Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அழகிய அந்துப்பூச்சி

அழகிய அந்துப்பூச்சி

அழகிய அந்துப்பூச்சி

தென்றல் தவழும் ரம்மியமான ஒரு மாலைப்பொழுது. ஆடம்பரமான ஓர் உணவகத்திற்குள் பறந்து வந்தது ஓர் அந்துப்பூச்சி. அங்கே ஒரு பெண்மணி அறுசுவை உணவை அருந்திக் கொண்டிருந்தாள். நோய் கிருமிகளை சுமந்துவந்த ஒரு கொசுவினால் தாக்கப்பட்டதைப் போல, படபடவென்று சிறகடித்து வந்த அந்த அந்துப்பூச்சியை அவள் ‘சூ’ என்று விரட்டியடித்தாள். அப்பொழுது, அது மற்றொரு மேஜைக்கு சென்றது, கடைசியில் ஒரு மனிதனுடைய சட்டையின் முன்புறத்தில் வந்து அமர்ந்தது. ஆ, அவருடைய பிரதிபலிப்பிலும் அவருடைய மனைவியின் பிரதிபலிப்பிலும் எவ்வளவு வேறுபாடு! அந்த அந்துப்பூச்சியைக் கண்டு அதிசயித்து, எவ்வித தீங்கும் இழைக்காத மென்மையான அந்த ஜீவராசியின் அழகைக் கண்டு ஆராதித்தனர்.

“அந்துப்பூச்சிகள் தீங்கு செய்யாத உயிரிகள்” என சொல்கிறார் ஜான் ஹிம்மல்மான், இவர் கனெடிகட் பட்டாம்பூச்சி சங்கத்தின் துணை ஸ்தாபகர். “கடிப்பதற்கு ஏற்ற வாய் உறுப்புக்கள் இவற்றிற்கு இல்லை, அதிலும் முழு வளர்ச்சியடைந்த​—⁠லூனா அந்துப்பூச்சி போன்ற​—⁠சில அந்துப்பூச்சிகளோ சாப்பிடுவதே கிடையாது. ரேபீஸ் அல்லது வேறெதாவது நோய்களை விளைவிக்கும் கிருமிகளையோ சுமந்து செல்வதுமில்லை, கொட்டுவதுமில்லை . . . சொல்லப்போனால், பட்டாம்பூச்சிகளே பகலில் பறக்கும் அந்துப்பூச்சிகள்தான் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியாது.”

எல்லாருமே பட்டாம்பூச்சிகளைக் கண்டு பரவசமடைகிறார்கள், ஆனால் வெகுசிலரே அந்துப்பூச்சிகளின் அழகையும் பல்வகைமையையும் கண்டு ரசிக்கிறார்கள். ‘அழகையா?’ என்று நீங்கள் சந்தேகத்தோடு கேட்கலாம். அந்துப்பூச்சி என்பது அழகிய பட்டாம்பூச்சி இனத்தைச் சேர்ந்த பளபளப்பற்ற ஒரு வகைதான் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், இரண்டுமே அறிவியல் ரீதியில் ஒரே குடும்பமாக லெப்பிடாப்டிரா என வகைப்படுத்தப்பட்டுள்ளன; இதன் அர்த்தம் “செதில்கள் போன்ற சிறகுகள்” என்பதாகும். பல்வேறு வகைகளில் நாம் பார்க்கும் இந்த அழகிய உயிரிகள் வியக்கத்தக்கவை. லெப்பிடாப்டிராவில் மட்டுமே 1,50,000 முதல் 2,00,000 அறியப்பட்ட வகைகள் இருப்பதாக பூச்சிகளின் கலைக்களஞ்சியம் என்ற ஆங்கில நூல் குறிப்பிடுகிறது. ஆனால் இவற்றில் 10 சதவீதமே பட்டாம்பூச்சிகள்​—⁠மீதியெல்லாம் அந்துப்பூச்சிகளே!

