Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுள் என் ஜெபங்களை கேட்பாரா?

கடவுள் என் ஜெபங்களை கேட்பாரா?

இளைஞர் கேட்கின்றனர் . . .

கடவுள் என் ஜெபங்களை கேட்பாரா?

“யெகோவா என் சிநேகிதர் என்பதால் எதற்கு வேண்டுமானாலும் நான் ஜெபிப்பேன்; ஏதாவது ஒரு பிரச்சினையென்றால் அவர் எனக்கு உதவுவார் என்று தெரியும்.”​—⁠ஆன்ட்ரீயா.

கடவுள் தன் ஜெபங்களை கேட்கிறார் என்பதே இளம் ஆன்ட்ரீயாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. எல்லா இளைஞருக்கும் இதே நம்பிக்கை இருப்பதில்லை. நெருங்க முடியாத அளவுக்கு தங்களுக்கும் கடவுளுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். ஜெபத்தை கேட்குமளவுக்கு கடவுள் தங்கள்மீது அக்கறை காட்டவா போகிறார் என்றும்கூட அவர்கள் நினைக்கலாம்.

ஜெபம் ஏன் அத்தனை முக்கியம்? எளிய வார்த்தைகளில் சொன்னால், ஜெபம் என்பது கடவுளுடன் கொண்டுள்ள மெய்யான நட்பு. “உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்” என்று சங்கீதக்காரன் ஜெபித்தார். (சங்கீதம் 9:10) நீங்களும் அப்படித்தானா? நீங்கள் ஜெபித்தால் கடவுள் கேட்பார் என்று நம்புமளவுக்கு கடவுளை உங்களுக்கு தெரியுமா? மேற்கொண்டு வாசிப்பதற்கு முன்பு, “கடவுளை எவ்வளவு நன்றாக உங்களுக்கு தெரியும்?” என்ற பெட்டியிலுள்ள கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்க முயலுங்கள். எத்தனை கேள்விகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியும்?

மீதமுள்ள கட்டுரையை வாசிப்பதற்கு முன்பு அக்கேள்விகளில் சிலவற்றுக்காவது உங்களால் இப்பொழுதே பதில் சொல்ல முடிகிறதா? அவ்வாறு பதில் சொல்ல முடிந்தால், அநேகரைவிட உங்களுக்கு கடவுளைப் பற்றி அதிகம் ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. ஆனாலும் அவரைப் பற்றி இன்னும் அதிக அறிவைப் பெற வேண்டியதை, அவரை இன்னும் அன்யோன்யமாக தெரிந்துகொள்ள வேண்டியதை உங்கள் பதில்கள் சுட்டிக்காட்டலாம். (யோவான் 17:⁠3) இதை மனதில் கொண்டு, ‘ஜெபத்தைக் கேட்கிறவரைப்’ பற்றி பைபிள் கற்பிப்பவற்றில் சிலவற்றை கவனியுங்கள்.​—சங்கீதம் 65:⁠2.

கடவுள் உண்மையான ஒரு நபர்

முதலாவதாக, கடவுள் வெறும் ஒரு சக்தியல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள பைபிள் உதவுகிறது. அவர் ஒரு நபர், அவருக்கு யெகோவா என்ற பெயர் இருக்கிறது. (சங்கீதம் 83:17) எபிரெய மொழியில் இந்தப் பெயரின் அர்த்தம் “அவர் ஆகச் செய்பவர்” என்பது. தம் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவருக்குத் தேவையானபடியெல்லாம் அவரால் ஆக முடியும். ஆள்தன்மையற்ற வெறும் சக்தியின் திரட்சியால் அவ்வாறு ஆக முடியாது! எனவே நீங்கள் ஜெபிக்கும்போது, புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு சக்தியிடம் அல்லது காற்றிடம் பேசவில்லை என்பதைக் குறித்து நிச்சயமாக இருக்கலாம். ஒரு நபரிடம், உங்கள் ஜெபத்தை கேட்கவும் பதிலளிக்கவும் முடிந்த ஒருவரிடம் நீங்கள் பேசுகிறீர்கள்.​—எபேசியர் 3:20.

இளம் டையனா சொல்வதாவது: “நான் எங்கிருந்தாலும் யெகோவா என் ஜெபத்தைக் கேட்பார் என்று எனக்குத் தெரியும்.” அப்படிப்பட்ட நம்பிக்கையைப் பெற கடவுள் உங்களுக்கு நிஜமானவராக இருக்க வேண்டும்! “தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்று . . . விசுவாசிக்க வேண்டும்” என பைபிள் சொல்கிறது.​—எபிரெயர் 11:⁠6.

