Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

தென் ஆப்பிரிக்காவில் இரத்தமில்லா சிகிச்சை

“எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருவதால் தென் ஆப்பிரிக்காவிலுள்ள மிகப் பெரிய தனியார் மருத்துவமனை தொகுதி ஒன்று ‘இரத்தமில்லா மருத்துவமும் அறுவை சிகிச்சையுமே’ சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளது” என தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் த மெர்குரி அறிவிக்கிறது. “இரத்தம் உபயோகிக்காமலேயே நோயாளிகளுக்கு மருத்துவ உதவியும், அறுவை சிகிச்சையும் செய்ய மருத்துவர்களை தூண்டுவதே எங்கள் நோக்கம்” என இத்திட்டத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஃப்ராயீங் கிரேமர் கூறினார். தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஏறக்குறைய 800 டாக்டர்கள் தனிப்பட்ட வகையில் இரத்தமில்லாமல் சிகிச்சையளிக்க ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருக்கின்றனர். என்றபோதிலும், இதை தேசிய ஒருங்கிணைப்பு திட்டமாக செயல்படுத்த ஒரு மருத்துவமனை தொகுதி தீர்மானித்திருப்பது இதுவே முதல் தடவை. பெரும் எண்ணிக்கையான டாக்டர்கள் இதை “சந்தோஷமாக வரவேற்றனர்” என டாக்டர் கிரேமர் கூறினார். “இரத்தம் ஏற்றிக்கொள்ள மறுக்கும் யெகோவாவின் சாட்சிகள் போன்ற மத பிரிவினரின் கோரிக்கைகள் காரணமாகவே இரத்தமில்லா சிகிச்சையில் பல்வேறு திறம்பட்ட முறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன” என த மெர்குரி கூறுகிறது.

(g01 4/8)

துத்தநாகம் ஜலதோஷத்தை குறைக்குமா?

துத்தநாகம் ஜலதோஷத்தைக் குறைக்க உதவுமா என பல வருடங்களாக ஆராய்ச்சியாளர்கள் விவாதித்து வந்திருக்கின்றனர். “ஜலதோஷம் ஆரம்பிக்கும் சமயத்தில், சில மணிநேர இடைவேளை விட்டுவிட்டு [துத்தநாக] மிட்டாய் மாத்திரைகளை சாப்பிடுவது ஜலதோஷத்தால் கஷ்டப்படும் காலப்பகுதியை ஏறக்குறைய பாதியாக குறைத்துவிடுகிறது” என சமீபத்திய ஓர் ஆராய்ச்சி கண்டுபிடித்ததாக சையன்ஸ் நியூஸ் அறிக்கையிடுகிறது. இரண்டு, மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை என நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு துத்தநாக மிட்டாய் மாத்திரைகளை சாப்பிட்டவர்கள், பொய் மாத்திரைகளை சாப்பிட்டவர்களைவிட “இருமலும் சளி வடிவதும் குறைவாக இருந்ததாய் கூறினர்” என்றும் அது அறிக்கை செய்கிறது. ஆனால் துத்தநாகம் சாப்பிட்ட சிலருக்கு மலச்சிக்கல், வாய் காய்ந்துபோதல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் அந்த பத்திரிகை அறிக்கையிடுகிறது.

(g01 4/22)

