மொஸாம்பிக்கில் வெள்ளம் பாதிக்கப்பட்டோருக்கு கிறிஸ்தவர்கள் இடருதவி
மொஸாம்பிக்கில் வெள்ளம்—பாதிக்கப்பட்டோருக்கு கிறிஸ்தவர்கள் இடருதவி
மொஸாம்பிக்கிலிருந்து விழித்தெழு! எழுத்தாளர்
கடந்த வருடம் பிறந்து சில வாரத்திலேயே மொஸாம்பிக் மக்களை வெள்ளம் ஆக்ரோஷமாக வாரிக்கொள்ள பார்த்தபோது அவர்கள் மரக்கிளைகளை இறுகப் பற்றிக்கொண்டிருந்தனர். இந்தப் பரிதாப காட்சியை சின்னத்திரையில் பார்த்தவர்கள் அப்படியே சிலிர்த்து போனார்கள். மரத்தில் இருந்தபோதே ஒரு பெண்மணிக்கு பிரசவமாகிவிட்டது! உடனே ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு தாயும் சேயும் கொண்டு செல்லப்பட்டதையும் சின்னத்திரையில் பார்த்தார்கள். ஆனால் நீர் மட்டம் குறையும் வரையில் அல்லது ஹெலிகாப்டர் தங்களை வெளியேற்றும் வரையில், ஆயிரக்கணக்கானோர் பல நாட்களாக வெள்ளத்துடனே—சிலர் வெள்ளத்தில் வந்த பாம்பு தோழர்களுடனே—உறவாடிக்கொண்டிருந்தார்கள்.
மொஸாம்பிக்கின் தலைநகர் மபூடோவில், பலத்த மழை பெய்தபோது இந்த சோக காட்சி அரங்கேறத் துவங்கியது. சில மணிநேரத்திற்குள் முழு வட்டாரங்களும் வெள்ளத்தில் சமாதியாயின. சில இடங்களில் கூரையின் நுனிதான் தண்ணீருக்கு வெளியே எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. சாலைகள் சீறிப்பாயும் ஆறுகளாக மாறின. அதனால், கால்வாய்களைப் போல பெரிய பெரிய பள்ளங்கள் ஏற்பட்டன. வீடுகள், கார்கள் என ஏறக்குறைய எல்லாவற்றையுமே அடித்துக்கொண்டு சென்றுவிட்டன. ஆனால், இதைவிட பயங்கரமான காட்சி இனிமேல்தான் அரங்கேற இருந்தது.
தொடர்ந்து மழை பெய்ததால், நாட்டின் தென்பகுதி முழுவதையும் வெள்ளம் விசிட் அடித்தது. அண்டை நாடுகளான தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானாவிலும் மழை. இந்நாடுகளிலுள்ள இன்கோமாட்டி, லிம்போபோ, ஸாம்பஸி போன்ற ஆறுகள் மொஸாம்பிக் வழியே பயணித்து கடலை
அடைவதால், இந்த ஆறுகளும் வெள்ளப்பெருக்கால் தறிகெட்டு போய் மொஸாம்பிக்கிலுள்ள பெரும்பாலான பகுதிகளை சின்னாபின்னமாக்கின. இந்தக் கோர சம்பவத்தின்போது கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் கரிசனையோடு கவனித்துக்கொண்ட கதை விசுவாசத்தை பலப்படுத்தும் கதை.ஆரம்ப சேதத்தை மதிப்பிடுதல்
கடந்த வருடம் பிப்ரவரி 9 அன்று மபூடோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலக பிரதிநிதிகள் இருவர் வட பகுதியைப் பார்வையிட புறப்பட்டார்கள். காலை சுமார் ஒன்பது மணியளவில் அவர்கள் ஷீனவனி நகரைக் கடந்தபோது அங்கே இன்கோலூனெ ஆற்றின் நீர்மட்டம் அதிகமாக உயர்ந்திருந்தது. காசா மாகாணத்தின் தலைநகரான ஷை-ஷை வரை செல்ல அவர்கள் தீர்மானித்தார்கள். இருந்தாலும், புயலின்போது எப்போதுமே வெள்ளம் படையெடுக்கும் ஷாக்வி நகரை நெருங்கியபோதுதான் பிரச்சினை என்று சொல்லக்கூடிய அளவுக்கு அங்கு ஒன்றுமில்லை என்பதை அறிந்தார்கள். ஆகவே, அவர்கள் மபூடோவுக்கு திரும்பிச் செல்லத் தீர்மானித்தார்கள்.
