Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பயங்கரவாதம் அச்சுறுத்தலை எதிர்ப்படுதல்

பயங்கரவாதம் அச்சுறுத்தலை எதிர்ப்படுதல்

பயங்கரவாதம் அச்சுறுத்தலை எதிர்ப்படுதல்

பயங்கரவாதம் 1980-களின் பிற்பகுதியில் படுத்துவிட்டதைப் போல் தோன்றியது. ஆனால் புதுவகை பயங்கரவாதம் எழும்பியிருக்கிறது. இன்றைய பயங்கரவாத அச்சுறுத்தல் முக்கியமாக தீவிரவாதிகளிடமிருந்து பிறக்கிறது, இவர்கள் சொந்தமாகவே நெட்வொர்க்குகளை​—⁠போதைப்பொருட்கள் கடத்தல், சொந்த வியாபாரம், சொந்த செல்வம், தர்ம ஸ்தாபனங்கள், உள்ளூர் நிதி ஆதரவு ஆகியவற்றின் மூலம்​—⁠ஸ்தாபித்திருக்கிறார்கள். என்றும் இல்லாத அளவு ஈவிரக்கமின்றி தொடர்ந்து செயல்படுகிறார்கள்.

பைத்தியக்காரத்தனமான பயங்கரவாத செயல்கள் சமீப வருடங்களில் படையெடுத்தன. நியூ யார்க் நகரத்திலுள்ள உலக வர்த்தக மையம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது, அது 6 பேருக்கு சமாதிகட்டிவிட்டது, சுமார் 1,000 பேரை காயப்படுத்திவிட்டது. டோக்கியோ சுரங்கப்பாதையில் ஆபத்தான மதப்பிரிவு ஒன்று விஷ வாயுவை (sarin nerve gas) வெளியிட்டது. இதனால் 12 பேர் பலியானார்கள், 5,000-⁠க்கும் அதிகமானோர் காயமுற்றார்கள். டிரக்கில் வெடிகுண்டை வைத்து ஓக்லகாமா நகரத்திலுள்ள கூட்டரசு கட்டிடத்தை பயங்கரவாதி ஒருவன் தாக்கினான். 168 பேர் இறந்துபோனார்கள், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தார்கள். 4-⁠ம், 5-⁠ம் பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் காட்டுகிறபடி, இப்பொழுது வரை பயங்கரவாதிகளுடைய பல்வகை “சாகசங்கள்” அரங்கேறி வந்திருக்கின்றன.

பொதுவாக, முன்பைவிட பயங்கரவாதிகள் இப்பொழுது தங்களுடைய இயல்பை அதிக பகட்டாக காட்டிக்கொள்வதாக தெரிகிறது. அதிகம் பேரை கொலை செய்வதன் மூலம் தன்மீது கவனத்தை திருப்புவதே தன்னுடைய திட்டம் என 1995-⁠ல் ஓக்லகாமா நகர கூட்டரசு கட்டிடத்தை தகர்ப்பதற்கு வெடிகுண்டு வைத்த குற்றவாளி கூறியதாக சொல்லப்படுகிறது. 1993-⁠ல் நியூ யார்க் நகர உலக வர்த்தக மையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்ததற்கு காரணமான ஒரு கூட்டத்தின் தலைவன், ஒரு கட்டிடத்தை மற்றொரு கட்டிடத்தின் மீது சாய்த்து, இரண்டு கட்டிடத்திலிருந்த அனைவரையும் கொலை செய்ய விரும்பினான்.

