Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மாநகரங்கள் சீர்குலைய காரணம்?

மாநகரங்கள் சீர்குலைய காரணம்?

மாநகரங்கள்—சீர்குலைய காரணம்?

‘நாம் பூமியின் மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டுவோம் . . . வாருங்கள்.’​—⁠ஆதியாகமம் 11:⁠4.

பாபேல் மகா நகரம் கட்டப்படுகையில், 4,000-⁠த்திற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

பாபிலோன் என பின்னர் அழைக்கப்பட்ட பாபேல், மெசொபொத்தேமியாவில் ஒரு சமயம் பசுமையான சமவெளியாயிருந்த சிநெயாரில் அமைந்திருந்தது. இதுவே பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் நகரம் என அநேகர் நினைப்பது தவறு. ஏனெனில், நோவாவின் நாளில் ஏற்பட்ட ஜலப்பிரளயத்திற்கு முன்பே நகரங்கள் கட்டப்பட்டன. கொலைகாரனான காயீனே முதல் நகரத்தை கட்டியதாக பதிவு கூறுகிறது. (ஆதியாகமம் 4:17) ஏனோக்கு என அழைக்கப்பட்ட அந்த நகரம், பாதுகாப்பான ஒரு குடியிருப்பாக அல்லது கிராமமாகத்தான் இருந்திருக்கும். மறுபட்சத்தில், பாபேல் ஒரு மாபெரும் நகரமாகும்; பொய் வணக்கத்தின் முக்கிய மையமான அதில் பிரமாண்டமான மத கோபுரம் ஒன்றும் இருந்தது. ஆனால், பாபேலும் அதன் அருவருப்பான கோபுரமும் முழுக்க முழுக்க கடவுளை எதிர்க்கும் சின்னங்களாக இருந்தன. (ஆதியாகமம் 9:7) எனவே, கடவுள் தலையிட்டு அதைக் கட்டியவர்களின் மொழிகளை தாறுமாறாக்கினார் என பைபிள் கூறுகிறது. அதன் விளைவாக, பேராசைமிக்க அவர்களுடைய மத திட்டம் படுதோல்வியடைந்தது. பிறகு கடவுள், “அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்” என ஆதியாகமம் 11:5-9 கூறுகிறது.

அவர்கள் சென்ற இடங்களில் எல்லாம் நகரங்களை உருவாக்கினர் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில், நகரங்களில் வாழ்வது எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பு அளித்தது. விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை சேமித்து, விநியோகம் செய்வதற்கு ஏற்ற இடங்களாகவும் அவை சேவித்தன. சந்தை புழக்கத்திற்கு வந்த பிறகு விவசாயம் மட்டுமல்லாமல் மற்ற தொழில்களிலும் நகரவாசிகள் ஈடுபட்டனர். மாநகரங்களின் வளர்ச்சி என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “நகரவாசிகள் இனியும் கைக்கும் வாய்க்குமாக வாழாத காரணத்தால் இன்னும் பல விசேஷித்த தொழில்கள் செய்ய அவர்களுக்கு நேரம் கிடைத்தது; கூடை பின்னுதல், பானை செய்தல், நூல் நூற்றல், நெய்தல், தோல் பொருட்கள் செய்தல், தச்சு வேலை, கொத்து வேலை என மார்கெட்டில் பிரபலமாயிருந்த பல்வேறு தொழில்களில் ஈடுபட்டனர்.”

இப்படிப்பட்ட பொருட்களை திறம்பட விநியோகிப்பதற்கு தகுந்த இடங்களாகவும் மாநகரங்கள் திகழ்ந்தன. உதாரணமாக, எகிப்தில் பயங்கர பஞ்சம் ஏற்பட்டபோது என்ன நிகழ்ந்ததென பைபிள் கூறுவதை கவனியுங்கள். அப்போது மக்களை மாநகரங்களில் குடி வைப்பதே சாலச்சிறந்தது என அதன் பிரதம மந்திரி யோசேப்பு முடிவு செய்தார். ஏன்? மீதமிருந்த உணவு பொருட்களை மிகச் சிறந்த முறையில் விநியோகிக்க வழி அதுவே என அவர் நினைத்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை.​—⁠ஆதியாகமம் 47:⁠21.

