பயங்கரவாதத்தின் புதிய முகம்
பயங்கரவாதத்தின் புதிய முகம்
“பயங்கரவாதத்தைப் பற்றிய கட்டுரை கடந்த முறை இந்த இதழில் வெளிவந்தபோது நமக்கு மிகவும் பரிச்சயமான முகம் அட்டைப்படத்தில் போடப்பட்டிருந்தது—அதாவது, கையில் துப்பாக்கியுடன் முகமூடியணிந்த கொலையாளிகள், பின்னணியில் பயங்கர குண்டுவெடிப்பு. ஆனால் இப்பொழுதெல்லாம் அந்தத் தோற்றம் மாறிவிட்டது.
வைகறை மெல்லொளி, ஆங்காங்கே உறங்கிக்கொண்டிருக்கும் மாடி வீடுகள், நிசப்தமாக ஊர்ந்து செல்கின்றன சில டிரக்குகள். அவை ஒரு பள்ளிக்கூடத்தின் பக்கத்தில் நிற்கின்றன. உடனடியாக, விஷவாயு முகமூடிகளும் ரசாயன பாதுகாப்பு உடைகளும் அணிந்த விசேஷ பயிற்சிபெற்ற ஒரு குழுவினர் புதர்களுக்குள் கஷ்டப்பட்டு செல்கிறார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இதுதான்: விளையாட்டு நிகழ்ச்சியின்போது பள்ளி திடலில் வெடிகுண்டை வெடிக்க வைத்து, பார்வையாளர்கள் பலரை மயக்கமடையச் செய்யும் புகையை பரப்புவதற்கு ஒரு சிறிய வெடிக்கும் சாதனம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் எமர்ஜென்ஸி பணியாளர்களுடைய உதவியோடு, என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட இடத்திற்குள் ஜாக்கிரதையாக நுழைகின்றனர் அந்த நான்கு மனிதர்கள். அந்தக் கருவி எதை வெளியிட்டது? ஆன்த்ராக்ஸையா? விஷ வாயுவையா?
அந்த மனிதர்கள் பூனைபோல் அந்த இடத்திற்குள் மெதுவாக நடந்துசெல்கின்றனர். இரசாயன பரிசோதனை கருவிகளையும் எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் ஒரு சிறிய அறையை அடைகின்றனர், அங்கே வெடித்த சாதனத்தின் உதிரி பாகங்களை கண்டுபிடிக்கின்றனர். அவர்களுடைய பணி சிக்கலானது, அவர்கள் நுண்ணிய ஆய்வுக் கருவிகளை பயன்படுத்த வேண்டும், அதேசமயம் பெரிய பெரிய சாதனங்களையும் நகர்த்த வேண்டும்.
சீக்கிரத்தில் அவர்கள் அணிந்திருந்த முகமூடியில் வியர்வை படிகிறது. பயிற்சிபெற்ற அவர்களுக்கே அந்த வேலை சவாலாக இருக்கிறது. ஆனால் மீந்திருந்தவை என்ன என்பதை பத்து நிமிடங்களுக்குள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். “சாட்சாத் ஆன்த்ராக்ஸ்தான்” என அவர்களுடன் சென்ற வேதியியலாளர் உறுதிப்படுத்துகிறார்.