அந்துப்பூச்சிகள் வராமல் தடுப்பதற்காக என்னுடைய கம்பளி ஆடைகளைச் சுற்றிலும் அந்துருண்டைகளை போடும் சமயத்தைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் மற்ற அநேகரைப் போலவே நானும் அவற்றைப் பற்றி நினைப்பதே இல்லை. முழு வளர்ச்சியடைந்த அந்துகள் துணிமணிகளை சாப்பிடுவதில்லை​—⁠கம்பளிப் புழுக்களாக லார்வா பருவத்தில் இருக்கும்போது மாத்திரமே சாப்பிடுகின்றன என்று எனக்குத் தெரியாது. a

அந்துப்பூச்சிகளைப் பற்றிய என்னுடைய கருத்தை மாற்றியது எது? சிலகாலத்திற்கு முன்பு நானும் என்னுடைய கணவரும் எங்கள் நண்பர்களை சந்திக்கப் போயிருந்தோம். அவர்களுடைய பெயர் பாப், ரோன்டா. அந்துப்பூச்சிகளைப் பற்றி பாப்க்கு நன்றாக தெரியும். அவர் ஒரு சிறிய பெட்டியை காண்பித்தார், அதில் இருப்பது அழகிய பட்டாம்பூச்சி என்று நான் முதலில் நினைத்தேன். அது வட அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய அந்துப்பூச்சிகளில் ஒன்றாகிய சிக்ரோப்யா, அல்லது ராபின் அந்துப்பூச்சி என அவர் விளக்கினார். அதன் இறகுகள் 15 சென்டிமீட்டர் வரை விரிவடையக் கூடும், வளர்ச்சிப் பருவம் ஓராண்டு. வளர்ச்சியடைந்த ஒன்றின் வாழ்நாட்காலம் 7 முதல் 14 நாட்கள் மட்டுமே என்பதை அறிந்தபோதோ எனக்கு ஒரே ஆச்சரியம்! அழகிய சிக்ரோப்யாவை கூர்ந்து ஆராய்ந்தபோது அந்துப்பூச்சிகளைப் பற்றிய புதிய கருத்துக்களை தெரிந்துகொண்டேன்.

அந்தப் பெட்டியின் அடியில் சில சிறு துகள்கள் படிந்திருப்பதை பாப் சுட்டிக்காட்டினார். “இந்தச் சிறு துகள்களெல்லாம் முட்டைகள்,” “அவை முதிர்ந்த பருவத்திற்கு வளரும் என நம்புகிறேன்” என விளக்கினார். அந்துப்பூச்சியை வளர்க்கிறீர்களா? இந்த ஐடியா என் ஆர்வத்தை இன்னும் அதிகரித்தது. இது சாமானிய விஷயமாக இல்லாவிட்டாலும் பலன் கிடைத்தது. முட்டை பொரிக்கும் என இரண்டு வாரங்களாக பாப் காத்திருந்து காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியது. அதற்குப்பின் அவற்றின்மீது தண்ணீரை லேசாக ஸ்ப்ரே செய்துவிட தீர்மானித்தார். தண்ணீர் ஸ்ப்ரே செய்து ஒரு வாரத்திற்குப்பின் 29 முட்டைகளில் 26 முட்டைகள் ஒரே நாளில் பொரிந்தன. கிட்டத்தட்ட ஒரு கொசுவின் அளவிலான இந்த பச்சிளம் புழுக்கள் நகர்ந்து வெளியே போய்விடாமல் இருப்பதற்கு, குழிந்த மிருதுவான பாத்திரத்திற்கு அவற்றை பாப் மாற்றினார்.

