Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகைமையின் வேர்கள்

பகைமையின் வேர்கள்

பகைமையின் வேர்கள்

பகைமை என்பது மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே துளிர்த்துவிட்டது. ஆதியாகமம் 4:8-⁠ல் பைபிள் இவ்வாறு கூறுகிறது: “அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.” “அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்?” என்று பைபிள் எழுத்தாளராகிய யோவான் கேட்கிறார். “தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.” (1 யோவான் 3:12) பகையின் பொதுவான காரணியாகிய பொறாமையின் நிமித்தமே ஆபேல் கொல்லப்பட்டான். “பொறாமையே ஒரு மனிதனுக்கு மூர்க்கத்தை உண்டு பண்ணும்” என நீதிமொழிகள் 6:34 (NW) கூறுகிறது. சமூக அந்தஸ்து, செல்வம், வள ஆதாரங்கள், மற்ற அனுகூலங்கள் பற்றிய பொறாமையே இன்றும் மக்கள் மத்தியில் விரோதத்தை ஏற்படுத்துகிறது.

அறியாமையும், பயமும்

ஆனால் பொறாமை, பகையின் பல காரணங்களுள் ஒன்று மட்டுமே. அநேக சமயங்களில் பகையை தூண்டிவிடுபவை அறியாமையும் பயமுமே. “பகைக்க கற்றுக்கொள்ளும் முன்பு பயப்பட கற்றுக்கொண்டேன்” என இனவெறி பிடித்த வன்முறை கும்பலைச் சேர்ந்த ஓர் இளைஞன் கூறினான். பெரும்பாலும் அறியாமையே இப்படிப்பட்ட பயத்தின் வேராகும். த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு கூறுகிறது: தப்பெண்ணம் கொண்டவர்களின் கருத்துகள் “கிடைக்கும் அத்தாட்சிக்கு கவனம் செலுத்தாமல் வளர்க்கப்பட்டவை. . . . தப்பெண்ணம் கொண்டவர்கள் தாங்கள் முன்பே வளர்த்துக்கொண்ட கருத்துகளுக்கு முரணாக இருக்கும் உண்மைகளை திரிக்க, உருக்குலைக்க, தவறாக புரிந்துகொள்ள அல்லது அசட்டை செய்யவே விரும்புகின்றனர்.”

இந்த கருத்துகளை அவர்கள் எங்கிருந்து பெறுகின்றனர்? இன்டர்நெட் தகவல் சேவை ஒன்று இவ்வாறு கூறுகிறது: “மற்ற பண்பாடுகளைப் பற்றி நிலவும் பொதுவான எண்ணங்களுக்கு முற்கால நிகழ்ச்சிகளே காரணம். ஆனாலும் நம்முடைய பெரும்பாலான தப்பெண்ணங்களுக்கு நமது சொந்த பின்னணியும் காரணம்.”

உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் செழித்தோங்கிய அடிமை வியாபாரம் விட்டுச்சென்ற சுவடுகளே இன்றுவரை அநேக வெள்ளையர்களுக்கும் ஆப்பிரிக்க பரம்பரையில் வந்தவர்களுக்கும் மத்தியில் நிலவும் அமைதியற்ற நிலைக்கு காரணமாகும். அநேக சமயங்களில், குறிப்பிட்ட இனத்தாரைப் பற்றிய தவறான கருத்துகளை பெற்றோரிடமிருந்தே பிள்ளைகள் பெறுகின்றனர். “கருப்பர்களோடு கொஞ்சம்கூட தொடர்பே இல்லாமல்” அவர்களைப் பற்றிய தவறான இனவெறி உணர்வுகளை வளர்த்துக் கொண்டதாக வெள்ளையரான இனவெறி பிடித்தவர் என தானே ஒப்புக்கொள்ளும் ஒருவர் கூறினார்.