பயங்கரவாதம்—மாறிவரும் முகம்
நீங்கள் மேலே படித்த திகிலூட்டும் சம்பவம் நிஜமான ஒன்றல்ல. இது பயிற்சிக்காக நிகழ்த்தப்பட்ட சம்பவம்தான். நியூ யார்க்கில் ஓரிடத்தில் விஷ வாயுவை கசியவிட்டு அதற்கு இந்தக் குழுவினர் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பரிசோதிப்பதற்கு நடத்தப்பட்ட ஒரு சோதனைதான் இது. பெரும் நாசத்தை ஏற்படுத்துவதற்கு பயங்கரவாதிகள் ஆயுதங்களை பயன்படுத்துவதை தடுப்பதற்கு
ஸ்தாபிக்கப்பட்ட சிவில் சப்போர்ட் குழுக்களில் (Weapons of Mass Destruction Civil Support Teams) ஒன்றுதான் இந்தக் குழு. நுண்ணுயிரிகள், ரசாயனங்கள், அல்லது கதிரியக்கப் பொருள்கள் போன்ற சந்தேகத்திற்குரிய பொருட்களை பரிசோதிப்பதன் மூலம் பயங்கரவாத தாக்குதல்கள் சம்பந்தமான புதுப்புது முறைகளையும் அதன் சேதத்தையும் மதிப்பிடுவதற்கு இப்படிப்பட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.பயங்கரவாதத்தால் a வரும் புதுப்புது அச்சுறுத்தல்களையும் சவால்களையும் சந்திப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட உலகளாவிய குழுக்கள் பலவற்றில் இந்தக் குழுவும் ஒன்று. சுயேச்சை தொகுதிகளுடைய அல்லது தீவிரவாதிகளுடைய பயங்கரங்கள் அதிகரித்து வருவதை சமீப வருடங்களில் நடந்த சம்பவங்கள் பறைசாற்றுகின்றன. பயங்கரவாதிகள் பலர் இன்னும் ராணுவ தளங்களையும் அரசு தூதரகங்களையும் குறி வைக்கிறபோதிலும், சிலர் அதிக பாதுகாப்பில்லாத இடங்களையும் அதாவது, பொது போக்குவரத்தையும் விளையாட்டு அரங்கங்களையும் சந்தடிமிக்க நகரங்களையும் ஹோட்டல்களையும் சுற்றுலா தலங்களையும் தாக்குதலுக்குரிய தங்களுடைய பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.
பயங்கரவாதிகளுடைய நடத்தையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை உறுதிப்படுத்தி, யு.எஸ். ஹவுஸ் இன்டெலிஜன்ஸ் கமிட்டியின் தலைவர் போர்ட்டர் கோஸ் இவ்வாறு கூறினார்: “அரசாங்கங்களால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தைப் பற்றிய நம்முடைய பழைய எண்ணத்திலிருந்து பயங்கரவாதத்தின் புதிய முகத்திற்கு நாம் மாற வேண்டும். இலட்சியத்திற்காக இயங்கும் பயங்கரவாதத்தை நாம் அதிகமதிகமாக எதிர்ப்படுகிறோம்.”
தடுப்பதற்கு அல்லது சண்டையிடுவதற்கு கடினமான செயல்களையும் தந்திரங்களையும் பயங்கரவாதத்தின் புதிய முகம் பயன்படுத்துகிறது. பயங்கரவாதிகள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதும் சுயமாக பண முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. யுஎஸ்ஏ டுடே இவ்வாறு அறிக்கை செய்கிறது: “கம்ப்யூட்டர் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களின் புதுப்புது தொழில்நுட்பமும் நிழல் உலக ஆட்களுடன் தொடர்பும் பயங்கரவாதத்தை முறியடிப்பதை இன்னும் அதிக கடினமாக்குகின்றன.” இந்தப் புதிய முகம் என்பது புதிய இலக்குகளையும் உட்படுத்துகிறது. இது, பத்திரிகையாளர்களும் செய்தியை ஆராய்பவர்களும் “சைபர்-பயங்கரவாதம்” (cyber-terrorism) “உயிரியல் பயங்கரவாதம்” (bioterrorism) “சூழியல் பயங்கரவாதம்” (ecoterrorism) போன்ற புதுப்புது வார்த்தைகளை கண்டுபிடிக்க தூண்டியிருக்கிறது.
