Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிள் வாசிப்பை அதிக சுவாரஸ்யமாக்குவது எப்படி?

பைபிள் வாசிப்பை அதிக சுவாரஸ்யமாக்குவது எப்படி?

இளைஞர் கேட்கின்றனர் . . .

பைபிள் வாசிப்பை அதிக சுவாரஸ்யமாக்குவது எப்படி?

“சில சமயங்கள்ல பைபிள புரிஞ்சுக்கவே கஷ்டமா இருக்கும். அதனால வாசிக்கணுங்கற ஆசையே இல்லாம போயிடுது.”​—⁠ஆனலிஸா, 17 வயது.

“பைபிள வாசிப்பது படு போர்.”​—⁠கிம்பர்லி, 22 வயது.

அநேகர் எதையுமே வாசிக்க விரும்புவதில்லை. ஆகவே பைபிள் போன்ற ஒரு பெரிய புத்தகத்தை வாசிப்பதென்பது​—⁠ஆர்வமாக வாசிப்பவர்களுக்கும்கூட​—⁠மலைப்பாக தெரியலாம். “என்னைப் பொறுத்த வரை பைபிள் ஒரு பெரிய புத்தகமாக இருந்தது, அதிலுள்ள பழக்கமில்லாத வார்த்தைகளை புரிஞ்சுக்கவே கஷ்டமாக இருந்தது” என 17 வயது டாமி சொல்கிறாள். “பைபிள வாசிக்க ரொம்ப கவனமும் பொறுமையும் வேணும்.”

அதோடு, வீட்டுப்பாடம், சிறுசிறு வீட்டு வேலைகள், பொழுதுபோக்கு போன்றவை உங்களுடைய பெரும்பாலான நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடலாம். இதுவும்கூட கவனம் செலுத்தி படிப்பதை கடினமாக்கி பைபிள் வாசிப்பதை சுவாரஸ்யமில்லாமல் செய்துவிடலாம். யெகோவாவின் சாட்சியான ஆலிசியா கிறிஸ்தவ கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்கும், கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும், தன் நம்பிக்கைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நேரத்தை ஒதுக்குகிறாள். “ஒன்றன்பின் ஒன்றாக செய்வதற்கு நிறைய வேலைகள் இருப்பதால் பைபிள் வாசிப்பது கடினமாக இருக்கலாம்” என அவள் கூறுகிறாள்.

ஆனாலும் ஆலிசியா, டாமி இன்னும் பிற இளைஞரால் இப்படிப்பட்ட இடையூறுகளை சமாளிக்க முடிந்திருக்கிறது. இப்போது அவர்கள் பைபிளை தவறாமல் வாசித்து, அதில் இன்பம் காண்கிறார்கள். நீங்களும் இன்பம் காணலாமே! பைபிள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குவதற்கு உங்களால் செய்ய முடிகிற மூன்று காரியங்களை கவனியுங்கள்.

பைபிளை வாசிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்

“பைபிள வாசிப்பது படு போர் என இளைஞர் நினைப்பதற்குக் காரணம் அவர்கள் அதை அந்தளவுக்கு வாசித்து பார்க்கவில்லை” என 18 வயது கெல்லி சொல்கிறாள். நீங்கள் அடிக்கடி விளையாடும் ஒரு விளையாட்டில் சலிக்காமல் எவ்வாறு இன்பம் காண்பீர்களோ அவ்வாறே பைபிளையும் தவறாமல் வாசிக்கும்போது அதிலும் இன்பம் காண்பீர்கள்.

ஆனால் உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைப்பதே பெரிய காரியம் என்றால் என்ன செய்வது? அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு ஆலோசனை கூறுகிறார்: “நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள் [“வாய்ப்பான நேரத்தை வாங்குங்கள்,” NW].” (எபேசியர் 5:15, 16) டிவி பார்ப்பது போன்ற முக்கியமற்ற காரியங்களுக்கு செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் ‘நேரத்தை வாங்கலாம்.’ ‘நேரம்’ என்பதற்கு இங்கு பவுல் பயன்படுத்தியிருக்கும் வார்த்தை ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை அர்த்தப்படுத்தலாம். பைபிள் வாசிப்பிற்காக நீங்கள் ஒதுக்கும் நேரம் எதுவாக இருக்கலாம்?

