உலகை கவனித்தல்
உலகை கவனித்தல்
சாதனை படைக்கும் பேரழிவுகள் 2000-ல்
2000-ம் ஆண்டில் உலகெங்கும் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டிருப்பதாக மறுகாப்பீட்டு நிறுவனமான ம்யூனிக் ரீ அறிக்கை செய்கிறது. மொத்தத்தில், இப்படிப்பட்ட பேரழிவுகளின் எண்ணிக்கை 850-க்கும் அதிகம் என அறிக்கை செய்யப்பட்டது; அவற்றில் 10,000 பேர் கொல்லப்பட்டனர், 1,30,000 கோடி ரூபாய் மதிப்புடைய பொருட்கள் சேதமடைந்தன. இயற்கைப் பேரழிவுகள் அதிகளவில் சம்பவித்திருந்தபோதிலும், பொருட்சேதமும் உயிர்ச்சேதமும் கடந்த ஆண்டைவிட குறைவுதான். பெரும்பாலான பேரழிவுகள் மக்கள் நெருக்கம் குறைவாய் இருக்கும் பகுதிகளில் ஏற்பட்டதே அதற்குக் காரணம் என்பதாக அந்தக் காப்பீட்டு நிறுவனத்தின் செய்தி அறிக்கை கூறுகிறது. இழப்புக்காக காப்பீடு செய்யப்பட்ட ஈட்டுத் தொகையில் 73 சதவீதம் புயலால் ஏற்பட்ட சேதத்திற்கும், 23 சதவீதம் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்திற்கும் வழங்கப்பட்டதாக கணக்கிடப்பட்டது. ஜனத்தொகை பெருகுவதாலும், சொத்தின் மதிப்பு உயருவதாலும் “எதிர்காலத்தில் இயற்கைச் சேதங்களினால் ஏற்படும் இழப்புகள் தொடர்ந்து அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்” என்று அந்த அறிக்கை கூறுகிறது.(g01 8/8)
உள்ளதைக் காட்டிக் கொடுக்கும் கடித உறைகள்
எந்த அடையாளத்தையும் விட்டுச்செல்லாமல், “உறையைப் பிரிக்காமலே உள்ளே இருப்பதைக் காட்டும்” ஸ்பிரேயை ஓர் அமெரிக்க கம்பெனி கண்டுபிடித்திருப்பதாக நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை அறிக்கை செய்கிறது. எந்த நிறத்தில் கவர் இருந்தாலும் இந்த ஸ்பிரேயிடம் பலிக்காது; அத்துடன் இது, “கடத்தும் தன்மையற்ற, நச்சற்ற, சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கெடுக்காத திரவம்” என்பதாக அந்தக் கம்பெனியின் பிரதிநிதி பாப் ஷ்லாகல் தெரிவிக்கிறார். சுமார் 10 அல்லது 15 நிமிடத்திற்கு ஒருவித வாசனை வீசுகிறது; இதைத் தவிர, “உறையிலோ கடிதத்திலோ மை கொட்டியது போன்ற தடயமோ, நீர் சிந்தியது போன்ற சுவடோ இருப்பதில்லை, எந்த அடையாளமும் காணப்படுவதில்லை” என்றும் ஷ்லாகல் கூறுகிறார். லெட்டர் பாம், வெடிகுண்டு அடங்கிய பேக்கேஜ்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க சட்ட அமலாக்கத் துறைகளுக்கு உதவ இந்த ஸ்பிரே தயாரிக்கப்பட்டது. என்றாலும், இதே ஸ்பிரேயின் உதவியுடன் கடிதத்தைப் பிரிக்காமலே வாசிக்க முடியும்; இதனால், மனித உரிமைகளின் அதிகாரி ஒருவர் இத்தயாரிப்பு தார்மீக ரீதியில் சந்தேகத்திற்கிடமானது என அழைக்கிறார்.(g01 8/8)
வழி தப்பாத தேனீக்கள்
