Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நயாகரா நீர்வீழ்ச்சி மலைக்க வைத்த ஓர் அனுபவம்

நயாகரா நீர்வீழ்ச்சி மலைக்க வைத்த ஓர் அனுபவம்

நயாகரா நீர்வீழ்ச்சி—மலைக்க வைத்த ஓர் அனுபவம்

சமீபத்தில் நயாகரா நீர்வீழ்ச்சியை முதன்முறையாக என் கண்கள் ‘குளோசப்’ ஷாட்டில் படம்பிடித்தது. அது என்னை மலைக்க வைத்த ஓர் அனுபவம் என்று உறுதியாக சொல்வேன். என் நண்பர்களும் நானும் கனடாவின் குதிரைலாட நீர்வீழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்தோம். அருவியின் வடிவம் பெற்றுத் தந்த பெயர் அது. 1958-⁠ல் முதல் முறையாக நான் அங்கு சென்றேன், அதன் பிறகு பலமுறை போயிருந்தாலும், நதியில் நீர்வீழ்ச்சியின் முகப்புவரை செல்லும் படகில் பயணம் செய்ததே கிடையாது. ஆனாலும், 1848-⁠ல் மேய்ட் ஆஃப் த மிஸ்ட் படகு சுற்றுலா துவக்கப்பட்ட சமயம் முதற்கொண்டு மக்கள் அந்தப் படகு பயணத்தை அனுபவித்து வந்தனர். கோடிக்கணக்கானோர் இதில் பிரயாணம் செய்து ஆனந்த பரவசம் அடைந்திருக்கிறார்கள். இப்போதோ அந்த அரிய அனுபவம் எனக்கு!

இருபுறங்களிலிருந்தும், அதாவது கனடாவின் பக்கமிருந்தும் அமெரிக்காவின் பக்கமிருந்தும் படகுகள் தொடர்ந்து புறப்படுகின்றன. இப்பயணத்திற்காக எப்போதும் ஆட்கள் வரிசையில் நின்றுகொண்டே இருக்கிறார்கள். சிறு பிள்ளைகள் உட்பட, எல்லா வயதினரும் தூவானத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கு அவசியமான அந்த இலேசான நீலநிற பிளாஸ்டிக் ரெயின் கோட்டை அணிந்திருக்கிறார்கள். (அடுத்த பக்கத்தில் அமெரிக்க நீர்வீழ்ச்சிகளை பார்க்கச் செல்வோருக்கு வழங்கப்படும் மஞ்சள்நிற ரெயின் கோட்.) மேய்ட் ஆஃப் த மிஸ்ட் VII என்ற பெயர் சூடிய படகு 582 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். அது 145 டன் எடையுள்ளது; 24 மீட்டர் நீளமும் 9 மீட்டர் அகலமும் கொண்டது. தற்போது மேய்ட் ஆஃப் த மிஸ்ட் IV, V, VI, VII என்ற பெயர்களில் நான்கு படகுகள் போய் வந்துகொண்டிருக்கின்றன.

சொட்ட சொட்ட நனைய தயார்

நாங்களும் வரிசையில் நின்றுகொண்டோம், மேய்ட் ஆஃப் த மிஸ்ட் VII-லிருந்து சேற்றில் அழுக்கடைந்த, தொப்பலாக நனைந்திருந்த பயணிகள் இறங்கியவுடன் நாங்கள் வரிசையில் முன்னேறினோம். மெய் சிலிர்க்க வைக்கும் ஒரு பயணம் எங்களுக்காக காத்திருப்பதை என்னால் காண முடிந்தது. ஒரு கிலோமீட்டருக்கும் சற்று அதிகமான தூரத்தில், நீர்வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து தண்ணீர் பேரிரைச்சலுடன் 52 மீட்டர் உயரத்திலிருந்து 55 மீட்டர் ஆழமுள்ள படுகைக்குள் வந்துவிழுவது தெரிந்தது. எங்கள் படகு நதிக்குள் சீறிக்கொண்டு அமெரிக்க பக்கத்துக்கு போய்விட்டது; அங்கு அமெரிக்கன் அருவியின் அடிவாரத்தில் நீர்ச்சுழலை கிழித்துக்கொண்டு போனது, இங்கே நீர்வீழ்ச்சியின் மொத்த உயரம் 54 மீட்டர். a மிகவும் உவகையூட்டும் அனுபவம் சீக்கிரத்தில் கிடைக்கவிருந்தது.