மேலும், போக்குவரத்து வசதி போதுமானளவு இல்லாமலும், துரிதமாக செயல்படாமலும் இருந்த சமயத்தில் மக்கள் மத்தியில் நல்ல தொடர்பும் பரிமாற்றமும் நிலவுவதற்கும் மாநகரங்கள் உதவின. இதனால் சமூக, கலாச்சார மாற்றங்களின் வேகமும் அதிகரித்தது. மாநகரங்கள் கண்டுபிடிப்புகளின் மையங்களாயின, தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவித்தன. புதிய கருத்துகள் ஊற்றெடுக்க ஆரம்பித்ததால் விஞ்ஞான, மத, தத்துவ சிந்தனைகளில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

நிறைவேறா கனவுகள்

அந்த நன்மைகளில் பலவற்றை நவீனகால மாநகரங்களிலும் அனுபவிக்க முடிகிறது. இதன் காரணமாகவே இன்றும் கோடிக்கணக்கானோர் மாநகரங்களில் வந்து குவிகின்றனர். அதிலும், கிராமப்புற வாழ்க்கை தாங்க முடியாதளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கும் தேசங்களில் அது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. ஆனால், வளமான வாழ்வைப் பற்றிய சுகமான கனவுகளைச் சுமந்துகொண்டு மாநகரங்களுக்கு வருகிறவர்களில் அநேகருடைய கனவு நனவாவதில்லை. வைட்டல் சைன்ஸ் 1998 என்ற புத்தகம் கூறுவதாவது: “வளரும் நாடுகளிலுள்ள அநேக நகரங்களில் இன்று வாழ்க்கை தரம், கிராமப்புறங்களில் இருப்பதைவிட மிகவும் மோசமாக உள்ளது என பாப்புலேஷன் கவுன்ஸிலின் சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது.” இதற்குக் காரணம் என்ன?

நகர சூழலில் மனித அம்சம் என்ற ஆங்கில புத்தகத்தில் ஹென்றி ஜீ. சிஸ்னேராஸ் பின்வருமாறு எழுதுகிறார்: “ஒரே இடத்தில் அநேக ஏழைகள் வந்து குவியும்போது அவர்களுடைய பிரச்சினைகளும் அதிவேகமாக விஸ்வரூபமெடுக்கின்றன . . . ஏழை மக்கள், அதிலும் சிறுபான்மை தொகுதியினர் ஒரே இடத்தில் கூடி வாழ்வது அதிகரிக்கையில், வேலையில்லா திண்டாட்டம், சமூகநல திட்டங்களையே அதிகம் சார்ந்திருத்தல், மட்டுக்குமீறிய பொதுநல பிரச்சினைகள், அதிர்ச்சியூட்டும் குற்றச்செயல்கள் போன்றவையும் அவர்களோடு சேர்ந்து அதிகரிக்கும்.” மெகா நகர வளர்ச்சியும் எதிர்காலமும் என்ற ஆங்கில புத்தகமும் இதையேதான் சொல்கிறது: “பெரும் எண்ணிக்கையான ஜனங்கள் அலைகடலென வந்துசேர்வதால் வேலையில்லா திண்டாட்டமும், வேலை பற்றாக்குறையும்தான் அதிகளவில் ஏற்படும். ஏனெனில், வேலை தேடுபவர்களின் எண்ணிக்கையோ மிக அதிகம், கிடைக்கும் வேலைகளோ மிகக் குறைவு.”

வளரும் நாடுகளின் மாநகரங்களை பயங்கரமான ஏழ்மை வாட்டி வதைக்கிறது. தெருவோர பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது இதற்கு நெஞ்சை பிளக்கும் அத்தாட்சியளிக்கிறது. உலகமுழுவதிலும் ஏறக்குறைய மூன்று கோடி தெருவோர பிள்ளைகள் இருப்பதாக சிலர் கணிக்கின்றனர்! மெகா நகர வளர்ச்சியும் எதிர்காலமும் புத்தகம் கூறுவதாவது: “ஏழ்மையும் மற்ற பிரச்சினைகளும் குடும்ப உறவுகளை முறித்துப்போடுவதால் தெருவோர பிள்ளைகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.” ஆகவே, குப்பை பொறுக்குவது, பிச்சை எடுப்பது அல்லது மார்கெட்டுகளில் கீழ்த்தரமான வேலை செய்வது போன்ற மிக மோசமான நிலைமையில் அவர்கள் காலத்தைக் கழிக்கின்றனர்.

