உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
தொற்று பரவுதல்
“ஒரு பைப்பை திறப்பது அல்லது தொலைபேசியை கையில் எடுப்பது போன்ற எளிய செயல்களால்கூட தொற்று நோய்கள் மற்றவர்களுக்கு பரவலாம்” என லண்டனின் த கார்டியன் கூறுகிறது. கடும் ஜலதோஷத்தால் அவதிப்படுபவர் மூக்கை சிந்திவிட்டு தண்ணீர் பைப்பை திறந்தால், “1,000-த்திற்கும் அதிகமான வைரஸ் கிருமிகள் அதன் கைப்பிடியில்” ஒட்டிக்கொள்ளலாம் என அ.ஐ.மா., டக்ஸனிலுள்ள அரிஜோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அறிக்கை செய்கின்றனர். அடுத்து வரும் நபர் அந்த பைப்பை தொட்டுவிட்டு தன் வாயையோ, மூக்கையோ, கண்களையோ தொட்டால் அந்நோய் அவரையும் தொற்றிக்கொள்ளலாம். ஒரு பாக்டீரியாவையும் ஒரு பாக்டீரிய வைரஸையும் வைத்து நடத்தப்பட்ட சோதனைகளில், “தொலைபேசி மூலம் 39 சதவிகித பாக்டீரியாவும் 66 சதவிகித வைரஸும், பைப் மூலம் 28 சதவிகித பாக்டீரியாவும், 34 சதவிகித வைரஸும் கடத்தப்படுவது” கண்டுபிடிக்கப்பட்டது. கிருமிகள் நிறைந்த விரலுடன் கீழ் உதட்டை தொட்டாலே போதும் இந்த நோய் கிருமிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை தொற்றிக்கொள்ளும். கைகளை கழுவாவிட்டால், ரோட்டா வைரஸுகள் ஏற்படுத்தும் நோய்களும் சால்மோனெல்லா ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கும் இந்த விதத்தில் மிக எளிதில் தொற்றிவிடலாம்.
(g01 5/8)
மூளைக்கு வேலை
“மூளைக்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருந்தால் அதன் திறன் நம் வாழ்நாள் முழுவதுமே நீடிக்கும்” என வான்கூவர் சன் செய்தித்தாள் கூறுகிறது. “வாசியுங்கள், வாசியுங்கள், வாசித்துக்கொண்டே இருங்கள்” என்று அ.ஐ.மா., ஒஹாயோவிலுள்ள கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் யூனிவர்சிட்டி மெடிக்கல் ஸ்கூலைச் சேர்ந்த டாக்டர் அமீர் சோயாஸ் கூறுகிறார். வயதாகையில் மூளையின் திறனைக் காத்துக்கொள்ள மூளைக்கு சவால்விடும் விருப்ப வேலைகளை தெரிவு செய்யுங்கள், ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்ளுங்கள், இசைக் கருவி ஒன்றை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள் அல்லது ஆர்வமூட்டும் உரையாடலில் ஈடுபடுங்கள். “மூளைக்கு வேலை கொடுக்கும் எதையும் செய்யுங்கள்” என்கிறார் டாக்டர் சோயாஸ். டிவி பார்க்கும் நேரத்தை குறைக்கும்படியும் அவர் கூறுகிறார். “டிவி பார்க்கையில் உங்கள் மூளை வேலை செய்வதில்லை” என அவர் கூறுகிறார். ஆரோக்கியமான மூளைக்கு ஆரோக்கியமான இரத்தக் குழாய்கள் கொண்டு வரும் பிராணவாயுவும் தேவை என்றும் சன் கூறுகிறது. ஆகவே, இதய நோயையும் நீரிழிவு நோயையும் தடுக்க உதவும் உடற்பயிற்சியும் சமநிலையான உணவுமே மூளைக்கும் உதவுகின்றன.
