தாளாத துயரத்தை தாங்குதல்
தாளாத துயரத்தை தாங்குதல்
ஜேம்ஸ் ஜாரானோ சொன்னது
தாத்தா பாட்டியாக இருப்பதென்பது வாழ்க்கையின் மிகப் பெரிய சந்தோஷங்களில் ஒன்று. எங்களுடைய முதல் பேரக் குழந்தை பிறக்கப் போவதை நினைத்து என் மனைவி விக்கியும் நானும் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை. என்னுடைய மகள் தெரசாவும் அவள் கணவர் ஜானத்தனும் அக்டோபர் 2000-ன் ஆரம்பத்தில் குழந்தை பிறக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்தார்கள். அப்போது, சொல்ல முடியாத ஒரு சோகத்தை எதிர்ப்பட போகிறோம் என்பதை நாங்கள் யாரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது.
என்னுடைய மனைவி, நான், எங்கள் மகன், அவன் மனைவி எல்லாரும் சேர்ந்து செப்டம்பர் 23-ஆம் தேதி, சனிக்கிழமை விடுமுறையைக் கழிக்க புறப்பட்டோம். எங்களுடைய உறவினர்களைச் சந்திக்கவும் வட கரோலினாவின் கடற்கரையோரப் பகுதியில் இருந்த தீவுகளுக்கும் தீபகற்பங்களுக்கும் சென்று ஒரு வாரம் செலவிட்டு வரவும் திட்டமிட்டிருந்தோம். தெரசா ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்ததாலும் ஒஹாயோவிலுள்ள எங்களுடைய வீட்டிலிருந்து நாங்கள் 11 மணிநேரம் பிரயாணம் செய்ய வேண்டியதாக இருந்ததாலும் தெரசாவும் ஜானத்தனும் எங்களோடு வர வேண்டாம் என்று முடிவு செய்தனர்.
விடுமுறையை தள்ளிப்போடலாம் என்று நாங்கள் முதலில் நினைத்தோம். ஆனால் தெரசா தனக்கு ஒன்றும் ஆகாது என்று சொல்லி எங்களை போய்வரும்படி வற்புறுத்தவே நாங்களும் கிளம்பிவிட்டோம். அதோடு, அவளுடைய பூரண கர்ப்ப காலத்திற்குப் பின்பே, அதாவது இன்னும் இரண்டு வாரங்கள் சென்ற பின்பே குழந்தை பிறக்கும் என்று டாக்டரும்கூட உறுதியாக சொல்லியிருந்தார்.
2000, செப்டம்பர் 27-ஆம் தேதி, புதன்கிழமை காலைப்பொழுது இனிதாகவே புலர்ந்தது. பல வருடங்களாக என்னுடைய குடும்பத்தார் விடுமுறை என்றால் இந்த இடத்துக்கு வருவதற்கு ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பதையும் எனக்கு நினைப்பூட்டியது அந்த நாள். அந்த நாள் முடிவதற்குள் எங்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்று நாங்கள் யாரும் கொஞ்சங்கூட எதிர்பார்க்கவில்லை.
“தெரசாவைக் காணவில்லை!”
அன்று மாலை, என் தம்பி ஒஹாயோவிலிருந்து ஃபோன் செய்தான். அவன் குரலில் நடுக்கமும் தயக்கமும் தெரிந்தது. கடைசியாக விஷயத்தை சொல்லிவிட்டான்: “தெரசாவைக் காணவில்லை!” அவள் காணாமல் போனதில் ஏதோ சந்தேகங்கள் இருந்ததால் இது போலீஸ் கேஸாகிவிட்டது. ஜானத்தன் அன்று பிற்பகல் வீட்டுக்கு வந்தபோது முன்கதவு திறந்து கிடந்தது. தெரசாவின் காலை உணவு மேசை மீது அப்படியே இருந்தது. அவளுடைய பர்ஸ் வீட்டில் இருந்தது. விநோதமான இன்னொரு விஷயம்: ஒன்பதாம் மாதத்தில் அவள் அணிய முடிந்த அந்த ஒரேவொரு ஜோடி ஷூவும் கதவண்டையில்தான் இருந்தது.