பயங்கரவாதத்தின் புதிய முகம் எந்தளவுக்கு பீதியுண்டாக்குகிறது? உங்களுடைய தனிப்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தப்படுகிறதா? சர்வதேச பயங்கரவாதம் எனும் இந்தப் பிரச்சினைக்கு பரிகாரமுண்டா? இந்தக் கேள்விகளுக்கு பின்வரும் கட்டுரைகள் ஓரளவு விளக்கமளிக்கின்றன. (g01 5/22)
[அடிக்குறிப்பு]
a பயங்கரவாதம் என்றால் எதையெல்லாம் உட்படுத்துகிறது என்பதில் கருத்துக்கள் மிகவும் மாறுபடுகின்றன. உதாரணமாக, உள்நாட்டு சண்டையால் பிளவுபட்டிருக்கும் நாடுகளில், ஒரு கோஷ்டி மற்றொரு கோஷ்டிக்கு எதிராக செய்யும் வன்முறை செயல்கள், அந்தந்த சாராரைப் பொறுத்து, சட்டப்பூர்வ போர்ச் செயல்கள் என்றோ அல்லது பயங்கரவாதம் என்றோ கருதப்படலாம். இந்தத் தொடர் கட்டுரைகளில், “பயங்கரவாதம்” என்ற வார்த்தை, பொதுவாக வற்புறுத்தி அடிபணிய வைப்பதற்கு வன்முறையை பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
[பக்கம் 4, 5-ன் பெட்டி/தேசப்படம்]
(For fully formatted text, see publication)
பத்தாண்டு கால பயங்கரவாதம்
1. போனஸ் அயர்ஸ், அர்ஜன்டினா
மார்ச் 17, 1992
வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த ஒரு கார் இஸ்ரேல் தூதரகத்தை தகர்க்கிறது. கொல்லப்பட்டோர்: 29. காயமடைந்தோர்: 242
2. அல்ஜியர்ஸ், அல்ஜீரியா
ஆகஸ்ட் 26, 1992
சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது. கொல்லப்பட்டோர்: 12. காயமடைந்தோர்: குறைந்தபட்சம் 128
3. நியூ யார்க் நகரம், ஐக்கிய மாகாணங்கள்
பிப்ரவரி 26, 1993
உலக வர்த்தக மையத்திற்கு கீழே மத வெறியர்கள் பெரும் வெடிகுண்டை வெடிக்கச் செய்கிறார்கள். கொல்லப்பட்டோர்: 6. காயமடைந்தோர்: சுமார் 1,000
4. மாட்சுமோட்டோ, ஜப்பான்
ஜூன் 27, 1994
குடியிருப்பு பகுதிக்குள் ஆம் ஷின்ரிகியோ தொகுதியினர் விஷ வாயுவை பரப்புகின்றனர். கொல்லப்பட்டோர்: 7. பாதிக்கப்பட்டோர்: 270
5. டோக்கியோ, ஜப்பான்
மார்ச் 20, 1995
ஆம் ஷின்ரிகியோ அங்கத்தினர்கள் ஆறு பைகளை டோக்கியோ சப்வே ரெயில்களுக்குள் கொண்டுசென்று, விஷ வாயுவை வெளிவிடுகின்றனர். கொல்லப்பட்டோர்: 12. பாதிக்கப்பட்டோர்: 5,000-க்கும் அதிகம்
6. ஓக்லகாமா நகரம், ஐக்கிய மாகாணங்கள்
ஏப்ரல் 19, 1995
கூட்டரசு கட்டிடத்தில் ஒரு டிரக் வெடிகுண்டு வெடிக்கிறது. வலது சாரி தீவிரவாதிகள் குற்றம்சாட்டப்படுகிறார்கள். கொல்லப்பட்டோர்: 168. காயமடைந்தோர்: 500-க்கும் அதிகம்
7. கொழும்பு, இலங்கை
ஜனவரி 31, 1996
இன பயங்கரவாதிகள், வெடிகுண்டுகள் நிறைந்த ஒரு டிரக்கை வேகமாக ஓட்டிச் சென்று பேங்க் மீது மோதுகிறார்கள். கொல்லப்பட்டோர்: 90. காயமடைந்தோர்: 1,400-க்கும் அதிகம்
8. லண்டன், இங்கிலாந்து
பிப்ரவரி 9, 1996
அயர்லாந்து நாட்டு பயங்கரவாதிகள், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்கிறார்கள். கொல்லப்பட்டோர்: 2. காயமடைந்தோர்: 100-க்கும் அதிகம்
9. ஜெரூசலம், இஸ்ரேல்
பிப்ரவரி 25, 1996
