Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாலண்டியர்கள் களத்தில்

வாலண்டியர்கள் களத்தில்

வாலண்டியர்கள் களத்தில்

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பிற்பகலும் பிரேஸிலிலுள்ள நடுத்தர வயது ஆசிரியை ஷர்லி வீட்டின் ஒரு பகுதி வகுப்பறையாக மாறுகிறது. இரண்டு மணிக்கெல்லாம் ஆமேல்யா என்ற மாணவி வந்துவிடுகிறாள். நாள் தவறாமல் அவள் படிக்க வந்துவிடுகிறாள். ஏற்கெனவே உயர்நிலைப் பள்ளியில் பயிலும் பருவ வயதினர் பலரைவிட இவள் நன்றாக வாசிக்கிறாள். ஆமேல்யாவின் வயது 82.

ஷர்லி தன்னுடைய சொந்த ஊரில் இலவசமாக இந்த எழுத்தறிவு வகுப்புகளை நடத்திவருகிறார். இதில் படித்து முடித்திருக்கும் 60-⁠க்கும் மேற்பட்ட முதியோரைப் பார்த்துவிட்டு ஆமேல்யாவும் சேர்ந்துகொண்டாள். பிரேஸிலில் வெளியாகும் ஷூர்னால் டூ சூடயெஸ்டா என்ற ஒரு செய்தித்தாள் சமீபத்தில் ஷர்லியின் வாலண்டியர் சேவையைக் குறித்து விரிவாக ஒரு கட்டுரையை பிரசுரித்தது. “சமுதாயத்திலுள்ள மக்களின் வாழ்க்கையை நல்ல விதமாக மாற்றியுள்ளதாக” அவரைப் பற்றி சொன்ன பிறகு, ஷர்லி எந்தளவு திறமையாக கற்றுக்கொடுக்கிறார் என்பதை அக்கட்டுரை விவரித்தது. “120 மணிநேரம் வகுப்பில் செலவழித்தபின் முதியோர் கடிதம் எழுதுகிறார்கள், செய்தித்தாள் வாசிக்கிறார்கள், கணக்கு வழக்குகளையும் அன்றாட வேலைகளையும் சமாளிக்கிறார்கள்.” ஷர்லி பயன்படுத்தும் பாட புத்தகம், யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட எழுதப் படிக்க கற்றுக்கொள்ளுங்கள் a என்ற சிறு புத்தகம் என்பதாக அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

சங்கட உணர்வு மாறி கண்ணியம் பிறக்கிறது

எழுதப் படிக்க கற்றுக்கொள்வதற்கு முன் மற்றவர்களிடம் பேசவே கூச்சப்பட்டாள் 68 வயது டோனா லூசியா என்ற மற்றொரு மாணவி. கடைக்குப் போவதுகூட எனக்கு கஷ்டமாக இருந்தது. “இப்போதெல்லாம் மற்ற ஊர்களிலிருக்கும் என் உறவினர்களுக்கு கடிதங்கள் எழுதுகிறேன். பணத்தை கையில் வைத்து கணக்குப் பார்த்து செலவு செய்கிறேன். சரியாக சில்லறை தராமல் இனி யாரும் என்னை ஏமாற்ற முடியாது” என்று முகம் மலர்ந்து சொல்கிறாள். 68 வயதிலிருக்கும் மரியாவும்கூட பென்ஷன் பணத்தைப் பெறுகையில் கைநாட்டு வைப்பதற்குள் தான் கூனிக்குறுகிப் போய்விடுவதாக கூறுகிறாள். “உடம்பில் ஏதோ ஊனமிருப்பது போல உணர்ந்தேன்” என்று அவள் சொல்கிறாள். ஆனால் எழுத்தறிவு வகுப்புக்குச் சென்றதால் மரியா இப்போது பிரமாதமாக கையெழுத்து போடுகிறாள்.

இலவசமாக ஷர்லி நடத்தும் இந்த வகுப்புகளைப் பற்றி படிக்கிறவர்களும் படித்து முடித்தவர்களும் வாயார பாராட்டுவதால் இவை மிகவும் பிரபலமாகிவிட்டன. அவருடைய வீட்டின் ஹாலில் நெரிசல் அதிகமாகிவிட்டது. சீக்கிரத்தில் வகுப்பறை விரிவுபடுத்தப்பட உள்ளது.