தேனீக்கள் தங்கள் கூட்டிலிருந்து பூக்களிடம் பறந்துசென்று, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பும் திறமை கொண்டவை என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், அத்தாட்சிகள் காட்டுவது என்னவெனில், வட இந்தியாவில் அஸ்ஸாமிலிருந்து இடம்பெயர்ந்து செல்லும் தேனீ கூட்டங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பயணம் செய்கின்றன; பின்பு அதே மரத்திற்குத் திரும்பி வருவது மட்டுமின்றி, சுமார் இரண்டு வருடத்திற்கு முன்பு தங்கள் சொந்த பந்தங்கள் கூடுகட்டியிருந்த அதே கிளைக்கே திரும்பி வருகின்றன! இதில் ஓர் ஆச்சரியம் என்னவெனில், வேலைக்கார தேனீக்களின் வாழ்நாளோ மூன்றே மாதங்கள், அல்லது அதற்கும் குறைவுதான். ஆகவே கூட்டுக்கு திரும்பிவரும் அத்தேனீக்கள், அக்கூட்டைக் கட்டியிருந்த மூதாதை தேனீக்களிலிருந்து எத்தனையோ சந்ததிக்குப் பிறகு தோன்றியவை. அப்படியிருந்தும் அவை அதே இடத்திற்குத் திரும்புவது எப்படி என்பது இன்னும் புரியா புதிராகவே உள்ளது. இதற்குக் காரணம் இவற்றின் மோப்பத் திறனாக இருக்கலாம் என த சிட்னி மார்னிங் ஹெரல்ட் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. மற்றொரு சாத்தியம் என்னவெனில், உயிருடன் உள்ள ராணி தேனீ நடனமாடி, எந்தத் திசையில் பறந்துசெல்ல வேண்டும் என ஏதோ ஒரு வகையில் உளவு பார்க்கும் தேனீக்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.(g01 8/8)
மொழியும் மூளையும்
மொழியைப் புரிந்துகொள்வதற்கும் பேசுவதற்கும், காது கேட்பவர்கள் மூளையிலுள்ள இரண்டு பகுதிகளை பயன்படுத்துகின்றனர்; காதுகேளாதவர்களும் சைகை மொழி பேசுவதற்கு இதே இரண்டு பகுதிகளை பயன்படுத்துவதாக சயன்ஸ் நியூஸ் பத்திரிகை அறிக்கை செய்கிறது. மூளையை ஸ்கேன் செய்து பார்க்கையில், “சைகை மொழி பேசும் காதுகேளாதவர்களின் மூளையிலுள்ள நரம்பு திசுக்கள் அடங்கிய இப்பகுதிகள் உடனே செயல்படுவது” தெரிய வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. மான்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும், இந்த ஆய்வு குழுவின் தலைவருமான லாரா ஆன் பெட்டீட்டோ கூறுவதன்படி, “பேச்சு அல்லது சைகை மூலமாக தெரிவிக்கப்படும் மொழியின் அடிப்படை அம்சங்களை” மூளையிலுள்ள இந்தப் பகுதிகளே கட்டுப்படுத்துவதாக இது காட்டுகிறது. இது, ஒரு மொழியை எளிதில் புரிந்துகொள்ள உதவும் மனித மூளையின் வளைந்துகொடுக்கும் தன்மையைப் பற்றி அறிய கூடுதல் ஆய்வு நடத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறது. சயன்ஸ் நியூஸ் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “பேசும் மொழிக்கு பயன்படுத்தப்படும் மூளைப் பகுதியின் பெருமளவை சைகை மொழியும் பயன்படுத்திக்கொள்கிறது.” (g01 8/8)
தூக்கமும் ஞாபகசக்தியும்
