Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தாத்தா பாட்டியோடு அதிக நெருக்கமாவது எப்படி?

தாத்தா பாட்டியோடு அதிக நெருக்கமாவது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

தாத்தா பாட்டியோடு அதிக நெருக்கமாவது எப்படி?

“என்னோட ரெண்டு தாத்தாக்களுமே நல்லா கதை சொல்லுவாங்க. என்னோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்க அவங்களோட கதைகள் எனக்கு உதவியா இருந்திருக்கு.”​—⁠ஜோஷுவா.

அநேக தலைமுறைகளைச் சேர்ந்த குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றாக, அதிலும் ஒரே வீட்டில் வாழ்வது ஒரு காலத்தில் சகஜமாக இருந்தது. அப்போது தாத்தா பாட்டிமாரோடு அன்னியோன்னியமாக பழகுவதும் சர்வசாதாரணமாக இருந்தது.

இப்போதோ இளைஞர் தங்கள் தாத்தா பாட்டிமாரிடமிருந்து வெகு தொலைவில் வசிக்கலாம். அதோடு, விவாகரத்தின் காரணமாகவும் அநேக குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன. “அவர்கள் நேசிக்கும் பேரப் பிள்ளைகளை கண் குளிர பார்க்க முடியாமல் போவதால் விவாகரத்தின் விளைவாக தாத்தா பாட்டிமாரும் பாதிக்கப்படலாம்” என த டோரன்டோ ஸ்டார் அறிக்கை செய்கிறது. மறுபட்சத்தில், சில இளைஞருக்கு முதியோரைப் பற்றி எதிர்மறையான எண்ணம் இருப்பதே பிரச்சினையாகும். அவர்கள் பழமையில் ஊறினவர்கள், இன்றைய தலைமுறையின் நோக்குநிலைகள், தராதரங்கள், விருப்பங்களுக்கு முற்றிலும் வேறுபட்ட கருத்தை உடையவர்கள் என நினைக்கின்றனர். அதன் விளைவு என்ன? அநேக இளைஞர் தங்கள் தாத்தா பாட்டிமாரோடு அவ்வளவு அன்னியோன்னியமாக பழகுவதே கிடையாது.

இது மிகவும் வருத்தகரமானது. ஏனெனில், தாத்தா பாட்டிமாரோடு நெருங்கிப் பழகுவது, அதிலும் அவர்கள் கடவுள் பயமுள்ளவர்களாக இருந்தால் அது மிகவும் சிறந்தது, பயனுள்ளது, அனுபவிக்கத்தக்கது என இந்தத் தொடரில் முன்னர் பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரை சுட்டிக்காட்டியது. a ரெபேக்கா என்ற டீனேஜ் பெண் தன் தாத்தா பாட்டியைப் பற்றி இவ்வாறு கூறுகிறாள்: “எங்களால ஒன்னா பேசி சிரிக்க முடியுது.” பீட்டர் என்ற இளைஞனும் பின்வருமாறு கூறுகிறான்: “என்னோட உணர்ச்சிகளையோ திட்டங்களையோ அவங்ககிட்ட பயப்படாம சொல்லுவேன். சில சமயங்கள்ல அப்பா அம்மாகிட்ட இருக்கிறதைவிட இவங்ககிட்ட ரொம்ப சகஜமா பழகுவேன். எதை பத்தி வேணாலும் என் தாத்தா பாட்டிகிட்ட பேச முடியும்னு நெனக்கிறேன்.”

நீங்கள் எப்படிப்பட்டவர்? சிறு வயதில் உங்கள் தாத்தா பாட்டியோடு நெருக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது வாலிபராக இருப்பதால் அவர்களோடு உள்ள நெருக்கத்தை அதிகரிக்க சமீபத்தில் எந்த முயற்சியுமே செய்யாமல் இருந்திருக்கலாம். இதுவே உண்மையென்றால், பைபிளில் 2 கொரிந்தியர் 6:11-13-⁠ல் (NW) உள்ள ஆலோசனையின் நியமத்தை இங்கும் பொருத்தலாம்; அதாவது அவர்களிடம் உங்களுக்குள்ள பாசத்தில் ‘விரிவடையுங்கள்.’ ஆனால், அதை எப்படி செய்வது என்ற கேள்வி எழலாம்.