விருது பெற்ற ஒரு திட்டம்

ஷர்லி ஒரு யெகோவாவின் சாட்சி. யெகோவாவின் சாட்சிகள் வாலண்டியர்களாக சேவை செய்துவரும் பைபிள் கல்வி புகட்டும் வேலையைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருக்கலாம். ஆனால் இப்படி வெற்றியைக் குவித்திருப்பது ஷர்லி மட்டுமல்ல. பிரேஸில் முழுவதிலும் ராஜ்ய மன்றங்களில் நடத்தப்பட்டுவரும் எழுத்தறிவு வகுப்புகள் அந்தத் தேசத்தில் ஏற்கெனவே 22,000-⁠க்கும் மேற்பட்டவர்களுக்கு எழுதப் படிக்க கற்றுக்கொள்ள உதவி செய்திருக்கிறது.

யெகோவாவின் சாட்சிகள் உலகின் பிற பாகங்களிலும் நடத்தும் இது போன்ற திட்டங்களால் வெற்றிகள் பல குவிந்துள்ளன. உதாரணமாக, புருண்டி என்ற ஆப்பிரிக்க தேசத்தில் முதியோர் கல்வி தேசிய அலுவலகம், (கல்வி அமைச்சக இலாக்கா ஒன்று) சாட்சிகள் நடத்திவரும் எழுத்தறிவு திட்டங்களின் சாதனைகளைக் கண்டு வியந்து, “மற்றவர்கள் வாசிப்பதற்கு கற்றுக்கொடுக்க கடினமாக உழைத்ததற்காக” நான்கு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கியது. இவ்வாறு எழுதப் படிக்க கற்றுக்கொண்டவர்களில் 75 சதவீதத்தினர் பெண்கள்​—⁠பொதுவாக இப்படிப்பட்ட வகுப்புகளுக்கு வர மிகவும் தயக்கம் காட்டுபவர்கள்​—⁠என்பதுதான் அரசு அதிகாரிகளுக்கு மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது.

மொஸாம்பிக்கில் சாட்சிகள் நடத்திவரும் எழுத்தறிவு வகுப்புகளில் 4,000 மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் 5,000-⁠க்கும் அதிகமான மாணவர்கள் எழுதப் படிக்க கற்றுக்கொண்டிருக்கின்றனர். முன்னாள் மாணவர் இவ்வாறு எழுதினார்: “உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தப் பள்ளிதான் எனக்கு எழுதப் படிக்க கற்றுத் தந்தது.”

நிவாரண உதவி​—⁠“சொல்லில் அல்ல செயலில்”

யெகோவாவின் சாட்சிகள் மற்றொரு வகை வாலண்டியர் சேவையிலும், அதாவது நிவாரண பணியிலும் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் பிரான்ஸில் பாரிஸ் அருகே ஒரு பண்டக சாலையில் ஏராளமான பேர் தேனீக்களைப் போல சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருப்பது கவனிக்கப்பட்டது. சனி, ஞாயிறு இரு தினங்களிலும் உணவுப் பொருட்களையும் துணிமணிகளையும் மருந்துகளையும் பெட்டிகளில் பேக் செய்ய சுமார் 400 வாலண்டியர்கள் உதவினர். ஞாயிறு முடிவதற்குள், ஒன்பது பெரிய பெட்டிகளில் ஏறக்குறைய 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் நிரப்பப்பட்டு அனுப்பப்பட தயாராக இருந்தன. போரில் சின்னாபின்னமான மத்திய ஆப்பிரிக்க தேசங்களுக்கு நிவாரண பொருட்கள் விரைவாக போய் சேர்ந்தவுடன் உள்ளூர் சாட்சிகளாகிய வாலண்டியர்கள் வேகமாக அவற்றை விநியோகம் செய்தார்கள். நிவாரண பொருட்களில் பெரும் பகுதியைக் கொடுத்து உதவியவர்களும் சாட்சிகளே.

