Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

டைரி நம்பகமான நண்பன்

டைரி நம்பகமான நண்பன்

டைரி—நம்பகமான நண்பன்

இரக்கமற்ற ஓர் உலகில், ஒரு டைரி பிறர் வேதனையை தன் வேதனையாய் எடுத்துக்கொள்ளும், நம்பகமான நண்பன் ஆகலாம். “நம் சொந்த வாழ்க்கைப் பயணங்களை பதிவுசெய்யும் வாழ்க்கைப் படத் தொகுப்பை பாதுகாத்து வைத்திருக்க உதவுகிறது” என எழுத்தாளர் கிறிஸ்டீனா பால்ட்வின் கூறுகிறார். நம் கடந்தகால தோற்றத்தை படங்களின் வாயிலாக படிப்படியாய் காண்பிக்கும் போட்டோ ஆல்பத்தைப் போன்று நம் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிய குறிப்புகளை எழுத்துவடிவ “சித்தரிப்புகளின்” வாயிலாக தெரிவித்து, பத்திரமாக பதிவுசெய்து வைப்பது டைரியாகும்.

பைபிள் காலங்களில் அரசாங்கங்கள் முக்கிய நிகழ்ச்சிகளை குறித்து வைப்பது வழக்கமாய் இருந்தது. அப்படிப்பட்ட பல அதிகாரப்பூர்வ பதிவுகளைப் பற்றி பைபிளும் தெரிவிக்கிறது. (எண்ணாகமம் 21:14, 15; யோசுவா 10:12, 13) கிரேக்கர்கள் எஃபெமெரீடஸ் a எனப்பட்ட பஞ்சாங்க முறையை உருவாக்கினர்; அதில் நட்சத்திரங்களும் கிரகங்களும் அன்றாடம் நகருவதை குறித்து வைத்தனர். கிரேக்கரை வென்ற ரோமர்கள், இக்குறிப்பேடுகளை தங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டனர்; ஆனால் நடைமுறை பயனுள்ள, சமுதாயத்திற்கும் பொதுமக்களுக்கும் ஆர்வமூட்டும் அன்றாட நிகழ்ச்சிகளையும் சேர்ப்பதன் மூலம் அவற்றின் மதிப்பைக் கூட்டினர். அவற்றை டையாரியும் என்று அழைத்தனர்; இது டையேஸ் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து வந்தது; இதற்கு “நாள்” என்று அர்த்தம்.

என்றாலும், 17-⁠ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரான சாம்யல் பிப்ஸ்-⁠ன் டைரி குறிப்பிலிருந்துதான் மேலை நாடுகளில் டைரி தனிப்பட்ட அன்றாட நிகழ்ச்சிகளை சேகரிக்கும் களஞ்சியமாக ஆனது. வழக்கத்திற்கு மாறாக, மதப்பற்றும் உலகப் பற்றும் நிறைந்திருந்த பிப்ஸின் அந்த டைரி குறிப்பிலிருந்து ஆங்கிலேய அரசர் இரண்டாம் சார்ல்ஸின் ஆட்சியின்போது வாழ்ந்த மக்களைப் பற்றிய மிகவும் நுட்பமான விவரங்களை சரித்திராசிரியர்கள் பெற்றுள்ளனர்.

அப்போதிலிருந்து, டைரி குறிப்பு எழுதுவது அதிக பிரபலமாகி வந்தது. அநேக டைரி குறிப்புகள் மதிப்பு வாய்ந்த வரலாற்று ஆவணங்கள் ஆயின. இவற்றுள் குறிப்பிடத்தக்கது, நாசிக்களிடமிருந்து தலைமறைவாய் இருந்த ஓர் இளம் யூதப் பெண்ணின் டைரி குறிப்பாகும். ஆனா ஃபிராங்க் எழுதிய ஓர் இளம் பெண்ணின் டைரி குறிப்பு (ஆங்கிலம்) மனிதன் சகமனிதனுக்கு இழைக்கும் கொடுமைக்கு வேதனையானதோர் அத்தாட்சியாகும்.

டைரிக்கு ஏன் இந்த வரவேற்பு?