ஜானத்தன் காலை 9:30 மணியளவில் வீட்டுக்கு ஃபோன் செய்திருக்கிறார். அப்போது, ஒரு பெண் தன்னிடம் ஃபோனில் பேசியதாகவும், இவர்கள் விற்கப் போவதாக இருந்த காரை பார்க்க வருவதாகவும் தெரிவித்ததை தெரசா அவரிடம் சொன்னாள். அதற்குப்பின், பக்கத்தில் இருந்த கடைக்குப் போய் வருவதாக சொன்னாள். ஜானத்தன் மதிய உணவு நேரத்தில் வீட்டுக்கு ஃபோன் செய்தார், ஆனால் அவளிடம் பேச முடியவில்லை. பிற்பகல் முழுவதும் ஃபோன் செய்து பார்த்தார், ஆனால் பதில் இல்லை. மாலை 4:15-க்கு வீட்டுக்கு வந்தபோது காரை காணவில்லை. பிரசவ வலி வந்திருக்கும், அவள் ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம் என்று நினைத்து அங்கே ஃபோன் செய்தார். அங்கும்
அவள் இல்லை. உறவினர்கள் சிலருடைய வீட்டில் கேட்டுப் பார்த்தார், யாரும் அவளை பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அவர் பதற்றமடைந்தார். ஆகவே போலீஸுக்கு தகவல் கொடுத்தார். சுமார் மாலை 6:00 மணியளவில் அவர்கள் வீட்டுக்கு அருகிலேயே காரை கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால் தெரசாவை இன்னும் காணவில்லை.வெகு தூரத்தில் வட கரோலினாவில் இருந்த நாங்கள் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனோம். என்னுடைய மனைவி, நான், மகன், மருமகள் எல்லாரும் எங்கள் பெட்டி படுக்கைகளை எல்லாம் வாரி சுருட்டிக்கொண்டு வீட்டை நோக்கி விரைந்தோம். மிக நீண்ட தூர பயணத்தில் சோகம் எங்கள் தொண்டையை அடைத்தது. இரவு முழுவதும் பிரயாணம் செய்து அடுத்த நாள் காலை ஒஹாயோ வந்துசேர்ந்தோம்.
வழக்கில் துப்பு துலங்கியது
இதற்கிடையில் போலீஸாரோடு சேர்ந்து ஜானத்தனும் சில உறவினர்களும் நெருக்கமான நண்பர்களும் மற்றவர்களும் இராப்பகல் முழுவதும் தெரசாவுக்காக தேடியிருக்கிறார்கள். இந்தத் தேடுதல் ஐந்து வேதனைமிக்க நாட்களுக்குத் தொடர்ந்தது. கடைசியாக திங்கட்கிழமை அக்டோபர் 2-ம் தேதி துப்பு துலங்கியது. புதன்கிழமை காலை தெரசாவுக்கு ஃபோன் செய்தது யார் என்பதை போலீஸார் கண்டுபிடித்துவிட்டார்கள். சில வீடுகள் தள்ளி வசித்துவந்த ஒரு பெண்மணி தன் செல் ஃபோனிலிருந்து பேசியிருக்கிறாள்.
அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அன்று சாயங்காலம் போலீஸார் அந்தப் பெண்ணின் வீட்டுக்கு மீண்டும் வந்தார்கள். ஆனால் வீட்டுக் கதவை நெருங்கியதும் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் அவர்கள் காதில் விழுந்தது. போலீஸார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போனபோது அந்தப் பெண் பிணமாக கிடந்தாள். அவள் தன்னை சுட்டுக்கொண்டாள். இரண்டாவது மாடியிலிருந்த அறையில் பச்சிளம் குழந்தை ஒன்றைப் பார்த்தபோது அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இத்தனை அமளியிலும் அவன் அமைதியாக தூங்கிக்கொண்டிருந்தான் என்பதை நம்ப முடியவில்லை!