காங்கோவில் (கின்ஷாசா) செய்தித்தாள் ஒன்று “சொல்லில் அல்ல செயலில்” யெகோவாவின் சாட்சிகள் செய்த மனிதாபிமான செயலை பெரிதும் பாராட்டியது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணைய (UNHCR) அதிகாரிகள் இவர்களுக்கு உறுதுணையாய் இருப்போம் என்று உறுதி கூறினர். சாட்சிகள் நிவாரண பணிகளை மிகவும் நேர்த்தியாக, சீராக செய்ததைப் பார்த்த காங்கோ ஜனநாயக குடியரசை சேர்ந்த UNHCR அதிகாரி ஒருவர், வாலண்டியர்கள் பயன்படுத்துவதற்கு தன் வாகனத்தைக் கொடுத்தார். உள்ளூர் மக்களும்கூட அசந்துபோனார்கள். தேவையிலிருந்த அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வந்துசேர்ந்த வேகத்தை கவனித்த பார்வையாளர்கள் “உங்களால் எப்படித்தான் ஒருவர் விடாமல் அனைவருக்கும் இந்த உதவியை அளிப்பதற்கு ஒழுங்கமைக்க முடிந்ததோ” என்று ஆச்சரியப்பட்டு போனார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் உலகம் முழுவதிலும் பல பத்தாண்டுகளாக செய்துவரும் நிவாரண பணிகளும் எழுத்தறிவு வகுப்புகளும் அவர்களின் சேவைக்கு இரண்டு உதாரணங்கள் மட்டுமே. ஆனால் சாட்சிகள் மற்றொரு வகையான வாலண்டியர் சேவையிலும் ஈடுபடுகிறார்கள். இந்த சேவை உண்மையாகவே நீண்ட கால நன்மைகளை தரும் ஒன்றாகும். அடுத்த கட்டுரை இந்த விஷயங்களைப் பற்றி அலசும்.(g01 7/22)

[அடிக்குறிப்பு]

a எழுதப் படிக்க கற்றுக்கொள்ளுங்கள் (6 மொழிகளில் கிடைக்கிறது) என்ற சிறு புத்தகமும், சமீபத்தில் வெளியிடப்பட்ட எழுத படிக்க பழகுங்கள் (29 மொழிகளில் கிடைக்கிறது) என்ற சிறு புத்தகமும் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை. இலவச பிரதியைப் பெற்றுக்கொள்ள உள்ளூர் ராஜ்ய மன்றத்தோடு அல்லது இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

[பக்கம் 67-ன் பெட்டி/படம்]

மாறிவரும் வாலண்டியர்களின் உலகம்

வியாபார விஷயமாக உலகம் முழுவதையும் சுற்றிவரும் ஜூலிக்கு நிறைய வேலைகள் இருந்தபோதிலும் அவ்வப்போது சில மணிநேரமாவது வாலண்டியர் சேவைக்கு செலவிடுகிறாள். சமீபத்தில் தென் அமெரிக்காவில், சிலியில் சான்டியாகோ அருகே உள்ள அநாதை இல்லத்துக்குச் சென்று பிற்பகல் முழுவதும் பல வேலைகளைச் செய்து உதவினாள். பிரயாணம் செய்வதால் “பல்வேறு வழிகளில்” வாலண்டியர் சேவைக்கு மிகச் சிறந்த வாய்ப்புகள் கிடைப்பதாக அவள் சொல்கிறாள்.

ஜூலியைப் போலவே நிறைய வாலண்டியர்கள் கொஞ்ச நேரத்தையாவது ஒதுக்கி வைத்து தொண்டாற்றுகிறார்கள். தொண்டு நிறுவனங்களின் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் ஓர் ஆய்வுக் குழுவின் தலைவியாகிய சாரா மேலென்டெஸ், “இப்போதெல்லாம் மக்கள் விரும்புவது இதுதான்” என்று சொல்கிறார். “அவர்கள் வாலண்டியர் சேவை செய்கிறார்கள், ஆனால் எப்போதாவதுதான், அதுவும் கொஞ்ச நேரமே அதை செய்கிறார்கள்.” இப்படி வாலண்டியர்கள் குறைந்துவருவது தொண்டு நிறுவனங்களுக்கு கவலைத் தருவதாக உள்ளது, ஆட்கள் கிடைக்காமல் அவர்கள் தவிக்கிறார்கள்.

