Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகை எனும் உலகளாவிய கொள்ளை நோய்

பகை எனும் உலகளாவிய கொள்ளை நோய்

பகை எனும் உலகளாவிய கொள்ளை நோய்

இந்த உலகில் ஒரு பூதம் கட்டுப்பாடில்லாமல் சுற்றி வருகிறது, அதன் பெயர் பகை. அது உலகமுழுவதும் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது.

பால்கன் பகுதி ஒன்று, சமீபத்தில் அங்கு நிகழ்ந்த இன படுகொலையின்போது ஏற்பட்ட வன்முறையின் பின்விளைவுகளில் இன்னமும் சிக்கித் தவிக்கிறது. அங்கு பல நூற்றாண்டுகளாக புகைந்து கொண்டிருந்த பகைமை, பெரும் எண்ணிக்கையானோர் படுகொலை செய்யப்படுதல், கற்பழிக்கப்படுதல், நாடு கடத்தப்படுதல், வீடுகளும் முழு கிராமங்களும் எரிக்கப்பட்டு சூறையாடப்படுதல், பயிர்களும் கால்நடைகளும் அழிக்கப்படுதல், பசி, பட்டினி போன்றவற்றிற்கு வித்திட்டிருக்கிறது. அப்பகுதியில் இன்னமும் ஏராளமான கண்ணி வெடிகள் உள்ளன.

தென் கிழக்கு ஆசியாவிலுள்ள கிழக்கு தைமூரில், கொலை, அடி உதை, கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு, நாட்டைவிட்டு விரட்டப்படுதல் ஆகியவற்றின் கொடுமை தாங்க முடியாமல் பயந்துபோன 7,00,000 பேர் அங்கிருந்து தப்பியோடினர். அவர்கள் தப்பியோடிய பிறகு, அதிகாரப்பூர்வமற்ற இராணுவ தொகுதியினர் கொள்ளையடித்ததால் முற்றிலும் தரிசாக்கப்பட்ட நிலமே மிஞ்சியிருந்தது. “வேட்டையாடப்படும் மிருகத்தைப் போல உணர்ந்தேன்” என பாதிக்கப்பட்ட ஒருவர் கதறினார்.

மாஸ்கோவில், தீவிரவாதிகள் வைத்த வெடிகுண்டின் காரணமாக ஒரு அப்பார்ட்மென்ட் கட்டடம் தகர்க்கப்பட்டது. அதன் காரணமாக, 94 அப்பாவி மக்களின் சடலங்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன; அதில் சில சின்னஞ்சிறுசுகளும் இருந்தன. 150-⁠க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இப்படிப்பட்ட பயங்கரத்தின் காரணமாக, ‘அடுத்தது யாருடைய உயிர் போகப்போகிறதோ?’ என்ற பயம் மக்களின் மனதை பீடிக்கிறது.

கலிபோர்னியாவிலுள்ள லாஸ் ஏஞ்சலிஸில் இனவெறி பிடித்த ஒருவன் பாலர் பள்ளி செல்லும் யூத பிள்ளைகளை நோக்கி சுட்டான். பிறகு, பிலிப்பீன்ஸை சேர்ந்த தபால்காரர் ஒருவரை கொன்று போட்டான்.

இதன் காரணமாக, பகையை ஓர் உலகளாவிய கொள்ளை நோய் என அழைப்பது மிகவும் பொருத்தமானதே. இன, மத, ஜாதி பகைமையும் அராஜகமும் கைகோர்த்துக் கொள்கையில் நிகழும் சம்பவங்களை அன்றாட செய்திகளில் கேள்விப்படுகிறோம். தேசங்களும், சமுதாயங்களும், குடும்பங்களும் பிரிக்கப்படுவதை பார்க்கிறோம். சில தேசங்களில் இனங்கள் அடியோடு அழிக்கப்படுவதை பார்க்கிறோம். வெறுமனே, சிலர் ‘வித்தியாசமானவர்கள்’ என்பதால் அவர்களுக்கு எதிராக படுமோசமான மனிதநேயமற்ற செயல்கள் செய்யப்படுவதை பார்க்கிறோம்.

பகை என்ற பூதத்தை கூண்டிலடைக்க வேண்டுமென்றால் வெறுப்பு மிக்க இந்த வன்முறைகளின் ஆரம்பத்தை நாம் முதலாவது புரிந்துகொள்ள வேண்டும். பகை என்பது மனிதனின் ஜீன்களில் பதிந்துள்ள ஒன்றா? அல்லது கற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றா? பகையின் சுழற்சியை தகர்க்க முடியுமா?(g01 8/8)

[பக்கம் 3-ன் படத்திற்கான நன்றி]

Kemal Jufri/Sipa Press