ஆனால் இன்னும் தெரசாவை கண்டுபிடிக்க முடியவில்லை. அடுத்த சில மணிநேரம், அவள் அங்கு வந்திருந்ததற்கு ஏதாவது துப்பு கிடைக்குமா என்று போலீஸார் வீட்டில் சல்லடைபோட்டு தேடினார்கள். செவ்வாய்கிழமை அதிகாலை கராஜை பார்வையிடும் வரை தேடல் தொடர்ந்தது. அங்கே அதிக ஆழமில்லாத குழியில் தெரசாவின் உடலை அவர்கள் கண்டுபிடித்தார்கள். யாரோ அவளைத் தாக்கியதால் அவள் நினைவிழந்து போயிருக்கிறாள். அதன் பிறகு பின் பக்கத்தில் அவளை சுட்டிருக்கிறார்கள் என்பதாக பிரேத பரிசோதனையாளர் கண்டுபிடித்தார். உடனடியாக அவள் உயிர் பிரிந்துவிட்டிருக்கிறது, அதன்பின் அவளுடைய குழந்தை கருப்பையிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. அவள் அதிகம் வேதனைப்படாமல் இறந்திருப்பதை நினைத்தால் சற்று ஆறுதலாக இருக்கிறது.
அதன் பிறகு, அந்தப் பச்சிளம் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றார்கள். அவன் உடம்பில் ஒரு கீறல்கூட இல்லை! மிகவும் ஆரோக்கியமாக இருந்தான். கட்டாயமாக செய்யப்பட வேண்டிய டிஎன்ஏ பரிசோதனையில் அது நிச்சயமாகவே எங்கள் பேரன்தான் என்பது உறுதியானது. தெரசாவும் ஜானத்தனும் ஏற்கெனவே முடிவுசெய்திருந்த ஆஸ்கர் கேவன் என்ற பெயரை ஜானத்தன் அவனுக்கு வைத்தார். ஆஸ்பத்திரியில் கொஞ்ச நேரம் இருந்துவிட்டப்பின், 3 கிலோ 950 கிராம் எடையுடனிருந்த எங்கள் பேரன் வியாழக்கிழமை அக்டோபர் 5-ம் தேதி அவனுடைய அப்பாவின் அரவணைப்பில் ஒப்படைக்கப்பட்டான். எங்களுக்கு பேரன் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தாலும், அவனை அணைத்துக்கொள்ள தெரசா இல்லையே என்று நினைத்தபோது ஏற்பட்ட வேதனையை சொற்களால் விவரிக்க முடியாது.
சமுதாயத்தின் பிரதிபலிப்பு
முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் எங்களிடம் வந்து அனுதாபம் தெரிவித்தபோது என்னுடைய குடும்பத்தாரும் நானும் நெகிழ்ந்து போய் கண்ணீர் வடித்தோம். தெரசா காணாமல் போயிருந்த அந்த நாட்களில் நூற்றுக்கணக்கானவர்கள் தேடுதலில் உதவ முன்வந்தார்கள். அநேகர் பணம் கொடுத்து உதவினார்கள். அவளை காணவில்லை, கண்டுபிடிப்பதற்கு உதவுங்கள் என்று இலவசமாக ஆயிரக்கணக்கில் நோட்டீஸ் அச்சடித்து உள்ளூரில் அலுவலகங்களுக்கு பேப்பர் சப்ளை பண்ணும் கடைகள் உதவின. தெரசாவின் வீட்டைச் சுற்றி பல கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த நோட்டீஸுகளை வாலண்டியர்கள் விநியோகம் செய்தார்கள்.
எங்கள் சபையிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரி உள்ளூரிலுள்ள ஒரு வழக்கறிஞரிடம் வேலை செய்துவந்தாள். எங்களுடைய நிலைமையை இந்தச் சகோதரி எடுத்துச் சொன்னபோது அவர் எங்களுக்கு உதவ முன்வந்தார். அவர் உதவியை நாங்கள் ஏற்றுக்கொண்டதால் பல ஆசீர்வாதங்கள் கிடைத்தன. செய்தித் துறையிடம் பேசுவது முதல் சட்ட சம்பந்தமாக எழுந்த பிரச்சினைகள் வரை எல்லாவற்றையும் கையாள அவர் உதவினார். அதோடு புலன் விசாரணை நடத்தும் தனியார் இருவரை அவர் சிபாரிசு செய்தார். இந்த கேஸில் அவர்கள் மிகவும் உதவியாக இருந்தனர். எங்களிடம் அவர்கள் காட்டின அக்கறை எங்களை நிஜமாகவே நெகிழ வைத்தது.
