உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
7.9 கோடி பெண்களை ‘காணவில்லை’
ஐநா-வின் நிதி உதவியோடு “இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், நேப்பாளம், இலங்கை, பூடான், மாலத்தீவு” ஆகிய நாடுகளில் ஒரு சுற்றாய்வு நடத்தப்பட்டது. “பிறப்புக்கு முன்னும் பின்னும் பெண் இனத்திற்கு விரோதமான பாகுபாட்டு உணர்வு காரணமாக ‘தென் ஆசியாவில்’ 7 கோடியே 90 லட்சம் பெண்களை ‘காணவில்லை’ என்று ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கை கூறுகிறது. பெண்கள் காணாமல் போவதற்கு காரணம் கருச்சிதைவுகளும், “சிசு கொலையும் ஆண் பிள்ளைகளுக்கு உணவளிப்பதில் இவ்விடங்களில் காட்டப்படும் ஓரவஞ்சனையுமே.” இந்த ஓரவஞ்சனை அவர்கள் வளர்ந்து வருகையிலும் தொடர்கதையாகிறது. எனவே பெண்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் தீராத பிரச்சினைகள் தலைதூக்குகின்றன. “இளவயசு பெண்கள் மற்றும் பிள்ளைபெறும் வயதிலுள்ள பெண்களின் இறப்பு விகிதம் அதிகளவில் இருக்கிறது” என்று அந்த அறிக்கை சொன்னது. இந்த இடங்களில் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 94 பெண்கள் மட்டுமே இருப்பதையும் உலகம் முழுவதிலும் பார்த்தால் ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 106 பெண்கள் இருப்பதையும் வைத்துமே 7 கோடியே 90 லட்சம் என்ற எண்ணிக்கை கணிக்கப்பட்டிருக்கிறது.(g01 7/8)
மிக நீளமான சுரங்கப் பாதை திறப்பு
உலகிலேயே மிக நீண்ட சுரங்கப் பாதை நார்வேயில் திறக்கப்பட்டுள்ளது என்று ஃபிராங்ஃபுர்டர் ஆல்கெமைன ஸைட்டுங் என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. லர்டால் சுரங்கப் பாதையின் நீளம் 24.5 கிலோமீட்டர். இதனால் நார்வேயின் இரண்டு பெரிய நகரங்களாகிய ஆஸ்லோவையும் பெர்கனையும் இணைக்கிறது. இந்தப் பாதை திறக்கப்படுவதற்கு முன்பு, வளைந்து வளைந்து செல்லும் மலைப் பாதையில் போவதா அல்லது மலைப்பாறைகளுக்கு இடையிலுள்ள கடல்பகுதியைக் கடந்து செல்ல படகு பயணத்தை மேற்கொள்வதா என்று கார் ஓட்டுநர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது. இந்தப் புதிய சுரங்கப் பாதையில் பாதுகாப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இப்பாதையில் ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திலும் வாகனத்தைத் திருப்புவதற்குரிய இடம், காற்றோட்ட சுழல்தண்டு மூலமாக புகையையும் நச்சுத்தன்மையுள்ள வாயுக்களையும் உறிஞ்சி எடுக்கும் பிரமாண்டமான தீ பிடிக்காத விசிறிகள், எமர்ஜென்ஸி அமைப்புகளின் நவீன ஏற்பாடுகள் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நீளமான சுரங்கப் பாதைகளைப் பார்த்து பலர் பயப்படுவதால் பெரிய திறந்த வெளியிடங்கள் லர்டால் சுரங்கப் பாதையை நான்கு பகுதிகளாக பிரிக்கின்றன. இந்தத் திறந்த வெளியிடங்களின் சுவர்களில் நீலநிற விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதால் பகல் வெளிச்சமும் தூய்மையான காற்றும் வருவது போன்ற தோற்றம் கிடைக்கிறது. ஆனாலும் நார்வே நாட்டவரில் 25 சதவீதத்தினர் விபத்து அல்லது தீ பற்றிய பயத்தின் காரணமாக இந்தச் சுரங்கப் பாதையை தவிர்ப்பதை ஒரு சுற்றாய்வு காண்பித்தது. (g01 7/8)
உயிர் பிழைத்தது எப்படியோ