(g01 5/22)
தூக்கம் அவசியம்
“போதாத தூக்கம் அல்லது தூக்க குறைபாடுகள் காரணமாக தென் ஆப்பிரிக்கர்களில் ஏறக்குறைய கால்வாசி பேர் பாதி திறமையோடுதான் வேலை செய்கின்றனர்” என்று கூறுகிறது தென் ஆப்பிரிக்க செய்தித்தாளான த நேட்டல் விட்னஸ். மூளையிலுள்ள அவசியமான நரம்புக் கடத்திகளை புதுப்பிக்க தூக்கம் உதவுவதால் நல்ல ஞாபகசக்தி, படைப்புத்திறன், பிரச்சினைகளை தீர்க்கும் திறன், படிப்பு திறன் போன்றவற்றிற்கு போதுமான தூக்கம் அவசியம் என தூக்க ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜேம்ஸ் மாஸ் கூறுகிறார். போதுமான தூக்கம் இல்லாததால் ஏற்படும் விளைவுகளில் மனச்சோர்வு, எரிச்சலடையும் தன்மை, கவலை, நகைச்சுவை உணர்வும் சமூக திறமைகளும் குறைதல், கவனம் செலுத்துவதும் ஞாபகம் வைப்பதும் குறைதல், உரையாடும் திறனும் தீர்மானம் செய்யும் திறனும் குறைதல், துணிகர செயலில் ஈடுபடுவது அதிகரித்தல், செயல்திறனும் வாழ்க்கை தரமும் குறைதல் ஆகியவையும் உட்படும். ஐந்து அல்லது அதற்கும் குறைவான மணிநேரமே தூங்குபவர்களுக்கு வைரஸுகளை எதிர்க்கும் சக்தியும் குறைகிறது. “மிகவும் திறமையாக செயல்பட நம் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சராசரியாக ஒவ்வொரு இரவும் எட்டு மணிநேரம் தூங்க வேண்டும்” என்கிறார் மாஸ்.
(g01 5/8)
வெட்டுக்கிளி வேட்டை
“சீனாவில் கடந்த 25 வருடங்களில் வெட்டுக்கிளி கூட்டங்களால் இந்தளவுக்குப் பிரச்சினை இருந்ததில்லை. அதை எதிர்த்துப் போரிட 7,00,000 வாத்துகளுக்கும் கோழிகளுக்கும் விசேஷ பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது” என லண்டனின் த டெய்லி டெலிகிராஃப் அறிக்கை செய்கிறது. இந்த வெட்டுக்கிளி கூட்டங்கள் 2000-ம் வருடத்தின் கோடை காலத்தில், அந்நாட்டின் வடக்கிலும் கிழக்கிலும் 41 லட்சம் ஏக்கர் பயிர்களையும் மேற்கிலுள்ள ஷிங்ஜியாங் பகுதியில் 96 லட்சம் ஏக்கர் புல்வெளிகளையும் அழித்தன. விசில் சத்தம் கேட்டவுடன் வெட்டுக்கிளிகளை பிடித்து சாப்பிட வாத்துகளுக்கும் கோழிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பறவைகளுக்கு பயிற்சியளித்து உபயோகிக்கும் இடமான ஷிங்ஜியாங்கிலுள்ள வெட்டுக்கிளி மற்றும் எலி கட்டுப்பாட்டு மையத்தின் துணைத் தலைவரான ஜாவ் சீன்சுவன் இவ்வாறு விளக்குகிறார்: “வெட்டுக்கிளிகள் என்றால் கோழிகளுக்கு அலாதி பிரியம் என்பது விவசாயிகள் அறிந்ததே. ஆகவே சில சோதனைகள் செய்து, கோழிகளைவிட வாத்துகள் அதிகமாக [ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு சுமார் 400 வெட்டுக்கிளிகள்] சாப்பிடுவதைக் கண்டுபிடித்தோம். அதோடு, மோசமான வானிலையிலும் அவை கோழிகளைவிட
நன்றாக தாக்குப்பிடிக்கின்றன, கழுகுகள் அல்லது மரநாய்கள் அவற்றை தின்றுவிடும் பயமும் கிடையாது. . . . இந்தப் பறவைகளை புல்வெளியில் மேயவிட்டு விசில்களை ஊதுவோம், அவை வெட்டுக்கிளிகளை பிடித்து தின்றுவிடும்.” இந்தப் பறவைகள், வெட்டுக்கிளிகளை அழிக்க நுண்ணுயிரிகளும் மருந்தைத் தெளிக்கும் விமானங்களும் பயன்படுத்தப்படும் ஒரு திட்டத்தின் பாகமே.(g01 5/8)
குளிர்காலம்—நண்பனா, பகைவனா?