அதுமட்டுமா, தங்களைவிட வித்தியாசமாக இருப்பவர்கள் வெறுக்கத்தக்கவர்கள் என நினைப்பவர்களும் உண்டு. வேறொரு இனத்தை அல்லது பண்பாட்டை சேர்ந்த ஒரு நபருடன் ஏற்பட்ட ஏதாவதொரு கசப்பான அனுபவத்தின் விளைவாகவே இந்த கருத்து ஏற்பட்டிருக்கலாம். அதற்கு பிறகு, அந்த இனத்தை அல்லது பண்பாட்டை சேர்ந்த ஒவ்வொருவருமே விரும்பத்தகாத பண்புகளை கொண்டிருப்பர் என்ற மிகைப்படுத்தப்பட்ட முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

ஒரு தனி மனிதனின் தப்பெண்ணமே வெறுக்கத்தக்கதாக இருக்க, அது முழு தேசத்தையே அல்லது இனத்தையே தொற்றிக்கொண்டால் அதன் விளைவுகள் மிகவும் மோசமானவையாக நிரூபிக்கலாம். தேசம், நிறம், பண்பாடு அல்லது மொழியின் காரணமாக ஒருவர் மற்றவரைவிட உயர்ந்தவர் என்ற உணர்வு, தப்பெண்ணத்தையும் ஸெனோஃபோபியாவையும் (அன்னியர்கள் அல்லது அன்னிய பொருட்களுக்கான வெறுப்பு) உண்டாக்கலாம். இப்படிப்பட்ட தப்பெண்ணம் 20-⁠ம் நூற்றாண்டில் அடிக்கடி வன்முறையோடு வெளிக்காட்டப்பட்டது.

நிறம் அல்லது தேசம் மட்டுமே பகைக்கும் தப்பெண்ணத்திற்கும் காரணமாக இருக்க வேண்டியதில்லை என்பது அக்கறைக்குரிய விஷயமாகும். “ஒரு நாணயத்தை சுண்டிவிடுவதன் மூலம் நபர்களை எதேச்சையாக இரண்டு தொகுதிகளாக பிரித்தாலே போதும், தன் தொகுதியில் இருப்பவர்களுடன் பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது” என பென்ஸில்வேனியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளரான கிளார்க் மக்காலீ எழுதுகிறார். புகழ்பெற்ற ஒரு சோதனையில், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஒருவர் இதை செய்து காண்பித்தார். தன் வகுப்பிலுள்ள மாணவர்களை நீல நிற கண்களை உடையவர்கள், பிரௌன் நிற கண்களை உடையவர்கள் என இரண்டாக பிரித்தார். சிறிது நேரத்திற்குள்ளாகவே இரண்டு தொகுதிகளுக்கும் இடையில் பகைமை உருவானது. ஒரே போட்டி விளையாட்டு குழுவை ஆதரிக்கும் வெவ்வேறு தொகுதிகளின் வித்தியாசப்பட்ட விருப்பு வெறுப்புகள் போன்ற மிக அற்பமான காரணங்களுக்காகக்கூட பயங்கரமான மோதல்கள் ஏற்படலாம்.

ஏன் இவ்வளவு வன்முறை?

ஆனால் இப்படிப்பட்ட வெறுப்புகள் ஏன் அநேக சமயங்களில் வன்முறையோடு வெளிக்காட்டப்படுகின்றன? இந்த விஷயங்களைப் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டும் ஆராய்ச்சியாளர்களால் இதுவரை ஊகங்களை மட்டுமே செய்ய முடிந்திருக்கிறது. மனிதனின் வன்முறை மற்றும் கோபாவேசம் பற்றி செய்யப்பட்ட அனைத்து ஆராய்ச்சிகளின் விலாவாரியான நூல் விவர அட்டவணை ஒன்றை கிளார்க் மக்காலீ சேகரித்தார். “வன்முறையான குற்றச்செயல், யுத்தம் செய்து வெற்றி பெறுவதோடு சம்பந்தப்பட்டுள்ளது” என சுட்டிக்காட்டும் ஓர் ஆராய்ச்சியை அவர் மேற்கோள் காட்டுகிறார். “முதலாம், இரண்டாம் உலக யுத்தங்களில் பங்கு பெற்ற, அதிலும் அந்தப் போர்களில் வெற்றி பெற்ற தேசங்களில் போருக்கு பிறகு கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்தது” என அந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டனர். பைபிளின்படி நாம் யுத்தம் நிறைந்த காலத்தில் வாழ்கிறோம். (மத்தேயு 24:6) மற்ற வன்முறை செயல்கள் அதிகரிக்க இந்த போர்கள் ஏதாவது ஒரு விதத்தில் காரணமாக இருந்திருக்குமோ?

