Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபம் எனக்கு எப்படி உதவ முடியும்?

ஜெபம் எனக்கு எப்படி உதவ முடியும்?

இளைஞர் கேட்கின்றனர் . . .

ஜெபம் எனக்கு எப்படி உதவ முடியும்?

“மீண்டும் சரியான பாதைக்கு வர ஜெபம் எனக்கு உதவியது.”​—⁠ப்ராட். a

நீங்கள் நினைப்பதைவிட நிறைய இளைஞர்கள் ஜெபம் செய்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் 13 முதல் 17 வயதுள்ள இளைஞர்களை வைத்து ஒரு கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதில் 56 சதவீதத்தினர் சாப்பிடுவதற்கு முன் ஜெபம் செய்வது தெரிய வந்தது. இளைஞர்களை வைத்து செய்யப்பட்ட மற்றொரு சுற்றாய்வு, 62 சதவீதத்தினர் தினந்தோறும் ஜெபம் செய்வதைக் காட்டியது.

ஆனால் அநேக இளைஞருக்கு ஜெபம் அர்த்தமில்லாத சடங்காக அல்லது இயந்தரத்தனமான ஒன்றாகவே உள்ளது. சில இளைஞர்களுக்கு மட்டுமே பைபிள் கூறும் அந்த ‘தேவனைப் பற்றிய திருத்தமான அறிவு’ இருக்கிறது. (கொலோசெயர் 1:9, 10, NW) இதனால் அவர்களுடைய வாழ்க்கையில் கடவுளுக்கு அந்தளவுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இல்லை. பருவ வயதினரிடம் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில், முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டத்தில் அவர்கள் எப்போதாவது கடவுளின் உதவியை நாடியிருக்கிறார்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு ஒரு பெண் இவ்வாறு பதிலளித்தாள்: “வாழ்க்கையில் சரியான பாதைகளை தெரிந்தெடுப்பதில் என்னை வழிநடத்தும்படி எப்போதும் கடவுளிடம் ஜெபிக்கிறேன்.” ஆனால், “அப்படி எடுத்த தீர்மானங்களில் ஒன்றுகூட எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை” என்று ஒப்புக்கொள்கிறாள். ஜெபத்திற்கு பலன் உண்டா அல்லது அது அவர்களுக்கு உதவுமா என்பதைக் குறித்து பல இளைஞர்கள் சந்தேகப்படுவது ஆச்சரியமாயில்லை.

ஆனால் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ப்ராட்டை போன்று ஜெபத்திற்கு பலனிருப்பதை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். நீங்களும் அதை அனுபவிக்கலாம்! கடவுள் நம்முடைய ஜெபங்களைக் கேட்பார் என்று ஏன் நம்பிக்கையாயிருக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு கட்டுரை ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. b இப்பொழுது கேள்வி என்னவென்றால், ஜெபம் உங்களுக்கு எப்படி உதவ முடியும்? முதலாவதாக, கடவுள் எவ்வாறு நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிக்கிறார் என்பதை ஆராயலாம்.

ஜெபங்களுக்கு கடவுள் எவ்வாறு பதிலளிக்கிறார்

பைபிள் காலங்களில் விசுவாசமிக்க சிலருடைய ஜெபங்களுக்கு நேரடியாக, அற்புதமாகவும்கூட பதில் கிடைத்திருக்கிறது. உதாரணமாக, தனக்கு தீராத வியாதி இருப்பது எசேக்கியாவுக்கு தெரிந்தபோது உயிர்ப்பிச்சைக் கேட்டு கடவுளிடம் ஜெபித்தார். “உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்” என கடவுள் அவருக்கு பதிலளித்தார். (2 இராஜாக்கள் 20:1-6) இதைப் போலவே கடவுள் பயத்துடன் வாழ்ந்த மற்ற ஆண்களும் பெண்களும்கூட தங்கள் சார்பில் கடவுள் செயல்பட்டதை அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.​—1 சாமுவேல் 1:1-20; தானியேல் 10:2-12; அப்போஸ்தலர் 4:24-31; 10:1-7.

