Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தொற்று நோய்கள் ஆபத்தானவை ஆனால் தடுக்கக்கூடியவை

தொற்று நோய்கள் ஆபத்தானவை ஆனால் தடுக்கக்கூடியவை

தொற்று நோய்கள்—ஆபத்தானவை ஆனால் தடுக்கக்கூடியவை

படுநாசத்தை விளைவிக்கும் நிலநடுக்கங்களும் பெரும் சேதத்தை உண்டுபண்ணும் வெள்ளப் பெருக்குகளும் செய்தித் தாள்களில் முதல் பக்கத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. அமைதியாக பரவிவரும் தொற்று நோய்களோ அவற்றில் அரிதாகவே இடம் பெறுகின்றன. என்றாலும், “தொற்று நோய்களால் (எய்ட்ஸ், மலேரியா, சுவாசநோய்கள், வயிற்றுப்போக்கு போன்றவற்றால்) ஏற்பட்ட சாவு எண்ணிக்கை, கடந்த ஆண்டில் இயற்கை சேதங்களால் இறந்தவர்களைவிட 160 மடங்கு அதிகம்” என்று செஞ்சிலுவை/செம்பிறை சங்கத்தின் ஜூன் 2000 செய்தி வெளியீடு கூறுகிறது. “அதோடு நிலைமையும் இன்னும் மோசமாகி வருகிறது.”

அதிர்ச்சிதரும் இந்த எண்ணிக்கைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒரு காரணம், கட்டுக்கடங்காமல் வேகமாக எய்ட்ஸ் பரவுதல்; இது மணிக்கு 300 உயிர்களை பலிவாங்கிவிடுகிறது. எய்ட்ஸ் “இனிமேலும் ஒரு நோய் இல்லை, அது ஒரு பேரழிவு” என்கிறார் பீட்டர் வாக்கர்; இவர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்க சர்வதேச கூட்டுக் கழகங்களில் பேரழிவு நிர்வகிப்பு பாலிஸியின் இயக்குநர். “இந்நோய் எல்லா இடங்களிலும் அதிவேகமாக பரவி வருவதால் தொழிலாளர் வர்க்கம் அழிந்துவிடுகிறது, பொருளாதாரம் சீர்குலைந்து போகிறது.” மற்றொரு காரணம், பொது சுகாதார அமைப்புமுறைகள் சீர்கேடடைந்து வருதல். இதனால், முன்பு ஆட்டிப்படைத்த காச நோய், மேக நோய், மலேரியா போன்ற நோய்கள் பேரளவில் திரும்பவும் தலைதூக்குகின்றன. உதாரணமாக, ஆசிய நாடு ஒன்றில் தற்போது ஆண்டுதோறும் 40,000 பேருக்கு காச நோய் தொற்றுவதாக அறிவிப்பு செய்யப்படுகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றில், மேக நோய்கள் கடந்த பத்தாண்டில் 40 மடங்கு அதிகரித்துள்ளன.

தொற்றுநோய்கள் பேரழிவுகளாக மாறிவிட்டதென்னவோ உண்மைதான். ஆனால் விந்தை என்னவென்றால், இவற்றில் பெரும்பாலானவற்றை தடுத்திருக்க முடியும். 1999-⁠ல், “சிகிச்சைக்காக ஒரு நபருக்கு சுமார் 225 ரூபாய் செலவு செய்திருந்தால்” தொற்று நோய்களால் ஏற்பட்ட 1.3 கோடி மரணங்களில் பெரும்பாலானவற்றை “தடுத்திருக்க முடியும்.” இதை கற்பனை செய்துபாருங்கள்: உலக அரசாங்கங்கள் உடல் ஆரோக்கியத்துக்காக ஒரு நபருக்கு சுமார் 225 ரூபாய் செலவழித்திருந்தால்​—⁠மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி​—⁠அனாவசியமான எத்தனை சாவுகளை தவிர்த்திருக்கலாம்!

இது ஒரு கணிசமான தொகையாக தோன்றினாலும், இந்த உலகம் மற்ற சேவைகளுக்காக செய்யும் செலவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இது ஒன்றுமே இல்லை. உதாரணமாக, சமீப ஆண்டில், உலகம் முழுவதும் இராணுவத்துக்காக செய்யப்பட்ட செலவுகளை​—⁠38 லட்சத்து 88 ஆயிரம் கோடியை​—⁠கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு நபருக்கு 6,480 ரூபாய் ஆகிறது. நோய்கள் பரவுவதை தவிர்ப்பதற்கு செலவு செய்வதைவிட போர் கருவிகளுக்காக எவ்வளவு அதிக பணம் செலவழிக்கப்படுகிறது என்பதை சற்று எண்ணிப்பாருங்கள்! தொற்றுநோய்கள் பரவுவதை தடுப்பது ஒருவேளை மனிதனுடைய திறமைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். இதற்கு காரணம் பணப் பற்றாக்குறையாக இல்லாமல், வேரூன்றிய வேறு காரணங்கள் இருக்கலாம். எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதுகூட இந்த மனித அரசாங்கங்களுக்குத் தெரிவதில்லையே. (g01 7/22)

[பக்கம் 31-ன் படங்களுக்கான நன்றி]

எக்ஸ்ரே: New Jersey Medical School​​—⁠National Tuberculosis Center

இருமுகிறவருடைய படம்: WHO/Thierry Falise