பயங்கரவாதிகளுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு புதுப்புது ஆயுதங்கள் கிடைக்கின்றன. பயங்கரவாத நிபுணர் இளைய லூயிஸ் ஆர். மிஷெல் இவ்வாறு கூறினார்: “கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு வெறியும் ஒட்டுமொத்தமான அழிவை உண்டாக்கும் கருவிகளும் நிறைந்த​—⁠அணு ஆயுதங்கள், ரசாயன ஆயுதங்கள், உயிரியல் ஆயுதங்கள் நிறைந்த​—⁠ஒரு சகாப்தத்தில் நாம் வாழ்கிறோம்.” அதிக கவனத்தைப் பெற விரும்பும் தீவிரவாதிகள் இன்றைய தொழில்நுட்பம் உருவாக்கியிருக்கும் மிகப் பயங்கரமான ஆயுதங்கள் பக்கமாக திரும்புகிறார்கள்.

கம்ப்யூட்டர் மூலம் தாக்குதல்

கம்ப்யூட்டர் போன்ற நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தாக்குவதில் சைபர்-பயங்கரவாதம் என அழைக்கப்படுவதும் உட்பட்டிருக்கிறது. ஓர் ஆயுதம்தான் கம்ப்யூட்டர் வைரஸ், அது டேட்டாக்களை சாப்பிட்டுவிடுகிறது அல்லது கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்கிவிடுகிறது. “லாஜிக் பாம்ஸ்” என்பதும் இருக்கின்றன; கம்ப்யூட்டர்களால் செய்ய முடியாததை செய்ய முயற்சிக்க வைத்து அவற்றை முட்டாளாக்குகின்றன, இவ்வாறு அவற்றை செயல்படாமல் போகச் செய்கின்றன. தேசத்தின் பொருளாதாரமும் பாதுகாப்பும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகளையே அதிகமதிகமாக நம்புவதால், இப்படிப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பொதுமக்கள் பலர் பலியாவார்கள் என அநேகர் கருதுகிறார்கள். பெரும்பாலான ராணுவங்கள் அணு ஆயுதப் போரின்போதும்கூட தொடர்ந்து தொடர்புகொள்ளக்கூடிய கம்ப்யூட்டர் சிஸ்டம்களை வைத்திருக்கின்றன; ஆகவே, படைத்துறை சாரா அமைப்புகளே​—⁠அதாவது, மின்சார சப்ளைகள், போக்குவரத்து, பொருளாதார சந்தைகள் போன்றவையே​—⁠நாசம் செய்யப்படும் அபாயத்தில் இருக்கின்றன.

சிலகாலங்களுக்கு முன்பு, ஒரு பயங்கரவாதி பெர்லினை இருள் வெள்ளத்தில் மூழ்கடிக்க விரும்பினால், மின்சார அமைப்பு முறையை நாசப்படுத்துவதற்கு அந்த நிறுவனத்தில் ஓர் வேலையாளாக சேர முயற்சி செய்திருக்கலாம். ஆனால் இன்றோ, கம்ப்யூட்டர்களை கோளாறாக்குவதில் கில்லாடி ஒருவன் உலகின் மறுமுனையில் இருக்கும் ஒரு குக்கிராமத்தில் தன்னுடைய வீட்டில் செளகரியமாக இருந்துகொண்டு அந்த நகரத்தை இருட்டாக்க முடியும் என சிலர் சொல்கிறார்கள்.

சிலகாலத்திற்கு முன்பு, கம்ப்யூட்டர்களை கோளாறாக்குவதில் கில்லாடி ஒருவன் ஸ்வீடனிலிருந்து ஃப்ளாரிடாவிலுள்ள கம்ப்யூட்டர் சிஸ்டத்திற்குள் புகுந்து, எமர்ஜென்ஸி சர்வீஸ் சிஸ்டத்தை ஒரு மணிநேரத்திற்கு இயங்காமல் செய்துவிட்டான். இதனால் போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் போன்ற துறைகள் செயல்படுவதை தடை செய்தான்.