“கற்ற விஷயங்களை அடுத்து வரும் வாரங்களில் மறக்காமல் நினைவில் வைக்க,” இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்திருக்காமல் நன்றாக தூங்குவது மிகவும் அவசியம் என தூக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருப்பதாக லண்டனின் தி இன்டிபென்டன்ட் செய்தித்தாள் குறிப்பிடுகிறது. ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பணிபுரியும் பேராசிரியர் ராபர்ட் ஸ்டிக்கோல்ட் 24 வாலண்டியர்களை வைத்து ஓர் ஆய்வு நடத்தினார். அதாவது, பாடம் நடத்தப்பட்ட ஒரு வகுப்பிற்கு பிறகு அவர்களில் பாதிப்பேர் இரவில் நன்றாக தூங்கும்படி அனுமதிக்கப்பட்டனர்; மீதிப்பேர் இரவு முழுவதும் விழித்திருக்கும்படி செய்யப்பட்டனர். பிறகு, தூக்கத்தை இழந்தவர்களின் களைப்பைப் போக்குவதற்காக அடுத்த இரண்டு இரவுகளில் இருதரப்பினரும் வழக்கம்போல் தூங்க அனுமதிக்கப்பட்டனர். பின்பு நடத்தப்பட்ட நினைவாற்றல் சோதனை காட்டியது என்னவெனில், பாடம் பயின்ற இரவு தூங்குவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் “நினைவாற்றல் சோதனையில் குறிப்பிடத்தக்க வகையிலும் சீராகவும் தேர்ச்சி பெற்றனர்; இரண்டாவது தரப்பினரோ இழந்த தூக்கத்தை ஈடுசெய்ய அனுமதிக்கப்பட்ட போதிலும் முன்னேற்றம் காட்டவில்லை.” தூக்கம் நினைவாற்றலை அதிகரிக்க உதவுவதாக தெரிவதால் தூக்க நேரத்தில்—விசேஷமாக ஆரம்பக் கட்ட ஆழ்ந்த தூக்க நேரத்தில் அல்லது “குறைந்த மின்னலை” தூக்க நேரத்தில்
—படிப்பதால் பிரயோஜனம் இல்லை என்பதை இந்த ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் காட்டுகின்றன.(g01 8/8)ரஷ்ய நீதிமன்றத்தில் சாட்சிகளுக்கு வெற்றி
பிப்ரவரி 24, 2001 தேதியிட்ட த நியூ யார்க் டைம்ஸ் செய்தித்தாள் பின்வருமாறு அறிக்கை செய்தது: “இன்று [பிப்ரவரி 23] யெகோவாவின் சாட்சிகளுக்கு மாஸ்கோ நீதிமன்றமொன்றில், பெருமளவில் பயனளிக்கும் சாத்தியமுள்ள அமோக வெற்றி கிடைத்தது. பகைமைக்கு அல்லது சகிப்பின்மைக்கு வித்திடும் மதப் பிரிவுகளை தடைசெய்யும் வகையில் 1997-ல் இயற்றப்பட்ட சட்டத்தின்கீழ், இத்தொகுதியினருக்கு தடைவிதிக்க வகைதேடிய வழக்கறிஞர்களுக்கு எதிராக அவர்களுக்கு இவ்வெற்றி கிடைத்தது.” வழக்கு விசாரணை மார்ச் 12, 1999 தேதி அன்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது; சாட்சிகளின் நம்பிக்கைகளை ஆராய்வதற்காக ஐந்து நிபுணர்களை நீதிமன்றம் நியமித்திருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பிப்ரவரி 6, 2001 அன்று, மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இவர்கள்மீது தொடரப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை கண்டறிய மூன்று வாரங்கள்கூட நீதிமன்றத்திற்கு எடுக்கவில்லை. இருந்தாலும், மறுவிசாரணைக்கு உத்தரவிடும்படி மாஸ்கோ சிட்டி நீதிமன்றத்திடம் வழக்கு தொடர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன்படி மே 30 அன்று அனுமதி அளிக்கப்பட்டது. ஆகவே வழக்கை மறு விசாரணை செய்வதற்கு மீண்டும் விசாரணை மன்றத்திற்கு அனுப்பப்பட்டது. லாஸ் ஏஞ்சலிஸ் டைம்ஸ் செய்தித்தாள் இவ்வாறு சொன்னது: “மிஷனரி நடவடிக்கைகளை வன்மையாய் எதிர்க்கும் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச், 1997-ல் மதத்தின் பேரில் சட்டம் இயற்றப்படுவதில் பெரும் பங்கு வகித்தவற்றில் ஒன்றாக இருந்தது; அந்தச் சட்டம், அநேக மதப் பிரிவுகள் தங்கள் அங்கீகாரத்தைப் பெறுவதற்குள் படாத பாடு படும்படி செய்துவிட்டது. மாஸ்கோ அதிகாரிகள் மேல் முறையீடு செய்து வரும் இந்நீதிமன்ற வழக்கில் சாட்சிகளுக்கு கிடைத்த வெற்றி, ரஷ்யாவில் மத சுதந்திரம் குறித்து கவலைப்படுவோருக்கு நல்ல செய்தியாகும்.(g01 8/22)
