எமது வாசகரிடமிருந்து
எமது வாசகரிடமிருந்து
சீன மருந்துக்கடை “சீன மருந்துக்கடைக்கு ஒரு விஸிட்” என்ற கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள மாற்றுவகை சிகிச்சைக்கு பின்னாலுள்ள கோட்பாடு எனக்கு கவலையளிக்கிறது. (டிசம்பர் 8, 2000) மூலிகைகள் உபயோகிப்பதை நான் எதிர்க்கவில்லை. என்றாலும், இன்-யாங் என்பது வெறுமனே குளிரையும் சூட்டையும் மாத்திரமே குறிக்கவில்லை அல்லவா? மாயமந்திரத்திலும் பொய் மதத்திலும் வேர்கொண்ட ஒரு கோட்பாட்டை நீங்கள் அளவுக்கு அதிகமாக எளிமையாக்கிவிட்டீர்கள். அது மிகவும் ஆபத்தானதல்லவா?
வீ. ஏ., ஐக்கிய மாகாணங்கள்
கிழக்கத்திய தேசங்களில் இன்-யாங் கோட்பாடு, குறி சொல்லுதல் உட்பட பல செயல்களில் உபயோகிக்கப்பட்டிருப்பது உண்மையே. என்றாலும், மருத்துவ ரீதியில் நோய் அறிவது போன்ற வேதாகமத்தில் தடைசெய்யப்படாத மற்ற வழிகளிலும் உபயோகிக்கப்படும் சாத்தியத்தை இது நீக்கிவிடாது. ஆகவே, இந்த கோட்பாடு அடிப்படையிலான மருத்துவ முறைகளை உபயோகிப்பது தனிப்பட்ட கிறிஸ்தவர்களின் தீர்மானமே.—ED.(g01 8/8)
எல்லோஸ்டோன் “எல்லோஸ்டோன்—தண்ணீரும் பாறையும் வெப்பமும் கைகோர்க்கும் இடம்” (ஜனவரி 8, 2001) கட்டுரைக்கு என் பாராட்டுகள். கடந்த வருடம் நானும் என் மனைவியும் இந்த பூங்காவில் வேலை செய்து மகிழ்ந்தோம். என் மனைவி ஓர் ஆராய்ச்சி நிறுவனத்தோடு வேலை செய்தாள், நான் ஈரப்பாங்கான நிலங்களை சர்வே எடுத்தேன். ஆகவே, இந்த கட்டுரை வெளிவந்தபோது நாங்கள் மிகவும் கிளர்ச்சியடைந்தோம், அதை உடனே வாசித்து முடித்தோம். அருமையான கட்டுரை! மிகவும் நல்ல போட்டோக்களை தெரிவு செய்திருந்தீர்கள், முழுமையான ஆராய்ச்சியையும் காண முடிந்தது. அந்த தகவல் எல்லா விதங்களிலும் துல்லியமாக இருந்தது. ஆனால் இந்த பூங்காவை வந்து பார்த்தால்தான் அதன் அழகை முழுமையாக புரிந்துகொள்ள முடியும்! அதன் அழகிற்கு எல்லையே இல்லை.
டீ. எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g01 8/8)
வாழ்க்கை சரிதை “நம்பிக்கை என்னை தாங்கி ஆதரிக்கிறது” (ஜனவரி 8, 2001) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நான் குழந்தையாக இருந்த சமயத்திலிருந்தே அப்பா, என் அம்மாவை கொடுமைப்படுத்தியதை பார்த்ததால் அவர் மீது எப்போதுமே வெறுப்பை வளர்த்திருக்கிறேன். வெறுப்பை வளர்ப்பது தவறு என எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் அந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது. தன் அம்மாவை கொலை செய்தவனை வெறுப்பதை சமாளிக்க டாட்டியானா விலேஸ்கா எடுத்த முயற்சியை வாசித்தேன். நானும் அவளை பின்பற்ற விரும்புகிறேன்.
ஏ. கே., ஜப்பான் (g01 8/22)
தன் பெற்றோரை இழந்த டாட்டியானாவின் வருத்தகரமான அனுபவத்தை வாசித்தபோது நான் அழுதுவிட்டேன். உலகமுழுவதிலும் உள்ள அநேகர் படுமோசமான கஷ்டங்களை வெற்றிகரமாக சமாளித்து, தனிப்பட்ட போராட்டங்கள் இருந்தபோதிலும் சந்தோஷத்தை காண்கின்றனர் என்பதை தனி நபர்களின் இப்படிப்பட்ட அனுபவங்கள் எனக்கு எப்போதும் நினைப்பூட்டுகின்றன.
ஜே. ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g01 8/22)
டாட்டியானா விலேஸ்காவின் அருமையான அனுபவத்தை இப்போதுதான் வாசித்து முடித்தேன். அவளுடைய அனுபவத்தை என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிட முடியாது. பைபிளிலிருந்து சத்தியத்தை கற்றுக்கொள்வதற்கு முன்பு அவள் அனுபவித்தவற்றிற்கு பிறகும் இன்று சந்தோஷமான மனநிலையோடு உயிர்வாழ்வது உண்மையில் ஓர் ஆவிக்குரிய அற்புதமே!
எஸ். எஸ்., ஐக்கிய மாகாணங்கள் (g01 8/22)
திருமணங்களை காப்பாற்றுதல் பிப்ரவரி 8, 2001 விழித்தெழு! இதழில் வெளிவந்த “மண வாழ்வை மணம்வீச செய்ய முடியுமா?” என்ற தொடர் கட்டுரைகளுக்காக என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி தெரிவிக்கிறேன். ஒரு வருடத்திற்கு முன்பு எனக்கும் என் மனைவிக்கும் இடையே பிரச்சினைகள் இருந்தன. கோபம் அடிக்கடி வெளிக்காட்டப்பட்ட குடும்பங்களில்தான் நாங்கள் இருவருமே வளர்ந்தோம். ஆகவே, ஒருவரையொருவர் புண்படுத்தும் வார்த்தைகளை நாங்கள் அடிக்கடி கூறிவிடுவோம், அதனால் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும். பைபிள் நியமங்களை பொருத்த ஆரம்பித்த பிறகு இப்போது நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
ஆர். ஓ., ஐக்கிய மாகாணங்கள் (g01 8/22)
சபை மூப்பராக நான் எதிர்ப்படும் மிகவும் சவாலான சூழ்நிலைகளில் ஒன்று, அன்பற்ற திருமணங்களில் மாட்டிக்கொண்டதாக உணருபவர்களுக்கு உதவ முயலுவதாகும். உண்மையைச் சொன்னால், பிரசுரங்கள் மூலமாக பல வருடங்களாகவே நமக்கு ஏராளமான ஆவிக்குரிய ஆலோசனை கிடைத்துள்ளது. என்றாலும், இப்படிப்பட்டவர்களுக்கு நேரடியான உதவியளிக்க இதுவே மிகச் சிறந்த ஏது என்பதை இந்த பத்திரிகையின் அட்டையை பார்க்கும்போதே எனக்கு தோன்றியது. கட்டுரைகளும் என் எதிர்பார்ப்பிற்கு இசைய இருந்தன!
எல். ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g01 8/22)