ஆனால் பைபிள் காலங்களில்கூட எப்போதுமே கடவுள் தலையிட்டு நேரடியாக செயல்படவில்லை. பெரும்பாலான சமயங்களில் அற்புதகரமான விதத்தில் தம்முடைய ஊழியர்களின் ஜெபங்களுக்கு பதிலளிக்கவில்லை. ஆனால் அவர்கள் “எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவினாலே நிரப்பப்பட” உதவுவதன்மூலம் அவர்களுக்கு பதிலளித்திருக்கிறார். (கொலோசெயர் 1:9, 10) ஆம், சரியான தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவைப்படும் ஞானத்தையும் அறிவையும் கொடுத்து, கடவுள் ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் தம்முடைய மக்களை பலப்படுத்துவதன்மூலம் உதவி செய்திருக்கிறார். கிறிஸ்தவர்கள் கஷ்டமான சூழ்நிலைமையை எதிர்ப்படுகையில் கடவுள் அந்தப் பிரச்சினையை எப்போதுமே நீக்கிவிடவில்லை. மாறாக, அவர்கள் அதை சகித்து நிலைத்திருக்க ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை’ கொடுத்தார்!​—2 கொரிந்தியர் 4:7, NW; 2 தீமோத்தேயு 4:⁠17.

அதே விதமாகவே இன்று அற்புதகரமான விதத்தில் உங்கள் ஜெபத்திற்கு பதில் கிடைக்காமல் போகலாம். ஆனால் கடந்த காலங்களில் செய்தது போலவே, கடவுள் உங்களுக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்து நீங்கள் எதிர்ப்படும் எந்த சூழ்நிலைமையையும் சமாளிக்கும்படி பலப்படுத்தலாம். (கலாத்தியர் 5:22, 23) இதைப் புரிந்துகொள்ள, திட்டவட்டமான நான்கு வழிகளில் ஜெபம் உங்களுக்கு எப்படி உதவலாம் என்பதைக் காண்போம்.

தீர்மானங்களைச் செய்வதில் உதவி

உயர்ந்த ஆன்மீக இலக்குகளை வைத்திருப்பதாக தோன்றிய இளைஞனை திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் கேரன் என்ற ஓர் இளம் பெண் அவனோடு பழகி வந்தாள். “சபையில் ஒரு மூப்பராக வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்று எப்போதும் என்னிடம் சொல்வான்” என்றாள் அவள். இதையெல்லாம் கேட்க சந்தோஷமாகவே இருந்தது. ஆனால் “அதே சமயம் தான் ஆரம்பிக்கப் போகிற வியாபாரத்தைப் பற்றியும் தன்னால் என்னவெல்லாம் எனக்கு வாங்கித் தர முடியும் என்பதைப் பற்றியும் அதிகம் பேசுவான். உண்மையில் இவன் எப்படிப்பட்டவன் என்பதைக் குறித்து கொஞ்சம் சந்தேகப்பட ஆரம்பித்தேன்” என்று அவள் கூறினாள். கேரன் இதைக் குறித்து ஜெபித்தாள். “அவனைப் பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டியவற்றைத் தெரிந்துகொள்ளும்படி என் கண்களைத் திறந்தருள வேண்டும் என்று யெகோவாவிடம் மன்றாடினேன்.”

சில சமயங்களில் ஜெபம் செய்வதே பயன் தரும். காரியங்களை சற்று நிதானமாக சிந்திக்கவும் யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து காணவும் உதவும். ஆனால் கேரனுக்கு நடைமுறையான ஆலோசனையும் தேவைப்பட்டது. அற்புதமான விதத்தில் அவளுக்கு பதில் கிடைக்குமா? சரி, பைபிளிலிருந்து தாவீது ராஜாவைப் பற்றிய ஒரு பதிவை சிந்தித்துப் பாருங்கள். நம்பிக்கைக்குரிய தன் நண்பன் அகித்தோப்பேல், நம்பிக்கை துரோகியான தன் மகன் அப்சலோமுக்கு ஆலோசனை கூறுவது தாவீதுக்குத் தெரியவந்தபோது அவர் இவ்வாறு ஜெபித்தார்: “கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக.” (2 சாமுவேல் 15:31) அத்தோடு நில்லாமல் தாவீது தன் ஜெபத்திற்கு ஏற்ப செயல்படவும் முற்பட்டார். “எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவா”யாக என இந்த வேலையை அவர் தன்னுடைய நண்பன் ஊசாயிடம் ஒப்படைத்தார். (2 சாமுவேல் 15:34) அதே விதமாகவே கேரனும் ஜெபத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நடவடிக்கையும் எடுத்தாள். அவளுடைய காதலனைப் பற்றி அறிந்திருந்த முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவ மூப்பரிடம் பேசினாள். அவள் சந்தேகித்தது உண்மையானது: அவன் எந்த ஆன்மீக முன்னேற்றமும் செய்திருக்கவில்லை.