ஆண்களும் பெண்களும் கவனிப்பதில் வித்தியாசம்
கவனிப்பதற்கு மூளையின் இரண்டு பக்கங்களையுமே பெண்கள் பயன்படுத்துவதாகவும், ஆண்களோ ஒரே ஒரு பக்கத்தை மட்டுமே பயன்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்ததாக டிஸ்கவரி.காம் நியூஸ் அறிக்கை தெரிவிக்கிறது. ஓர் ஆய்வில், 20 ஆண்களுக்கும் 20 பெண்களுக்கும் மூளை ஸ்கேன் செய்யப்பட்டது; அந்த ஸ்கேனின் போது அவர்கள் ஒரு புத்தகத்தின் டேப் பதிவை கேட்கும்படி செய்யப்பட்டது. மூளையின் ஸ்கேன் ரிசல்ட் காட்டியது என்னவெனில், பெரும்பாலும் ஆண்களின் இடது பக்க மூளை கவனிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது; அதுவே கவனிப்பதுடனும் பேசுவதுடனும் சம்பந்தப்பட்ட பகுதியாகும். மறுபட்சத்தில் பெண்களது மூளையின் இரண்டு பக்கங்களுமே பயன்படுத்தப்பட்டது. இண்டியானா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிஸனில், ரேடியாலஜி துணைப் பேராசிரியரான டாக்டர் ஜோசஃப் டி. லூரீட்டோ கூறுவதாவது: “மொழியைப் புரிந்து சமாளிப்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தாலும், செயல்படும் திறமையில் வித்தியாசம் இருக்கும் என்று அர்த்தமாகாது என்பதையே எங்களது ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.” பெண்களால் “ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு உரையாடலை கவனிக்க முடியும்” என்பதை மற்ற ஆய்வுகள் காட்டுவதாக தெரிகிறது என டாக்டர் லூரீட்டோ கூறுகிறார்.(g01 8/8)
நன்கொடை துணிகளில் லாபம்
உண்மையிலேயே தேவையில் இருப்பவர்களுக்கென அனுப்பப்படும் நன்கொடை துணிகளில் “மிகக் கொஞ்சமே” அவர்களுக்குப் போய்ச் சேருவதாக ஜெர்மன் செய்தித்தாளான ஸுட்வெஸ்ட் ப்ரெஸ்ஸி கூறுகிறது. ஜெர்மனியில் ஒவ்வொரு வருடமும் 5,00,000 டன்னுக்கும் அதிகமான துணிமணிகள் ஏழை எளியோருக்கென நன்கொடையாக அளிக்கப்படுகின்றன. ஆனால் பொதுவாக, அத்துணிமணிகளை சேகரிக்கும் அமைப்புகள் அவற்றை வணிக நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றன; இவ்வாறு நன்கொடை துணிகளை வைத்தே கோடிக்கணக்கான ஜெர்மன் மார்க்குகளை லாபமாக சம்பாதிக்கும் வியாபாரம் நடக்கிறது. நன்கொடை துணிகள் என்னவாயின என்பதுகூட அதை சேகரிக்கும் அமைப்புகளுக்கு பெரும்பாலும் தெரிவதில்லை. அக்கட்டுரை குறிப்பிடுவதாவது: “உங்கள் துணிமணிகள் உண்மையிலேயே ஏழை எளியோருக்கு கிடைக்க வேண்டுமென்றால், நீங்களே நேரில் சென்று அவர்களுக்கு கொடுக்க வேண்டும்; அல்லது நெருக்கடிநிலை ஏற்பட்ட பகுதியில் உள்ள நம்பகமானவர்களுக்கே அனுப்ப வேண்டும்.” (g01 8/22)
அணிகலனில் ஈயம் ஜாக்கிரதை!