“வளைந்துகொடுக்கும் வாலண்டியர் சேவை”

வாலண்டியர்களின் மனப்பான்மை மாறிவிட்டதே வாலண்டியர் சேவைக்கு சொற்பமாக நேரம் ஒதுக்கும் இந்தப் புதிய போக்குக்கு காரணம் என சில தொண்டு நிறுவனங்கள் நினைக்கின்றன. “நீங்கள் போதுமென்று சொல்லும்வரை இங்கே சேவை செய்வேன்” என்று சொன்ன காலமெல்லாம் மலையேறிவிட்டது என்று கூறுகிறார் வாலண்டியர் தொகுதிகளின் ஆலோசகர் சூசன் எலிஸ். “பொறுப்புணர்ச்சியுடன் எதையும் செய்ய யாருக்கும் மனமிருப்பதில்லை” என்று அதை ஆமோதிக்கிறார் இதழாசிரியர் ஐலீன் டாஸ்பென். வாலண்டியர் தொகுதிகளின் இயக்குநர்கள் பலரை நேரில் சந்தித்துப் பேசிய பின், “வாலண்டியர் சேவையில் பொறுப்பேற்க அஞ்சுவது மிகப் பெரிய அளவில் காணப்படுகிறது” என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

என்றாலும், இப்படி அவ்வப்போது மற்ற வேலைகளுக்கு நடுவேயும் அவசர அவசரமாக வாலண்டியர் சேவை செய்பவர்களுக்கு அதில் ஈடுபாடு இல்லை என்று சொல்ல முடியாது. அவர்களுக்கு நேரம் இல்லாமையே காரணம் என்கிறார் இந்தத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட நியூ யார்க் கேர்ஸின் செயல் இயக்குநர் கேத்லீன் பேரன்ஸ். வாரத்தில் 50 மணிநேரத்திற்கும் அதிகமாக வேலையும் செய்துவிட்டு பிள்ளைகளையோ அல்லது வயதான பெற்றோரையோ கவனித்துக் கொள்பவர்களால் ஒழுங்கான ரீதியில் வாலண்டியர் சேவை செய்ய முடியாது. “இருந்தாலும் பல அலுவல்களை செய்பவர்களும் இந்தச் சமுதாய சேவையைத் தங்கள் வாழ்க்கையின் பாகமாக ஆக்கிக்கொண்டிருப்பது அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாக இருப்பதையே காட்டுகிறது” என்று அவர் கூறுகிறார்.

இப்படி நேரத்தைக் கண்டுபிடிக்க கஷ்டப்படுபவர்கள் ஏற்கத் தக்க சேவை “வளைந்துகொடுக்கும் வாலண்டியர் சேவை” ஆகும். இப்போதெல்லாம் தொண்டு நிறுவனங்கள் ஒரேவொரு நாள் வேலை செய்யும் திட்டங்களைக்கூட வைத்திருக்கின்றன. “இதனால் பிரயோஜனமான, ஆக்கப்பூர்வமான வழிகளில் வாலண்டியர் சேவை செய்ய அவர்களை அனுமதிப்பதோடு முடிந்தபோதெல்லாம் அதை செய்வதற்கு வசதியாகவும் அமைந்துவிடுகிறது.”

மேலும், வீட்டிலிருந்தவாறே பலர் இன்று கம்ப்யூட்டரில் தகவலை பதிவு செய்வதற்கும் ஆய்வு செய்வதற்கும் முன்வருகின்றனர். “கம்ப்யூட்டர் வாயிலாக வாலண்டியர் சேவை செய்வது வழக்கத்துக்கு மாறாக இருந்தபோதிலும், ‘நேரம் கிடைக்கும்போது வாலண்டியர் சேவை செய்வதற்கு’ அதிக வாய்ப்பளிக்கிறது என்பது சிலரின் கருத்து” என்று த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிடுகிறது.

[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]

கோபில் நிவாரண உதவி!

ஜனவரி 1995-⁠ல், பொருளாதாரத்தில் செழித்தோங்கும் ஜப்பானிலுள்ள கோப் துறைமுக நகரத்தை நிலநடுக்கம் தாக்கியபோது, நாசம் படுபயங்கரமாக இருந்தது. 5,000-⁠க்கும் அதிகமானோர் பலியானார்கள், 1923 முதல் ஜப்பானை தாக்கிய நில அதிர்ச்சியிலேயே இதுவே மிகவும் பயங்கரமானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க ஜப்பானிலும் உலகமுழுவதிலும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் விரைவாக செயல்பட்டனர். நிவாரண நிதி ஏற்படுத்தப்பட்டபோது, மூன்றே நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமான டாலர் நன்கொடை அளிக்கப்பட்டது. பல்வகை நிவாரண உதவி பொருட்கள் கோப் நகரில் மலைபோல் வந்து குவிந்தன.