டைரி குறிப்பு எழுதுவது, தன்னை வெளிப்படுத்த விரும்பும் அடிப்படை மனித ஆசையை தீர்த்து வைப்பதாக தோன்றுகிறது. குழந்தை பேசிய முதல் வார்த்தைகளைக் கேட்டபோது அடைந்த இன்பத்தைப் பற்றி எழுதுவதாய் இருக்கட்டும், ஓர் அருமையான உறவின் வளர்ச்சி பற்றி எழுதுவதாய் இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் நம் வாழ்விற்கு உரு கொடுக்கும் நிகழ்ச்சிகளை அமைதியாய் அசைபோட டைரி உதவுகிறது. எழுதி வைத்தவற்றை பின்னர் வாசிக்கையில் அந்த அருமையான கணங்களையும் அவை ஏற்படுத்திய உணர்ச்சிகளையும் மானசீகமாக மீண்டும் அனுபவித்துப் பார்க்க முடிகிறது.

டைரி எழுதுவதன் மிகச் சிறந்த பயன்களில் ஒன்று, நம்மை நாமே தெரிந்துகொள்ள முடிவது. எழுத்தாளர் ட்ரிஸ்டீன் ரைனர் அதை, “தங்குதடையின்றி எண்ணங்களை வெளிப்படுத்த உதவும் நடைமுறையான உளவியல் சாதனம்” என்று அழைக்கிறார்.

பைபிளில், “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்” என நீதிமொழிகள் 12:25 கூறுகிறது. தன் ‘கவலையை’ யாரிடமாவது கொட்டித் தீர்க்க ஒருவர் தயங்கினால், அதற்கு பதிலாக தனக்குள்ளிருப்பதை எழுத்தில் வடிக்கலாம். உணர்ச்சி ரீதியில் ஏற்படும் வேதனையை தாங்க உதவும் பயன்மிக்க வடிகாலாக டைரி எழுதுவது அடிக்கடி சிபாரிசு செய்யப்படுகிறது. ஒருவரது வாழ்க்கையை அசைபோடவும், புதிய இலட்சியங்களை நிர்ணயிக்கவும், ஒருவேளை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும் டைரி பயன்படுத்தப்படலாம். ஒருவர் தனது கஷ்டங்களையும் உணர்ச்சிகளையும் பற்றி எழுதுவது நிஜமான பிரச்சினைகளின்மீது தன் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் அதை சரியான நிலையில் வைத்து ஆராயவும் அவருக்கு உதவலாம்.

டைரி குறிப்பு எழுதுவது கல்வி புகட்டும் ஓர் ஏதுவாகவும் அமையலாம். அமெரிக்க ஆசிரியர் சங்கம் பெற்றோருக்கு இவ்வாறு ஆலோசனை வழங்குகிறது: “உங்கள் பிள்ளைகளில் டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். அவ்வாறு எழுதுவது எழுத்து திறமைகளையும் படைப்புத் திறனையும் வளர்க்கும்.”

நான் எப்படி தொடங்குவது?

ஓர் அமைதியான இடத்தை முதலில் தேர்ந்தெடுங்கள்; உங்களுக்குப் பிடித்தமான ஒரு நாட்குறிப்பேட்டை அல்லது நோட்டுப்புத்தகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு பக்கத்தை திருப்பும்போது வார்த்தைகளால் நிரப்பப்பட காத்திருக்கும் காலியான ஒரு பக்கத்தைப் பார்க்கையில், இவ்வளவு எழுத வேண்டுமா என்று மலைப்பாய் தோன்றலாம். ஆனால் சுயமாய் எளிய நடையில் நேர்மையுடன் இயல்பாய் எழுதுவதே மிக முக்கியம். பின்வருவது போன்ற கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளலாம்: ‘இன்று நான் என்ன செய்தேன்? அது என்னை எவ்வாறு பாதித்தது? நான் என்ன சாப்பிட்டேன்? நான் யாரை பார்த்தேன்? எனக்கு வேண்டியவர்களின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது?’ அல்லது இன்றைய சந்தர்ப்பத்தை வைத்து நீங்கள் இவ்வாறு ஆரம்பிக்கலாம்: ‘வாழ்க்கையில் இப்போது நான் எங்கே இருக்கிறேன்? என் இலட்சியங்கள் என்னென்ன? எதிர்பார்ப்புகள் என்னென்ன?’ பிறகு, குறையேதும் காணாமல் எழுதுவதை தொடருங்கள்.