குளிர்ந்த, ஈரப்பதமுள்ள வானிலை உங்கள் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் என நினைக்காதீர்கள் என்று ஜெர்மனியின் ஆரோக்கிய செய்திமடல் ஆபோடேகன் உஷ்மாவு அறிக்கை செய்கிறது. அதற்கு மாறாக, குளிர்காலத்திலும் தவறாமல் வாக்கிங் போவது உங்கள் இருதயத்திற்கும் இரத்த ஓட்டத்திற்கும் நல்ல பயிற்சியளித்து, முழு உடலையும் வலுவூட்டும் என மருத்துவ வானிலையாளரான டாக்டர் ஆஞ்சலா ஷூ கூறுகிறார். உஷ்ணமான அறைகளில் அடைந்து கிடப்பதே, வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் உடலின் திறமையை இழக்கச் செய்யலாம். இதன் காரணமாகவே தொற்றுகள், சோர்வு, தலைவலி போன்றவை தாக்க அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆனால், “மோசமான” வானிலையில் தவறாமல் பயிற்சி செய்வதால் வலுப்பெற்ற உடலை குளிர் அதிகம் தாக்காது, உடலின் உள்ளுரமும் அதிகரிக்கும்.
(g01 5/8)
தொல்லை தரும் மதிய இடைவேளைகள்
“ஆண் மகன்கள் நிறைந்த பிரிட்டனில் நோஞ்சான்களே மதிய உணவருந்துவார்கள் என்பதால் வேலை பித்தர்கள் மதிய உணவு சாப்பிடுவதே கிடையாது. அதற்கு பதிலாக உட்கார்ந்த இடத்திலேயே ஒரு சான்விட்ச் மட்டும் சாப்பிட விரும்புகின்றனர்” என லண்டனின் ஃபினான்ஷியல் டைம்ஸ் அறிவிக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்த சராசரி மனிதனின் “மதிய உணவு இடைவேளை” இப்போது 36 நிமிடம் மட்டுமே என சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. மதிய இடைவேளை மன அழுத்தத்தை குறைக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சில முதலாளிகளோ மதிய இடைவேளையிலும் கூட்டங்களை ஏற்பாடு செய்வதால் தொழிலாளர்களுக்கு ஓய்வே கொடுப்பதில்லை. “தொழிலாளிகளிடமிருந்து அதிகத்தை எதிர்பார்க்கும், நேரத்தை ‘பொன்னானதாக’ கருதும் சமுதாயத்தில் சிக்கியிருப்பதால் உணவு இடைவேளையை வெறுமனே வயிற்றை நிரப்புவதற்கான தேவையற்ற இடைவேளையாகவே அநேகர் கருதுகின்றனர்” என இந்த அறிக்கையை தயாரித்த ஆராய்ச்சி மையமான டேட்டாமானிட்டர் கூறுகிறது. டேட்டாமானிட்டரின் ஆராய்ச்சியாளரான சேரா நுன்னி மேலுமாக கூறுகிறார்: “நாம் உலக சந்தையில் போட்டி போடுகிறோம். ஆகவே, ‘அதை அப்புறம் செய்கிறேன்’ என சொல்வதற்கு வழியே இல்லை. அதை இப்பொழுதே செய்தாக வேண்டும்.”