ஞானத்திற்கும் வல்லமைக்கும் பிறப்பிடம்

கடவுளிடம் பிரமிக்கத்தக்க வல்லமை இருப்பதால் அவரால் நிச்சயமாக நமக்கு உதவ முடியும். ஜடப்பொருளாலான அண்டத்தின் பிரமாண்டமான அளவும் அதன் சிக்கலான தன்மையும் எடுத்துக்காட்டுவது போலவே அவரது வல்லமை எல்லையற்றது. கோடானுகோடி நட்சத்திரங்கள் இருந்தாலும் அவை ஒவ்வொன்றையும் பெயரிட்டு அழைக்கிறவர் யெகோவா என்று பைபிள் கூறுகிறது! அதைவிட, அந்த நட்சத்திரங்களில் அடங்கியுள்ள ஆற்றலுக்கே அவர்தான் பிறப்பிடம். (ஏசாயா 40:25, 26) இது ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இருந்தாலும், இவற்றையும்விட ஆச்சரியம் தரும் வகையில் பைபிள் சொல்கிறது, “இவை அவரது வல்லமையின் மிகச் சிறிய துணுக்குகள் மட்டுமே”!​—யோபு 26:14, டுடேஸ் இங்லிஷ் வர்ஷன்.

யெகோவாவின் எல்லையில்லா ஞானத்திற்கும் கவனம் செலுத்துங்கள். அவரது யோசனைகள் “மகா ஆழமானவை” என்று பைபிள் கூறுகிறது. (சங்கீதம் 92:5) அவரே மனிதரைப் படைத்தார்; ஆகவே நாம் நம்மைப் புரிந்துகொள்வதைக் காட்டிலும் அவர் நம்மை நன்றாக புரிந்துகொள்கிறார். (சங்கீதம் 100:3) அவர் “அநாதியாய் என்றென்றைக்கும்” இருப்பதால் எல்லையில்லா அனுபவமிக்கவராயும் இருக்கிறார். (சங்கீதம் 90:1, 2) அவரால் புரிந்துகொள்ள முடியாத விஷயம் ஒன்றுமில்லை.​—ஏசாயா 40:13, 14.

தம்மிடமுள்ள அனைத்து வல்லமையையும் ஞானத்தையும் யெகோவா எப்படி பயன்படுத்துகிறார்? 2 நாளாகமம் 16:9 கூறுவதாவது: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” கடவுளால் தீர்க்க முடியாத, அல்லது சமாளிக்கும்படி உங்களுக்கு உதவ முடியாத எந்தப் பிரச்சினையும் இல்லை. இளம் கேலா நினைவுகூருகிறாள்: “சமீபத்தில் நானும் என் குடும்பத்தாரும் கஷ்டமான ஒரு சூழ்நிலையை எதிர்ப்பட்டோம்; நான் யெகோவாவிடம் ஜெபித்தேன்; அந்த பிரச்சினைகளையும் சந்தர்ப்பங்களையும் உணர்ச்சிகளையும் சகிக்கவும் சமாளிக்கவும் அவர் எங்களுக்கு உதவியதாகவே உணருகிறேன்; அவர் உதவியின்றி அவற்றையெல்லாம் எங்களால் தாங்கியிருக்கவே முடியாது.” நீங்கள் கடவுளிடம் பேசுகையில், ஞானத்தின் பிறப்பிடத்தையே அணுகுகிறீர்கள். ஜெபத்தைவிட மேலான உதவி வேறென்னவாய் இருக்க முடியும்!

நீதியும் அன்புமுள்ள கடவுள்

கடவுள் உங்களுக்கு உதவ விரும்புகிறார் என்று எப்படி தெரியும்? எப்படியெனில், யெகோவா தம் பிரமாண்டமான சக்தியாலோ ஆழமான ஞானத்தாலோ அசைக்க முடியாத நீதியாலோ அறியப்பட விரும்பவில்லை. மாறாக, அன்பு என்னும் பண்பை வைத்தே பிரதானமாக அறியப்பட்டிருக்கிறார். ‘தேவன் அன்பாகவே இருக்கிறார்’ என்று 1 யோவான் 4:8 கூறுகிறது. அவரது மாபெரும் பண்பாகிய அன்பினால்தான், அவர் நம் ஜெபத்தைக் கேட்பார் என நம்புகிறோம். நாம் நித்திய ஜீவனை அடையும்படிக்கு தம் குமாரனை மீட்கும் பலியாக தந்தருளியது அவரது அன்புக்கு மிகச் சிறந்த வெளிக்காட்டு.​—யோவான் 3:16; 1 யோவான் 4:9, 10.