மனித வெடிகுண்டு ஒரு பேருந்தை தகர்க்கிறது. மத தீவிரவாதிகள் சந்தேகிக்கப்படுகிறார்கள். கொல்லப்பட்டோர்: 26. காயமடைந்தோர்: சுமார் 80 பேர்
10. தாரன், சவூதி அரேபியா
ஜூன் 25, 1996
ஐ.மா. ராணுவ வீட்டுவாரிய வளாகத்திற்கு வெளியே வெடிகுண்டை கொண்டு சென்ற எரிபொருள் டிரக் ஒன்று வெடிக்கிறது. கொல்லப்பட்டோர்: 19. காயமடைந்தோர்: 515
11. நாம் பென், கம்போடியா
மார்ச் 30, 1997
ஆர்ப்பாட்டம் நடத்திய கூட்டத்திற்குள் நான்கு கை-வெடிகுண்டுகளை பயங்கரவாதிகள் தூக்கி வீசுகின்றனர். கொல்லப்பட்டோர்: 16 பேர் வரை. காயமடைந்தோர்: 100-க்கும் அதிகம்
12. கோயம்புத்தூர், இந்தியா
பிப்ரவரி 14, 1998
மத தீவிரவாதிகளால் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நடத்தப்படுகின்றன. கொல்லப்பட்டோர்: 43. காயமடைந்தோர்: 200
13. நைரோபி, கென்யா, தார் எஸ் சலாம், டான்ஜானியா
ஆகஸ்ட் 7, 1998
ஐ.மா. தூதரக அலுவலகங்கள் குண்டு வைத்து தாக்கப்படுகின்றன. கொல்லப்பட்டோர்: 250. காயமடைந்தோர்: 5,500-க்கும் அதிகம்
14. கொலம்பியா
அக்டோபர் 18, நவம்பர் 3, 1998
ஒன்று வெடிகுண்டு தாக்குதல், மற்றொன்று ஏவுகணைகள் தாக்குதல். எண்ணெய் குழாயே முதல் தாக்குதலின் குறி. கொல்லப்பட்டோர்: 209. காயமடைந்தோர்: 130-க்கும் அதிகம்
15. மாஸ்கோ, ரஷ்யா
செப்டம்பர் 9, 13, 1999
இரண்டு பெரும் வெடிகுண்டுகள் இரு அபார்ட்மென்ட்களை தகர்க்கின்றன. கொல்லப்பட்டோர்: 212. காயமடைந்தோர்: 300-க்கும் அதிகம்
[படங்களுக்கான நன்றி]
தகவல்மூலம்: தி இன்டர்டிஸிப்ளனரி சென்டர், ஹெர்சிலியா, இஸ்ரேல்
Mountain High Maps® Copyright © 1997 Digital Wisdom, Inc.
Victor Grubicy/Sipa Press
[பக்கம் 6-ன் பெட்டி/படம்]
சைபர் தாக்குதல்கள்
மார்ச் 1999: அத்துமீறி நுழைபவர்களால் பென்டாகன் கம்ப்யூட்டர்கள் “ஒருங்கிணைந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட” தாக்குதலுக்கு ஆளாகின்றன என்பதை அறிக்கைகள் காட்டுகின்றன. கம்ப்யூட்டர்களை கோளாறாக்குவதில் கில்லாடிகள் ஒவ்வொரு நாளும் 60 முதல் 80 தாக்குதல்கள் நடத்துவது ஐ.மா. ராணுவ துறையின் கம்ப்யூட்டர் சிஸ்டம்களில் பதிவாகிறது.
1999 மத்திபத்தில்: மூன்று மாத காலத்திற்குள், ஐ.மா. சட்ட மன்றம், ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன், ஐ.மா. ராணுவம், வெள்ளை மாளிகை, ஐக்கிய மாகாணங்களிலுள்ள பல்வேறு அமைச்சரவை துறைகள் ஆகியவற்றால் பாதுகாக்கப்படும் வெப் தளங்களுக்குள் அரசாங்கத்திற்கு விரோதமாக செயல்படும் கம்ப்யூட்டர் கில்லாடிகள் சட்ட விரோதமாக நுழைகிறார்கள்.
ஜனவரி 2000: தீங்கிழைக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்கள் வடிவில் வந்த “பொருளாதார பயங்கரவாதத்தை” (economic terrorism) எதிர்த்துப் போராடுவதற்கு கடந்த ஆண்டில் உலக முழுவதும் 1,210 கோடி டாலர் செலவழிக்கப்பட்டதாக வியாபார வட்டாரங்கள் அறிக்கை செய்கின்றன.
ஆகஸ்ட் 2000: பிரிட்டிஷ் கூட்டரசில் உள்ள அரசாங்க ஏஜென்ஸி மற்றும் உள்ளூர் அதிகாரத்தின் வெப் தளங்களுக்குள் கம்ப்யூட்டர் கில்லாடி நுழைகிறான்.