முட்டையிலிருந்து வெளியே வந்ததும் அவை சாப்பிட்ட முதல் உணவு அவற்றின் முட்டைத் தோடுகள்தான். அதற்குப்பின், பாப் அவற்றிற்கு உணவு போட வேண்டியிருந்தது. இது சற்று சிரமமாக இருந்தது. சில ஆராய்ச்சிகளை செய்தபின், மேப்பில் இலைகளை அவற்றிற்குக் கொடுத்துப் பார்த்தார். புழுக்கள் அந்த இலை மட்டும் நகர்ந்து வந்தன, ஆனால் அவற்றை தொட்டுக்கூட பார்க்கவில்லை. இருந்தாலும், செர்ரி மற்றும் பூர்ச்சமர இலைகளை பாப் போட்டபோதோ அவுக் அவுக்கென சாப்பிட்டன.

இந்தப் பச்சிளம் புழுக்கள் வளர்ந்து கம்பளிப் பூச்சிகளானபோது பாப் அவற்றை கம்பிவலை மூடி போட்ட வளர்ப்பகத்திற்கு மாற்றினார். இந்த வளர்ப்பகம் கம்பளிப்புழுக்களுக்கும் இலைகளுக்கும் போதுமான ஈரப்பதத்தை அளித்தது. இந்தக் கம்பளிப் புழுக்கள் நகர ஆரம்பித்த உடன் இங்கும் அங்குமாக ஊர்ந்து செல்ல விரும்புவதால் அவற்றைக் கட்டுப்படுத்துமாறும் அந்த வளர்ப்பகம் அமைந்தது.

பசியோடிருக்கும் 26 கம்பளிப்புழுக்களுக்கும் உணவு கொடுப்பது என்பது நினைத்ததைவிட அதிக வேலையை வைத்து விட்டது. ஒவ்வொரு முறையும் பாப் அந்த வளர்ப்பகம் முழுவதுமாக நிரப்பிப்போடும் இலைகளை இரண்டே நாட்களில் அந்தக் கம்பளிப்புழுக்கள் சாப்பிட்டுவிட்டன. ஆகவே, வளர்ந்துவரும் புழுக்களை பேணவும் உணவளிக்கவும் தன் தங்கை மற்றும் இளம் நண்பர்கள் இருவரின் உதவியையும் அவர் நாடினார்.

புழுப் பருவத்திலிருந்து வளர்ச்சியடைவதற்கு மட்டுமல்ல, முழுவளர்ச்சி அடைந்த பின்பும் அவற்றிற்குத் தேவையான போஷாக்கைப் பெறுவதற்கு கம்பளிப்புழு பருவத்திலேயே அதிகளவில் உணவை உட்கொள்வது அவசியம். முழு வளர்ச்சியடைந்த சிக்ரோப்யா அந்துப்பூச்சியின் வாய் உறுப்புக்கள் செயல்படுவதில்லை, அது உணவை உட்கொள்வதுமில்லை! குறுகியகால முழுவளர்ச்சி பருவத்திற்கு வேண்டிய போஷாக்கை பெறுவதற்கு, புழுப் பருவத்தில் பெறும் ஆகாரத்தையே நம்பியிருக்கிறது.

புதிய தோல்களைப் பெறுதல்

கம்பளிப்புழுக்கள் வளர வளர அவை பல முறை தோல்களை உரித்துவிட்டன. கம்பளிப்புழுக்கள் தோல்களை உரிக்கும் பருவங்கள் இன்ஸ்டார்கள் என அழைக்கப்படுகின்றன.

சிக்ரோப்யா கம்பளிப்புழுவின் தோல் வளர்வதில்லை, ஆகவே, கம்பளிப்புழு வளர்ந்து பெரியதாகும்போது அதன் தோல் அதிகபட்சமாக நீள்கிறது; இதுவே தோலை உரித்துவிடுவதற்கான சமயம். அது தோலை உரிக்கும் சமயத்தை பாப் அறிய முடிந்தது. ஏனென்றால், அந்த சமயத்தில் கம்பளிப்புழுக்கள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டன. பட்டு இழைகளாலான உறைகளை உருவாக்கிய பின்பு, புதிய தோல் வளரும் வரையில் பலநாட்களுக்கு அந்தக் கம்பளிப்புழுக்கள் அதில் அசைவற்று கிடந்தன. புதிய தோல் உருவானதும், கம்பளிப்புழுக்கள் பழைய தோல்களை பட்டு இழையுறைகளுடனேயே விட்டுவிட்டு வெளியேறின. கம்பளிப்புழுக்களின் கடைசி இன்ஸ்டார் பருவத்தில் அது அவ்வளவு பெரியதாக வளர்ந்திருந்ததைக் கண்டு வியப்படைந்தேன். அவை கிட்டத்தட்ட 12 சென்டிமீட்டர் நீளமும் என்னுடைய ஆள்காட்டி விரலைவிட பெரிதாகவும் இருந்தன.