எங்கள் பேரன் எங்களுக்குக் கிடைத்தப்பின், இன்னும் அதிகமான உதவி எல்லா இடங்களிலிருந்தும் கிடைத்தது. பல்பொருள் அங்காடிகள் உணவுப் பொருட்களையும் வீட்டுக்கு வேண்டிய சாமான்களையும் அனுப்பி வைத்தன. ஆஸ்கருக்கு துணிமணிகள், டையப்பர்கள், பால் பவுடர், விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் வந்து குவிந்தன. ஆஸ்கருக்கு தேவைப்படுவதற்கும் மேலாக எல்லாமே வந்தது, ஆகவே தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை உள்ளூரிலிருந்த ஒரு மருத்துவமனையிலுள்ள பிரசவ பிரிவுக்கு நாங்கள் கொடுத்துவிட்டோம். பத்திரிகைகள் இந்தச் சம்பவத்தின் பேரில் அறிக்கை செய்ததால், எங்கள் ஊரிலிருந்து மட்டுமல்ல உலகம் முழுவதிலுமிருந்து எக்கச்சக்கமான கார்டுகளும் கடிதங்களும் வந்து குவிந்தன.
அக்டோபர் 8, ஞாயிறு அன்று தெரசாவுக்காக நினைவு
நாள் ஆராதனை நடத்திய போதுதான் எவ்வளவு பேர் எங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க வந்திருந்தார்கள் என்பதை காண முடிந்தது. அநேகர் வருவார்கள் என்று தெரியும், ஆனால் இவ்வளவு பெரிய கூட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதற்காக உயர்நிலைப் பள்ளியின் ஆடிட்டோரியத்தை ஏற்பாடு செய்தோம். கூட்டம் அலைமோதியது, இதற்கு 1,400-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்கள். இவர்களில் குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், போலீஸ் அதிகாரிகள், மேயர் மற்றும் பிறரும் இருந்தார்கள். பத்திரிகை நிருபர்கள் வந்திருந்தார்கள், உள்ளூர் தொலைக்காட்சி நிலையம் சொற்பொழிவை வீடியோ எடுத்தது, இது இன்டர்நெட்டில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதோடு பள்ளியின் நுழைவாயிலிலும் வெளியே கொட்டுகிற மழையில் தங்கள் குடைகளில் தஞ்சம்புகுந்து நெருக்கமாக ஒண்டி நின்றுகொண்டும் அங்கு கொடுக்கப்பட்ட சொற்பொழிவை ஒலிபெருக்கி இணைப்புகளின் வழியாக நூற்றுக்கணக்கானவர்கள் கேட்டார்கள். பைபிள் அடிப்படையில் எங்களுக்கிருக்கும் நம்பிக்கையைப் பற்றி அந்த பேச்சின்மூலம் சிறந்த சாட்சி கொடுக்கப்பட்டது.அதன்பிறகு எங்களுக்கு அனுதாபம் தெரிவிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் பொறுமையாக நின்றுகொண்டிருந்தார்கள். நாங்கள் ஏறக்குறைய மூன்று மணிநேரம் நின்று, வந்திருந்த அனைவரையும் அணைத்துக்கொண்டு அவர்கள் வந்ததற்காக நன்றி சொன்னோம். நிகழ்ச்சி முடிந்தபின், அங்கிருந்த ஒரு ஹோட்டல் எங்களுடைய குடும்ப அங்கத்தினர்கள், நெருங்கிய நண்பர்கள், எங்கள் பேரனை கண்டுபிடிக்க உதவியவர்கள் என்று மொத்தம் 300-க்கும் அதிகமானவர்களுக்கு ஒரு வேளை சாப்பாட்டை தயவாக ஏற்பாடு செய்து கொடுத்தது.