என்றாலும், அவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் ஷீனவனியை அடைந்தபோது போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தியது. “தென் ஆப்பிரிக்காவிலிருந்து வெள்ளம் பெருக்கெடுத்து வந்துவிட்டது, தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டிருப்பதால் பஸ்களோ டிரக்குகளோ அந்த வழியே செல்ல முடியாது” என போலீஸ் எச்சரித்தது. அவர்கள் காலையில் கடந்து வந்த அந்த சாலைதான் இப்போது வெள்ளத்தில் மூழ்கிவிட்டது! அப்பால் வடக்கே உள்ள ஆறுகளும் பொங்கி எழுந்ததால் இந்தப் பகுதிக்கும் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்பில்லாமல் போய்விட்டது.
ஆகவே, இந்த இரு பிரதிநிதிகளும் அருகிலுள்ள மாசியாவில் இரவை கழிக்க தீர்மானித்தனர். அன்று இரவே நிலைமை இன்னும் அதிக மோசமானது. ஷீனவனி நகரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. அங்குள்ள ஜனங்கள் எல்லாவற்றையும் இழந்தனர். அப்பகுதியிலுள்ள சாட்சிகள், மாசியாவில் தற்சமயத்திற்கு அகதிகள் முகாமாக மாற்றப்பட்டிருந்த ராஜ்ய மன்றத்திற்கு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சாட்சிகள் உடனடியாக சென்று அரிசி, பீன்ஸ், மாவு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை பண்டக சாலைகளிலிருந்து வாங்கி வந்தனர்.
ஷாக்வி மற்றும் அதற்கு அருகிலுள்ள நகரங்களில் வாழும் சக கிறிஸ்தவர்களின் தேவைகளுக்கு இப்போது கவனம் செலுத்தப்பட்டது. ஷாக்வி சபைகளின் கண்காணிகள் ஒன்றுகூடி, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பிரமாண்டமான பணியை ஒழுங்கமைத்தார்கள். “உடனடியாக வெளியேறி மாசியாவுக்குப் போங்கள்!” என்ற செய்தி எங்கும் பரவியது. இருந்தாலும், ஷீனவனியில் வசிக்கும் பெரும்பாலானோர் இன்னும் வந்து சேரவில்லை என்ற விஷயம் விரைவில் அவர்களுக்குத் தெரிய வந்தது. ஆகவே, அவர்களுடைய நிலை என்ன என்பதை அறிவதற்காக சாட்சிகளை அனுப்பினார்கள். ஒரு கிறிஸ்தவ மூப்பர் வீட்டிற்கு உள்ளேயே வெள்ளத்தில் மூழ்கி இறந்து விட்டார் என்ற விஷயத்தையும் அறிந்தார்கள். அவரை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்கள். கூரையின் மீதும் பிற இடங்களிலும் இருந்த மற்ற சாட்சிகளையும் கண்டுபிடித்து அவர்களை மாசியாவிக்கு கொண்டு சென்றார்கள்.
கிளை அலுவலக பிரதிநிதிகள் இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்துமுடித்துவிட்டு, கடற்கரையில் அமைந்துள்ள பிலனி என்ற சிறிய நகருக்குச் சென்றார்கள். அங்கிருந்து மபூடோவுக்குச் செல்வதற்காக விமானத்தை வாடகைக்கு அமர்த்தினார்கள். பிரயாணிகளின் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையில் அந்தப் பிராந்தியம் ஒரே வெள்ளக்காடாக காட்சியளித்தது. காசா மாகாணத்தில் மட்டுமே 6,00,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை செய்யப்பட்டது.
