Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகையின் சுழற்சியை தகர்த்தல்

பகையின் சுழற்சியை தகர்த்தல்

பகையின் சுழற்சியை தகர்த்தல்

“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்.”​—⁠மத்தேயு 5:44.

இரண்டு எதிரி தேசங்களின் தலைவர்கள் தீவிரமான சமாதான பேச்சு வார்த்தைகளில் பல நாட்கள் ஈடுபட்டிருந்தனர். சக்திவாய்ந்த, தொழில்மயமான ஒரு தேசத்தின் ஜனாதிபதியும் அங்கே இருந்தார். அவர் தனது செல்வாக்கையும் அரசியல் திறமைகளையும் உபயோகித்து அந்த இரண்டு தலைவர்களும் ஓர் ஒப்பந்தத்திற்கு வர உதவ முயன்றார். ஆனாலும் அந்த கடுமையான முயற்சியின் முடிவில் கூடுதலான வேதனையே மிஞ்சியது. அதற்கு பிறகு சில வாரங்களுக்குள்ளாகவே அந்த இரண்டு தேசங்களும், “இருபது வருடங்களில் அவற்றின் மத்தியில் நிகழ்ந்ததிலேயே மிகவும் கொடூரமான வன்முறை”யில் ஈடுபட்டன என நியூஸ்வீக் பத்திரிகை கூறியது.

உலகெங்கிலும் உள்ள தேச தலைவர்கள் மிகவும் கடினமாக உழைத்தபோதிலும், இனங்களுக்கும் தேசங்களுக்கும் இடையில் நிலவும் பகையும் வெறுப்பும் குறைந்தபாடில்லை. அறியாமை, தப்பெண்ணம், பிரச்சாரம் ஆகியவற்றால் தூண்டிவிடப்பட்டு பகையின் சுழற்சி இன்னும் வேகமாகவே சுழன்று வருகிறது. இதைத் தீர்க்க இன்றைய தலைவர்கள் புதுமையான வழிகளை வீணாக தேடிக்கொண்டிருக்க அதற்கான மிகச் சிறந்த தீர்வு பழமையான ஒன்று என்பதை உணர தவறுகிறார்கள்; அது மலைப்பிரசங்கம் போல அந்தளவுக்கு பழமையானது. அந்த பிரசங்கத்தின்போது இயேசு கிறிஸ்து, தமக்கு செவிகொடுத்துக் கொண்டிருந்தவர்கள் கடவுளுடைய வழிகளுக்கு கீழ்ப்படிய வேண்டுமென உற்சாகப்படுத்தினார். அந்த சந்தர்ப்பத்தில்தான் அவர், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்” என்ற மேலே கொடுக்கப்பட்ட வாக்கியத்தை கூறினார். இந்த அறிவுரை, பகை, தப்பெண்ணம் போன்ற பிரச்சினைகளை தீர்க்க மிகச் சிறந்த வழி மட்டுமல்ல, அது ஒன்றே நடைமுறையான தீர்வுமாகும்!

ஒருவருடைய சத்துருக்களை சிநேகிப்பது சாத்தியமற்ற கனவு, நடைமுறையற்றது என சந்தேகவாதிகள் ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால், ஜனங்களால் பகைக்க கற்றுக்கொள்ள முடியும் என்றால் பகைக்காமல் இருக்கவும் கற்றுக்கொள்ள முடியும் என எதிர்பார்ப்பது நியாயமல்லவா? ஆக, இயேசு கூறிய வார்த்தைகள்தான் மனிதவர்க்கத்தின் ஒரே உண்மையான நம்பிக்கை. காலங்காலமாக இருக்கும் பகையையும் வென்று நீக்கிவிட முடியும் என அவை சுட்டிக்காட்டுகின்றன.