அனைவரும், பெரும்பாலும் முன்பின் தெரியாதவர்கள் எங்களுக்கு காட்டிய அன்புக்கும் செய்த உதவிக்கும் நன்றிகூற எங்களுக்கு வார்த்தைகளே இல்லை. இந்த அனுபவம், கிறிஸ்தவ ஊழியத்தில் முன்பு செய்ததைவிட இன்னும் அதிக முழுமையாக பங்கெடுக்க தீர்மானமாயிருக்கும்படி எங்களைச் செய்திருக்கிறது; ஏனென்றால் நல்ல இருதயமுள்ள ஆட்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்; ராஜ்யத்தின் நற்செய்தி அவர்களுக்கு சொல்லப்பட வேண்டும்.—மத்தேயு 24:14.
சபையின் பிரதிபலிப்பு
இந்தக் கடுஞ்சோதனையின் ஆரம்பத்திலிருந்தே எங்களுடைய கிறிஸ்தவ சகோதரர்களும் சகோதரிகளும் எப்போதும் கூடவே உறுதுணையாய் இருந்து வந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளாக, எங்கள் சபையிலிருந்து மட்டுமல்லாமல் சுற்றியிருந்த சபைகளிலிருந்து வந்தவர்களும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்தார்கள்.
வட கரோலினாவிலிருந்து நாங்கள் வந்துசேருவதற்கு முன்னே, எங்கள் சபை மூப்பர்கள் தெரசாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். எங்களுடைய சகோதர சகோதரிகள் பலர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு எங்களோடு சேர்ந்து தேடினார்கள். சிலர் சம்பளம் இல்லாமல் லீவு கொடுக்கும்படி தங்கள் முதலாளிகளிடம் கேட்டார்கள், ஆனால் சிலர் சம்பளத்தோடே லீவு கொடுத்தார்கள். தெரசாவை தேடிக்கொண்டிருந்த அந்த நாட்களில் ஜானத்தனை தனியே இருக்கவிடாமல் எங்களுடைய ஆவிக்குரிய சகோதரர்கள் சிலர் அவரோடே எப்போதும் இருந்தார்கள். இன்னும் சில சகோதர சகோதரிகள் வீட்டுக்கு வந்து வீட்டை சுத்தம் செய்து அதை நேர்த்தியாக வைத்துவிட்டு போனார்கள். மற்றவர்கள் வாலண்டியர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்து, ஃபோன் வந்தால் பதிலளித்து உதவினார்கள்.
தெரசா மரித்து சுமார் ஆறு வாரங்கள் ஆனபின், என் மனைவியும் ஜானத்தனும் சேர்ந்து தெரசாவின் சாமான்களையெல்லாம் அப்புறப்படுத்தி, வீட்டை காலி செய்ய வேண்டியிருந்தது; அது அவர்களுக்கு மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. தெரசாவோடு வாழ்ந்த இந்த வீட்டில் இனி தன்னால் வாழ முடியாது என்று ஜானத்தன் சொன்னார், ஆகவே அதை விற்றுவிடவும் தீர்மானித்தார். தெரசாவின் பொருட்களை எல்லாம் எடுத்துப் பார்க்கையில் துக்கம் அவர்கள் தொண்டையை அடைத்தது, அவள் இல்லாதது வேதனையை அளித்தது. ஆனால் இப்போதும்கூட உதவிக்கு வந்தது எங்களுடைய சகோதர சகோதரிகளே. அவளுடைய பொருட்களையெல்லாம் பெட்டியில் அடுக்கி
வைக்க உதவினார்கள், வீட்டை விற்பதற்காக பழுதுபார்க்கும் வேலைகளையும் செய்துகொடுத்தார்கள்.அதிமுக்கியமாக எங்களுடைய சகோதர சகோதரிகள் ஆன்மீக உதவியையும் உணர்ச்சிப்பூர்வமான உதவியையும் எங்கள் குடும்பத்துக்கு கொடுத்தார்கள். அடிக்கடி ஃபோன் செய்வார்கள், உற்சாகமளிப்பதற்காக எங்களை வந்து பார்த்துவிட்டுப் போவார்கள். நிறைய பேர் எங்களை மிகவும் நெகிழ வைக்கும் கார்டுகளையும் கடிதங்களையும் அனுப்பினார்கள். இந்த அன்பான உதவியை சில நாட்களுக்கு வாரங்களுக்கு மட்டுமல்ல, பல மாதங்களுக்குச் செய்தார்கள்.
