Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பூமியில் வாழும் உயிரினங்களை காப்பாற்ற முடியுமா?

பூமியில் வாழும் உயிரினங்களை காப்பாற்ற முடியுமா?

பூமியில் வாழும் உயிரினங்களை காப்பாற்ற முடியுமா?

“மனிதக் குரங்குகள், அல்பட்ராஸ்கள், தட்டான் பூச்சிகள் என எதையும் விட்டுவைக்காமல் பல்வகை உயிரினங்களை மனிதன் மிக விரைவாக அழிவின் விளிம்புக்கே கொண்டு செல்கிறான், இதனால் நாம் உயிர் வாழ்வதே ஆபத்தாக இருக்கிறது” என கனடாவில் வெளிவரும் த குளோப் அண்டு மெய்ல் சொல்கிறது. இந்தச் செய்தித்தாளிலுள்ள குறிப்புகள் ஸ்விட்ஸர்லாந்து நாட்டு ஜெனீவாவிலுள்ள உலக இயற்கை வள பாதுகாப்பு யூனியனால் (IUCN) வெளியிடப்பட்ட 2000 IUCN ஆபத்திலிருக்கும் உயிரினங்களின் சிவப்பு பட்டியல் சம்பந்தப்பட்டவை. தாவரங்களிலும் உயிரினங்களிலும் 11,000-⁠க்கும் அதிகமான வகைகள் மிக மிக ஆபத்தான நிலையில் இருக்கின்றன என சிவப்பு பட்டியல் எச்சரிக்கிறது. அவற்றில் பாலூட்டிகளே மிகவும் ஆபத்தில் இருப்பவை. “இன்று பூமியில் வாழும் பாலூட்டிகளில் சுமார் நான்கு வகைகளில் ஒன்று​—⁠அல்லது 24 சதவீதம்​—⁠அழிந்துவிடும் ஆபத்தில் இருக்கின்றன” என குளோப் அறிவிக்கிறது.

இந்த நெருக்கடிக்கு எதை குற்றம்சாட்டுவது? சர்வதேச செல்லப்பிராணி வியாபாரம், நூற்றுக்கணக்கான கொக்கிகளைக் கொண்ட நீளமான இழைகளால் மீன்பிடித்தல், வாழிடங்கள் மறைந்துவருதல் ஆகியவற்றை விஞ்ஞானிகள் காரணமாக சுட்டிக்காட்டுகிறார்கள். மேலும், மனிதருடைய பாதம்படாத காடுகளின் வழியே சாலைகள் அதிகமாக அமைக்கப்படுவதால், “ஒருகாலத்தில் பிடிக்க முடியாமலிருந்த வனவிலங்குகளை இன்று மக்களால் பேரளவில் பிடிக்க முடிகிறது. பின்பு அவற்றை கொன்று சாப்பிட்டு விடுகிறார்கள். இப்படியே எல்லாவற்றையும் அடித்து சாப்பிட்டு வந்தால், கடைசியில் உயிரினங்களே இல்லாமல் சுத்தமாக மறைந்துவிடும்.”

இதனால் மனிதருக்கே ஆபத்து என விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள். “நாம் உயிரினங்களை அடியோடு அழிக்கும்போது, நாம் உயிர்வாழ அவசியமான சூழலை கெடுக்கிறோம்” என டேவிட் பிராக்கட் சொல்கிறார், இவர் உலக இயற்கை வள பாதுகாப்பு யூனியனுடைய உயிரின பாதுகாப்புக் குழுவின் தலைவராக இருக்கிறார். “உயிரினங்களின் பல்வேறு வகைகள் வெறுமனே மிருகக்காட்சி சாலைகளில் இருப்பதால் மட்டுமே இந்தப் பூமி தப்பிப்பிழைக்காது.”

“இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு மனித மற்றும் நிதி உதவியை தற்போதைய அளவிலிருந்து 10 முதல் 100 மடங்குக்கு அதிகரிக்க வேண்டும்” என்று கூறி இதற்கான நடவடிக்கை எடுக்கும்படி IUCN அறிக்கை உலக சமுதாயத்தை உந்துவிக்கிறது. ஆனால், நம்முடைய பூமியின் வள ஆதாரங்களை பாதுகாப்பதற்கு எடுக்கும் உண்மையான முயற்சிகளுக்கு பேராசை பெரும் தடையாக இருப்பது வருந்தத்தக்கது.

பூமியின் உயிரினங்களை காப்பாற்ற முடியுமா? பூமியில் வாழும் பல்வகை உயிரினங்களை கவனித்துக்கொள்ளும் வேலை முதல் மானிட ஜோடிக்கும் அவர்களுடைய சந்ததியாருக்கும் கொடுக்கப்பட்டது. “தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக் கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்” என பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 2:15) மனிதன் தன்னுடைய கடமையை செய்வதில் தவறுகிறபோதிலும், பூமிக்காக கடவுள் கொண்டுள்ள நோக்கம் மாறாமல் அப்படியே இருக்கிறது. அவர் நம்முடைய கோளத்தை கவனித்து வருகிறார், அக்கறையின்மையாலோ பேராசையாலோ அது அழிக்கப்படுவதற்கு அவர் அனுமதிக்க மாட்டார். (வெளிப்படுத்துதல் 11:18) “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என அவருடைய வார்த்தை வாக்குறுதி அளிக்கிறது.​—சங்கீதம் 37:⁠29.(g01 6/8)

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

U.S. Fish & Wildlife Service, Washington, D.C./J.D. Pittillo