கோரமான மற்ற உண்மைகள்

ஏழ்மை குற்றச்செயலுக்கு வழிநடத்தலாம். உதாரணமாக, தென் அமெரிக்காவிலுள்ள ஒரு மாநகரம் அதன் நவீன கட்டட கலைக்கு பெயர் பெற்றது. ஆனால் அங்கு குற்றச்செயல் மலிந்துவிட்டதால் நகரமெங்கும் இரும்புக் கம்பிகள் முளைத்து வருகின்றன. தங்கள் சொத்துக்களையும் தங்களையும் பாதுகாப்பதற்காக ஏழை முதல் செல்வந்தர் வரை எல்லாருமே இரும்பு வேலிகளை அமைத்து வருகின்றனர். அதனால், அனைவரும் கூண்டுகளில் வாழ்கின்றனர் என்றே சொல்லலாம். சிலர் வீடு கட்டுவதற்கு முன்பாகவே இரும்பு வேலிகளை போட்டுவிடுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜனத்தொகை அதிகரிப்பின் காரணமாக தண்ணீர், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளைக்கூட நகரவாசிகளுக்கு அளிக்க முடியாமல் போகிறது. உதாரணமாக, ஆசியாவிலுள்ள ஒரு மாநகரில் 5,00,000 பொது கழிப்பறைகள் தேவை என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு 200 மட்டுமே நல்ல நிலையில் இருப்பதாக ஒரு சமீபத்திய சர்வே காட்டுகிறது!

ஜனத்தொகை வெடிப்பால் சுற்றுச்சூழல் பாழாவதையும் நாம் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. மாநகர எல்லைகள் விரிவடைகையில் சுற்றுவட்டாரத்திலுள்ள விளைநிலங்கள் காணாமல் போகின்றன. ஐ.நா. கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பின் முன்னாள் தலைமை இயக்குநர் ஃபெடரிகோ மேயர் கூறுகிறார்: “மாநகரங்கள் ஏராளமான சக்தியை உபயோகிக்கின்றன, தண்ணீர் சப்ளைகளை காலி செய்கின்றன, உணவுப்பொருட்களை கபளீகரம் செய்கின்றன. . . . தேவையானவற்றை கொடுக்கவும் முடியாமல், கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்தவும் முடியாமல் போவதால் அவற்றின் சுற்றுச்சூழல் நாசமாகிறது.”

மேற்கத்திய நாடுகளில் மாநகர பிரச்சினைகள்

மேற்கத்திய நாடுகளில் பிரச்சினை இந்தளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, அமெரிக்க மாநகரங்களின் நெருக்கடி என்ற ஆங்கில புத்தகம் கூறுகிறது: “இன்று அமெரிக்க மாநகரங்களில் விவரிக்க முடியாதளவு வன்முறை பெருகிவிட்டது. . . . அமெரிக்க மாநகரங்களில் வன்முறை வெகுவாக மலிந்துவிட்டதால் அதை நம் நாளின் மிக முக்கிய பொதுநல பிரச்சினைகளில் ஒன்றாக கருதி மருத்துவ இதழ்களும்கூட அதற்கு அதிக கவனம் செலுத்துகின்றன.” அங்கு மட்டுமல்ல, உலகின் அநேக மாநகரங்களிலும் வன்முறை மலிந்து கிடப்பது உண்மையே.