ஜோவென்ற இரைச்சலோடு வந்து விழும் தண்ணீருக்கு அருகே செல்லச் செல்ல பதற்றம் அதிகமாகிறது. காற்று வேகமாக வீசியதாலும் நீர்த் துளிகள் சிதறியதாலும் எங்களால் ஃபோட்டோக்களே எடுக்க முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் 1,68,000 கன மீட்டர் தண்ணீர், அருவியிலிருந்து விழுந்து தெறித்து படகுக்கு முன்னால் டமார் டமாரென்று இரைச்சலுடன் மோதி நீர்சுழற்சியை உண்டுபண்ணுகிறது, இந்த இடத்துக்கு அருகே வருவதற்கு படகோட்டி அதிக நேரம் எடுத்துக்கொள்வது போல தோன்றுகிறது! இரைச்சல் பயங்கரமாக இருந்தது. நீங்கள் கத்துவதே உங்களுக்கு கேட்காது. என் இதயம் படபடத்தது. நயாகரா தண்ணீரை என்னால் ருசி பார்க்க முடிந்தது, அது சில்லென்றிருந்தது, ஆனால் சுத்தமாக இருந்தது. ஆம், இது வாழ்க்கையில் ஒரு முறையே கிடைக்கும் அனுபவம்!

நித்தியத்துக்கும் போவதாக தோன்றிய பிரயாணத்துக்குப்பின், படகோட்டி இப்போது மெதுவாக எங்கள் மேய்ட் படகை திருப்பி ஆபத்தான பகுதியை கடந்து நீர் பாய்ந்தோடும் திசையில் செலுத்திக்கொண்டு வந்தார். அப்பாடா என நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். நாங்கள் உயிரோடு வந்துவிட்டோம். உண்மையில் எங்களுக்கு சந்தேகம் எதுவுமில்லைதான். இந்தப் படகுகளை இயக்கும் கம்பெனி, இதுவரை விபத்தில்லா பதிவை ஏற்படுத்தியிருக்கிறது. நீராவிப் படகு கம்பெனியின் ஜெனரல் மானேஜர் ஈமில் பென்டி என்பவர் ஒவ்வொரு படகிலும் மிதக்க வைக்கும் சட்டைகளும் மிதவைப் படகுகளும் போதுமான அளவில் இருப்பதாக எங்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டார். டைட்டானிக் தவறுகளுக்கு வாய்ப்பே இல்லை!

நீர்வீழ்ச்சிகள் பின்னோக்கி நகருகின்றன!

நில அரிப்பு நீர்வீழ்ச்சிக்கு சேதத்தை உண்டுபண்ணியிருக்கிறது. கடந்த 12,000 ஆண்டுகளில், நயாகரா நீர்வீழ்ச்சி சுமார் 11 கிலோமீட்டர் தூரம் பின்னோக்கி நகர்ந்து இப்போதிருக்கும் இடத்துக்கு வந்துள்ளதாக கணக்கிடப்படுகிறது. ஒரு சமயம் அரிப்பு வீதம் ஆண்டுக்கு சுமார் ஒரு மீட்டராக இருந்தது. இப்போது, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் சுமார் 36 சென்டிமீட்டராக உள்ளது. இந்த அரிப்பு ஏன் ஏற்படுகிறது?

மென்மையான மணற்பாறை மற்றும் பிளவுறத்தக்க களிமண் பாறை அடுக்குகளின் மேல் இருக்கும் கடினமான சுண்ணாம்பு கற்பாறை மீது தண்ணீர் ஓடுகிறது. கீழே இருக்கும் இந்த அடுக்குகள் அரிக்கப்படும்போது சுண்ணாம்பு கற்பாறை நொறுங்கி படுகையின்மீது விழுந்துவிடுகிறது.

தண்ணீர் வீணாவதில்லை

குறுகிய நீளமுடைய நயாகரா நதி (56 கிலோமீட்டர்) வழியாக பெருக்கெடுத்து வரும் தண்ணீர் ஐந்து பெரிய ஏரிகளில் நான்கிலிருந்து வரும் தண்ணீராகும். அது ஈரி ஏரியிலிருந்து ஒன்டாரியோ ஏரிக்கு வடக்கு நோக்கி பாய்கிறது. இந்தக் குறுகிய பயணத்தின்போது இந்தத் தண்ணீர் நீர்மின் சக்தி உற்பத்திக்கு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இந்த மின்சக்தியை கனடாவும் ஐக்கிய மாகாணங்களும் பங்குபோட்டுக்கொள்கின்றன. உலகிலேயே அதிகமாக நீர்மின் சக்தி உற்பத்தியாகும் இடங்களில் இதுவும் ஒன்றென சொல்லப்படுகிறது. கனடா மற்றும் ஐக்கிய மாகாணங்களின் மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 42,00,000 கிலோவாட்ஸ். டர்பைன்களுக்குத் தேவையான தண்ணீர் நயாகரா நதி நீர்வீழ்ச்சியாக விழும் இடத்தை அடைவதற்கு முன்பே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தேன்நிலவுகளும் இரவுநேர விளக்குகளும்