நிலைமை மோசமாகிறது
அடுத்த சில நாட்களில் மழை இன்னும் பலமானது. மொஸாம்பிக்கின் மத்திய மாகாணங்களும் சின்னாபின்னமாக்கப்பட்டன. அதற்குப்பின் எலைன் என்ற மிகப் பெரிய புயல் உருவானது. இதனால், பிப்ரவரி 20 அன்று இன்யாம்பனே, ஸோஃபாலா, மானிகா போன்ற மாகாணங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. ஆகவே, வெள்ளப்பெருக்கும் சாவும் நாசமும் அதிகமானது.
பிப்ரவரி மாத கடைசியில் ஷாக்வி நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியம் முழுவதிலும் சரித்திரம் காணாத அளவுக்கு வெள்ளம் பெருகியது. பிப்ரவரி 26, சனிக்கிழமை சுமார் நள்ளிரவில் பெரும் மலையே உருண்டுவருவதுபோல் வெள்ளம் பெருக்கெடுத்து வந்து, வழியிலுள்ள அனைத்தையும் அடித்துச் சென்றது. “பக்கத்து வீட்டு பெண் ஜன்னல் வழியாக சத்தம் கொடுப்பதைக் கேட்டு நாங்கள் முழித்துக்கொண்டோம்” என லூயிஷ் ஷிட்டலங்கு என்ற 32 வயது சாட்சி கூறினார்.
ஷிட்டலங்கு இவ்வாறு விளக்குகிறார்: “நாங்கள் படுக்கையைவிட்டு குதித்தெழுந்தபோது, வெள்ளத்தின் பேரிரைச்சலைக் கேட்டோம். நாங்கள் தப்பியோடியபோது பல பாம்புகளை பார்த்தோம். காலை ஆறு மணிக்கு நாங்கள் மேட்டுப் பகுதியை அடைந்தோம். ஆனால், கொஞ்சம் நேரத்திற்குள்ளாக தண்ணீர் மட்டம் எல்லா இடங்களிலும் உயர்ந்ததால், நாங்கள் மரத்தில் ஏற வேண்டியதாயிற்று. நாங்கள் மொத்தம் 20 பேர் இருந்தோம்.
“முதலில் ஆண்கள் மரத்தில் ஏறினார்கள். அதற்குப்பின் பெண்கள், பிள்ளைகளை அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்களை மரக்கிளைகளில் கட்டி வைத்தார்கள். பின்பு பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் மரத்தில் ஏறினார்கள். நாங்கள் அடிக்கடி மரத்திலிருந்து கீழே இறங்கி தண்ணீருக்குக் கீழே நிலத்தில் வேர்க்கடலை தென்படுகிறதா என்று பார்த்தோம். அந்த இடத்தில் வேர்க்கடலை பயிரிடப்பட்டது எங்களுக்குத் தெரியும்.
“மூன்று நாட்களுக்குப்பின் நாங்கள் ஷாக்விக்கு செல்ல தீர்மானித்தோம். எங்களுடைய மார்பு மட்டும் தண்ணீர் எட்டியது. வேகமான நீரோட்டத்தை சமாளித்துச் செல்ல வேண்டியிருந்தது. நாங்கள் செல்லும் வழியில் அநேகர் மரங்களிலும், வீட்டுக் கூரைகளிலும் இருப்பதைக் கண்டோம். அடுத்த நாள், ஆட்களை மாசியாவிற்கு கொண்டு செல்ல டிரக்குகள் போகும் அளவுக்கு நகரத்தில் நீர்மட்டம் குறைந்திருந்தது.”
சாட்சிகளுடைய அகதிகள் முகாம்
மார்ச் 4 அன்று யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் ஒரு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பியது. பெரும்பாலான மக்கள், அகதிகளுக்காக மிகப் பெரிய முகாமாக மாற்றப்பட்டிருந்த மாசியாவுக்கு ஓடிப் போனார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலர், ஃப்ளு ஜுரத்தாலும், ஊட்டச்சத்துக் குறைவினாலும், மலேரியாவினாலும் மற்ற கஷ்டங்களாலும் அவதியுற்றார்கள்.