முந்திக்கொண்டு முயற்சி செய்யுங்கள்

‘விரிவடையுங்கள்’ என்பது முந்திக்கொண்டு முயற்சி செய்வதைக் குறிக்கிறது. “நன்மை செய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே” என பைபிள் சொல்கிறதல்லவா? (நீதிமொழிகள் 3:27) நீங்கள் சிறு வயதாக இருக்கையில் தாத்தா பாட்டியோடு பழகும் விஷயத்தில் எதையும் செய்ய உங்களுக்கு “திராணி” இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது ஒரு வாலிபராக, ஒருவேளை இளமை பருவம் கடந்தவராக இருப்பதால் நீங்கள் செய்வதற்கு அநேக காரியங்கள் இருப்பதை உணருவீர்கள்.

உதாரணமாக, உங்கள் தாத்தா பாட்டி அருகில்தான் வசிக்கிறார்கள் என்றால் அவர்களை தவறாமல் சென்று சந்திப்பதை பழக்கமாக்கிக் கொள்ளலாம். அது போரடிக்கும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் வாயை திறக்காமல் அமைதியாக உட்கார்ந்திருந்தால் ஒருவேளை சுவாரசியமில்லாமல் இருக்கலாம். ஆகவே, ஒரு உரையாடலை தொடங்குங்கள்! எதைப் பற்றி பேசுவது என்று கேட்கிறீர்களா? பிலிப்பியர் 2:4-⁠ல் உள்ள பைபிளின் நியமம் உதவியாக இருக்கும். “அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என அது கூறுகிறது. அதாவது உங்கள் தாத்தா பாட்டி மீது அக்கறை காண்பியுங்கள். அவர்களுக்கு விருப்பமான விஷயங்களைப் பற்றி சொல்ல சொல்லுங்கள். அவர்கள் எவ்வாறு உணருகிறார்கள்? என்ன செய்திருக்கிறார்கள்? கடந்த காலத்தைப் பற்றி பேச அவர்கள் விரும்பலாம். ஆகவே, வாலிபராக இருக்கையில் வாழ்க்கை எப்படியிருந்தது என்று கேளுங்கள். அல்லது உங்களுடைய அப்பாவோ, அம்மாவோ வாலிபத்தில் எப்படியிருந்தார்கள் என்று கேளுங்கள்? உங்கள் தாத்தா பாட்டி கிறிஸ்தவர்களாக இருந்தால் எது அவர்களை பைபிள் சத்தியத்திடம் கவர்ந்திழுத்தது என கேளுங்கள்.

கடந்த கால குடும்ப சம்பவங்களின் நடமாடும் தகவல் களஞ்சியம் தாத்தா பாட்டிமாரே, அதோடு கவனத்தைக் கவரும் கதைகளை இனிக்க இனிக்க சொல்லி உங்களை சந்தோஷப்படுத்தவும் அவர்கள் நிச்சயம் தயாராக இருப்பார்கள். அவர்களோடு செலவுசெய்யும் நேரத்தை ஜாலியான ஆராய்ச்சியாகக்கூட நீங்கள் நினைக்க ஆரம்பிக்கலாம். உங்கள் தாத்தா பாட்டியை பேட்டி காண முயலுங்கள்; அப்போது அவர்கள் சொல்வதை எழுதிக்கொள்வது, ஆடியோ அல்லது வீடியோ கேசட்டில் பதிவு செய்வது போன்றவற்றையும் செய்யலாம். என்ன கேள்வி கேட்பது என்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் அப்பா அம்மாவின் உதவியோடு பொருத்தமான சில கேள்விகளை தயாரியுங்கள். உங்கள் தாத்தா பாட்டியை, உங்கள் அப்பா அம்மாவை, ஏன் உங்களையேகூட இன்னும் நன்றாக புரிந்துகொள்ள உதவும் அநேக விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ளலாம். “என்னோட ரெண்டு தாத்தாக்களுமே நல்லா கதை சொல்லுவாங்க. என்னோட உணர்ச்சிகளை புரிஞ்சுக்க அவங்களோட கதைகள் எனக்கு உதவியா இருந்திருக்கு” என்று ஜோஷுவா கூறுகிறான்.

உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் செய்யும் காரியங்களிலும்கூட உங்கள் தாத்தா பாட்டிக்கு அக்கறையிருப்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அவர்களிடம் கூறும்போது அவர்களையும் உங்கள் வாழ்க்கையின் பாகமாகும்படி அழைப்பு விடுக்கிறீர்கள். இது உங்களிடையே உள்ள நெருக்கத்தை நிச்சயம் அதிகரிக்கும். “பாட்டியும் நானும் ஒரு கடையில உக்காந்து டீ குடிச்சுக்கிட்டே நாங்க ரெண்டு பேரும் சமீபத்தில என்ன செஞ்சோம்கிறத பத்தி கதை பேசிட்டிருப்போம்” என்று பிரான்ஸிலுள்ள ஈகார் என்ற இளைஞன் கூறுகிறான்.

எதை சேர்ந்து செய்யலாம்?

சகஜமாக பேச ஆரம்பித்த பிறகு அவர்களோடு சேர்ந்து வேலைகளை செய்ய நீங்கள் முயலலாம். கொஞ்சம் முன்யோசனை இருந்தாலே போதும் அவர்களோடு சேர்ந்து செய்ய அநேக காரியங்கள் இருப்பதை காண்பீர்கள். “சமைக்க, உணவை பதனிட, கேக் வகைகள் செய்ய, செடி வளர்க்க, தோட்ட வேலை செய்ய என்னோட ரெண்டு பாட்டியுமே எனக்கு கத்துக்குடுத்தாங்க” என தாரா என்ற இளம் பெண் கூறுகிறாள். குடும்பமாக கூடிவருகையிலும் ஊருக்கு செல்கையிலும் ஏமீ தன் தாத்தா பாட்டியோடு சேர்ந்து செல்கிறாள். அவர்களுடைய வயதைப் பொருத்து சில தாத்தா பாட்டிமார் அதிக சுறுசுறுப்பாக இருப்பர். ஏரன் தன் பாட்டியோடு கால்ஃப் விளையாட விரும்புகிறான். ஜோஷுவா தன் தாத்தாக்களோடு சேர்ந்து மீன் பிடிப்பதிலும் வீட்டில் ரிப்பேர் வேலைகளை செய்வதிலும் ஈடுபடுகிறான்.

உங்கள் தாத்தா பாட்டி யெகோவாவை வணங்குபவர்கள் என்றால் அவர்களோடு சேர்ந்து கடவுளுடைய வணக்கத்தின் பல்வேறு அம்சங்களில் பங்குபெறுவது, முக்கியமாய் பைபிளைப் பற்றி மற்றவர்களோடு பேசுவது அதிக சந்தோஷம் அளிக்கலாம். ஈகாருக்கு தன் பாட்டியோடு சேர்ந்து போலந்தில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. “அது நாங்க சேர்ந்து அனுபவிச்ச மறக்க முடியாது அனுபவம். அதப் பத்தி இப்பவும் பேசி சந்தோஷப்படுவோம்” என்று அவன் கூறுகிறான். தாத்தா பாட்டிமார் எல்லாருமே இதைப் போல சுறுசுறுப்பாக இருக்க முடியாது என்பது உண்மையே. என்றாலும், அவர்களோடு சேர்ந்து நேரத்தை செலவிடுவது மிகவும் பிரயோஜனமானது.

ஓர் ஆவிக்குரிய சொத்து

பைபிள் காலங்களில் லோவிசாள் என்ற பெண்மணி, மிகச் சிறந்த தேவ ஊழியக்காரனாகும்படி தன் பேரன் தீமோத்தேயுவிற்கு உதவினார். (2 தீமோத்தேயு 1:5) இன்றும் அநேக கிறிஸ்தவ தாத்தா பாட்டிமார் அதைப் போலவே செய்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஜோஷுவா தன் தாத்தா பாட்டியைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்: “நான் பிறக்குறதுக்கு முன்னாடிலேர்ந்தே அவங்க யெகோவாவை வணங்கி வந்திருக்காங்க. அதனால, என்னோட தாத்தா பாட்டியா மட்டுமில்ல உத்தமத்தை காத்துக்கொண்டவங்களா அவங்க மேல எனக்கு அதிக மரியாதை இருக்கு.” ஏமீ கூறுவதாவது: “நான் யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்யறத பாக்கும்போது அவங்களுக்கு ரொம்ப உற்சாகமாவும் சந்தோஷமாவும் இருக்குன்னு என்னோட தாத்தா பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க. ஆனா, யெகோவாகிட்ட அவங்களுக்கு இருக்கிற வைராக்கியத்தையும் பயனியர்களா [முழுநேர பிரசங்கிகள்] அவங்களோட அருமையான முன்மாதிரியையும் பாக்கும்போது என்னோட பயனியர் ஊழியத்தை தொடர்ந்து செய்ய எனக்கு உற்சாகம் கிடச்சிருக்கு.”