பலரும் காலையில் தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல் a என்ற சிறு புத்தகத்திலுள்ள வசனத்தையும் குறிப்புகளையும் கலந்தாலோசித்த பின்பு பைபிள் வாசிக்கிறார்கள். இன்னும் சிலர் தூங்கப் போவதற்கு முன்பாக வாசிக்க விரும்புகிறார்கள். உங்களுக்கு சௌகரியமான நேரத்தை தேர்ந்தெடுங்கள், அட்டவணையை அதற்கேற்ப மாற்றியமையுங்கள். “தவறாமல் பைபிள் வாசிப்பதற்கான அட்டவணையைக் கடைப்பிடிக்க எனக்கு முக்கிய ஏதுவாக இருப்பது வளைந்து கொடுக்கும் தன்மையே” என ஆலிசியா தெரிவிக்கிறாள்.

கிறிஸ்தவ இளைஞர் சிலர் தினமும் பைபிள் வாசிப்பதற்கு 10 முதல் 15 நிமிடங்களை ஒதுக்குகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் முழு பைபிளையும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் அவர்களால் வாசிக்க முடிந்திருக்கிறது! உங்களால் அவ்விதமாக வாசிக்க முடியவில்லை என்றாலும், தினமும் ஒரு பகுதியை வாசிக்க வேண்டும் என்ற இலக்கை வையுங்கள். பைபிள் வாசிப்புக்காக ஒதுக்கியுள்ள நேரத்தை தவறாமல் உறுதியான தீர்மானத்துடன் அதற்காகவே பயன்படுத்துகையில் கடவுளுடைய வார்த்தையின் பேரில் உங்கள் பிரியம் அதிகரிக்கும்.​—சங்கீதம் 119:97; 1 பேதுரு 2:3.

ஞானத்திற்காக ஜெபியுங்கள்

பைபிளை தவறாமல் வாசிப்பவர்களுக்கும்கூட அதிலுள்ள சில பகுதிகள் புரிந்துகொள்வதற்கு கடினமாக இருப்பது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயமே. பைபிளின் ஆசிரியராகிய யெகோவா தேவன் தம்முடைய வார்த்தையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறார். அப்போஸ்தலர் புத்தகம் எத்தியோப்பிய பயணி ஒருவரை பற்றி சொல்கிறது. அவரால் ஏசாயா 53-⁠ம் அதிகாரத்திலுள்ள ஒரு தீர்க்கதரிசனத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் மற்றொருவரின் உதவியை நாட விருப்பமுள்ளவராக இருந்தார். அந்தத் தீர்க்கதரிசனத்தை அவருக்கு விளக்குவதற்காக யெகோவாவின் தூதன் மிஷனரியாகிய பிலிப்புவை அவரிடத்திற்கு அனுப்பினார்.​—அப்போஸ்தலர் 8:26-39.

அப்படியானால் பைபிள் வாசிப்பு பயனுள்ளதாக இருப்பதற்கு அதை எடுத்த எடுப்பிலேயே வாசிக்க ஆரம்பிப்பதற்கு பதிலாக ஜெபத்துடன் ஆரம்பிக்க வேண்டும். சிலர் பைபிளை திறப்பதற்கு முன்பாக, புரிந்துகொள்வதற்கு வேண்டிய ஞானத்திற்காகவும் வாசிக்கும் பகுதியிலுள்ள படிப்பினைகளை கவனத்தில் எடுத்துக்கொள்வதற்காகவும் யெகோவாவிடம் ஜெபம் செய்வது வழக்கம். (2 தீமோத்தேயு 2:7; யாக்கோபு 1:5) கடவுளுடைய ஆவியால் உங்கள் மனதில் எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க அல்லது சோதனைகளை வெற்றிகரமாக சமாளிக்க உதவும் பைபிள் வசனங்களை உங்கள் நினைவுக்குக் கொண்டுவரவும் முடியும்.

ஓர் இளம் கிறிஸ்தவர் இவ்வாறு நினைவுகூருகிறார்: “எனக்கு 12 வயது இருக்கையில் அப்பா வீட்டை விட்டு போய்விட்டார். ஒருநாள் இரவு படுக்கையில் இருந்தவாறு, அப்பாவை திரும்பி வரச்செய்யும்படி கேட்டு யெகோவாவிடம் கெஞ்சி ஜெபம் செய்தேன். அதற்குப் பின்பு, பைபிளை எடுத்து சங்கீதம் 10:14-ஐ (NW) வாசித்தேன்: ‘திக்கற்றவன், தகப்பனில்லா பையன் தன்னை உம்மிடம் [யெகோவாவிடம்] ஒப்புவிக்கிறான். அவனுக்கு நீரே சகாயர்.’ ஒரு நிமிடம் சற்று நிதானித்தேன். யெகோவா என்னிடம் பேசி, அவர்தான் என் சகாயர், என் அப்பா என தெரியப்படுத்துகிறாரோ என நினைத்தேன். இவரைவிட மேலான ஓர் அப்பா எனக்குக் கிடைப்பாரா?”