அது போரினால் பாதிக்கப்பட்ட பகுதியைப் போல் காட்சியளித்தது. பல நாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர்கள் நகரில் வட்டமிட்டு அவற்றிற்கென ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் வந்திறங்கி உணவுப் பொருட்களை இறக்கின. சாட்சிகளின் நிவாரணக் குழு மாசியாவில் வந்து சேர்ந்தபோது பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளித்ததோடு ஒரு ‘கிளினிக்’கையும் ஏற்படுத்தியது. இருந்தாலும், உள்ளூர் அதிகாரிகளின் அனுமதியை முதலில் பெற்றது; அவர்களுடைய முயற்சியை அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.
ஏறக்குறைய 700 யெகோவாவின் சாட்சிகளும் மற்றவர்களும் இருந்த சாட்சிகளின் முகாமில் ஒவ்வொரு நாள் காலையிலும் 6:30 மணிக்கு பைபிள் வசனம் கலந்தாலோசிக்கப்பட்டது. கிறிஸ்தவ சகோதரிகள் சமைத்த உணவு தயாரானதும் குடும்பத் தலைவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துக்கு எத்தனை பிளேட் உணவு தேவை என்பதை கை விரல்களில் காட்டுவர். அதன்படி உணவு வழங்கப்படும்.
முகாமில் எல்லா காரியங்களும் சரியாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. சிலருக்கு உணவுப் பொருட்களை வாங்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது; மற்றவர்களுக்கு குடிநீரை பாதுகாப்பது, கழிப்பறைகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் கொடுக்கப்பட்டன.
இந்தச் சிறந்த ஒழுங்கமைப்பைக் கண்ட அரசாங்க அதிகாரிகள் இவ்வாறு புகழ்ந்து கூறினர்: ‘இதுதான் நல்ல இடம். எல்லாருக்கும் சாப்பாடு கிடைக்கிறது, எந்தச் சண்டை சச்சரவுமில்லை.’ ஓர் உள்ளூர் அதிகாரி சொன்னார்: ‘எல்லா காரியங்களையும் எப்படி சீராக செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டுமானால் எல்லாரும் சாட்சிகளுடைய முகாமுக்குப் போய் பார்வையிட வேண்டும்.’இந்த நிவாரணக் குழு ஒருநாள் கிறிஸ்தவ மூப்பர்களை ஒன்றுகூடி வரச்செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிளை அலுவலகம் அத்தியாவசிய பொருட்களை அளிப்பதோடு வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்திருப்பதாக அறிவித்தது. மறுநாள் காலை பைபிள் வசனம் கலந்தாலோசிக்கப்பட்டபோது, இத்தீர்மானங்களைப் பற்றி அறிவிப்பு செய்தார்கள். இதைக் கேட்டவர்கள் எழுப்பிய கரவொலி அடங்க அதிக நேரமானது.
அதிகாரிகள் இரண்டு பெரிய கூடாரங்களை இனாமாக கொடுத்தாலும் அநேகர் இன்னும் திறந்த வெளியிலேயே உறங்கினார்கள். ஆகவே, உள்ளூர் சபைக்குச் சொந்தமான இடத்தில் ஒரு பெரிய ராஜ்ய மன்றம் கட்டுவதற்கு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்கள் அடங்கிய ஒரு குழு ஒழுங்கமைக்கப்பட்டது. இக்குழு 200 பேர் தங்கும் அளவில் கோரைப் புற்களாலும் துத்தநாகத் தகடுகளாலும்—மொஸாம்பிக் பாணியில்—மன்றத்தைக் கட்டியது. இரண்டே நாட்களில் இந்த வேலை பூர்த்தியானது!
காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல்
இதற்கிடையே மார்ச் 5-ல் தண்ணீர் மட்டம் ஓரளவுக்கு குறைந்தபின், ஆல்டெய டா பெராஷென் என்ற இடத்திலுள்ள டவுனுக்கு செல்வதற்கு ஒரு நிவாரணக் குழு அமைக்கப்பட்டது. இது முதன்முதலில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் ஒன்றில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 90 சாட்சிகளைக் கொண்ட சபை இருந்தது. அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
இக்குழு சுமார் 1,00,000 பேரைக் கொண்ட மிகப் பெரிய அகதிகள் முகாம் இருந்த ஷிஹகலானி என்ற இடத்தைக் கடந்து சென்றது, சாலையின் இருபக்கங்களிலும் உள்ள இடங்கள் துடைத்தழிக்கப்பட்டிருந்தன; பார்க்கும் இடமெல்லாம் ஒரே வெள்ளக்காடு. இந்தக் குழுவிலுள்ள ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “நாங்கள் ஷாக்விக்கு வந்து சேர்ந்தபோது, சீரழிந்த கோலமே எங்கள் கண்ணில் பட்டது. அந்த நகரத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் அநேக வீடுகளின் கூரைமட்டும் இன்னும் தண்ணீர் இருந்தது. பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. சாயங்காலமாகி இருட்டத் தொடங்கியது, ஆனால் நாங்கள் ஆல்டெய டா பெராஷெனுக்குச் செல்வதற்கு இன்னும் 25 கிலோமீட்டர் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தது.”
ஒருவழியாக இரவில் ஆல்டெய டா பெராஷெனுக்கு இந்தக் குழு வந்து சேர்ந்தது. இக்குழுவிலுள்ள ஒருவர் சொல்கிறார்: “நாங்கள் இங்கு வந்து சேர்ந்ததும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்தோம்.” அதற்குள் “சகோதரர்கள்!” என்ற உரத்த சப்தமும், சந்தோஷ சிரிப்பொலியும் கேட்டது. இரண்டு வண்டிகளின் லைட்டைப் பார்த்த உள்ளூர் சாட்சிகள் இவை தங்களுடைய சகோதரர்களுடைய வண்டிகளாக இருக்கலாம் என நினைத்து அதை மற்றவர்களிடமும் சொன்னார்கள். இதைப் பார்த்த மற்றவர்கள் மனங்கவரப்பட்டு, இவ்வாறு கூறினார்கள்: ‘இவர்களே உண்மையில் அன்புள்ள ஜனங்கள். சாப்பாடு கொண்டுவருவதோடு நேரில் பார்த்தும் விசாரிக்கிறார்களே!’
தொடர்ந்து இடருதவி அளித்தல்
ஆல்டெய டா பெராஷெனிலுள்ள சகோதரர்களை மாசியாவிலுள்ள முகாமுக்குக் கொண்டு சென்றார்கள். அங்கே அவர்களுக்கு உணவும் தங்கும் வசதியும் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் மாசியாவிலுள்ள சூழ்நிலையும் மோசமாகிக் கொண்டிருந்தது. உணவு, மருந்து, எரிபொருள் எல்லாமே விமானம் மூலம் அனுப்பப்பட்டதால் அவை பற்றாக்குறையாகி விட்டன. மபூடோவுக்கும் மாசியாவுக்கும் இடையே உடனடியாக மீண்டும் சாலை இணைப்பு ஏற்படுத்த வேண்டியதாயிற்று. மார்ச் 8-க்குள் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.
ஷை-ஷை என்ற பெரிய நகரம் அப்படியே வெள்ளத்தில் மூழ்கிவிட்டிருந்தது. சில இடங்களில் அந்நகரின் முக்கிய பகுதி தண்ணீருக்கு அடியில் ஒன்பது அடி ஆழத்தில் மூழ்கியிருந்தது. அங்குள்ள சகோதரர்களை கவனிப்பதற்காக சாட்சிகள் ஒரு நிவாரணக் குழுவை ஏற்படுத்தினார்கள். அதோடு ஸோஃபாலா, மானிகா மாகாணங்களில் கஷ்டத்தில் இருப்பவர்களை கவனிப்பதற்காக கமிட்டிகளும் ஒழுங்குபடுத்தப்பட்டன.
