Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அசல் பனாமா தொப்பி ஈக்வடாரில் தயாரிக்கப்பட்டதா?

அசல் பனாமா தொப்பி ஈக்வடாரில் தயாரிக்கப்பட்டதா?

அசல் பனாமா தொப்பி—ஈக்வடாரில் தயாரிக்கப்பட்டதா?

ஈக்வடாரிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

தொப்பி வாங்கினவர் ஏமாந்துவிட்டாரா? பார்ப்பவர்களுக்கு அப்படித்தான் தோன்றியிருக்கும். ஏனென்றால் அசல் பனாமா தொப்பி ஒன்றை 300 டாலர் கொடுத்து வாங்கினாரே. ஆனால் “ஈக்வடாரில் தயாரிக்கப்பட்டது” என்று தெள்ளத்தெளிவாக முத்திரையிடப்பட்ட ஒரு பெட்டியிலிருந்தல்லவா அந்த தொப்பியை கடைக்காரர் எடுத்துக் கொடுத்தார்! அப்படியானால் இது ஏமாற்று வேலைதானே? நிச்சயமாக இல்லை. அசல் பனாமா தொப்பி ஈக்வடாரில்தான் உண்மையிலேயே தயாரிக்கப்படுகிறது. அப்படியானால் அது ஏன் தவறான பெயரால் அழைக்கப்படுகிறது? அப்படி ஒரு தொப்பிக்கு ஏன் நூற்றுக்கணக்கான டாலர் விலை?

1800-களின் மத்திபத்தில், பொன்னைத் தேடி திரண்டு வந்த கூட்டத்தார் கலிபோர்னியாவை நோக்கி செல்கையில் பனாமா பூசந்தியைக் கடந்து சென்றனர். ஈக்குவடாரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தொப்பிகளை அவர்கள் அங்கே வாங்கினர். அந்தத் தொப்பிகள் காலப்போக்கில், அவை செய்யப்பட்ட இடத்தின் பெயரால் அறியப்படாமல், அவை வாங்கப்பட்ட இடத்தின் பெயராலேயே அறியப்பட்டன. எப்படியோ, பனாமா தொப்பி மிகவும் பிரபலமானது. உதாரணமாக, 1849-⁠ல் 2,20,000-⁠க்கும் அதிகமான தொப்பிகளை ஈக்குவடார் ஏற்றுமதி செய்தது! பின்னர் 1855-⁠ல், பனாமாவில் வாழ்ந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் பாரிஸில் நடந்த உலக கண்காட்சியில் இந்த தொப்பிகளை அறிமுகப்படுத்தினார். ஃபேஷன்களை நாடும் பிரெஞ்சுக்காரர்கள் அதன் மெல்லிய தன்மையால் கவரப்பட்டனர். “துணி போன்ற வைக்கோல் நார்” என்றுகூட சிலர் அதை விவரித்தனர். கொஞ்ச நாட்களில், எங்கு பார்த்தாலும் இந்த ஸ்டைல்தான்!

20-⁠ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பனாமா தொப்பி மிகவும் பிரபலமானது. காரணம், ஐ.மா. ஜனாதிபதி தியடோர் ரூஸ்வெல்ட் ஸ்டைலான ஃபினோவை பகட்டாக அணிந்திருந்த ஃபோட்டோவை பத்திரிகை உலகம் பிரசுரித்திருந்தது. இந்த ஸ்டைலான தொப்பிக்கு மவுசு அதிகமானது. உலகெங்கிலுமுள்ள பிரபல நிறுவனங்கள் இவற்றை விநியோகிக்க தொடங்கின. துருக்கியில், நவீனமயமாக்கும் சட்டங்கள், வழக்கமாக அணியும் குல்லாவிற்கு 1925-⁠ல் தடைவிதித்துவிட்டு, அதற்கு பதிலாக பனாமா தொப்பிகளை அணியும்படி கட்டளை பிறப்பித்தன. 1944-⁠ற்குள் ஈக்குவடாரின் முக்கிய ஏற்றுமதி சரக்காகிவிட்டது பனாமா தொப்பி.

20-⁠ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த தொப்பிகளுக்கு மவுசு குறைந்துவிட்டது. இருந்தாலும், கலைநுணுக்கத்துடன் முடையப்பட்ட ஈக்குவடாரின் பனாமா தொப்பிகளுக்குரிய கவர்ச்சி குறைந்துவிடவில்லை. சொல்லப்போனால், உலகம் முழுவதிலும் தொப்பித் தொழிலில் ஈடுபடுகிறவர்கள் இந்தத் தொப்பிகளின் உயர்தர சரக்குகளை பெற போட்டா போட்டி போடுகின்றனர். அன்றும் இன்றும் இந்த பனாமா தொப்பியின் அழகால் பிரபலமானவர்கள் கவரப்பட்டிருக்கின்றனர். வின்ஸ்டன் சர்ச்சில், நிய்கியிடா க்ரூஷாவ், ஹம்ஃப்ரி போகார்ட், மைக்கல் ஜோர்டன் போன்ற பிரபலமானவர்களின் தலைகளை இந்த தொப்பிகள் அலங்கரித்திருக்கின்றன.