கடவுள் அன்பானவர்; எனவே, அவர் உங்களைப் புறக்கணித்து விடுவார் என்றோ உங்களிடம் அநியாயமாக நடந்துகொள்வார் என்றோ நீங்கள் பயப்படவே வேண்டியதில்லை. “அவருடைய வழிகளெல்லாம் நியாயம்” என்கிறது உபாகமம் 32:4. கடவுளுடைய அன்பே அவர் உங்களுக்கு கவனத்துடன் செவிசாய்ப்பார் என்பதை உறுதி செய்கிறது. இதனால், வேறு எவரிடமும் சொல்ல முடியாத அந்தரங்க எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அவரிடம் நம்பிக்கையுடன் வெளிப்படுத்த முடியும்.​—பிலிப்பியர் 4:6, 7.

கடவுளிடம் நட்பு

உண்மையில், தம்மிடம் பேசும்படி யெகோவா நம்மை அழைக்கிறார். முன்பின் தெரியாத ஒருவரைப்போல் இருக்க அவர் விரும்புவதில்லை. அதற்கு மாறாக, மனித சரித்திரம் முழுவதிலும் தம்மோடு நட்புறவை அனுபவிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். கடவுளிடம் நட்பு வைத்திருந்த, அவருடைய இதயத்திற்குப் பிரியமானவர்களில், ஆண்களும் பெண்களும் இளைஞரும் முதியோரும் இருந்தனர். ஆபிரகாம், தாவீது ராஜா, இயேசுவின் தாய் மரியாள் போன்றவர்கள் அவர்களில் சிலர்.​—ஏசாயா 41:8; லூக்கா 1:26-38; அப்போஸ்தலர் 13:⁠22.

நீங்களும் யெகோவாவின் நண்பர்களில் ஒருவராகலாம். அதற்காக, உங்களுக்குப் பிடித்தமான ஏதோவொன்றைக் கேட்க விரும்பும்பொழுதோ, பிரச்சினை ஏதாவது வரும்பொழுதோ மட்டுமே உதவி கேட்டு வரவழைக்கும் அலாவுதீன் கதையின் பூதத்தைப் போல் அவரை நீங்கள் நினைக்க வேண்டியதில்லை. நம் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மட்டுமே நாம் ஜெபிக்க முடியாது. நமக்கு கடவுளுடைய நட்பு வேண்டுமென்றால், நம்முடைய விருப்பத்திற்கு மட்டுமல்ல, அவருடைய சித்தத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; அத்துடன் அவருடைய சித்தத்திற்கு இசைவாக நடக்கவும் வேண்டும். (மத்தேயு 7:21) அதனால்தான் கடவுள் முக்கியமானதாய் கருதும் விஷயங்களிடமே ஜெபங்களை ஒருமுகப்படுத்தும்படி தம் சீஷர்களுக்கு இயேசு கற்பித்தார். அவர் சொன்னார்: “நீங்கள் ஜெபம் பண்ண வேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.” (மத்தேயு 6:9, 10) நம் ஜெபங்கள், கடவுளுக்குத் துதியும் நன்றியும் நிறைந்தவையாயும் இருக்க வேண்டும்!​—சங்கீதம் 56:12; 150:⁠6.

இருந்தபோதிலும், நம் தேவைகளும் கவலைகளும் முக்கியமற்றவை என்றோ அற்பமானவை என்றோ ஒருபோதும் நினைத்துவிடக் கூடாது. “நான் மனந்திறந்து அவரிடம் பேசினாலும், சில சமயங்களில் அல்ப விஷயங்களுக்கெல்லாம் அவரை தொந்தரவு செய்யக் கூடாது என நினைத்துக்கொள்வேன்” என்று ஸ்டீவ் சொல்கிறான். எப்பொழுதாவது நீங்கள் அவ்வாறு நினைத்தால், “இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை. . . . பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்” என இயேசு தம் சீஷர்களுக்கு கற்பித்ததை ஞாபகப்படுத்திக் கொள்ள முயலுங்கள். (லூக்கா 12:6, 7) இது நமக்கு ஆறுதலளிக்கிறதல்லவா?