இயேசுவின் நாளில் அவருக்கு செவிகொடுத்துக்கொண்டிருந்த யூதர்களின் சூழ்நிலையை சற்று சிந்தித்து பாருங்கள். அவர்கள் எதிரிகளை சந்திக்க வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை. ரோமர்கள் அந்த பகுதியில்தான் ஆட்சி செய்தனர். அவர்கள் யூதர்கள் மீது பாரமான வரியையும், அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்தி, அவர்களை துர்ப்பிரயோகம் செய்து, சுரண்டினார்கள். (மத்தேயு 5:39-42) அதோடு, தீர்க்கப்படாமல் விடப்பட்டிருந்த சிறுசிறு சச்சரவுகள் பெரிதாகிவிட்டதால் சிலர் உடன் யூதர்களைக்கூட எதிரிகளாக கருதியிருக்கலாம். (மத்தேயு 5:21-24) தமக்கு செவிகொடுத்தவர்கள், தங்களுக்கு துன்பத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியவர்களை நேசிக்கும்படி இயேசு உண்மையிலேயே எதிர்பார்த்தாரா?

‘அன்பின்’ அர்த்தம்

முதலாவதாக, “அன்பு” என கூறுகையில் மிகவும் நெருக்கமான நண்பர்களிடையே நிலவக்கூடிய பாசத்தைப் பற்றி இயேசு கூறவில்லை என்பதை நினைவில் வையுங்கள். மத்தேயு 5:44-⁠ல் அன்பு என்பதற்கு உபயோகிக்கப்பட்டுள்ள கிரேக்க பதம் அகாப்பே என்ற வார்த்தையிலிருந்து வருகிறது. நியமத்தினால் வழிநடத்தப்படும் அல்லது கட்டுப்படுத்தப்படும் அன்பு என்பதே இந்த வார்த்தையின் அர்த்தம். அதில் எப்போதுமே கனிவான பாசம் இருக்க வேண்டிய அவசியமில்லை. அந்த அன்பு நீதியான நியமங்களால் வழிநடத்தப்படுவதால், மற்றவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் சரி அவர்களுடைய நன்மையை கருதியே அது செயல்படும். ஆகவே, அகாப்பே அன்பு தனிப்பட்ட விரோதங்கள் மீது வெற்றி கொள்கிறது. அப்படிப்பட்ட அன்பை இயேசுவே தம் வாழ்க்கையில் வெளிக்காட்டினார். அவரை கழுமரத்தில் அறைந்த ரோம போர்வீரர்களை சபிப்பதற்கு பதிலாக அவர் பின்வருமாறு ஜெபித்தார்: “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே.”​—லூக்கா 23:34.

அப்படியென்றால், உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் இயேசுவின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு ஒருவரில் ஒருவர் அன்புகூர ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்ப்பது நியாயமானதா? இல்லை, ஏனெனில் இந்த உலகம் தொடர்ந்து அழிவை நோக்கியே செல்லும் என பைபிள் காட்டுகிறது. “பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் . . . மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்” என 2 தீமோத்தேயு 3:13 முன்னுரைக்கிறது. என்றாலும், பைபிள் படிப்பின் மூலம் நீதியான நியமங்களை முழுமையாக கற்றுக்கொள்கையில் தனி நபர்களால் பகையின் சுழற்சியை தகர்க்க முடியும். இவ்வாறே, தங்களை சுற்றி படுவேகமாக சுழன்று கொண்டிருக்கும் பகை என்ற சூறாவளியை வெற்றிகரமாக சமாளிக்க அநேகர் கற்றுக்கொண்டுள்ளனர் என அத்தாட்சிகள் காட்டுகின்றன. நிஜ வாழ்க்கை அனுபவங்கள் சிலவற்றை கவனியுங்கள்.