விரைவிலேயே தேவைக்கும் அதிகமான பொருட்கள் ராஜ்ய மன்றத்தில் வந்து குவிந்துவிட்டதை நிவாரணப் பணியில் ஈடுபட்ட கிறிஸ்தவ மூப்பர் ஒருவர் கண்டார். இதை வைத்து என்ன செய்வது? அருகிலுள்ள ஆஸ்பத்திரிக்கு இந்தப் பொருட்களில் சிலவற்றை நன்கொடையாக வழங்க ஆலோசனை கூறினார். ஒரு வேன் நிறைய பொருட்களை நிரப்பி, அதை கற்குவியல்களுக்கு மத்தியில் சாட்சிகள் ஓட்டிச் சென்றார்கள். அங்கே செல்வதற்கு வழக்கமாக சில நிமிடங்களே ஆகும், ஆனால் இப்பொழுது சில மணிநேரம் எடுத்தது. ஆஸ்பத்திரிக்குச் சென்று இந்தப் பொருட்களை​—⁠போர்வைகள், படுக்கைகள், டையப்பர்கள், ஃபிரெஷ் பழங்கள், பல்வகை மருந்துகள் ஆகியவற்றை​—⁠தலைமை மருத்துவரிடம் கொடுத்தார்கள். அந்த மருத்துவர் இதைக் கண்டு அதிக மகிழ்ச்சியடைந்தார், சாட்சிகள் கொடுக்கும் எதையும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். நோயாளிகள் அனைவருக்கும் தேவையான ஃபிரெஷ் உணவு இல்லாததால், முக்கியமாக பழங்களை அவர்கள் மிகவும் விரும்பினார்கள்.

நிவாரண பொருட்கள் எல்லாவற்றையும் சாட்சிகள் இறக்கி வைக்கும்போது, அந்த மருத்துவருக்கு அவசர வேலைகள் நிறைய இருந்தபோதிலும் அவர் அமைதியாக அங்கே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். பின்பு அவர் பணிவோடு தலைகுனிந்து நன்றி தெரிவித்தார். அவர்கள் திரும்பிச் செல்லும்போதும் தான் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பதை தெரிவிப்பதற்காக அவர் தொடர்ந்து அங்கேயே நின்றுகொண்டிருந்தார். பிற்பாடு இதே ஆஸ்பத்திரி யெகோவாவின் சாட்சிகளாக இருந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் மிகவும் ஒத்துழைத்தது என அந்த மூப்பர் குறிப்பிட்டார்.

[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]

வாலண்டியர் சேவை​—⁠பயன்தரும் சேவை

புருண்டியில் ஒரு சிறிய தொகுதியாக இயங்கி வரும் காபேஸியிலுள்ள வாலண்டியர்கள் சிலர் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றம் ஒன்றைக் கட்டுவதற்கு விரும்பினார்கள். உள்ளூர் அதிகாரி வழக்கத்துக்கு மாறான ஒன்றை செய்யும்படி இவர்களைக் கேட்டுக்கொண்டார். ராஜ்ய மன்றம் கட்டப்படும் இடத்துக்கு பக்கத்தில் இருந்த சாலையை சாட்சிகள் பழுதுபார்க்க முடியுமா என்று அந்த அதிகாரி கேட்டார். பழுதடைந்திருந்த அந்தச் சாலையை சரிசெய்ய சாட்சிகள் சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்கள். எல்லா வேலையையும் கையாலேயே செய்து முடித்தார்கள். அந்த வேலையை அவ்வளவு நேர்த்தியாக வாலண்டியர்கள் செய்திருந்ததைப் பார்த்த அதிகாரிகள், கடினமாக உழைத்ததற்காகவும் மனமுவந்து செய்ததற்காகவும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்கள். அதன் பிறகு வாலண்டியர்கள், மேலே படத்தில் காட்டப்பட்டுள்ள தங்கள் ராஜ்ய மன்றத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள். இப்போது அவர்களுக்கு மிகவும் அழகான ஒரு கட்டடம் அமைந்துவிட்டது, எதிர்காலத்தில் பல வருடங்களுக்கு இங்கே பைபிள் கல்வி அளிக்கப்படும். ஆம், பல்வேறு வகை வாலண்டியர் சேவையால் நீண்ட கால நன்மைகள் கிடைக்கலாம்.

[பக்கம் 67-ன் படங்கள்]

மற்றவர்களுக்கு வாசிக்க கற்றுக்கொடுப்பதில் ஷர்லிக்கு திருப்தி கிடைக்கிறது

[படத்திற்கான நன்றி]

◀ Nelson P. Duarte-Jornal do Sudoeste