ஆகவே, யெகோவாவை அதிகமதிகமாய் தெரிந்துகொள்கையில் அவரிடம் அடிக்கடி ஜெபிக்கத் தோன்றும் என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது; அத்துடன் யெகோவா உங்களுக்கு உதவ முடியும், உதவுவார் என்ற நம்பிக்கை பலப்படும் என்பதையும் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியானால் கடவுளிடம் ஜெபிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்க வேண்டும்? மரியாதையான தாழ்மையான சுயநலமில்லாத மனநிலை இருக்க வேண்டும். எந்த உயர் அதிகாரியிடமாவது நீங்கள் பெருமையுடனோ மரியாதையில்லாமலோ எதையாவது கேட்டால் அவர் உங்களுக்கு செவிகொடுப்பார் என்று சொல்ல முடியுமா? எனவே, யெகோவா உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிக்க வேண்டுமானால், நீங்கள் அவருக்கும் அவருடைய தராதரங்களுக்கும் மரியாதை காட்டும்படி எதிர்பார்க்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை.​—நீதிமொழிகள் 15:⁠29.

கடவுள் பயமுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் இதயத்திலுள்ளதை கடவுளிடம் ஊற்ற கற்றிருக்கின்றனர். (சங்கீதம் 62:8) “யெகோவா என் ஜெபங்களுக்குப் பதிலளிக்கையில், அவர் எனக்கு நண்பராகவே இருக்கிறார் என்ற எண்ணம் என்னை தேற்றுகிறது” என்கிறான் ப்ரெட். நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீர்களா? நீங்களும் அப்படிப்பட்ட நட்பை கடவுளுடன் அனுபவித்து மகிழ்வது எப்படி? இரண்டு கிறிஸ்தவ இளைஞர்கள் பின்வருமாறு கூறியுள்ளனர்:

ரேச்சல்: “யெகோவாவிடம் நெருங்கி வர அவருடைய வார்த்தையை கருத்தூன்றி படிக்க வேண்டும் என நான் உணருகிறேன்; அப்படிப்பட்ட படிப்புக்கான ஏக்கத்தை வளர்த்துக்கொள்ள முயன்று வருகிறேன்.”​—1 பேதுரு 2:⁠3.

ஜென்னீ: “யெகோவாவின் சேவையை எந்தளவுக்கு அதிக ஈடுபாட்டுடன் செய்கிறீர்களோ அந்தளவுக்கு அவரிடம் நெருக்கத்தை உணருவீர்கள்.”​—யாக்கோபு 4:⁠8.

ஜெபத்தால் உண்மையிலேயே நன்மை கிடைக்குமா என்று நீங்கள் எப்பொழுதாவது நினைத்துப் பார்த்ததுண்டா? ஒரு கிறிஸ்தவ இளம் பெண் கூறுவதாவது: “கடவுள் என்னிடம் பேசினாலோ ஏதாவது செய்தி அனுப்பினாலோ தான் நான் அவரிடம் நெருங்கி இருப்பதாக உணருவேன்.” ஆனால், நம் காது கேட்க யெகோவா நமக்கு பதிலளிக்காததன் காரணமாக, ஜெபங்கள் உண்மையில் எவ்வாறு நமக்கு உதவுகின்றன? இந்த விஷயம் இனி வரும் இதழில் கலந்தாலோசிக்கப்படும். (g01 6/22)

கடவுளை எவ்வளவு நன்றாக உங்களுக்கு தெரியும்? பக்கம் 13-⁠ல் பதில்கள்

1. கடவுளுடைய பெயர் என்ன, அதன் அர்த்தமென்ன?

2. பைபிள் வெளிப்படுத்தும் கடவுளுடைய நான்கு முக்கிய பண்புகள் யாவை?

3. கடவுள் மனிதகுலத்தின் மீதுள்ள அன்பை எவ்வாறு மிகச் சிறந்த வகையில் வெளிக்காட்டினார்?

4. கடவுளின் நட்பை நாம் எவ்வாறு அனுபவித்து மகிழலாம்?

5. நாம் ஜெபிக்கையில் எப்படிப்பட்ட சரியான மனநிலை இருக்க வேண்டும்?

[பக்கம் 13-ன் பெட்டி]

பக்கம் 11-லுள்ள கேள்விகளுக்கான பதில்கள்

1.யெகோவா. அதன் அர்த்தம், “அவர் ஆகச் செய்பவர்.”

2.அன்பு, வல்லமை, நீதி, ஞானம்.

3.நமக்காக மரிக்கும்படி தம் ஒரேபேறான குமாரன் இயேசுவை அவர் அனுப்பினார்.

4.நம் தேவைகளைப் பற்றியே சிந்திக்காமல் கடவுளுடைய சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு இசைவாக நடப்பதன் மூலம் அனுபவித்து மகிழலாம்.

5.மரியாதையான தாழ்மையான சுயநலமில்லாத மனநிலை இருக்க வேண்டும்.

[பக்கம் 12-ன் படங்கள்]

பைபிளை படிப்பதும் படைப்பிலிருந்து கற்றுக்கொள்வதும் கடவுளை நன்றாக அறிந்துகொள்ள உதவும்