அன்பு செலுத்த கற்றுக்கொள்ளுதல்

ஹோசே 13 வயதாக இருந்தபோதே ஒரு பயங்கரவாத அமைப்போடு சேர்ந்துகொண்டு கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டான். a தன்னை சுற்றிலும் அவன் கண்ட அநீதிகளுக்கு காரணமாக கருதப்பட்டவர்களை பகைக்க கற்றுக்கொடுக்கப்பட்டான். கூடுமானால் அவர்களை அழிப்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது. தன்னுடைய நண்பர்களில் அநேகர் மரிப்பதை பார்த்த ஹோசேக்கு கசப்புணர்ச்சியும் பழிவாங்கும் வெறியும் அதிகரித்தன. வெடி குண்டுகளை தயாரிக்கையில், ‘ஏன் இவ்வளவு துன்பம்? உண்மையிலேயே ஒரு கடவுள் இருந்தால் இதை பார்க்கக்கூடவா மாட்டார்?’ என்ற கேள்விகள் அவன் மனதில் வலம் வந்தன. குழப்பமும் சோர்வும் வாட்டியெடுக்க அநேக சமயங்களில் அவன் அழுதான்.

கடைசியில், ஹோசே உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய சபைக்கு செல்ல ஆரம்பித்தான். அவன் சபை கூட்டத்திற்கு சென்ற முதல் முறையே அங்கு நிலவிய அன்பான சூழலை கவனித்தான். அனைவருமே அவனை கனிவோடும் நட்புறவோடும் வரவேற்றனர். பிறகு, “கடவுள் ஏன் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார்?” என்ற விஷயத்தைப் பற்றி கலந்தாலோசிக்கையில் நீண்ட நாட்களாக அவன் மனதிலிருந்த அதே கேள்விகளுக்கு பதில் கிடைத்தது. b

காலப்போக்கில், பைபிளிலிருந்து கூடுதலான அறிவை பெற்றதால் ஹோசே தன் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் மாற்றங்களை செய்துகொண்டான். “அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். . . . பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது” என்பதை கற்றுக்கொண்டான்.​—1 யோவான் 3:14, 15.

என்றாலும், தீவிரவாத சகாக்களோடு உள்ள உறவுகளை முறித்துக்கொள்வது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. அவன் யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றத்திற்கு சென்ற ஒவ்வொரு முறையும் அவனை பின்தொடர்ந்தார்கள். ஹோசே ஏன் இப்படி மாறினான் என்பதை புரிந்துகொள்வதற்காக அவனுடைய முன்னாள் கூட்டாளிகளில் சிலர் ஒரு சில சபை கூட்டங்களுக்கும் வந்தார்கள். அவன் ஒரு துரோகியும் அல்ல அவனால் தங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டவுடன் அவனை தொந்தரவு செய்வதை நிறுத்திவிட்டார்கள். ஹோசே, 17 வயதில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக முழுக்காட்டுதல் பெற்றான். சீக்கிரத்தில் முழுநேரமாக பிரசங்கிக்க ஆரம்பித்தான். இப்போது, மக்களை கொல்ல திட்டம் தீட்டுவதற்கு பதிலாக அன்பும் நம்பிக்கையும் கொண்ட ஒரு செய்தியை அவர்களுக்கு அறிவித்து வருகிறான்!

இன வேறுபாடுகளை தகர்த்தல்

பல்வேறு இனங்களை பிரிக்கும் பகை என்ற சுவரை தகர்க்க முடியுமா? இங்கிலாந்து, லண்டனிலுள்ள யெகோவாவின் சாட்சிகளில் அம்ஹாரிக் மொழி பேசும் தொகுதியினரை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தொகுதியில் சுமார் 35 பேர் உள்ளனர்; அவர்களில் 20 பேர் எத்தியோப்பியர்கள், 15 பேர் எரிட்ரியர்கள். சமீபத்தில், ஆப்பிரிக்காவிலுள்ள எரிட்ரியர்களும் எத்தியோப்பியர்களும் பயங்கரமான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் இவர்கள் சமாதானமாகவும் ஐக்கியமாகவும் ஒன்றுகூடி வணங்குகின்றனர்.

