Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மரபோவ் தவறாக கணிக்கப்பட்ட பறவை

மரபோவ் தவறாக கணிக்கப்பட்ட பறவை

மரபோவ்—தவறாக கணிக்கப்பட்ட பறவை

கென்யாவிலுள்ள விழித்தெழு! எழுத்தாளர்

“மரபோவ் மாதிரி தோஷம் பிடித்த வேறெந்த பறவையையும் . . . நான் பார்த்ததில்லை.”—​உலகின் வனவாழ் வாழிடங்கள்​—⁠ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கு (ஆங்கிலம்).

ஆப்பிரிக்க வானில் ஆனந்தக் கூத்தாடி திரியும் பறவைகள் ஏராளம்! ஆனால் மரபோவ் என்ற பறவையைப் போல வேறெந்த பறவை மீதும் விமர்சன தோட்டாக்கள் பாயவில்லை. மூர்க்கத்தனமானது, அவலட்சணமானது, அருவருக்கத்தக்கது​—⁠இவையெல்லாம் மரபோவின் மீது பாயும் சில விமர்சன குண்டுகள். ஆகவே, மரபோவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இல்லை என்பது தெளிவாகிறது.

நளினமும் இன்னிசை கீதம் பாடும் இனிய குரல்வளமும் படைத்த பறவைகளே உங்களுக்கு பரவசமூட்டுகின்றனவா? அப்படியென்றால், இவற்றையெல்லாம் மறந்துவிடுங்கள்​—⁠மரபோவுக்கு இந்த அம்சங்கள் எதுவுமே இல்லை. அவற்றின் தலையும் கழுத்தும் இளஞ்சிவப்பு நிறத்தில் வழுக்கையாக இருக்கின்றன. பார்ப்பதற்கு எதையோ பறிகொடுத்தது போல சோகமே உருவாக காட்சியளிக்கின்றன. முதிர்ந்த மரபோவ்களின் கழுத்தில், பலூன் போன்ற சிவப்பு நிற பை தடித்து உருண்ட ‘டை’ போன்று கழுத்தில் தொங்குகிறது. அந்தப் பை அதன் அழகைக் கெடுக்கிறது என பலர் நினைக்கிறார்கள். இருந்தாலும், கென்யாவின் தேசிய அருங்காட்சியகங்களில் பறவையியல் துறையின் தலைவர் டாக்டர் லீயான் பெனூன் இவ்வாறு நினைப்பூட்டுகிறார்: “அந்தப் பை நமக்குப் பார்ப்பதற்கு அருவருப்பாக இருப்பதால் மரபோவுக்கும் அருவருப்பாக இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.” ஆனால் அந்தப் பையின் உயிரியல் செயற்பாட்டைப் பற்றி இன்று வரை யாருக்குமே தெரியாது.

அதைப் போலவே அப்பறவையின் உணவு பழக்கமும் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும். அது அழுகிய மாம்சத்தை உண்பதே அதற்கு ஒரு காரணம். செத்த சொத்தைகள் எதுவும் தென்படவில்லை என்றால் மட்டுமே தன் அகோர பசியை போக்க மற்ற பறவைகளை பதம்பார்ப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே, அநேகர் அதை ‘சீ’ என வெறுப்பதில் ஆச்சரியமில்லை.

அருவருப்பான தோற்றமும் பழக்கவழக்கங்களும் இருந்தாலும் எண்ணிறந்த மெச்சத்தக்க பண்புகளும் மரபோவுக்கு உண்டு. யாருமே ஏறெடுத்தும் பார்க்க விரும்பாத இப்பறவையைப் பற்றி நன்கு அறிந்துகொள்ள எங்களுடன் வாருங்களேன்.