“அப்போதுதான் ஜெபத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பதை தெளிவாக புரிந்துகொண்டேன்” என கேரன் சொல்கிறாள். அவளுடைய முன்னாள் காதலன் பொருள் சேர்ப்பதிலேயே குறியாயிருந்து கடைசியில் கடவுளை சேவிப்பதற்கே முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் என்பது விசனமான விஷயம். “அவனை திருமணம் செய்திருந்தால், தனியாகவே கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வந்துபோய்க் கொண்டிருப்பேன்” என்று கேரன் கூறுகிறாள். ஞானமாக தீர்மானமெடுக்க ஜெபம் கேரனுக்கு கைகொடுத்தது.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் உதவி

“மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கி வைக்கிறான்” என்று பைபிள் நீதிமொழிகள் 29:11-⁠ல் கூறுகிறது. பிரச்சினை என்னவென்றால் இன்று அநேகர் கடும் உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தின்கீழ் வாழ்வதால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இதனால் சில சமயங்களில் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. “என்னோடு வேலைசெய்து வந்தவனோடு அடிக்கடி தகராறு வரும். ஒரு நாள் அவன் கையில் கத்தியை எடுத்துக்கொண்டான்” என இளம் ப்ரையன் நினைவுபடுத்திக் கூறுகிறான். நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? ப்ரையன் ஜெபம் செய்தான். “அமைதியாய் இருக்க யெகோவா எனக்கு உதவினார், அவனோடு மனம்விட்டு பேசி, தடுத்துவிட்டேன். அவன் கத்தியைக் கீழே போட்டுவிட்டு போய்விட்டான்” என்று அவன் சொல்கிறான். ப்ரையன் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியதால் கோபப்படாமல் சமாளித்தான், இதனால் அவன் உயிர் தப்பினான்.

ஒருவேளை யாரும் அடிக்கடி கத்திமுனையில் உங்களை பயமுறுத்த மாட்டார்கள். ஆனால், வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய சமயங்கள் வரும். ஜெபம் செய்வது அமைதியைக் காத்துக்கொள்ள உங்களுக்கு உதவும்.

கவலைப்படுகையில் உதவி

பார்பரா சில வருடங்களுக்கு முன் “தான் அனுபவித்த அந்த கஷ்டமான காலத்தை” நினைவுபடுத்திக் கூறுகிறாள். “என் வேலையிலும், குடும்பத்திலும், நண்பர்களோடும் ஒரே பிரச்சினை, எதுவுமே சரியாக இல்லை. என்ன செய்வதென்றே எனக்குப் புரியவில்லை” என்று அவள் கூறுகிறாள். பார்பரா உடனடியாக உதவிக்காக ஜெபம் செய்தாள். ஆனால் அதிலும் பிரச்சினை இருந்தது. “யெகோவாவிடம் எதைக் கேட்டு ஜெபிப்பது என்று எனக்கு தெரியவில்லை” என்று அவள் சொல்கிறாள். “கடைசியாக எனக்கு மன சமாதானத்தைத் தரும்படி கேட்டேன். எதைப் பற்றியும் கவலைப்படாதிருக்க எனக்கு உதவும்படி ஒவ்வொரு இரவும் ஜெபித்தேன்.”

அந்த ஜெபம் அவளுக்கு எப்படி உதவியது? “என்னுடைய பிரச்சினைகள் சரியாகாவிட்டாலும் சில நாட்களுக்குப் பிறகு, கவலையில் அப்படியே மூழ்கிவிடாமல் அல்லது அவற்றைக் குறித்து கவலைப்படாமல் இருப்பதை உணர்ந்தேன்” என அவள் சொல்கிறாள். “உங்கள் விண்ணப்பங்களை . . . தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்” என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.​—பிலிப்பியர் 4:6, 7.

கடவுளிடம் நெருங்கிவர உதவி

பால் என்ற இளைஞனின் அனுபவத்தை சிந்தித்துப் பாருங்கள். “என் உறவினர் வீட்டில் தங்குவதற்கு வந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தது. ஒரு நாள் இரவு என் மனதை சோகம் அழுத்தியது. பள்ளி படிப்பை அப்போதுதான் முடித்திருந்தேன். என்னுடைய எல்லா நண்பர்களையும் விட்டு பிரிந்துவிட்டேன். நாங்கள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ந்த சமயங்கள் எல்லாம் என் நினைவுக்கு வர, அன்றிரவு என் கண்கள் குளமாயின” என்று அவன் சொல்கிறான். அப்போது பால் என்ன செய்தான்? முதன்முறையாக அவன் ஊக்கமாக ஜெபம் செய்தான். “என் இருதயத்தைத் திறந்து பேசினேன், எனக்கு பலத்தையும் மன சமாதானத்தையும் அருளும்படி யெகோவாவிடம் கேட்டேன்” என்று அவன் சொல்கிறான்.