பைபிளை வாசிக்க உட்காரும் ஒவ்வொரு சமயமும் ஜெபம் செய்வதை உங்களுடைய பழக்கமாக்கிக் கொள்ள முடியுமா? ஏட்ரியன் இவ்வாறு சொல்கிறார்: “வாசிப்பதற்கு முன்பும், வாசித்ததற்குப் பின்பும் ஜெபிப்பது உண்மையிலேயே இருவரும் பங்கெடுக்கும் உரையாடலாக, யெகோவாவுடன் உரையாடுவதைப் போல இருக்கிறது.” இருதயப்பூர்வமான ஜெபம், பைபிள் வாசிப்பு அட்டவணையை தவறாமல் பின்பற்றும் உங்கள் தீர்மானத்தை இன்னும் உறுதிப்படுத்தும், கடவுளுடன் உள்ள உங்கள் உறவையும் பலப்படுத்தும்.​—யாக்கோபு 4:8.

அதை உயிரூட்டமுள்ளதாக்குங்கள்

துவக்கத்தில் சொன்னவிதமாக கிம்பர்லிக்கு பைபிளை வாசிப்பது படு போராக இருந்தது. ஆம், பைபிள் மிகப் பழமையான புத்தகம்⁠—⁠கம்ப்யூட்டர், டிவி அல்லது விமானம் கண்டுபிடிப்பதற்கு வெகுகாலத்திற்கு முன்பு எழுதப்பட்டது⁠—⁠பைபிளின் கதாபாத்திரங்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார்கள். இருந்தாலும், ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது’ என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (எபிரெயர் 4:12) அவ்வளவு பழமையான புத்தகம் எப்படி வல்லமையுள்ளதாக இருக்க முடியும்?

நகல் எடுப்பவரான எஸ்றாவின் காலத்தில் ஆயிரமாயிரம் ஆண்களும் பெண்களும் ‘கேட்டு அறியத்தக்க அனைவரும்’ மோசேயின் நியாயப்பிரமாணம் வாசிப்பதைக் கேட்க எருசலேமுக்கு கூடிவந்தார்கள். அந்த சமயத்தில் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டு ஏற்கெனவே 1,000-⁠க்கும் அதிக வருடங்கள் கடந்திருந்தன! ஆனாலும், எஸ்றா மற்றும் அவருடைய உதவியாளர்கள் ‘தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.’ இந்த மனிதர் கடவுளுடைய வார்த்தையை விளக்கி, அதை உயிரூட்டத்துடன் வாசித்ததன் விளைவு? “ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள்.”​—நெகேமியா 8:1-12.

நீங்கள் பைபிளிலிருந்து வாசித்தவற்றிற்கு எவ்வாறு ‘அர்த்தஞ்சொல்ல’ முடியும்? வாசிப்பதை கஷ்டமானதாக கருதும் கேத்தி, வாசிக்கும்போது கவனம் சிதறாமல் இருப்பதற்காக சப்தமாக வாசிக்கிறாள். நிக்கி, வாசிக்கும்போது தன்னை அந்த சம்பவத்தின் சூழலில் வைத்துப் பார்க்கிறாள். “அந்த சூழ்நிலையில் நான் எப்படி உணருவேன் என கற்பனை செய்து பார்க்கிறேன்” என அவள் கூறுகிறாள். “ரூத்தையும் நகோமியையும் பற்றிய பதிவுதான் எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்த கதை. அதை எத்தனை தடவை வேண்டுமானாலும் என்னால் வாசிக்க முடியும். நான் ஒரு புதிய ஊருக்கு குடிமாறிச் சென்றபோது இந்தக் கதை எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. ஏனென்றால், முன்பின் யாருமே பழக்கமில்லாத ஒரு புதிய இடத்துக்கு போகும்போது ரூத் எப்படி உணர்ந்திருப்பாள் என என்னால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ரூத் எந்தளவுக்கு யெகோவாவை சார்ந்து இருந்தாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. யெகோவாவை சார்ந்திருக்க இது எனக்கு உண்மையில் உதவியது.”​—⁠ரூத், 1–4 அதிகாரங்கள்.