நகரத்தின் வாழ்க்கை தரம் சீர்கெட்டு வருவதாலேயே நகரத்திற்குள் தொழிலமைக்க அநேகர் விரும்புவதில்லை. நகர சூழலில் மனித அம்சம் புத்தகம் கூறுகிறது: “தொழில் நிர்வாகிகள் தங்கள் ஆலைகளை மூடிவிட்டு புறநகர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம் மாறி சென்றுவிட்டனர். அவ்வாறு செல்கையில் ‘பாழான நிலத்தையே’ விட்டுச்செல்கின்றனர். அந்த நிலங்களில் காலியான கட்டடங்களும், விஷத்தன்மை மிக்க கழிவுகளும் இருப்பதால் அவை குடியிருப்பிற்கு சற்றும் உதவாதவை ஆகிவிடுகின்றன.” இதன் காரணமாக, அநேக நகரங்களில் ஏழைகளே இப்படிப்பட்ட இடங்களில் வாழும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். அங்கே, “சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அசட்டை செய்யப்படுகின்றன. கழிவுநீக்க அமைப்பு சரியாக செயல்படுவதில்லை, தண்ணீர் சரிவர சுத்திகரிக்கப்படுவதில்லை, நிலத்திலுள்ள குப்பைக்கூளங்கள் நீக்கப்படாமல் இருப்பதால் அதில் குடியிருக்கும் புழு பூச்சிகள் வீடுகளிலும் புகுந்துவிடுகின்றன, பாழாகிவரும் வீடுகளின் சுவர்களிலிருந்து உதிரும் காரீய பெயின்டை குழந்தைகள் தின்னுகின்றன . . . அவற்றைப் பற்றி யாருமே கவலைப்படுவதாக தெரியவில்லை.” இப்படிப்பட்ட சூழலில் வன்முறை, குற்றச்செயல், மனக்கசப்பு போன்றவை தழைக்கின்றன.

அதுமட்டுமா, அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் மேற்கத்திய மாநகரங்கள் திணறுகின்றன. உதாரணமாக, 1981-லேயே பாட் சோட்டே, சூசன் வால்டர் ஆகியோர் அழிந்துவரும் அமெரிக்கா​—⁠நலிந்துவரும் உள்கட்டமைப்பு என்ற கவனத்தைக் கவரும் தலைப்பில் ஒரு புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதினர். அதில், “அமெரிக்காவின் பொதுநல வசதிகள் சரிசெய்யப்படுவதைவிட வேகமாக சீர்கெட்டு வருகின்றன” என்று கூறினர். பெரும் நகரங்களில் காணப்படும் ஏராளமான துருப்பிடித்துவரும் பாலங்கள், குண்டும் குழியுமாகிவரும் சாலைகள், உடைந்துபோய் கொண்டிருக்கும் கழிவுநீக்க அமைப்புகள் ஆகியவற்றைக் குறித்தும் அதன் ஆசிரியர்கள் அதிக வேதனைப்பட்டனர்.

இருபது வருடங்கள் கழித்தும், நியூ யார்க் போன்ற மாநகரங்கள் நலிந்துவரும் உள்கட்டமைப்பால் பாதிக்கப்படுகின்றன. நியூ யார்க் மேகஸீன்-⁠ல் வந்த ஒரு கட்டுரை மாபெரும் மூன்றாவது தண்ணீர் சுரங்க திட்டத்தை விவரித்தது. சுமார் 30 வருடங்களாக நடைபெற்று வரும் இந்தப் பணியை மேற்கத்திய உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டம் என அது குறிப்பிட்டது. இத்திட்டத்தின் மொத்த செலவு சுமார் 500 கோடி டாலர் ஆகும். இது முடிக்கப்பட்டதும் நியூ யார்க் மாநகருக்கு ஒரு நாளைக்கு சுமார் 380 கோடி லிட்டர் சுத்தமான தண்ணீரை வழங்கும். “இவ்வளவு பிரமாண்டமான தோண்டுதல் பணியாக இருக்கிறபோதிலும் சுரங்கம் தற்போது இருக்கும் பைப்புகளை பழுதுபார்க்க உதவும் ஏற்பாடு மட்டுமே. அந்த பைப்புகள் இச்சகாப்தத்தின் ஆரம்பத்தில் போடப்பட்ட பிறகு இப்போதுதான் முதன்முறையாக அவற்றை ரிப்பேர் செய்ய போகின்றனர்” என அதன் எழுத்தாளர் கூறுகிறார். அந்த மாநகரில் நாசமாகிவரும் மற்ற கட்டமைப்புகளான சுரங்கப்பாதைகள், மெயின் தண்ணீர் குழாய்கள், சாலைகள், பாலங்கள் ஆகியவற்றை ரிப்பேர் செய்ய 9,000 கோடி டாலர் செலவாகும் என நியூ யார்க் டைம்ஸ்-⁠ல் வந்த ஒரு கட்டுரை மதிப்பிடுகிறது.