“சொல்லப்போனால், போலீஸ் இலாகா இல்லாத ஓர் உலக கிராமத்தை நாம் உருவாக்கிவிட்டோம்” என ஃபிராங்க் ஜே. சில்லுஃபோ கூறினார். இவர் போர்த்திறம் மற்றும் சர்வதேச ஆராய்ச்சி மையத்தின் தகவல் போர் சேனை (Information Warfare Task Force of the Center for Strategic and International Studies [CSIS]) இயக்குநராக பணிபுரிகிறார். 1997-⁠ல், CSIS முதுநிலை ஆலோசகராகிய ராபர்ட் கூப்பர்மேன் இவ்வாறு கூறினார்: பயங்கரவாதிகள் உயர் தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்தினால், “அவர்களுடைய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து சமாளிக்கும் எந்தவொரு அரசாங்க ஏஜென்ஸியும் தற்போது இல்லை.”

பாதுகாப்பு படையினர் பயன்படுத்தும் எந்த பாதுகாப்பு கருவிகளையும் மிஞ்சும் அளவுக்கு கம்ப்யூட்டர் பயங்கரவாதிகளிடம் தொழில்நுட்ப கருவிகள் இருக்கின்றன என ஆய்வாளர்கள் சிலர் நம்புகின்றனர். “சரியான வைரஸை விதைக்கும் அல்லது சரியான கம்ப்யூட்டர் டெர்மினலை அடையும் ஓர் பயங்கரவாதி பேரளவான ஆபத்தை விளைவிக்கக்கூடும்” என ஐ.மா. மத்திய புலனாய்வு துறை இயக்குநராகிய ஜார்ஜ் டெனட் கூறினார்.

பயங்கரம்​—⁠ரசாயனங்கள், நுண்கிருமிகள் மூலம்

ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் (biological weapons) பயன்படுத்தப்படுவதும் கவலையளிக்கிறது. 1995-⁠ம் ஆண்டு ஆரம்பத்தில், டோக்கியோ சுரங்கப் பாதையில் பயங்கரவாதிகள் விஷவாயு வைத்து தாக்கியதை கேள்விப்பட்டபோது இந்த உலகம் அதிர்ச்சியடைந்தது. இந்தச் சம்பவத்திற்கு காரணம் ஒரு ‘அப்போகலிப்டிக் செக்ட்’ என சொல்லப்பட்டது.

“பயங்கரவாதம் மாறிவிட்டது” என ராணுவ ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பிராட் ராபர்ட்ஸ் கூறுகிறார். “பாரம்பரிய பயங்கரவாதிகள் அரசியல் ஆதாயத்தை விரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, தங்களுடைய முக்கிய இலக்கு ஒட்டுமொத்த கொலை என சில தொகுதியினர் கூறுகிறார்கள். அதனால் உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்வது பயங்கரவாதிகளுக்கு கவர்ச்சியானதாக இருக்கிறது.” இப்படிப்பட்ட ஆயுதங்களை வாங்குவது கடினமா? சயன்டிஃபிக் அமெரிக்கன் என்ற பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “பியரை புளிக்க வைக்கும் கருவியும் புரோட்டீன் நிறைந்த பொருட்களும் விஷவாயு முகமூடியும் பிளாஸ்டிக் மேலங்கியும் இருந்தாலே தனக்கு எந்தப் பாதிப்புமின்றி கோடிக்கணக்கான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்ய முடியும்.” நுண்ணுயிரிகளை உற்பத்தி செய்துவிட்டால், அவற்றை வெளிவிடுவது மிக மிகச் சுலபம். இப்படிப்பட்ட ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருப்பதே பலியாகிறவர்களுக்கு இரண்டொரு நாட்களுக்கு தெரியாது. அதற்குள் காலம் மிகவும் கடந்துவிடும்.