“படிச்சு முன்னேறனும்னு என்னை ரொம்ப உற்சாகப்படுத்தியது” பாட்டிதான் என்று கிரிஸ் கூறுகிறான். அவன் தொடர்ந்து சொல்கிறான்: “‘யெகோவாவுக்கு நம்மால முடிஞ்ச மிகச் சிறந்ததை செய்யனும்’னு அவங்க சொன்னதை நான் மறக்கவே மாட்டேன்.” பெட்ரோ ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைய வளர அவனுடைய தாத்தா பாட்டி பெரிதும் உதவியிருக்கின்றனர். “அவங்களோட அனுபவம் எனக்கு ரொம்ப உதவியா இருந்திருக்கு. என்னோட தாத்தா பாட்டி எப்போதுமே என்னை வெளி ஊழியத்துக்கு கூட்டிக்கிட்டு போவாங்க, அதை நான் ரொம்ப மதிக்கிறேன்” என்கிறான் அவன். கடவுள் பயமுள்ள தாத்தா பாட்டியோடு நெருங்கி பழகுவது கடவுளை இன்னும் முழுமையாக சேவிக்க உங்களுக்கு நிச்சயம் உதவும்.

தொலைவில் வசிக்கும் தாத்தா பாட்டிமார்

உங்கள் தாத்தா பாட்டி ரொம்ப தூரத்தில் இருந்தால் என்ன செய்வது? கூடுமானால் தவறாமல் சந்திக்க முயலுங்கள். அதற்கிடையில், அவர்களோடு தொடர்பு கொள்ளும் வழிகளை தேடுங்கள். ஓர்னானுக்கு தன் தாத்தா பாட்டியை வருடத்திற்கு மூன்று முறைதான் சந்திக்க முடியும், ஆனாலும் “ஞாயிற்றுக் கிழமையானா தவறாம அவங்களுக்கு ஃபோன் பண்ணுவேன்” என்று சொல்கிறான். தன் தாத்தா பாட்டியிடமிருந்து தொலைவில் வசிக்கும் தாரா இவ்வாறு கூறுகிறாள்: “அவங்களுக்கு என் மேல அக்கறை ஜாஸ்தி. அதனால அநேகமா ஒவ்வொரு வாரமும் ஃபோன்ல பேசிக்குவோம் அல்லது ஈ-மெயில் அனுப்பிக்குவோம்.” தொலைபேசியும் ஈ-மெயிலும் உதவி அளிப்பவைதான் என்றாலும், பழைய பாணியான கையால் எழுதும் கடிதத்தின் சக்தியை குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள்! சிறு வயது முதல் தாங்கள் எழுதிய ஒவ்வொரு கடிதத்தையும் தங்கள் தாத்தா பாட்டிமார் பத்திரமாக வைத்திருப்பதைக் கண்டு அநேக இளைஞர் வாய்பிளந்து நின்றிருக்கின்றனர். கடிதங்களை திரும்பத் திரும்ப வாசிக்கலாம், அன்போடு பாதுகாத்து வைக்கலாம். ஆகவே, கடிதம் எழுத மறக்காதீர்கள்!

தாத்தா பாட்டிமாருக்கு எப்போதுமே தங்கள் பேரப் பிள்ளைகளிடம் தனிப்பட்ட பாசம் உண்டு. (நீதிமொழிகள் 17:6) உங்கள் தாத்தா பாட்டி அருகில் வாழ்ந்தாலும் சரி தொலைவில் வாழ்ந்தாலும் சரி, அவர்களோடு நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அதை தொடர்ந்து வளர்க்க அநேக வழிகள் உள்ளன. ஆகவே, தயவுசெய்து கொஞ்சம் முயற்சி எடுத்து அதை செய்யுங்கள்.(g01 5/22)

[அடிக்குறிப்பு]

a மே 8, 2001, தேதியிட்ட இதழில் “இளைஞர் கேட்கின்றனர் . . . ஏன் தாத்தா பாட்டியோடு பழக வேண்டும்?” என்ற கட்டுரையைக் காண்க.