கொக்கூனை பின்னுதல்

கடைசி இன்ஸ்டார் பருவத்திற்குப் பின்பு, ஒவ்வொரு கம்பளிப்புழுவும் ஏராளமான சாம்பல்நிற பட்டு இழைகளால் காய்ந்த கொப்புகளில் கொக்கூன் எனப்படும் கூட்டை பின்னியது. சிக்ரோப்யாக்கள் இரண்டு வகையான கூடுகளை உண்டாக்குகின்றன. அதில் ஒரு வகை, கீழே வட்டமாகவும் மேலே குறுகியும் இறுக்கமற்று, தொளதொளவென பெரிதாக இருக்கும். மற்றொன்று, சிறியதாகவும் இறுக்கமாகவும் அடிப்பகுதியும் மேற்பகுதியும் குறுகியும் நீள்வட்ட வடிவில் இருக்கும். இரண்டு வகை கூடுகளிலும் இறுக்கமாக பின்னப்பட்ட உட்கூடு உள்ளது. சிக்ரோப்யா கூடுகள் பொதுவாக சிவப்பு கலந்த பிரவுன், பிரவுன், இளம் பச்சை அல்லது சாம்பல் நிறங்களில் காணப்படுகின்றன. வட அமெரிக்காவிலுள்ள மற்ற இனத்தின் கூடுகளோடு ஒப்பிட சிக்ரோப்யா அந்துப்பூச்சிகளின் கூடுகள் மிகப் பெரியவை. 10 சென்டிமீட்டர் நீளமும் ஐந்து முதல் ஆறு சென்டிமீட்டர் அகலமும் உடையவை. மலைக்க வைக்கும் இந்த வடிவமைப்பு மைனஸ் 34 டிகிரி செல்ஷியஸுக்கு குறைந்த வெப்பநிலையிலும் புழுக்களை பாதுகாக்க உதவுகிறது.

கம்பளிப்புழுக்கள் கூடுகளுக்குள் குடிபுகுந்தபின் பொறுமையாக காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வேலையே இல்லை. அடுத்து வந்த இளவேனில் காலத்தில்​—⁠பாப் முதன் முதலில் முழு வளர்ச்சியடைந்த அந்துப்பூச்சியை பெற்று சுமார் ஒரு வருடத்திற்குப்பின்⁠—⁠இந்த கம்பளிப்புழுக்கள் கூடுகளை விட்டு வெளியேறின. கூடுகள் நிறைந்த கிளையை பாப் ஒரு பிளாஸ்டிக் ஃபோமில் நேராக நிறுத்தி வைத்தார். ஒரு சிக்ரோப்யாவைத் தவிர மற்றவை சீக்கிரத்தில் கூட்டை விட்டு வெளியேறின. எங்கள் பொறுமைக்கும் கடின உழைப்புக்கும் பலனும் கிடைத்தது.