பெரும்பாலும் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுவது ஆன்த்ராக்ஸ் (கால்நடைகளுக்கு உருவாகும் ஒருவகை நச்சுப் பரு) என சொல்லப்படுகிறது. இந்த வியாதிக்குரிய ஆங்கில பெயர் நிலக்கரிக்கு பயன்படுத்தப்படும் கிரேக்க வார்த்தையிலிருந்து வருகிறது. ஆன்த்ராக்ஸ் தொற்றிய கால்நடையை தொடுகிறவருக்கு புண் மீது உண்டாகும் கருப்பு பொடுகு போல தோலில் உண்டாகும். இதை தடுப்பதற்கு முயலுபவர்கள் இந்த நச்சுக் கிருமிகளை சுவாசிப்பதால் உண்டாகும் நுரையீரல் தொற்றுவைப் பற்றி அதிக கவலைப்படுகிறார்கள். மனிதர்களில் இந்த நச்சுப் பரு தொற்று அதிக சாவு எண்ணிக்கையை ஏற்படுத்துகிறது.

ஏன் இந்த ஆன்த்ராக்ஸ் உயிரியல் ஆயுதம் பயங்கரமாக இருக்கிறது? இந்த பாக்டீரியாவை உற்பத்தி செய்வது சுலபம், அதன் பாதிப்பை தடுக்க எடுக்கும் முயற்சியை எதிர்க்கும் சக்தி இதற்கு அதிகம் இருக்கிறது. பலியாகிறவர் முதல் அறிகுறியை, அதாவது சளிக்காய்ச்சல் போன்ற வியாதியையும் சோர்வையும் கண்டறிவதற்கு முன்பு பல நாட்கள் சென்றுவிடும். அதற்கு பிறகு இருமலும் சாதாரண நெஞ்சு வலியும் வரும். அதற்குப் பிறகு மூச்சடைப்பும் அழுத்தமும் தீவிரமாக இருக்கும், பின்பு சில மணிநேரத்தில் சாவுதான்.

பயங்கரவாதிகளிடம் அணு ஆயுதங்கள்?

சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு, கள்ள சந்தையில் திருட்டுத்தனமாக அணு ஆயுதம் விற்பனைக்கு வந்துவிடுமோ என சிலர் நினைத்தார்கள். ஆனால், இது என்றுமே நடக்காது என நிபுணர்கள் பலர் நினைக்கிறார்கள். “அணு ஆயுதங்களைப் பெற எந்தவொரு பயங்கரவாத குழுவும் முயற்சி செய்ததாக அத்தாட்சி இல்லை” என முன்பு குறிப்பிடப்பட்ட ராபர்ட் கூப்பர்மேன் கூறுகிறார்.

அமைதலான ஆனால் அணு குண்டைப் போலவே சாவை ஏற்படுத்தும் கதிரியக்க பொருள் தற்பொழுது அதிக கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இது வெடிப்பதில்லை. பொருட்களை நாசப்படுத்துவதும் இல்லை அல்லது வெப்ப சேதமுமில்லை. மாறாக, மனிதருடைய செல்களை அழிக்கும் கதிரை வெளிவிடுகிறது. முக்கியமாக எலும்பு மஜ்ஜை செல்கள் மிகவும் பாதிக்கப்படும். இரத்தக் கசிவு, நோய் எதிர்ப்பு சக்தி செயலிழந்து போதல் போன்ற அடுக்கடுக்கான பாதிப்புகளை உண்டுபண்ணும். ஆக்ஸிஜனும் ஈரமும் படும்போது ரசாயன ஆயுதங்கள் சிதைந்து விடுகின்றன. ஆனால் கதரியக்க பொருள்களோ பல வருடங்களுக்கு தொடர்ந்து பாதிப்புண்டாக்கும்.