பறவைகளில் ராட்சச பறவை

நாரை இனத்தில் மரபோவே மிகப் பெரியது என்று கூறப்படுவது உண்மையாய் இருக்கலாம். முழு வளர்ச்சியடைந்த ஆண் மரபோவ் 150 சென்டிமீட்டர் உயரம் வரை வளரலாம்; அதன் எடையோ 8 கிலோவுக்கும் அதிகம். பெண் மரபோவ்கள் கொஞ்சம் சிறியவை. இப்பறவையின் தடித்த ஆப்பு வடிவ அலகு 30 சென்டிமீட்டருக்கும் அதிக நீளமாக வளரலாம்​—⁠பிணங்களை பிய்த்தெடுக்க வலிமைமிகு ஆயுதம்.

இந்த நாரை பெரியதாக இருந்தாலும் பறப்பதில் படு கில்லாடி. 2.5 மீட்டருக்கும் அதிக நீளமான இறக்கைகளோடு வானில் மிதக்கும் இந்த மரபோவ், பறப்பதில் சாதனை படைக்கும் பிற பறவைகளுக்கு ஒன்றும் சளைத்ததல்ல. அது தலையை தோள்பக்கமாக சற்றே உள்ளிழுத்து கால்களை பின்னுக்கு நீட்டி பறக்கும்போது பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும். அனல் காற்றை அல்லது மேலெழும்பும் உஷ்ண காற்றை திறமையாக பயன்படுத்தி அவ்வளவு உயரத்தில் பறக்க முடிவதால், கீழேயிருந்து பார்த்தால் சில சமயங்களில் கண்ணுக்கே தெரியாது! ஏன், 4,000 மீட்டர் உயரம் வரைகூட மரபோவ்களால் பறக்க முடியுமே!

பொறுப்புள்ள பெற்றோர்

பெற்றோராக குடும்ப பொறுப்புகளை சரிவர செய்வது மரபோவின் மெச்சத்தக்க ஓர் அம்சம். சொல்லப்போனால், குழந்தை குட்டிகளை வளர்ப்பது சவால்மிக்க ஒரு வேலை. இந்த வேலை வீ(கூ)ட்டை கட்டுவதில் ஆரம்பமாகிறது. சௌகரியமான இடத்தை தேர்ந்தெடுத்த பிறகு ஆண் பறவை வீடுகட்ட ஆரம்பிக்கிறது, பெண் பறவையோ பிற்பாடு ஆண் பறவைக்கு கைகொடுக்கும். வீடு சிலசமயங்களில் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது. அது ஒன்றும் பிரமாதமாக அலங்கரிக்கப்படுவதில்லை. ஒரு மீட்டர் அகலமான அந்த வீடு, காய்ந்துபோன குச்சிகள், மரக்கிளைகள், இலைகள் போன்றவற்றால் கட்டப்பட்ட சீரற்ற திறந்த மேடையே. இனப்பெருக்கம் செய்யும் பறவை பாழடைந்த கூட்டையே குச்சிக் கம்புகளை வைத்து சற்று புதுப்பித்து சிலசமயங்களில் பயன்படுத்தும். மரபோவ்களின் சில குடியேற்றங்கள் மாறுவதே இல்லை; அவை ஒரே பகுதியில் 50 வருடங்களாக தொடர்ந்து கூடுகட்டி குஞ்சு பொரிப்பதாக அறியப்பட்டிருக்கிறது.

