஜ் செய்யுங்கள். இது மண்டைத் தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி உங்கள் முடிக்கு சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது. முடியை நன்றாக அலச வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! உங்கள் கைகளுக்கு சோப்பு தேய்த்துவிட்டு, பின் சரிவர கழுவவில்லையென்றால், உங்களுடைய தோல் வறண்டு வெடிப்புகள் வரும். அதுபோலத்தான் ஷாம்பூ போட்டபின் தலையை சரியாக கழுவவில்லையென்றால் மண்டைத் தோலும் வறண்டு போகலாம்.

கே:மண்டைத் தோல் வறண்டுவிடும் பிரச்சினையை சரிசெய்வது எப்படி?

ப:நிறைய தண்ணீர் குடியுங்கள்; ஊட்டச்சத்துள்ள உணவை உண்ணுங்கள். இது உங்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை உண்டாக்கி இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. மென்மையான ஷாம்பூவை பயன்படுத்தி உங்கள் தலையை தவறாமல் மஸாஜ் செய்து வாருங்கள். மண்டைத் தோல் வறண்டுவிடாமல் இருப்பதற்காக, தலைமுடியை எவ்வளவுதான் நன்கு அலசினாலும் போகாத கண்டிஷனர்களையும் லோஷன்களையும் சிலர் பயன்படுத்துகிறார்கள்.

சிகை அலங்காரம்

கே:ஹேர்-ஸ்டைலிஸ்டிடம் செல்கையில் ஒருவர் எதை மனதில் வைத்திருக்க வேண்டும்?

ப:உங்களுடைய சிகை அலங்காரத்தை மாற்ற விரும்பினால், நீங்கள் விரும்பும் அலங்காரத்தின் படத்தை அல்லது விரும்பாத அலங்காரத்தின் படத்தைக் கொண்டு செல்லுங்கள். உங்களுடைய விருப்பங்களையும், முடியைப் பராமரிப்பதற்கு ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்பதையும் மனம்திறந்து சொல்லுங்கள். ஏனென்றால் சில சிகை அலங்காரங்களுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படலாம். சாதாரணமாக இரண்டு அல்லது மூன்று முறை ஹேர்-ஸ்டைலிஸ்டிடம் சென்றால்தான் உங்களுடைய முடியைப் பற்றி அவர் நன்கு அறிந்து கொள்ளவும் உங்களுடன் நல்ல பேச்சுத் தொடர்பு வைத்துக்கொள்ளவும் முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, தயவுசெய்து சலிப்படைந்து உடனடியாக வேறு ‘ஹேர்-ஸ்டைலிஸ்டிடம்’ சென்றுவிடாதீர்கள்.

உங்கள் தலைமுடி வெளிப்படுத்துவது என்ன

தலைமுடியை பராமரிப்பதும், அலங்கரிப்பதும் ஒருவரை பற்றி மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறது. பேஷன், மத நம்பிக்கை, சமுதாய மற்றும் அரசாங்க கருத்துக்களுக்கு ஏற்ப முடியை கத்தரிக்கிறார்கள், வளர்க்கிறார்கள், சுருட்டையாக்குகிறார்கள், நேராக்குகிறார்கள், சாயமடிக்கிறார்கள். உங்கள் முடியை கொஞ்சம் உற்றுப் பாருங்கள். அது உங்களைப் பற்றி என்ன சொல்கிறது? அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆரோக்கியமான முடி உங்களுக்கும் அழகூட்டும், பார்ப்பவர்களும் ரசிப்பார்கள்.

(g01 4/8)

[அடிக்குறிப்பு]

a கூடுதலான தகவலுக்கு ஏப்ரல் 22, 1991, விழித்தெழு! (ஆங்கிலம்) பத்திரிகையில் “அலபீஷியா​—⁠முடி உதிர்வதால் ஏற்படும் அவலம்” என்ற கட்டுரையைக் காண்க.

[பக்கம் 20-ன் படங்கள்]

சத்துள்ள உணவை உண்பதும் நிறைய தண்ணீர் குடிப்பதும் வறண்ட தலையை சரிசெய்ய உதவலாம்

[பக்கம் 20-ன் படம்]

நரைமுடி முதுமைக்கு அடையாளம்

[பக்கம் 20-ன் படம்]

அடிக்கடி ஷாம்பூ போடுவது உங்கள் தலையிலுள்ள பாதுகாக்கும் எண்ணெய்களை நீக்கிவிடுகிறது