கதிரியக்கம் எந்தளவு சாவுக்கேதுவானது என்பதை தென் மத்திய பிரேஸிலில் கோய்யானியா என்ற நகரத்தில் நடந்த விபத்து காட்டுகிறது. 1987-⁠ல், கழித்துப்போடப்பட்ட மருத்துவ சாதனத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஈய பெட்டி ஒன்றை அப்பாவியான ஒருவன் திறந்தான். அந்தப் பெட்டியில் செசியம்-137 இருந்தது. தகதகவென நீல நிறத்தில் மின்னிய கல்லைக் கண்டு மயங்கிய அவன் அதை தன் நண்பர்களிடமும் காண்பித்தான். ஒரே வாரத்தில், முதலாவதாக பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிக்கு வர ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்டிருப்பதற்கு எந்த அறிகுறியாவது இருந்ததா என ஆயிரக்கணக்கானோர் பரிசோதிக்கப்பட்டனர். அங்கிருந்த சுமார் நூறு பேர் வியாதிப்பட்டனர். ஐம்பது பேர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர், நான்கு பேர் இறந்தனர். வேண்டுமென்றே செசியத்தை பரவச் செய்திருந்தால் என்ன நிகழ்ந்திருக்கும் என்ற எண்ணமே பயங்கரவாதத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்கும் நிபுணர்களுக்கு கொடுங்கனவாக இருக்கிறது.

திகைக்க வைக்கும் பாதிப்பு

மனித உயிர் பரிதாபகரமாக பறிபோவதே பயங்கரவாதத்தின் மிக வெளிப்படையான விளைவு. ஆனால் இதில் அதிகம் உட்பட்டுள்ளது. பூமியில் கலவரம் நடக்கும் பகுதியில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு மனிதர் எடுக்கும் முயற்சியை பயங்கரவாதம் குலைக்கலாம் அல்லது தாமதிக்கலாம். அது சண்டைகளை தூண்டுகிறது, நீடிக்க செய்கிறது, பெரிதாக்குகிறது, வன்முறை எனும் சுழற்சியை முடுக்குவிக்கிறது.

பயங்கரவாதம் தேசிய பொருளாதாரத்தின் மீதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கங்கள் பேரளவு நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே 2000-மாவது ஆண்டில் 1,000 கோடிக்கும் அதிக டாலர் பயங்கரவாத ஒழிப்பிற்கு ஒதுக்கப்பட்டது.

நாம் சட்டை பண்ணினாலும் பண்ணாவிட்டாலும், பயங்கரவாதம் நம் அனைவரையும் பாதிக்கிறது. நாம் எப்படி பயணம் செய்கிறோம், எதில் பயணம் செய்கிறோம் என்பதை பாதிக்கிறது. பிரபலமானவர்களையும் முக்கிய தொழில் மையங்களையும் குடிமக்களையும் பாதுகாப்பதற்கு உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் பேரளவு வரிப் பணத்தை செலவழிக்கச் செய்கிறது.

ஆகவே, பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கு நிரந்தர பரிகாரம் ஏதாவது உண்டா? என்ற கேள்வி இன்னும் தொடர்ந்து இருக்கிறது. இது அடுத்த கட்டுரையில் ஆராயப்படும்.(g01 5/22)

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

சூழியல் என்ற பெயரில் பயங்கரவாதம்

“சூழியலையும் அதிலுள்ள உயிரினங்களையும் பாதுகாத்தல் என்ற பெயரில் போர் கருவிகளையும் வெடிகுண்டுகளையும் நாச வேலையையும்” ஒரு புது வகை பயங்கரவாதம் ஏற்றிருக்கிறது என ஓரிகோனியன் என்ற செய்தித்தாள் அறிவிக்கிறது. இந்த அழிவுக்குரிய செயல்கள் சூழியல் பயங்கரவாதம் என அழைக்கப்பட்டிருக்கின்றன. 1980 முதல் மேற்கு ஐக்கிய மாகாணங்களில் இந்த வகை பெரும் பயங்கரவாத செயல்கள் குறைந்தபட்சம் நூறு நிகழ்ந்திருக்கின்றன, சேதத்தின் மொத்த மதிப்பு 4.28 கோடி டாலர். மரங்களை வெட்டுவதையோ பொழுதுபோக்கிற்காக காட்டுப் பகுதிகளை பயன்படுத்துவதையோ அல்லது உரோமத்திற்காக, உணவுக்காக அல்லது ஆராய்ச்சிக்காக விலங்குகளை பயன்படுத்துவதையோ தடுக்கும் நோக்கத்தோடு இப்படிப்பட்ட வன்முறைகள் நடக்கின்றன.