(g01 5/22)
பிரிட்டனில் மதமாற்றம்
பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் எப்போதையும்விட இப்போது அதிவேகமாக மதம் மாறி வருகின்றனர், ஒவ்வொரு வாரமும் சுமார் 1,000 பேர் மாறுகின்றனர் என அறிக்கை செய்கிறது த சன்டே டெலிகிராஃப். “ஆங்கிலிக்கர்கள் ரோமன் கத்தோலிக்கர்களாகவும், ரோமன் கத்தோலிக்கர்கள் ஆங்கிலிக்கர்களாகவும், யூதர்கள் புத்தர்களாகவும், இஸ்லாமியர்கள் ஆங்கிலிக்கர்களாகவும், ரோமன் கத்தோலிக்கர்கள் யூதர்களாகவும் மாறுகின்றனர்.” இஸ்லாம், புத்த மதம், நியூ ஏஜ் இயக்கம், புறமதங்கள் ஆகியவற்றிற்கு மாறுகிறவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். “இந்த நாட்டில் இஸ்லாமிற்கு மாறிய 5,000 முதல் 10,000 வெள்ளையர்கள் உள்ளனர். அவர்களில் நான் அறிந்த பெரும்பாலானோர் முன்னாள் கத்தோலிக்கர்களே” என்கிறார் டாக்டர் அஹ்மத் ஆன்ட்ரூஸ்; இங்கிலாந்தின் டார்பீ பல்கலைக்கழகத்தை சேர்ந்த இவரும் இஸ்லாமிற்கு மாறியவர். புத்த மதத்திற்கு மாறுபவர்களில் 10 முதல் 30 சதவிகிதத்தினர் யூதர்களே. பெண்களை பாதிரிகளாக்க சர்ச் ஆஃப் இங்லண்ட் முடிவு செய்த பிறகு கத்தோலிக்கர்களாக மாறிய ஆங்கிலிக்கர்களின் எண்ணிக்கை உச்சநிலையை எட்டியது. “மக்கள் ஆவிக்குரிய வெறுமையை உணருவதால், தங்கள் மதத்திற்கும் வெளியே சென்று தேடுகின்றனர்” என ரபீயான ஜோனத்தன் ரோமேன் கூறுகிறார்.
(g01 5/22)
வாழ்க்கை முறையும் புற்றுநோயும்
“நீங்கள் யார் என்பதைவிட எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், உங்களுக்கு என்ன நேரிடுகிறது என்பதே புற்றுநோய் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம். ஏறக்குறைய 90,000 இரட்டையர்களை வைத்து செய்த ஆராய்ச்சி இதை நிரூபிக்கிறது” என லண்டனின் த கார்டியன் செய்தித்தாள் அறிவிக்கிறது. ஸ்வீடனின் காரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த டாக்டர் பால் லிக்டென்ஷ்டைன் இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவராக இருந்தார். “மரபணுவைவிட சுற்றுச்சூழலே அதிகம் பாதிக்கிறது” என அவர் கூறுகிறார். சுமார் 35 சதவிகித புற்றுநோய் ஏற்பட புகைபிடிப்பதும், மற்றொரு 30 சதவிகிதம் உணவு பழக்கத்தோடு சம்பந்தப்பட்டதாகவும் தோன்றுகிறது என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். விந்துசுரப்பி புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றிற்கு மரபணு கூறுகள் முக்கிய காரணம். என்றாலும் இங்கிலாந்து, ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள இம்பீரியல் கேன்சர் ரிசர்ச் ஃபண்டைச் சேர்ந்த டாக்டர் டிம் கே கூறும் அறிவுரை இதுவே: “உங்கள் பரம்பரையில் [கேன்சர்] . . . இருந்தாலும் நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்கள் என்பதே அதைவிட முக்கியம். நீங்கள் புகைபிடிக்கக்கூடாது, உணவு விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இவை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை வெகுவாய் குறைக்கின்றன.”
(g01 5/22)