சீக்கிரத்தில் சிகரெட்டுக்கு அடிமை

“முதல் சிகரெட்டை கையிலெடுத்த சில நாட்களுக்குள்” சிலர் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள் என அசோஸியேட்டட் பிரஸ் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதற்கான அறிகுறிகள் சிலரில் தெளிவாக தெரிவதை மாஸசூஸெட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர் என்றும் அது கூறுகிறது. இந்த ஆராய்ச்சியின்போது 12 முதல் 13 வயது நிரம்பிய 681 சிறுசுகளின் புகைக்கும் பழக்கத்தை ஒரு வருடகாலமாக கவனித்து வந்தனர். அடிமையாவதை சுட்டிக்காட்டும் அறிகுறிகளையும் குறித்து வைத்தனர். “அநேகர் வெகு சீக்கிரத்தில் அடிமையாகிவிடுகின்றனரோ என்ற சந்தேகம் பல காலமாக இருந்து வந்திருக்கிறது. அது உண்மைதான் என்பதை நிரூபிக்கும் முதல் உறுதியான அத்தாட்சி இதுவே” என டாக்டர் ரிச்சர்ட் ஹர்ட் கூறுகிறார். “விளையாட்டிற்காக சிகரெட் புகைப்பதோ கொஞ்ச நாள் புகைத்துப் பார்த்துவிட்டு, பிறகு நிறுத்திவிடலாம் என நினைப்பதோ ஆபத்தானது என நாம் இளைஞர்களை எச்சரிக்க வேண்டும். இதுவே இந்த ஆராய்ச்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் மிக முக்கிய பாடம்” என இந்த ஆராய்ச்சி குழுவின் இயக்குநரான டாக்டர் ஜோசஃப் டீஃபிரான்சா கூறுகிறார்.

(g01 4/22)

பாதிரிகள் இறக்குமதி

வளர்ந்த நாடுகளில் பாதிரிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கவலையடைந்த கத்தோலிக்க சர்ச், இதை சமாளிக்க பாதிரிகளை இறக்குமதி செய்வதாக இத்தாலிய பத்திரிகை லெஸ்பிரஸ்ஸோ சொல்கிறது. “இத்தாலி, ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற இடங்களிலுள்ள இறையியல் கல்லூரிகளிலிருந்து பாதிரிகளாக பட்டம் பெற்று வெளியே வருபவர்களே கிடையாது, காலியாக கிடக்கும் பாதிரிகளின் இடங்களை நிரப்ப முடியாமல் திருமண்டலங்கள் திணறுகின்றன” என அந்தப் பத்திரிகை சொல்கிறது. பாதிரி இல்லாமல் கிடக்கும் சர்ச்சுகளை கவனிக்க பிரேஸில், இந்தியா, பிலிப்பீன்ஸிலிருந்து பாதிரிகள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். “இது ஆரம்பம்தான் என்றாலும் சர்ச்சின் தன்மையே முழுமையாக மாறிவருகிறது. . . . இத்தாலியில் தற்போது, பிஷப்ஸ் காண்ஃபெரென்ஸின் சம்பள பட்டியலில் ஐரோப்பிய சமுதாயத்தை சேராத 1,131 பாதிரிகள் உள்ளனர். அதாவது, மொத்த எண்ணிக்கையில் 3 சதவிகிதம்” என்கிறது லெஸ்பிரஸ்ஸோ. இவ்வாறு இத்தாலி ‘மிஷனரிகள் ஸ்தலமாக’ மாறி வருகிறது என்றும் அது கூறுகிறது.

(g01 4/22)

பலவண்ண பக்தர்கள்

ஜப்பானிலுள்ள பழைய புத்த மடாலயம் ஒன்றில் பக்தர் கூட்டத்தோடு போட்டி போட்டுக்கொண்டு மற்றொரு கூட்டமும் வருகிறது. 1955-⁠ல் அந்த ஆலயத்தை புதுப்பித்த சமயத்திலிருந்தே ஏராளமான மரங்கொத்திகள் அங்கு வந்து குவிகின்றன. அவை ஆலயத்தில் ஏற்படுத்தியுள்ள சிறிய துளைகள் “அவ்வளவு ஏராளமாக இருப்பதால் அவை, சூரிய வெளிச்சம் உள்ளே வருவதற்காக செய்யப்பட்ட ஆலய வடிவமைப்பின் பாகம் என்றே சுற்றுலா பயணிகளில் சிலர் நினைக்கின்றனர்” என்கிறது ஆஷாஹி ஈவ்னிங் நியூஸ். அவற்றை ஆலயத்திலிருந்து விரட்டியடிக்க செய்யப்பட்ட எந்த முயற்சியும் இதுவரை பலனளிக்கவில்லை என அதன் தலைமை குரு கவலைப்படுகிறார். யாமனாஷி பகுதியிலுள்ள டைசென்ஷி ஆலயத்தின் மைய மண்டபம் 1286-⁠ல் கட்டப்பட்டது. இது ஒரு தேசிய சொத்து என அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

(g01 4/22)