ஒரு எத்தியோப்பிய சாட்சியிடம் அவரது குடும்பத்தார், ‘எரிட்ரியர்களை நம்பவே நம்பாதே!’ என்று சொல்லி வைத்திருந்தனர். ஆனால், உடன் கிறிஸ்தவர்களான எரிட்ரியர்களை இப்போது அவர் நம்புவது மட்டுமல்லாமல் அவர்களை சகோதர, சகோதரிகள் என்றும் அழைக்கிறார்! எரிட்ரியர்கள் பொதுவாகவே டிக்ரின்யா மொழி பேசுகிறவர்கள் என்றாலும், தங்கள் எத்தியோப்பிய சகோதரர்களோடு சேர்ந்து பைபிளை படிக்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய மொழியான அம்ஹாரிக்கை கற்றுக்கொண்டனர். “பூரண சற்குணத்தின் கட்டாகிய” தெய்வீக அன்பின் வல்லமைக்கு என்னே மகத்தான அத்தாட்சி!​—கொலோசெயர் 3:14.

கடந்த காலத்தை மறந்துவிடுதல்

ஆனால் ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடத்தப்பட்டிருந்தால் என்ன செய்வது? தன்னை துன்பப்படுத்தியவர்களிடம் வெறுப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வது இயல்புதானே? உதாரணத்திற்கு ஜெர்மனியிலுள்ள மான்ஃபிரேட் என்ற சாட்சியை எடுத்துக் கொள்ளுங்கள். யெகோவாவின் சாட்சி என்ற காரணத்தால் கம்யூனிஸ்டுகள் அவரை ஆறு வருடம் சிறையிலடைத்தனர். அவர் தனது எதிரிகளிடம் பகையை வளர்த்துக் கொண்டாரா அல்லது பழிவாங்க வேண்டும் என எப்போதாவது நினைத்தாரா? “இல்லை” என அவர் பதிலளித்தார். சார்புருக் ட்ஸைடுங் என்ற ஜெர்மானிய செய்தித்தாளின்படி மான்ஃபிரேட் இவ்வாறு விளக்கினார்: “அநியாயம் செய்வது அல்லது பதிலுக்கு பதில் செய்வது . . . ஒரு சுழற்சியை ஆரம்பித்து வைக்கிறது. அது எப்போதுமே அதிகமான அநியாயத்திற்கே வழிவகுக்கிறது.” பைபிளின் பின்வரும் வார்த்தைகளை மான்ஃபிரேட் பின்பற்றினார் என்பது தெளிவாக உள்ளதல்லவா? “ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; . . . கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.”​—ரோமர் 12:17, 18.

பகை இல்லாத உலகம்!

இந்த விஷயத்தில் யெகோவாவின் சாட்சிகள் பரிபூரணர் என உரிமைபாராட்டிக் கொள்வதில்லை. முன்னாளைய வெறுப்பையும் பகையையும் நீக்குவது அவ்வளவு சுலபமல்ல என்பதை அவர்கள் அறிவார்கள். ஒருவர் பைபிள் நியமங்களை தன் வாழ்க்கையில் பின்பற்ற தொடர்ச்சியான, ஊக்கந்தளராத முயற்சி தேவை. என்றாலும் மொத்தத்தில், பகையின் சுழற்சியை தகர்ப்பதில் பைபிளுக்கு இருக்கும் வல்லமைக்கு யெகோவாவின் சாட்சிகளே உயிருள்ள அத்தாட்சிகள். சாட்சிகள், வீட்டு பைபிள் படிப்புகள் மூலம் இனவெறி, தப்பெண்ணம் போன்ற விலங்குகளை தகர்த்தெறிய ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானோருக்கு உதவி வருகின்றனர். c (“பகையை நீக்க பைபிள் ஆலோசனை உதவுகிறது” என்ற பெட்டியைக் காண்க.) இந்த வெற்றி, பகையையும் அதற்கான காரணங்களையும் முற்றிலுமாக நீக்கப்போகும் உலகளாவிய கல்வித் திட்டம் சாதிக்கப் போவதன் வெறும் ஒரு முற்காட்சியே. எதிர்காலத்தில் நிகழப்போகும் இந்த கல்வித் திட்டம் கடவுளுடைய ராஜ்யம் அல்லது உலகளாவிய அரசாங்கத்தின் மேற்பார்வையில் நடைபெறும். கர்த்தருடைய ஜெபத்தில் அந்த ராஜ்யத்திற்காக ஜெபிக்கும்படியே இயேசு நமக்கு கற்றுக்கொடுத்தார்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக.”​—மத்தேயு 6:9, 10.

