வறண்ட நிலத்தை வளமாக்குதல்
வறண்ட நிலத்தை வளமாக்குதல்
இந்தியாவிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்
இந்தியாவின் வடக்கு மாவட்டமாகிய லடாக் என்ற இடத்திலுள்ள வறண்ட நிலங்களை எவ்வாறு வளமிக்கதாக்க முடியும்? இதுவே சிவாங் நார்ஃபெல் என்ற ஓய்வுபெற்ற சிவில் என்ஜினியருடைய மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த கேள்வி. இமயத்தின் உச்சியிலுள்ள இயற்கை பனியாறுகள் (glaciers) ஜூன் மாதத்தில்தான் உருகி ஓட ஆரம்பிக்கின்றன. மழை குறைவாக இருப்பதால் விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு தண்ணீர் தேவைப்படும் ஏப்ரல் மாதத்தில் அவை உருகி ஓடுவதில்லை. நார்ஃபெல் இதற்கு புத்திசாலித்தனமான பதிலை கண்டுபிடித்தார்: கீழ்ப்புற மலைச்சரிவுகளில் செயற்கை பனியாறுகளை உருவாக்கினார், இந்த இடங்களில் ஆண்டின் ஆரம்பத்திலேயே பனி உருகிவர ஆரம்பித்துவிடும்.
நார்ஃபெல்லும் அவருடைய குழுவினரும் மலையிலிருந்து வரும் நீரோட்டத்தை 200 மீட்டர் நீளமும் 70 சிறுவடிகால்களும் கொண்ட செயற்கை கால்வாய்க்குள் திருப்பிவிட்டதாக இந்தியாவில் வெளியாகும் த வீக் செய்திப் பத்திரிகை சொல்கிறது. இங்கிருந்து மலைச்சரிவின் வழியாக தண்ணீர் மெதுவாகவும் தேவையான அளவிலும் பாய்ந்து, மலைச்சரிவின் கீழ்ப்புறத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவர்களை அடைவதற்குள் உறைந்துவிடும். இவ்வாறு இங்கே பனிக்கட்டி படிப்படியாக உயர்ந்து, கடைசியில் அந்தச் சுவர்களையே மூடிவிடும். மலையின் நிழல் இதன்மீது விழுவதால், இந்தப் பனியாறுகள் ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை உயரும் சமயத்தில் மட்டுமே உருக ஆரம்பிக்கும். இது, பாசனத்திற்கு தேவையான தண்ணீர் இல்லாமல் அதிக தட்டுப்பாடாக இருக்கும் சமயத்தில் கிடைக்கிறது.
செயற்கை பனியாறுகளை உருவாக்கும் யோசனை வெற்றிபெற்றதா? நார்ஃபெல்லின் யோசனை மிகவும் நடைமுறைக்கு ஏற்றதாக இருப்பதால் ஏற்கெனவே லடாக்கில் இப்படிப்பட்ட 10 பனியாறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் அதிகமானவற்றை உருவாக்குவதற்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1,372 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட ஒரு பனியாறு, சுமார் 3.4 கோடி லிட்டர் தண்ணீர் தருகிறது. இதற்கு ஆகும் செலவு? “ஒரு செயற்கை பனியாற்றை உருவாக்குவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் ஆகின்றன. அதற்கு ரூ. 80,000 [$1,1860] செலவாகிறது, அதில் பெருமளவு தொழிலாளருக்கு கொடுக்கப்படும் கூலிதான்” என த வீக் பத்திரிகை சொல்கிறது.
மனிதன் தன்னுடைய மதிநுட்பத்தை சரியாக பயன்படுத்தும்போது அது உண்மையிலேயே பயனளிக்கிறது. கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் வழிநடத்துதல் இருக்கையில் மனிதவர்க்கம் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை சற்று கற்பனை செய்துபாருங்கள்! பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். . . . வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.” (ஏசாயா 35:1, 6) நம்முடைய பூமியை அழகுபடுத்துவதில் நாம் பங்குகொள்வது எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்!(g01 4/8)
[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]
Arvind Jain, The Week Magazine
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc. ▸