அத்தியாவசிய தேவைகளை அளிக்க முடியாமல் திண்டாடுவது நியூ யார்க் மாநகரம் மட்டுமே அல்ல. பல்வேறு காரணங்கள் நிமித்தமாக மற்ற அநேக மாநகரங்களும் இவ்வாறே சீர்குலைவை நோக்கி செல்கின்றன. உதாரணமாக, பிப்ரவரி 1998-⁠ல் நியூஜீலாந்திலுள்ள ஆக்லாண்ட், மின் வெட்டின் காரணமாக இரண்டு வாரத்திற்கும் அதிகமாக இருட்டில் மூழ்கியிருந்தது. அதைப் போலவே, ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரவாசிகள் 13 நாட்களுக்கு வெந்நீர் இல்லாமல் தவித்தனர். கேஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தின் காரணமாக அனைத்து கேஸ் இணைப்புகளும் அடைக்கப்பட்டுவிட்டதால் இந்நிலை ஏற்பட்டது.

எல்லா மாநகரங்களுக்கும் பொதுவாக உள்ள மற்றொரு பிரச்சினை, போக்குவரத்து நெரிசல். கட்டடக் கலைஞர் மோஷா சாஃப்டீ கூறுகிறார்: “மாநகரங்களின் பரப்பளவிற்கும் அவற்றின் போக்குவரத்து வசதிகளுக்கும் இடையே அடிப்படையில் ஒரு முரண்பாடு நிலவுகிறது. . . . பழைய நகரங்கள் கட்டப்பட்ட சமயத்தில் கற்பனைக்கூட செய்து பார்த்திராதளவு போக்குவரத்தை இன்று சமாளிக்க வேண்டியிருப்பதால் அவற்றின் முக்கிய வியாபார ஸ்தலங்களை அதற்கேற்றபடி விரிவுபடுத்த வேண்டியிருந்திருக்கிறது.” கெய்ரோ, பாங்காக், சாவோ பாலோ போன்ற மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது “அன்றாட நிகழ்ச்சி” என த நியூ யார்க் டைம்ஸ் கூறுகிறது.

இத்தனை பிரச்சினைகள் இருந்தபோதிலும் மாநகரத்தை நோக்கி மக்கள் படையெடுப்பது குறையவில்லை. த யுனெஸ்கோ கூரியரில் வந்த ஒரு கட்டுரை கூறியபடி, “சரியோ தவறோ, ஒரு மாநகரமானது முன்னேற்றம், சுதந்திரம், வாய்ப்பு வளம், தவிர்க்க முடியாத வசீகரம் ஆகியவற்றை அளிப்பதாகவே கருதப்படுகிறது.” ஆனால், இந்த உலகின் மெகா நகரங்களின் எதிர்காலம் என்ன? அவை எதிர்ப்படும் பிரச்சினைகளை சமாளிக்க ஏதாவது நடைமுறையான தீர்வுகள் உள்ளனவா?(g01 4/8)

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

“பெரும் எண்ணிக்கையான ஜனங்கள் அலைகடலென வந்துசேர்வதால் வேலையில்லா திண்டாட்டமும், வேலை பற்றாக்குறையும்தான் அதிகளவில் ஏற்படும்”

[பக்கம் 7-ன் படம்]

போக்குவரத்து நெரிசல் அநேக மாநகரங்களை ஸ்தம்பிக்க செய்கிறது

[பக்கம் 7-ன் படம்]

கோடிக்கணக்கான தெருவோர பிள்ளைகள் தங்களைத் தாங்களே கவனித்துக்கொள்ளும் நிலை

[பக்கம் 7-ன் படம்]

நகரவாசிகளில் அநேகருக்கு செழிப்பான வாழ்க்கை பற்றிய கனவுகள் நனவாவதில்லை