இந்த பரலோக அரசாங்கத்தின் மேற்பார்வையில், “பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்” என பைபிள் வாக்குறுதி அளிக்கிறது. (ஏசாயா 11:9; 54:13) அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஏசாயா தீர்க்கதரிசியின் பின்வரும் வார்த்தைகள் அப்போது உலகமுழுவதிலும் நிறைவேறும்: “[கடவுள்] ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்து கொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” (ஏசாயா 2:4) இவ்வாறு, பகை என்ற கொடிய சுழற்சியை முழுமையாகவும் எல்லா காலத்திற்கும் கடவுளே தகர்த்தெறிவார். (g01 8/8)

[அடிக்குறிப்புகள்]

a அவனுடைய உண்மையான பெயரல்ல.

b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தில், “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” என்ற 8-⁠ம் அதிகாரத்தை காண்க.

c உள்ளூரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளோடு தொடர்புகொண்டால் அல்லது இந்த பத்திரிகையை பிரசுரித்தவர்களுக்கு எழுதினால் இலவசமாக பைபிளை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

[பக்கம் 11-ன் பெட்டி]

பகையை நீக்க பைபிள் ஆலோசனை உதவுகிறது

“உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?” (யாக்கோபு 4:1) சுயநல ஆசைகளை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டால் மற்றவர்களோடு ஏற்படும் சச்சரவுகளை பெரும்பாலும் நீக்கலாம்.

“அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.” (பிலிப்பியர் 2:4) மற்றவர்களுடைய விருப்பங்களை நம் விருப்பங்களுக்கு மேலாக வைப்பது தேவையற்ற சச்சரவுகளை தவிர்க்க மற்றொரு வழியாகும்.

“கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச் செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம்.” (சங்கீதம் 37:8) அழிவுக்கு ஏதுவான மனப்பாங்குகளை நம்மால் கட்டுப்படுத்த முடியும் அவற்றை கட்டுப்படுத்தவும் வேண்டும்.

“மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்[தார்].” (அப்போஸ்தலர் 17:26) மற்றொரு இனத்தாரைவிட நாம் உயர்ந்தவர்கள் என்று நினைப்பது நியாயமற்றது; ஏனெனில் நாம் அனைவரும் ஒரே மனித குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

“ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.” (பிலிப்பியர் 2:3) நம்மிடம் இல்லாத நல்ல குணங்களும் திறமைகளும் மற்றவர்களிடம் இருப்பதால் அவர்களை வெறுப்பது முட்டாள்தனம். எந்தவொரு இனமோ பண்பாடோ எல்லா நற்குணங்களையும் முழுமையாக பெற்றிருக்கவில்லை.

“ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும் . . . நன்மை செய்யக்கடவோம்.” (கலாத்தியர் 6:10) மற்றவர்கள் எந்த இனத்தை அல்லது பண்பாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை நேசிக்கவும் அவர்களுக்கு உதவவும் முன் வருவது பேச்சுத்தொடர்பு இடைவெளியையும் தவறாக புரிந்துகொள்ளுதலையும் நீக்க பெரிதும் உதவும்.

[பக்கம் 9-ன் படங்கள்]

எத்தியோப்பிய, எரிட்ரிய சாட்சிகள் சமாதானத்தோடு ஒன்றுகூடி வணங்குகின்றனர்

[பக்கம் 10-ன் படம்]

கம்யூனிஸ்ட் சிறையிலிருந்து வெளிவந்த மான்ஃபிரேட், பகையை வளர்த்துக்கொள்ள மறுத்தார்

[பக்கம் 10-ன் படம்]

ஜனங்களை பிரிக்கும் சுவர்களை தகர்க்க பைபிள் உதவலாம்