மலிவான போலி பனாமா தொப்பிகளும் மொத்த அளவில் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றிலோ விரிசல் ஏற்படும்; அல்லது சரியான காற்றோட்டம் இருக்காது. மாறாக, அசல் பனாமா தொப்பியோ லேசானதாகவும் காற்றோட்டம் உடையதாகவும் இருக்கிறது; காலம் பூராவும் உழைக்கும். ஒவ்வொரு தொப்பியும் கையால் முடையப்படுவதால் ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை. அவ்வளவு செம்மையாக முடையப்படாத தொப்பிகள் ஒருசில டாலர் முதல், மான்டேக்ரிஸ்டியின் அரிய ஸூப்பர்ஃபினோக்கள் 1,000-⁠க்கும் அதிகமான டாலர் வரை விலை போகும். எந்தளவுக்கு சிறப்பாகவும் பிசிரின்றியும் முடையப்பட்டிருக்கிறது, நிறம் மாறாமல் இருக்கிறது என்பதை வைத்துத்தான் தரம் கணிக்கப்படுகிறது. எதுவானாலும், எப்போதும் நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய விஷயம்: அசல் பனாமா தொப்பி ஈக்குவடாரில் மட்டுமே தயாராகிறது.(g01 5/8)

[பக்கம் 17-ன் பெட்டி/படங்கள்]

பனாமா தொப்பி தயாரிப்பு

பனாமா தொப்பி எப்படி தயாரிக்கப்படுகிறது? இது ஒரு வகை புல்லின தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. எளிதில் வளையும் தன்மை இருந்தாலும் தாங்கும் சக்தி உடைய உறுதியான டோக்கீயா என்ற நார் இதிலிருந்து கிடைக்கிறது. இந்த செடி வளர்வதற்கும், அதை மீண்டும் மீண்டும் விளைவிப்பதற்கும் ஏற்ற சூழல் ஈக்குவடாரின் கடற்கரையோரத்திலுள்ள தாழ்வான பகுதிகளில் காணப்படுகிறது. ஈக்குவடாரில் தொப்பி முடையும் கைவினைஞர்கள், இத்தொழிலில் உலகிலேயே மிகச் சிறந்தவர்களாக கருதப்படுகின்றனர். அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு அந்த வேலையை செய்கின்றனர்! உயர் தரமான மான்டேக்ரிஸ்டி ஸூப்பர்ஃபினோவை முடைவதற்கு ஆறு மாதமோ அதற்கும் அதிகமாகவோ ஆகலாம். தொப்பியிலுள்ள ஒவ்வொரு நாரும் நீளம் குறைந்ததாகவே இருக்கும். இருந்தாலும், அசல் பனாமா தொப்பியில், எந்த இடத்தில் ஒரு நார் இழை முடிந்து மற்றொன்று தொடங்குகிறது என்பதை கண்டுபிடிக்கவே முடியாது. மேலும், இதனுள் நீர் புகாதபடிக்கு நார் இழைகள் அந்தளவுக்கு நெருக்கமாக முடையப்பட்டிருக்கின்றன!

கையால் முடையப்பட்ட மிகச் சிறந்த தொப்பிகளுக்கு பெயர்பெற்றது மான்டேக்ரிஸ்டி நகரம். மான்டேக்ரிஸ்டி பகுதியிலுள்ள கைவினைஞர்கள் விடியற்காலையில் அல்லது மாலை நேரத்தில் முடைகிறார்கள்; நாரின் வளைந்து கொடுக்கும் தன்மையை நிலநடுக்கோட்டு பகுதிக்குரிய கடும் வெப்பம் பாதித்துவிடக் கூடாது என்பதற்காகவே முடைவதற்கு அந்த நேரங்களை தெரிந்துகொள்கிறார்கள். தொப்பியின் உச்சிப் பகுதியை மிக கவனமாக ஒவ்வொரு வட்டமாக முடைந்துகொண்டே வருகிறார்கள். தேவையான விட்டத்தை பெறும்வரை நார் இழைகளை ஒன்றோடொன்று பின்னி இணைத்தவாறு முடைகிறார்கள். பின்னர் அந்த உச்சிப் பகுதி ஒரு உருளை கட்டையின் மேல் வைக்கப்படும்; அந்த கைவினைஞரின் தேர்ந்த கைகள் திறம்பட்ட வகையில் சுற்றி சுற்றி கீழ்நோக்கி அதன் பக்கவாட்டுப் பகுதிகளை முடைந்து வருவதற்கு இது வசதியாக இருக்கிறது. இவ்வாறு அவர் பல வாரங்கள் பக்கவாட்டில் முடைந்த பிறகு, அதற்கு செங்குத்தான திசையில் விளிம்பை நோக்கி முடைகிறார். வேண்டாதவற்றை கத்தரித்து, கழுவி, கறைநீக்கி, கடைசி பூச்சுவேலைகள் அனைத்தையும் சிறந்த முறையில் செய்தபின் கிடைப்பதுதான் புகழ்பெற்ற பனாமா தொப்பி.

[படங்கள்]

ஓலைகளிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட நார்கள் முடையுமுன் வேகவைத்து உலர வைக்கப்படுகின்றன

[பக்கம் 17-ன் படம்]

பனாமா தொப்பியை அணிந்த பிரபலமானவர்களில் ஒருவர் வின்ஸ்டன் சர்ச்சில்

[படத்திற்கான நன்றி]

U.S. National Archives photo