மற்ற ஆராய்ச்சியாளர்களோ மனிதனின் வன்முறையான நடத்தைக்கு உயிரியல் சார்ந்த விளக்கங்களை தேடுகின்றனர். ஓர் ஆராய்ச்சி, சில வித வன்முறை செயல்களை ‘மூளையில் சிரடோனின் அளவு குறைவாக இருப்பதோடு’ சம்பந்தப்படுத்த முயன்றது. மற்றொரு பிரபலமான கோட்பாடு, வன்முறையான நடத்தை நம் ஜீன்களில் ஒளிந்திருக்கிறது என்பதாகும். “[பகைமையின்] பெரும்பகுதி பரம்பரையாகக்கூட வரலாம்” என ஆட்சியியல் வல்லுநர் ஒருவர் வாதாடினார்.

அபூரண மனிதர்கள் கெட்ட குணங்களோடும் குறைபாடுகளோடும் பிறக்கிறார்கள் என பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 6:5; உபாகமம் 32:5) நிச்சயமாகவே, அந்த வார்த்தைகள் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துகின்றன. என்றாலும், எல்லாருமே மற்றவர்களை அநியாயமாக பகைப்பதில்லை. அது கற்றுக்கொள்ளப்படும் ஒன்று. ஆகவேதான், புகழ்பெற்ற உளவியல் நிபுணரான கார்டன் டபிள்யூ. ஆல்பார்ட், குழந்தைகள் “அழிவுக்குரிய உணர்ச்சிகளை காட்டுவதே கிடையாது. . . . ஒரு குழந்தை எதையும் நம்புகிறது, அதன் கவனத்தை ஈர்க்கும் எந்த பொருளையும் எல்லா விதமான மனிதர்களையும் அணுகுகிறது” என்பதை கவனித்தார். வன்முறையும், தப்பெண்ணமும், பகையும் கற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகள் என்பதையே இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் ஆதரிக்கின்றன அல்லவா! பகையை கற்றுக்கொள்ள மனிதருக்கு இருப்பதாக தோன்றும் இந்த திறமையையே பகையை தூண்டிவிடுபவர்கள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கின்றனர்.

மனங்களை கெடுத்தல்

நியோ நாசிஸ மொட்டை தலையர்கள், கூ க்ளக்ஸ் கிளான் போன்ற பகையை பரப்பும் குழுக்களின் தலைவர்களே இதில் முன்னிலை வகிக்கின்றனர். சீர்குலைந்த குடும்பங்களைச் சேர்ந்த, எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களையே தங்கள் இயக்கத்தில் சேர்க்க இந்தக் குழுக்கள் குறி வைக்கின்றன. பாதுகாப்பற்ற, லாயக்கற்ற உணர்ச்சிகளால் அவதிப்படும் இளைஞர்கள், பகையை பரப்பும் இந்த குழுக்கள் தங்களுக்கு அரவணைப்பின் உணர்வை அளிப்பதாக உணரலாம்.

பகையை ஊட்டி வளர்க்க சிலர் உபயோகித்திருக்கும் வல்லமை வாய்ந்த ஒரு கருவி இன்டர்நெட் ஆகும். சமீபத்திய ஒரு கணக்கின்படி, பகையை பரப்பும் சுமார் 1,000 வெப் சைட்டுகள் இன்டர்நெட்டில் இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. “எங்களுடைய கருத்துகளை லட்சக்கணக்கான மக்களுக்கு தெரியப்படுத்த இன்டர்நெட் வாய்ப்பளித்திருக்கிறது” என பகையை பரப்பும் ஒரு வெப் சைட்டின் உரிமையாளர் கூறியதாக தி இக்கானமிஸ்ட் பத்திரிகை மேற்கோள் காட்டுகிறது. அவருடைய வெப் சைட்டில் “குழந்தைகள் பக்கம்” ஒன்றும் உள்ளது.

டீன்-ஏஜர்கள் இசையைத் தேடி இன்டர்நெட்டில் வலம் வருகையில், பகையை தூண்டும் இசையை டௌன்லோடு செய்ய வழிநடத்தும் ஸ்தலங்களை தற்செயலாக காண்கின்றனர். இப்படிப்பட்ட இசை பொதுவாகவே சப்தமாகவும், காட்டுத்தனமாகவும் இருக்கும், அதன் வரிகளில் இனவெறியை தூண்டும் செய்திகள் அடங்கியிருக்கும். இந்த வெப் சைட்டுகள், பகையை தூண்டும் நியூஸ் குரூப்களுக்கு, சாட் ரூம்களுக்கு அல்லது மற்ற வெப் சைட்டுகளுக்கு வழிநடத்துகின்றன.