நீங்கள் யாரிடமாவது பேச வேண்டுமென்று தோன்றினால் சொல்லுங்கள் என்று சகோதர சகோதரிகள் பலர் எங்களிடம் சொன்னார்கள். அவர்களுடைய இந்த உதவியையும் மறுக்காமல் நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நீங்கள் மிகவும் நேசிக்கும், நம்பும் நண்பர்களோடு உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ள முடிவது ஆறுதலான விஷயம்! பைபிள் நீதிமொழியின்படி அவர்கள் வாழ்ந்துகாட்டினார்கள்: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17; 18:24.
எங்கள் குடும்பத்தின்மீது விழுந்த இடி
தெரசா கொலை செய்யப்பட்டதை தாங்கிக்கொள்வது என்னுடைய குடும்பத்துக்கும் எனக்கும் சுலபமாக இல்லை. எங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது. அவள் எங்களோடு இல்லை என்பதால் எனக்கு சில சமயங்களில் கோபம் வருகிறது. அவளுடைய அணைப்புகளையும் முத்தங்களையும் நான் ‘மிஸ்’ பண்ணுகிறேன்.
தெரசாவிடம் என்னுடைய மனைவிக்கு நெருக்கம் அதிகம். ஒரு நாள்கூட அவர்கள் பேசிக்கொள்ளாமல் இருக்க மாட்டார்கள். மணிக்கணக்காக உட்கார்ந்து தெரசாவின் பேறுகாலத்தைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள். குழந்தையின் படுக்கை அறை ஏற்பாடுகளைக் குறித்து அவர்கள் ஏதேதோ திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.
விக்கி தன் உணர்ச்சிகளை விவரிக்கிறாள்: “நான் எவ்வளவோ காரியங்களை ‘மிஸ்’ பண்ணுகிறேன். அவளோடு பிரசங்க ஊழியத்திற்கு செல்வதை ‘மிஸ்’ பண்ணுகிறேன். ஒன்றாக சேர்ந்து கடைக்குப் போவதை ‘மிஸ்’ பண்ணுகிறேன். என் மனதில் ஆறாத ரணமாக இருப்பது அவளை அவளுடைய குழந்தையோடு சேர்ந்து பார்க்கவில்லையே என்பதுதான். இதை நினைத்தால் இருதயமே வெடித்துவிடும் போல இருக்கிறது. ஆஸ்கர் பிறப்பதற்கு முன்பே அவனை அவள் எவ்வளவு நேசித்தாள் என்பது எனக்குத் தெரியும். அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கப்போவது தெரியும். குழந்தைக்காக நான் போர்வையை பின்னி அவளிடம் கொடுத்த போது எனக்கு இந்தக் கார்டை அவள் அனுப்பியிருந்தாள்:
‘அன்புள்ள அம்மாவுக்கு,
நீங்கள் குழந்தைக்கென்று பின்னிக்கொடுத்த அழகான போர்வைக்காக ரொம்ப நன்றி. நீங்கள் இதை எவ்வளவு கஷ்டப்பட்டு செய்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். என்னுடைய வாழ்க்கையில் நான் மிகவும் சோர்ந்துபோயிருந்த சமயங்களில் எல்லாம் நீங்கள் எனக்கு அளித்த உதவிக்காகவும் உற்சாகத்துக்காகவும் மறுபடியும் உங்களுக்கு நன்றி சொல்ல தோன்றுகிறது. நான் அதை மறக்கவே மாட்டேன், அதற்காக உங்களுக்கு நன்றி. தாயே மகளுக்கு மிகச் சிறந்த தோழி என்பதை மகள் ஒருநாள் உணர்வாள் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையே என்பதை நானும் சீக்கிரமாகவே புரிந்துகொண்டதற்காக யெகோவாவுக்கு நன்றி சொல்லுகிறேன். அம்மா, காலமெல்லாம் நான் உங்களை நேசிப்பேன்.’”