டிசம்பர் 1999-ல் ஏற்பட்ட கடுமையான புயலில் பிரான்ஸ் நாட்டின் காடுகள் மிக மோசமாக சேதமடைந்தபோது, பெரிய விலங்குகளுக்கு எதிர்பார்த்த அளவு நாசம் ஏற்படவில்லை என்பதை சமீப ஆய்வுகள் காட்டுவதாக பாரிஸ் செய்தித்தாள் லா மாண்ட் அறிக்கை செய்கிறது. கிழக்கு பிரான்ஸில் நாசமடைந்த காட்டில் 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் 20 விலங்குகளின் சடலங்கள் மட்டுமே காணப்பட்டன; அவற்றில் 10 கலைமான்கள், 5 ரோ மான்கள், 5 ஆண் காட்டுப் பன்றிகள். “இன்னும் புரியாத புதிராகவே இருக்கும் இயல்புணர்ச்சிக்கு” கட்டுப்பட்டு விலங்குகள் தப்பித்துக் கொள்ளும் வழிகளை கண்டுபிடித்திருக்கின்றன. ஒருவேளை அவை விழுந்துவிட்ட மரங்களுக்கு அடியில் மறைந்திருக்கலாம் அல்லது கூட்டமாக திறந்த வெளியில் கூடி தப்பியிருக்கலாம். பிரெஞ்சு நாட்டு தேசிய வன அலுவலகத்திலுள்ள ஷான் பால் விட்மர் இவ்வாறு கூறுகிறார்: “சிங்கங்களைப் பற்றியும் தூரத்திலிருக்கும் மற்ற காட்டு விலங்குகளைப் பற்றியும் நமக்கு தெரிந்திருக்கும் அளவுக்கு கலைமான்கள், காட்டு பன்றிகள் ஆகியவற்றின் [பழக்கங்களைப்] பற்றி அதிகம் தெரியாது.” (g01 7/22)
உறிஞ்சும் கிண்ணம் போன்ற அமைப்புடைய நாக்கு
ஒரு பச்சோந்தி எவ்வாறு தன்னுடைய எடையில் 10 சதவீத எடையுள்ள பல்லிகளையும் பறவைகளையும்கூட லாவகமாக பிடித்து விழுங்கிவிடுகிறது? பச்சோந்தி நாக்கின் மேற்புறம் சொரசொரப்பாயும் பசையுள்ளதாயும் இருப்பதால் இரைவிலங்கு அதில் ஒட்டிக்கொள்கிறது என்று இதுவரை நம்பப்பட்டு வந்தது. ஆனால் ஓரளவு எடை அதிகமுள்ள இரைவிலங்கை இந்தப் பிராணி எப்படி பிடிக்கிறது என்பதை இது விளக்கவில்லை. இதைக் கண்டுபிடிப்பதற்காக பெல்ஜியத்தில் அன்ட்வெர்ப் என்ற இடத்திலுள்ள விஞ்ஞானிகள் மின்னல் வேகத்தில் பச்சோந்தியின் நாக்கு செயல்படும் போது அதை அப்படியே அதிவேக வீடியோ படமெடுத்திருக்கிறார்கள் என்று ஜெர்மன் நாட்டு அறிவியல் செய்தி சேவை பில்ட் டேர் விஸன்ஷாஃட் ஆன்லைன் கூறுகிறது. பச்சோந்தி தன் நாக்கை வெளியே நீட்டும்போது அதன் நுனிப்பகுதியில் ஒரு பந்து உருவாகிறது. தாக்குவதற்கு சற்று முன்பு நாக்கிலுள்ள இரண்டு தசைகள் சுருங்குகின்றன; அப்போது நாக்கின் நுனிப்பகுதி உறிஞ்சும் கிண்ணத்தைப் போல் ஆவதால் இரையுடன் ஒட்டிக்கொள்கிறது.(g01 7/22)
அமேசானின் பிறப்பிடம் கண்டுபிடிப்பு
“உலகிலேயே மிகப் பெரிய ஆற்றின் ஊற்று எங்குள்ளது” என்பதை 22 பேர் கொண்ட ஒரு ஆய்வுக் குழு உறுதிசெய்திருக்கிறது. “இது பல பத்தாண்டுகளாக செய்யப்பட்டு வந்த ஊகங்களுக்கும் முன்னுக்குப்பின் முரணாக இருக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது” என்று லண்டனில் வெளியாகும் த டைம்ஸ் கூறுகிறது. தென் பெருவியன் ஆண்டிஸிலுள்ள 5,000 மீட்டர் உயர குன்றாகிய நவாடோ மிஸ்மியிலிருந்து அமேசான் ஆறு சொட்டு சொட்டாக விழ ஆரம்பமாகிறது. அங்கிருந்து அது புல்லும் பாசியுமுள்ள பள்ளத்தாக்கின் வழியாக வளைந்து நெளிந்து வருகையில் மற்ற ஓடைகளும் ஆறுகளும் இதோடு சேர்ந்துகொள்கின்றன. அது 6,000 கிலோமீட்டர் பிரயாணம்செய்து அட்லான்டிக் பெருங்கடலில் போய் சங்கமமாகிறது. ஆற்றின் பிறப்பிடத்தை விளக்கும்போது ஆய்வுக் குழுவின் தலைவர் ஆண்ட்ரு பையெட்டோஸ்கி இவ்வாறு கூறினார்: “இதன் உற்பத்தி ஸ்தலம் ஒரு அழகான இடம். சுமார் 40 மீட்டர் உயரத்தில் இருக்கும் பிரமாண்டமான, கருமையான மலைப்பாறையின் அடிவாரத்தில் பச்சை பசேலென்ற ஒரு பள்ளத்தாக்கில் நின்றுகொண்டிருக்கிறோம். இங்கே அமைதியும் நிசப்தமும் தவழுகிறது.”(g01 7/22)