பகையை பரப்பும் சில வெப் சைட்டுகளில் இளைஞருக்கான கேம்ஸ்களும் மற்ற பொழுதுபோக்கு அம்சங்களும் கொண்ட விசேஷித்த பகுதிகளும் உள்ளன. ஒரு நியோ நாசிஸ வெப் சைட், இனவெறியையும் செமிட்டிக் இனத்தவருக்கு எதிரான உணர்வுகளையும் நியாயப்படுத்த பைபிளை உபயோகிக்க முயலுகிறது. இனவெறி செய்திகள் அடங்கிய குறுக்கெழுத்து போட்டிகள் கொண்ட ஒரு பக்கத்தையும் அது தயாரித்துள்ளது. அதன் நோக்கம் என்ன? “எங்கள் போராட்டத்தை புரிந்துகொள்ள வெள்ளை இனத்தவரின் இளைஞர்களுக்கு உதவுவதே.”

ஆனால், மிதமிஞ்சிய பைத்தியக்காரர்கள் மட்டுமே பகையை தூண்டிவிடுவர் என நினைக்காதீர்கள். சமீபத்தில் பால்கன் பகுதிகளில் நிகழ்ந்த சண்டைகளைப் பற்றி எழுதும் சமூகவியலாளர் ஒருவர், புகழ்பெற்ற சில ஆசிரியர்களையும் பொது கருத்தை உருவாக்குபவர்களையும் பற்றி பின்வருமாறு கூறினார்: “[அவர்கள்] உபயோகித்த எழுத்து நடையை கண்டு நான் வாயடைத்துப் போனேன். அது, தங்கள் நாட்டவரின் கீழ்த்தரமான உணர்ச்சிகளை திருப்திப்படுத்தும், கோபம் நிறைந்த அவர்களின் பகையை தூண்டிவிடும், தார்மீக அடிப்படையில் தவறாக இருந்தாலும் . . . எந்த நடத்தையுமே சட்ட விரோதமானதல்ல என நினைக்க தூண்டுவதன் மூலம் அவர்களுடைய சிந்திக்கும் ஆற்றலை மழுங்கச் செய்யும், உண்மையை திரித்துக் கூறும் ஓர் எழுத்து நடையாகும்.”

இந்த விஷயத்தில் பாதிரிகளின் பங்கையும் நாம் அசட்டை செய்யக்கூடாது. பரிசுத்த பகை: 90-களின் மத சண்டைகள் என்ற ஆங்கில புத்தகத்தின் எழுத்தாளரான ஜேம்ஸ் ஏ. ஹாட் பின்வரும் அதிர்ச்சியூட்டும் விஷயத்தை தெரிவிக்கிறார்: “இரக்கத்திற்கும் மனிதர் மேலுள்ள அக்கறைக்கும் பிறப்பிடமாக கருதப்படும் மதமே, பகை, யுத்தம், பயங்கரவாதம் போன்றவற்றிற்கு முக்கிய காரணியாக இருந்திருப்பதுதான் 1990-களின் மிகப் பெரிய வேடிக்கை.”

ஆகவே, பகைக்கு பல்வேறு சிக்கலான காரணங்கள் இருப்பதை அறிகிறோம். அப்படியென்றால், பகை நிறைந்த அதன் சரித்திரத்தையே திரும்பத் திரும்ப செய்யும் இந்த முட்டாள்தனத்திலிருந்து மனிதவர்க்கத்தை தடுத்து நிறுத்தவே முடியாதா? பகைக்கு காரணமான தவறாக புரிந்துகொள்ளுதல், அறியாமை, பயம் ஆகியவற்றை எதிர்த்துப் போராட தனிப்பட்ட விதத்திலும் உலகளாவிய விதத்திலும் ஏதாவது செய்ய முடியுமா?(g01 8/8)

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

தப்பெண்ணமும் பகையும் கற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளே!

[பக்கம் 45-ன் படம்]

பகையோடும் தப்பெண்ணத்தோடும் . . .

நாம் பிறப்பதில்லை

[பக்கம் 7-ன் படம்]

பகையை பரப்பும் தொகுதிகள் இளைஞரை சேர்க்க இன்டர்நெட்டை உபயோகிக்கின்றன

[பக்கம் 7-ன் படம்]

மதம் அநேக சமயங்களில் சண்டையை ஆதரித்துள்ளது

[படத்திற்கான நன்றி]

AP Photo