“ஈயம் கலந்துள்ள அணிகலனை உங்கள் பிள்ளை வாயில் வைத்து சப்புவதாகவோ, சவைப்பதாகவோ தெரிந்தால், உடனே அவற்றை அப்புறப்படுத்துங்கள்” என ஹெல்த் கனடா அறிக்கை ஒன்று ஆலோசனை வழங்குகிறது. குறிப்பாக பிள்ளைகளுக்கென்று வாங்கும் விலை குறைந்த அணிகலன்களை ஆய்வகங்களில் சோதனை நடத்திப் பார்த்தபோது, அவற்றில் பெரும்பாலானவற்றில் 50 முதல் 100 சதவீதம் ஈயம் கலந்திருந்தது தெரிய வந்தது. “மிகக் குறைந்த அளவான ஈயத்தை உட்கொண்டாலும் உடல்நலம் பாதிக்கப்படலாம்; அது குழந்தைகள், சின்னஞ்சிறுசுகளின் அறிவுத்திறனையும் நடத்தைப் பக்குவத்தையும் பாதிக்கலாம்” என அந்த அறிக்கை கூறுகிறது. பரிசோதிக்க உதவும் சாதனங்கள் இன்றி ஈயம் கலந்திருப்பதை கண்டறிவது சிரமம். எனவே, பிள்ளைகளுக்கான குறைந்த விலை அணிகலன்களைப் பொறுத்தவரை, நேஷனல் போஸ்ட் செய்தித்தாளில் சிபாரிசு செய்யப்பட்டதையே சிறந்த உத்தியாக எடுத்துக்கொள்ளலாம்; அது கூறுவதாவது: “சந்தேகமாயிருந்தால், வீசியெறியுங்கள்.”(g01 8/8)
விபசாரத்திற்கு பச்சைக்கொடி
வற்புறுத்தல் உட்பட்ட குற்றத்தை இழைக்காதவரை, விபசாரம் “அடிப்படையில் ஒழுக்கக்கேடு அல்ல” என ஜெர்மனி நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்மானித்துள்ளதாக ஃப்ராங்க்ஃபர்ட்டர் ஆல்கிமைன ஸைட்டுங் செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. பெர்லின்-வில்மர்ஸ்டார்ஃப்-ல், விபசாரிகள் கஸ்டமர்களிடம் தொடர்பை ஏற்படுத்துவதற்காக ஒரு கஃபேயை பயன்படுத்திக்கொண்டு, பின்னர் அருகிலுள்ள அறைகளை வாடகைக்கு எடுத்து வருகின்றனர்; இருந்தாலும் இந்த கஃபேயை நடத்த உரிமை வழங்கி பெர்லினின் நிர்வாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. விபசாரத்தைக் குறித்து சமுதாயத்தின் மாறிவிட்ட மனோபாவத்தை தங்கள் தீர்ப்பு எடுத்துக்காட்டியதாக நீதிபதிகள் கூறினர். சாதாரண தொழிலைப் போலவே விபசாரத்திற்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என 62 சதவீதத்தினர் உணர்ந்ததாக 1,002 பேரை உட்படுத்திய ஒரு வாக்கெடுப்பு காட்டியது. நீதிபதிகள் சொல்வதன்படி, வெகு காலத்திற்கு முன்பே ஜெர்மனியின் “பொருளாதார அடிப்படை அம்சத்தின் ஒரு பாகமாக செக்ஸ் சேவைகள் ஆனதாக” பெரும்பான்மையோர் உணருவதை மற்றொரு வாக்கெடுப்பு காட்டியது.(g01 8/8)