விளைவு? “வாழ்க்கையில் ஒருபோதும் அனுபவித்திராத புதுத் தெம்போடு மறுநாள் காலை கண் விழித்தேன். மனதிலிருந்த வேதனை மறைந்தது, ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம்’ மனதில் குடிகொண்டது” என பால் நினைவுபடுத்தி கூறுகிறான். இப்போது இருதயம் அமைதியாக இருந்தபடியால் உணர்ச்சிவசப்படாமல் காரியங்களை பால் சீர்தூக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ‘அந்தக் காலத்தில் அவன் அனுபவித்ததெல்லாம் அத்தனை இனியதொன்றும் அல்ல’ என்பதை சீக்கிரத்தில் உணர்ந்துகொண்டான். (பிரசங்கி 7:10) சொல்லப்போனால், அவன் எந்த “நண்பர்களுக்காக” அப்படி ஏங்கினானோ அவர்களெல்லாம் உண்மையில் நல்ல நண்பர்களே அல்ல.

மிக முக்கியமாக யெகோவாவின் கவனிப்பை தனிப்பட்ட விதமாக பால் உணர ஆரம்பித்தான். யாக்கோபு 4:8-லுள்ள வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை புரிந்துகொள்ள தொடங்கினான்: “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.” பாலுக்கு இது ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக யெகோவாவுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுத்து தன்னையே அவருக்கு ஒப்புக்கொடுக்கும்படி அது அவனைத் தூண்டியது.

கடவுளிடம் பேசுங்கள்!

ஜெபம் உங்களுக்கு உதவும் என்பதையே இந்த நல்ல அனுபவங்கள் உறுதியளிக்கின்றன. ஆம், கடவுளை நீங்கள் அறிந்துகொண்டு, அவரோடு நட்புறவை வளர்த்துக்கொள்வதில் ஆர்வமாக இருந்தால்தான் உண்மையில் இவையெல்லாம் சாத்தியம். அநேக இளைஞர்கள் இதை செய்யாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பது விசனகரமான விஷயம். கரிஸ்ஸா கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்க்கப்பட்ட பெண். ஆனால் அவள் இவ்வாறு ஒப்புக்கொள்கிறாள்: “கடந்த சில ஆண்டுகளாகத்தான் யெகோவாவோடுள்ள என் பிரத்தியேக உறவின் மகத்துவத்தை முழுமையாக புரிந்துகொண்டிருக்கிறேன் என தோன்றுகிறது.” ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ப்ராட் கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டான், ஆனால் பல வருடங்கள் உண்மை வணக்கத்திலிருந்து வழிவிலகி போயிருந்தான். “நான் எதை இழந்திருந்தேன் என்பதை உணர ஆரம்பித்த போதுதான் யெகோவாவிடம் திரும்பி வந்தேன். அந்த உறவு இல்லையென்றால் வாழ்க்கை எத்தனை அர்த்தமற்றதாகவும் உயிர்ப்பற்றதாகவும் இருக்கும் என்பது இப்போது எனக்குத் தெரியும்” என்கிறான்.

ஆனால் கடவுளிடம் நெருங்கி வருவதற்கு கஷ்டமான ஒரு சூழ்நிலை வரும் வரை காத்திருக்காதீர்கள். இப்போதே அவரிடம் தவறாமல் பேச ஆரம்பியுங்கள்! (லூக்கா 11:9-13) “அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்.” (சங்கீதம் 62:8) ஜெபம் உண்மையில் உங்களுக்கு உதவி செய்வதை சீக்கிரத்தில் காண்பீர்கள்!(g01 7/22)

[அடிக்குறிப்புகள்]

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

bஇளைஞர் கேட்கின்றனர் . . . கடவுள் என் ஜெபங்களை கேட்பாரா?” கட்டுரையை ஜூலை 8, 2001 தேதியிட்ட விழித்தெழு!-வில் காண்க.

[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]

ஜெபம் இவற்றிற்கெல்லாம் உதவும்

●நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு

●மன அழுத்தமுள்ள நேரங்களில் அமைதியாக இருப்பதற்கு

●கவலையிலிருந்து விடுபடுவதற்கு

●கடவுளிடம் நெருங்கி வருவதற்கு