அந்துப்பூச்சிகள் மீது ஆர்வம் அதிகரித்தது

சிக்ரோப்யாவின் வியக்கத்தக்க வாழ்க்கை சுழற்சியை நேரில் கண்டதால், லைட்டுகளைச் சுற்றிலும் சிறகடித்து பறந்து கொண்டும் கட்டிடங்கள் மீது சலனமற்று உட்கார்ந்து கொண்டும் இருக்கும் அந்துப்பூச்சிகளை இன்னும் ஆழ்ந்து கவனிக்கும்படி என்னை தூண்டியுள்ளது. அவற்றைப் பற்றி அனுபவ வாயிலாக பெற்ற அறிவும்கூட அந்த வசீகரமான பூச்சிகளைப் பற்றி இன்னும் அதிகத்தை அறிந்துகொள்ள தூண்டியது. உதாரணமாக, அந்துப்பூச்சிகளும் பட்டாம்பூச்சிகளும் மனதைக் கவருபவை என்பதையும் சில வகை அந்துப்பூச்சிகள் கணிசமான தூரத்திற்கு இடப்பெயர்ச்சி செய்பவை என்பதையும் நான் அறிந்தேன். சிறிய டைமண்ட்பேக் அந்துப்பூச்சியின் சிறகுகளின் நீளம் ஒருமுனையிலிருந்து மறுமுனைவரை 2.5 சென்டிமீட்டர் இடைவெளியே இருந்தபோதிலும் அவ்வப்போது கொந்தளிப்பான வட கடல் வழியாக ஐரோப்பாவுக்கும் பிரிட்டனுக்கும் பயணிக்கிறது. ஸ்ஃபின்க்ஸ் அந்துக்கள் அல்லது ஹாக் அந்துக்கள் தேன் சிட்டுகளைப் போன்று மலர்களின் மேல் வட்டமிட்டு ரீங்காரம் செய்கின்றன.

சிக்ரோப்யாவின் வாழ்க்கை சுழற்சியை நேரில் பார்த்து சில காலத்திற்குப்பின் மின்விளக்கின்கீழ் ஒரு செடியில் அந்துப்பூச்சி ஒன்று உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேன். அந்துப்பூச்சியின் இறக்கையிலுள்ள செதில்கள் மிகவும் மெல்லியதாகையால் நீங்கள் ஒருபோதும் அதன் இறகைப் பிடித்துத் தூக்கக் கூடாது; இருந்தாலும் அந்துப்பூச்சிக்கு முன் உங்கள் கையை நீட்டினால் அது உங்கள் விரல்மீது ஏறிவரலாம். அவ்வாறே நான் என் கையை நீட்டியபோது அந்த அழகான அந்துப்பூச்சி என் நடுவிரலில் வந்து அமர்ந்தது. பின்பு அது பறந்து மரங்களின் உச்சிக்கு சென்று விட்டது. அது பறந்து செல்கையில் அசல் பட்டாம் பூச்சியைப் போல இருக்கிறதே என நினைத்தேன். அடுத்த தடவை பட்டாம் பூச்சியைப் பார்க்க நேரிட்டால், அதை மீண்டும் ஒருமுறை பாருங்கள். அது ஒருவேளை தீங்கு இழைக்காத அழகிய அந்துப்பூச்சியாக இருக்கலாம்.​—⁠அளிக்கப்பட்டது.(g01 6/8)

[அடிக்குறிப்பு]

a லார்வா பருவத்தில் சில அந்துப்பூச்சிகள் கணிசமான அளவுக்கு பயிர்களை நாசம் செய்கின்றன.

[பக்கம் 1819-ன் படங்கள்]

1. ராபின் அந்துப்பூச்சி (சிக்ரோப்யா)

2. பாலிஃபெமஸ் அந்துப்பூச்சி

3. சன்செட் அந்துப்பூச்சி

4. அட்லஸ் அந்துப்பூச்சி

[படங்களுக்கான நன்றி]

Natural Selection© - Bill Welch

A. Kerstitch

[பக்கம் 20-ன் படங்கள்]

சிக்ரோப்யா அந்துப்பூச்சியின் வளர்ச்சிப் பருவம்:

1. முட்டைகள்

2. கம்பளிப்புழு

3. முழுவளர்ச்சியடைந்த அந்துப்பூச்சி

[படங்களுக்கான நன்றி]

Natural Selection© - Bill Welch