மற்ற நாடுகளிலுள்ள சாட்சிகளிடமிருந்தும் நிவாரணப் பொருட்கள் வந்தன. உதாரணமாக, தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகம் டன் கணக்காக துணிகளையும், போர்வைகளையும், மற்ற பொருட்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்தது. இந்த இயற்கை சேதத்தால் பாதிக்கப்பட்டவர்களை கவனிப்பதற்கு நியூ யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமை அலுவலகமும் பண உதவி அளித்தது.
தண்ணீர் போதுமான அளவு வற்றி, வீடுகளை இழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்ட பின்பு வீடுகளையும் ராஜ்ய மன்றங்களையும் கட்டும் பணி ஆரம்பமானது. புதுப்பித்துக் கட்டும் குழு நிறுவப்பட்டது. இக்குழுவுக்கு ஆதரவாக வந்த தொண்டர்கள் பலர் உடனடியாக வேலையை ஆரம்பித்தனர். அது முதற்கொண்டு குறைந்த பட்சம் 5 ராஜ்ய மன்றங்களும் 270-க்கும் அதிகமான வீடுகளும் கட்டப்பட்டிருக்கின்றன.
தொண்டர்களாக வந்த சாட்சிகள் வீடுகளை ஒவ்வொன்றாக கட்டியெழுப்பியதை மற்ற ஜனங்கள் கவனித்தார்கள். ஓர் அண்டை வீட்டுப் பெண் இவ்வாறு குறிப்பிட்டாள்: ‘நீங்கள் உயிருள்ள கடவுளை வணங்குகிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு அழகான வீடுகள் கிடைக்கிறது. எங்களுடைய பாஸ்டர்களோ கஷ்டப்படும் ஆடுகளை நினைத்துப் பார்ப்பதே இல்லை.’ இப்பகுதிகளில், யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கும் ராஜ்ய செய்திக்கு அநேகர் செவிகொடுத்திருக்கிறார்கள், நிறைய பைபிள் படிப்புகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.—மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 21:3, 4.
சாட்சிகள் அநேகர் தங்களுடைய பொருளுடைமைகள் அனைத்தையும் இழந்தபோதும், ஒருவருமே தங்களுடைய விசுவாசத்தை இழக்கவில்லை. மாறாக, யெகோவா தேவன் மீதிருந்த விசுவாசமும், சக விசுவாசிகளுடைய உலகளாவிய கூட்டுறவின் மீதிருந்த நம்பிக்கையும் பலப்பட்டது. அவர்கள் அன்பான சர்வதேச சகோதரத்துவத்துக்கு அதிக நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் இந்தப் பயங்கரமான இயற்கை சேதத்தின்போது தக்க சமயத்தில் வந்து உடனடியாக உதவிக்கரம் நீட்டியவர்கள் இவர்களே. யெகோவாவின் கனிவான கவனிப்பையும், ஆதரவையும் அவர்கள் தனிப்பட்ட விதமாக அனுபவித்திருக்கிறார்கள். “யெகோவா மகத்தானவர்” என்ற பைபிள் சொற்றொடரையும் அவர்கள் எப்போதும் நினைவுகூருவார்கள்.—சங்கீதம் 48:1, NW.
(g01 4/22)
[பக்கம் 22, 23-ன் படம்]
ஷை-ஷை நகரம் சேறும் சகதியுமான தண்ணீருக்குள் மூழ்கியது
[பக்கம் 23-ன் படம்]
நிவாரணப் பொருட்கள் ஏராளமாக வந்து குவிந்தன
[பக்கம் 24-ன் படம்]
சாட்சிகளின் நிவாரணக் குழு ஒரு கிளினிக்கை அமைத்தது
[பக்கம் 24-ன் படம்]
புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன
[பக்கம் 24-ன் படம்]
1,00,000 பேரைக் கொண்டிருந்த மிகப் பெரிய அகதிகள் முகாம்