பைபிள் ‘வல்லமை’ செலுத்த வேண்டுமெனில் தியானிப்பது அவசியம். ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அந்த வசனங்களை சிந்தித்துப் பார்ப்பதற்கும் நீங்கள் கற்றவற்றை எப்படி பின்பற்றுவீர்கள் என்பதை சிந்திப்பதற்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய பைபிள் வாசிப்பை இன்னும் மேம்படுத்துவதற்கு யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்துள்ள பைபிள் படிப்புக்கு உதவும் பிரசுரங்களை எடுத்துப் பார்க்க நீங்கள் விரும்பலாம். b

முயற்சி தொடரட்டும்!

பைபிள் வாசிப்பு அட்டவணையை தவறாமல் பின்பற்றுவது சாமானியமான விஷயம் அல்ல. சிறந்த பைபிள் வாசிப்பு திட்டத்தைக்கூட அவ்வப்போது மாற்ற வேண்டி வரலாம். ஆனாலும் தினந்தோறும் பைபிள் வாசிக்கும் உங்கள் இலக்கை எப்படி விடாமல் தொடரலாம்?

நண்பர்களும் குடும்பத்தாரும் உங்களுக்கு உதவலாம். பதினைந்து வயது ஆம்பர் இவ்வாறு கூறுகிறாள்: “நானும் என்னுடைய தங்கையும் ஒரே அறையைத்தான் பகிர்ந்துகொள்கிறோம். சில நாள் ராத்திரி அதிக களைப்பாக இருந்தால் அப்படியே தூங்கிவிடலாம்போல் இருக்கும், ஆனால் என் தங்கையோ பைபிள் வாசிக்க வேண்டுமென்பதை ஞாபகப்படுத்தி விடுவாள். ஆகவே நான் பைபிள் வாசிக்க மறப்பதே இல்லை!” நீங்கள் வாசித்தவற்றில் ஏதாவது ஒரு வசனம் அல்லது ஒரு பகுதி ரொம்ப பிடித்திருந்தால் அதைப் பற்றி மற்றவர்களுடன் பேசுங்கள். இது கடவுளுடைய வார்த்தையிடம் உங்கள் மதித்துணர்வை அதிகரிக்கச் செய்யும்; பைபிள் வாசிப்பதற்கு மற்றவர்களின் அக்கறையையும் தூண்டிவிடலாம். (ரோமர் 1:10, 11) ஒரு நாளைக்கோ சிறிது காலத்திற்கோ பைபிளை வாசிக்காதிருந்தால், அப்படியே விட்டு விடாதீர்கள்! எதுவரை வாசித்து முடித்திருந்தீர்களோ அதிலிருந்து மீண்டும் தொடருவதன் மூலம் தவறாமல் அட்டவணையைப் பின்பற்றுவதற்கு திடதீர்மானமாக இருங்கள்.

தினமும் பைபிள் வாசிப்பதால் கிடைக்கும் ஏராளமான நன்மைகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். அவருடைய வார்த்தையின் வாயிலாக யெகோவாவுக்குச் செவிகொடுப்பதன் மூலம் அவருடன் நீங்கள் நெருங்கிய உறவை அனுபவித்து மகிழலாம். அவருடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் மிகத் தெளிவாக நீங்கள் அறிந்து கொள்வீர்கள். (நீதிமொழிகள் 2:1-5) பரலோகத் தகப்பனிடமிருந்து வரும் இந்த ஒப்பற்ற சத்தியங்கள் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்?” என சங்கீதக்காரன் கேட்டார். “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.” (சங்கீதம் 119:9) ஆகவே பைபிளை வாசிக்கும் பழக்கத்தை இப்போதே துவங்குங்கள், அதைத் தவறாமல் பின்பற்றுங்கள். நீங்கள் நினைத்துப் பார்த்திராத அளவுக்கு அதிக சுவாரஸ்யமாக இருப்பதைக் காண்பீர்கள்!(g01 8/22)

[அடிக்குறிப்புகள்]

a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

b அக்டோபர் 1, 2000 காவற்கோபுரம் இதழின் 16, 17 பக்கங்களில் பைபிளை இன்னும் ஆழ்ந்து படிப்பதற்கு உதவும் எண்ணற்ற நடைமுறையான ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

[பக்கம் 18-ன் படங்கள்]

ஜெபமும் ஆராய்ச்சியும் உங்கள் பைபிள் வாசிப்பை மேம்படுத்தி, வசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவும்

[பக்கம் 19-ன் படம்]

சம்பவத்தின் சூழலில் உங்களை வைத்துப் பார்ப்பது வேத வசனத்தை உயிரூட்டமுள்ளதாக்கும்