இவை பயங்கரவாத செயல்கள் என கருதப்படுகின்றன, ஏனென்றால் தனிப்பட்டவர்களுடைய, நிறுவனங்களுடைய போக்கை அல்லது பொதுமக்களுடைய கொள்கைகளை மாற்றுவதற்கு திட்டமிடப்பட்ட வன்முறையை உட்படுத்துகின்றன. விலங்கு பரிசோதனை கூடங்கள், மரம் அறுக்கும் மில்கள் போன்ற தொலைதூர இலக்குகளை​—⁠பெரும்பாலும் இரவில்​—⁠தாக்கி, சுவடு தெரியாமல் நாசம் செய்துவிடுவதன் மூலம் சூழியல் பயங்கரவாதிகள் ஆராய்ச்சியாளர்களின் செயல்களை முறியடிக்கிறார்கள். சமீபகாலம் வரை, சூழியல் பாதுகாப்பு என்ற போர்வையில் வன்முறை செயல்களில் ஈடுபடுவது குறைவாக இருந்தது, அதிக கவனத்தை ஈர்க்காமல் இருந்தது. ஆனால் சமீப வருடங்களில் அவர்களுடைய இலக்குகள் பேரளவில் அதிகரித்துவிட்டன. “தங்களுடைய இலட்சியத்தின் மீது மக்களுடைய கவனத்தை திருப்புவதே இவர்களுடைய நோக்கம்” என ஓய்வுபெற்ற ஐ.மா. வனத்துறை ஆராய்ச்சியாளர் ஜேம்ஸ் என். டிமிட்டியோ கூறினார். “மக்களுடைய கவனம் தங்கள் பக்கம் திரும்புவதாக தெரியவில்லையென்றால், இவர்கள் வேறு ஏதாவது முறையை கையாளுகிறார்கள்.”

[பக்கம் 10-ன் பெட்டி/படம்]

பயங்கரவாதமும் செய்தித்துறையும்

“அரசியல் இலட்சியங்களை முன்னேற்றுவிப்பதற்கோ அல்லது வெறுமனே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கோ அப்பாவி மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டுகிறவர்களுடைய முக்கிய இலக்கு மற்றும் கருவி விளம்பரம் தேடுவதே” என இதழாசிரியர் டெர்ரி ஏன்டர்சன் சொல்கிறார், இவர் லெபனானில் பயங்கரவாதிகளால் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டிருந்தவர். “அரசியல் தலைவர்களை கடத்திச் சென்றதைப் பற்றியோ படுகொலையைப் பற்றியோ வெடிகுண்டு வைத்து தகர்த்ததைப் பற்றியோ அறிக்கை வருவதே பயங்கரவாதிக்கு கிடைத்த முதல் வெற்றி. உலகத்தின் கவனத்தை பெறாமல், இப்படிப்பட்ட தீய செயல்களை செய்வது பலனற்றதாக இருக்கும்.”

[பக்கம் 89-ன் படங்கள்]

1. தற்கொலை படை வைத்த வெடிகுண்டு, ஜெரூசலம், இஸ்ரேல்

2. இன பயங்கரவாதிகள் பேங்கில் வைத்த வெடிகுண்டு, கொழும்பு, இலங்கை

3. கார் வெடிகுண்டு வெடிக்கிறது, நைரோபி, கென்யா

4. வெடிகுண்டுக்கு பலியானவர்களின் குடும்பம், மாஸ்கோ, ரஷ்யா

[படங்களுக்கான நன்றி]

Heidi Levine/Sipa Press

A. Lokuhapuarachchi/Sipa Press

AP Photo/Sayyid Azim

Izvestia/Sipa Press