எங்கள் மருமகன் படும் பாட்டை காண்பதும் எங்களுக்கு வேதனை அளித்தது. ஆஸ்கர் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது மிகவும் கஷ்டமான ஒரு வேலையை ஜானத்தன் செய்ய வேண்டியதாக இருந்தது. தற்காலிகமாக அவர் எங்கள் வீட்டில் தங்க முடிவு செய்ததால், தெரசாவும் அவரும் சேர்ந்து ஆஸ்கருக்காக அவர்கள் வீட்டில் அமைத்திருந்த படுக்கையை இங்கே கொண்டுவர வேண்டியதாயிற்று. ஆடும் குதிரை, தொட்டில், மிருதுவான விளையாட்டு பொம்மைகள் ஆகியவற்றை பேக் செய்து எங்கள் வீட்டுக்கு கொண்டு வந்தார்.
சமாளிக்க எங்களுக்கு உதவியது எது
அன்பான ஒருவரை இப்படி இழக்க நேரிடும்போது, மனதை குழப்புகிற ஓராயிரம் கேள்விகளும் உணர்ச்சிகளும் மேலிடுகின்றன. ஒரு கிறிஸ்தவ மூப்பராக இப்படிப்பட்ட கேள்விகளோடும் உணர்ச்சிகளோடும் போராடிய பல பேருக்கு நீங்கள் ஆறுதல் சொல்லி உதவி செய்திருக்கலாம். ஆனால் நீங்களே துக்கத்தில் இருக்கையில் உணர்ச்சிகள் தெளிவான சிந்தனையை மறைத்துவிடுகின்றன.
ஒரு வாரத்துக்கு நாங்கள் தெரசாவை பிரிந்திருப்போம் என்று தெரிந்தபோது யெகோவா அவளை பாதுகாக்க வேண்டும் என்று ஜெபம் செய்திருந்தேன். அவள் கொலை செய்யப்பட்டதை அறிந்தபோது, யெகோவா ஏன் என் ஜெபத்துக்கு பதிலளிக்கவில்லை என்றே முதலில் யோசித்தேன். தனிப்பட்ட விதமாக தம்முடைய மக்கள் ஒவ்வொருவரையும் அற்புதகரமாக பாதுகாப்பதாக யெகோவா உறுதியளிக்கவில்லை என்பது எனக்கு தெரிந்த விஷயமே. புரிந்துகொள்வதற்காக நான் தொடர்ந்து ஜெபித்தேன். யெகோவா தம்முடைய மக்களை ஆன்மீக ரீதியில் பாதுகாக்கிறார், அதாவது அவரோடு நமக்கிருக்கும் உறவை காத்துக்கொள்ள தேவையானதை அவர் நமக்கு அளிக்கிறார் என்பதை அறிந்துகொண்டபோது ஆறுதல் கிடைத்தது. இந்தப் பாதுகாப்புதான் நமக்கு மிகவும் முக்கியம், ஏனென்றால் அது நம்முடைய நித்திய எதிர்காலத்தையே பாதிக்கக்கூடும். அந்தக் கருத்தில் யெகோவா தெரசாவை பாதுகாத்திருக்கிறார்; மரிக்கும் அந்தச் சமயம் வரையில் அவள் உண்மையுடன் அவரை சேவித்து வந்தாள். அவளுடைய எதிர்கால வாழ்க்கை அவருடைய அன்பான கரங்களிலிருப்பதை அறிந்து சமாதானமடைகிறேன்.
பல வேதவசனங்கள் விசேஷமாக ஆறுதலாக இருந்திருக்கின்றன. சமாளிப்பதற்கு எனக்கு உதவிய அந்தச் சில வேதவசனங்கள் இதோ:
“நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்[பார்கள்].” (அப்போஸ்தலர் 24:15) பூமிக்குரிய பரதீஸில் மக்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் என்ற பைபிளின் வாக்குறுதியை வெகு காலமாக நம்பி வருகிறேன், ஆனால் இப்போது அந்த நம்பிக்கை எனக்கு இன்னும் அதிக நிஜமாகிறது. மறுபடியும் தெரசாவை நான் அணைத்துக்கொள்வேன் என்று அறிந்திருப்பதுதானே ஒவ்வொரு நாளையும் சகித்துக் கொள்வதற்கு போதுமான பலத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.