உங்களுக்கு அதிகமாய் எழுதப் பிடித்தால் அதிகமாய் எழுதுங்கள்; குறைவாக எழுதப் பிடித்தால் குறைவாக எழுதுங்கள். எப்பொழுதெல்லாம் எழுதத் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் எழுதுங்கள்; எப்பொழுதாவதே எழுத முடிந்தாலும் பரவாயில்லை. ஒளிவுமறைவின்றி நேர்மையாக எழுதுங்கள். இலக்கணப் பிழை, எழுத்துப் பிழை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம். நீங்கள் எழுதியதை யாரும் பார்க்கப் போவதில்லை. போட்டோக்கள், செய்தி துணுக்குகள் போன்று உங்களுக்கு முக்கியமாய் தோன்றும் பொருட்களை ஒட்டி வைக்க முயலுங்கள். அது உங்கள் நோட்டுப் புத்தகம். அது அழகாய் இருந்தாலும் சரி, அசிங்கமாய் இருந்தாலும் சரி; சிறியதாய் இருந்தாலும் சரி, பெரியதாய் இருந்தாலும் சரி, பரவாயில்லை. உங்களுக்கு எழுத தோணும்போது மட்டுமே எழுதினால் போதும். டைரி குறிப்பு எழுதுவதில் ரொம்ப கறாராக இருந்தால், நீங்கள் தோல்வியையோ ஏமாற்றத்தையோ சந்திக்க நேரிடலாம்.​—⁠பெட்டியைக் காண்க.

ஓர் உயிரியை ஆராயும் விஞ்ஞானி, தான் கண்டறிபவற்றையும், அதில் ஏற்படும் மாற்றங்களையும் எவ்வாறு குறித்து வைத்துக்கொள்வாரோ, அதைப் போன்றே உங்கள் சொந்த நடத்தைப் போக்குகளையும் விருப்பு வெறுப்புகளையும் கண்டறிந்து ஆய்வு செய்ய டைரி குறிப்பும் உதவலாம். உங்கள் மகிழ்ச்சி, துக்கம், பலம், பலவீனம் ஆகியவற்றை உங்களது நோட்டுப் புத்தகம் படம்பிடித்து காட்டும். நீங்கள் சொல்ல விரும்புவதை நன்றாக சொல்லும் திறனை அது வளர்க்கும். டைரி எழுதுவதற்கு பொறுப்புணர்வு தேவை என்பது உண்மையே; ஆனாலும் அப்படிப்பட்ட பொறுப்புணர்வு ஏராளமான நன்மைகளை அள்ளித் தரலாம்.​—⁠அளிக்கப்பட்டது.(g01 8/8)

[அடிக்குறிப்பு]

a “ஒரு நாள் நீடித்தது” என்று அர்த்தம் தரும் எஃபீமெரோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பிறந்தது.

[பக்கம் 27-ன் பெட்டி]

 தாடங்குவதற்கு ஆலோசனைகள்

◆ நீடித்து உழைக்கும் நோட்டுப் புத்தகத்தை தெரிந்தெடுங்கள்; எங்கும் எளிதில் எடுத்துச் செல்ல வசதியான ஒன்று.

◆ உங்கள் தனிமைக்கு உதவும் ஓர் அமைதியான நேரத்தையும் ஓர் இடத்தையும் கண்டுபிடியுங்கள். ஒவ்வொரு குறிப்பையும் தேதியிட்டு எழுதுங்கள்.

◆ சில நாட்களுக்கு எழுத முடியவில்லையெனில் பதறாதீர்கள்; எங்கு நிறுத்தினீர்களோ அதிலிருந்து ஆரம்பியுங்கள்.

◆ நீங்கள் எழுதியதில் குறை காணாதீர்கள். நீங்கள் நினைத்ததை தாராளமாய் எழுத்தில் வடியுங்கள். மேலோட்டமாக எழுதுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் நுட்ப விவரங்களையும் குறித்து வையுங்கள்.