தேன்நிலவு தம்பதிகளுக்கு மிகவும் பிடித்த இடம் நயாகரா நீர்வீழ்ச்சியாகும். 1953-⁠ல் நயாகரா படம் எடுக்கப்பட்டதற்குப்பின் இது பிரபலமாகிவிட்டது. இரவு நேரத்தில் நீர்வீழ்ச்சியின்மீது வண்ண விளக்குகள் ஒளியை அள்ளிவீசி வர்ணஜாலம் புரிகின்றன. நம்முடைய கிரகத்தில் ஈடிணையில்லா அழகோடு கம்பீரமாக காட்சியளிக்கும் நயாகராவின் அழகுக்கு இவை அழகு சேர்க்கின்றன. கனடாவுக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் வருவோர் இந்த உலக அதிசயத்தைப் பார்க்காவிட்டால் அது பெரிய குறையாகவே இருக்கும். உங்களுக்கு துணிச்சல் கொஞ்சம் இருந்தால், படகு பயணத்தை மறந்துவிடாதீர்கள்! அதற்காக வருந்தவும் மாட்டீர்கள் அதை மறக்கவும் மாட்டீர்கள்.​—⁠அளிக்கப்பட்டது.(g01 7/8)

[அடிக்குறிப்பு]

a “அமெரிக்கன் அருவியில், தண்ணீர் 21 மீட்டரிலிருந்து 34 மீட்டர் (70-லிருந்து 110 அடி) வரை செங்குத்தாக பாய்ந்துவந்து கீழேயுள்ள பாறைகளில் விழுகிறது.”​—⁠ஒன்டாரியோஸ் நயாகரா பார்க்ஸ்.

[பக்கம் 22-ன் பெட்டி/படம்]

நயாகரா ஸ்பானிஷ் ஏரோ கார்

நீர்வீழ்ச்சிக்குக் கீழே 4.5 கிலோமீட்டர் தூரத்தில் பெரிய நீர்ச்சுழி ஒன்று காணப்படுகிறது. “பெரிய மலையிடுக்கு திடீரென்று வட கிழக்காக திரும்புமிடத்தில், அருவி வேகமான துள்ளலுடன் பாய்ந்து முடியுமிடத்தில் இது ஏற்படுகிறது. இங்கே பெரிதாக காட்சியளிக்கும் இந்த மரகத பச்சைநிற நீர்ச்சுழி அந்த மலையிடுக்கின் மிக குறுகலான வழியில் சுருளாக வளைந்தும் கலைந்தும் சென்று வெளியேறுகிறது.”​—⁠ஒன்டாரியோஸ் நயாகரா பார்க்ஸ்.

அசாதாரணமான இந்த நீர்ச்சுழியின் மொத்த அளவை உண்மையில் புரிந்துகொள்வதற்கு மிகச் சிறந்த வழி, நயாகரா ஸ்பானிஷ் ஏரோ காரில் ஒரு சவாரி போய்வருவதுதான். இந்த நீர்ச்சுழியை இந்த கேபிள் கார் கடந்துசெல்கிறது. இதிலிருந்து நதியின் நீரோட்டத் திசையிலும் அதன் எதிர்திசையிலும் உள்ள கண்ணைக்கவரும் காட்சிகளை கண்டுகளிக்க முடியும். ஆனால் இதற்கு ஏன் “ஸ்பானிஷ்” ஏரோ கார் என்று பெயர்? ஏனென்றால் இதை வடிவமைத்து உருவாக்கியவர் புத்திமிக்க ஸ்பானிய பொறியாளர் லேயோனார்டோ டாரஸ் கேவேதோ (1852-1936). இது 1916 முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மாதிரியான கார் வேறெங்குமில்லை.

[பக்கம் 22-ன் படம்]

(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)

நில அரிப்பால் 1678 முதல் இதுவரை நீர்வீழ்ச்சி 300 மீட்டர் அல்லது அதற்கும் மேலாகவே பின்னோக்கி நகர்ந்துவிட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது

1678

1764

1819

1842

1886

1996

[படத்திற்கான நன்றி]

ஆதாரம்: Niagara Parks Commission

[பக்கம் 27-ன் தேசப்படங்கள்]

கனடா

அ.ஐ.மா.

கனடா

அ.ஐ.மா.

ஈரி ஏரி

நயாகரா நீர்வீழ்ச்சி

நயாகரா நதி

ஒன்டாரியோ ஏரி

[பக்கம் 21-ன் படம்]

▲அமெரிக்கன் நீர்வீழ்ச்சி

கனடாவின் குதிரைலாட நீர்வீழ்ச்சி ▸

[பக்கம் 22-ன் படம்]

இரவின் ஒளியில் குளிர்கால நயாகரா நீர்வீழ்ச்சி