“அவர் [யெகோவா] மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே.” (லூக்கா 20:38) ஒரு நாள் உயிர்த்தெழுப்பப்பட போகிற மரித்தோர், இப்போதேகூட யெகோவாவின் பார்வையில் ‘பிழைத்திருக்கிறார்கள்’ என்று அறிவது அதிக ஆறுதலாக இருக்கிறது. ஆகவே அவருடைய நோக்குநிலையில் எங்கள் அருமை தெரசா உயிரோடுதான் இருக்கிறாள்.
தன்னை பலப்படுத்திய சில பைபிள் வசனங்களை விக்கி உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறாள்:
‘பொய் சொல்லுவது கடவுளுக்கு கூடாத காரியம்.’ (எபிரெயர் 6:18; தீத்து 1:2; NW) யெகோவா பொய் சொல்லக்கூடாதவர் என்பதால் மரித்தோரை அவர் நிச்சயமாக உயிர்த்தெழுப்பி தாம் சொன்னதை நிறைவேற்றுவார்.
“இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள [“ஞாபகார்த்த கல்லறையிலுள்ள,” NW] அனைவரும் [இயேசுவினுடைய] சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, . . . எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.” (யோவான் 5:28, 29) ‘ஞாபகார்த்த கல்லறை’ என்ற வார்த்தை, தெரசாவை தம் குமாரன் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுப்பும் வரை அவள் யெகோவாவின் ஞாபகத்தில் இருப்பாள் என்பதைக் காட்டுகிறது. யெகோவாவின் பரிபூரண ஞாபகத்தில் இருப்பதைவிட அவள் அதிக பாதுகாப்பாக வேறு எங்கும் இருக்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.
“எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) குறிப்பாக என்னைப் பலப்படுத்துவதற்கு யெகோவாவின் ஆவிக்காக ஜெபிக்கிறேன். நிஜமாகவே நான் நிலைகுலைந்து போகையில், யெகோவாவிடம், ‘உம்முடைய ஆவி எனக்கு அதிகமாக தேவை’ என்று சொல்கிறேன், மற்றொரு நாளை சமாளிக்க அவர் எனக்கு உதவுகிறார். சில சமயங்களில் எனக்கு வார்த்தைகள்கூட வராது, ஆனால் அவர் என்னை எப்படியோ பலப்படுத்திவிடுகிறார்.
இந்தத் தாளாத துயரத்தை தாங்க யெகோவா உண்மையில் எங்களுக்கு உதவியிருக்கிறார். ஆம், இன்னும் எங்கள் அருமை மகள் தெரசாவை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். யெகோவாவின் புதிய உலகில் அவளை எங்கள் கைகளால் அணைத்துக்கொள்ளும்வரை எங்கள் துக்கம் முழுவதுமாக மாறிவிடாது என்பது தெரியும். ஆனால் அதே சமயத்தில், இன்னும் அதிகமாக யெகோவாவை உண்மையுடன் சேவிக்க தீர்மானமாயிருக்கிறோம். ஜானத்தன் தன்னால் முடிந்த வரை ஆஸ்கரை யெகோவாவை நேசிக்கிறவனாகவும் சேவிக்கிறவனாகவும் வளர்க்க உறுதியாயிருக்கிறார். விக்கியும் நானும் எல்லா வகையிலும் அவருக்கு உதவியாக இருப்போம். கடவுளுடைய புதிய உலகில் தெரசாவை மீண்டும் வரவேற்பதற்காக அங்கே இருந்து, அவள் தன் கைகளில் ஏந்திக்கொள்ள முடியாமல் போன அவளுடைய மகனை அறிமுகப்படுத்துவதே எங்கள் மனப்பூர்வமான ஆசை.(g01 7/22)
[பக்கம் 25-ன் படம்]
தன் பிள்ளையின் இதயத்துடிப்பை கேட்கும் எங்கள் மகள் தெரசா
[பக்கம் 27-ன் படங்கள்]
நினைவு நாள் ஆராதனையில் ஆதரவுக்கு அளவில்லை
[பக்கம் 29-ன் படம்]
தெரசாவின் திருமணத்தில் என் மனைவி விக்கியோடு
[பக்கம் 29-ன் படம்]
எங்கள் பேரன் ஆஸ்கர்