புது வீட்டிற்கு கட்டுமான பணி நடக்கும்போதே ஆண் பறவை பெண் பார்க்க ஆரம்பித்து விடுகிறது. பெரும்பாலான பறவை இனங்களின் பழக்கத்திற்கு முற்றிலும் வித்தியாசமாக, ஒரு பெண் மரபோவ் வரும் வரை ஆண் மரபோவ் வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறது. ஆண் மரபோவின் அன்பை பெற பல பெண் மரபோவ்கள் வலம் வருகின்றன. தட்டிக்கழிக்கப்படுதல் சர்வ சாதாரணம். ஆனால் முயற்சி திருவினையாக்கும்: கடைசியாக ஒரு பெண் மரபோவ் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அதன் பின் அவை இணை சேருகையில் இரண்டின் கழுத்துப் பைகளும் பலூன் போன்று ஊதிவிடுகின்றன. அப்போது, மற்ற மரபோவ்களை விரட்டும் நோக்குடன் அவை குரலெழுப்பும். குறிப்பிட்ட சில சமயங்களில் தங்களுடைய பெரிய அலகால் ‘டப்டப்’ என ஓசை எழுப்புவதைத் தவிர, பசுவைப் போன்று கத்துதல், ஓலமிடுதல், விசில் அடித்தல் போன்ற குரல்களே மரபோவ்கள் எழுப்பும் அறியப்பட்ட குரல்கள். அவற்றிற்கு இடையே பிரிக்க முடியாத பந்தம் மலர்கிறது; சிறிது நேரம் காணாமல் பின் கூட்டிற்குத் திரும்பும் துணைக்கு தோப்புக்கரண வரவேற்பு அளிக்கப்படுகையில் இது உறுதிப்படுகிறது. தலையை பின்புறமாக இழுத்து அலகால் நீண்ட நேரத்திற்கு ‘டப்டப்’ என ஓசை உண்டாக்குவதும் இந்த வரவேற்பில் அடங்கும்.

இரண்டும் ஒன்று சேர்ந்து வீடு கட்டி முடிக்கின்றன. அடைகாக்கும் வேலையையும் பகிர்ந்து கொள்கின்றன. ஒரு மாதம் அடைகாத்த பின்பு, இரண்டு அல்லது மூன்று சுண்ணாம்பு நிற முட்டைகள் பொரிந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக மெல்லிய இறகுகளைக் கொண்ட இளஞ்சிவப்பு நிற குஞ்சுகள் வெளிவருகின்றன. இப்பொழுது, பிள்ளைச் செல்வங்களை கவனிப்பதே பெற்றோரின் முக்கிய பொறுப்பாகி விடுகிறது. இந்தச் சின்னஞ்சிறு மரபோவ்கள் அருமையாய் பராமரிக்கப்படுகின்றன. அதிக ஊட்டச் சத்துள்ள மீன் போன்ற உணவு உட்பட, விறுவிறுப்பான போஷாக்குத் திட்டம் ஆரம்பமாகிறது. மரபோவ்கள் அடிக்கடி விஜயம் செய்யும் இடமாகிய சேற்று நிலப் பகுதிகளிலிருந்து அவற்றின் பெற்றோருக்கு ஏராளமான தவளைகள் கிடைக்கின்றன; இவையும் அப்பறவைகளின் உணவு திட்டத்திலுள்ள மற்றொரு ஐட்டம். அவ்வாறு உண்ட உணவுத் துண்டுகளை பெற்றோர் கூட்டில் வந்து கக்கும்; அந்தச் சிறு சிறு துண்டுகளை குஞ்சுகள் உணவாக உட்கொள்கின்றன. இந்த குஞ்சுகளின் வளர்ச்சி தாமதமாகவே நடைபெறுகிறது. நான்கு மாதங்களுக்குப் பின்பே​—⁠கூட்டை விட்டுப் பறக்கும் அளவுக்கு வளர்ந்த பின்பே​—⁠அவை சொந்தக் காலில் நிற்க ஆரம்பிக்கின்றன.

துப்புரவாளர்கள்

பிணந்தின்னி என அடிக்கடி இகழப்பட்டாலும், உண்மையில் மரபோவ் பயனுள்ள சேவையே ஆற்றுகிறது. பிற பிராணிகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகளால் ஆப்பிரிக்க சமவெளி அழுகிப்போன பிராணிகளின் சடலங்களால் நிறைந்துவிடுகிறது. அவற்றை அப்புறப்படுத்தவில்லை என்றால் எளிதில் நோய் பரவிவிடும்; அது மனிதனுக்கும் மிருகங்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும். ஆகவே, வேண்டாத கழிவுகளை அகற்றும் இப்பயனுள்ள சேவையை இந்த மரபோவ் செய்கிறது. வேட்டையாடி இரை பிடிக்கும் பசிவெறி கொண்ட பறவைகள் உட்பட, பிணந்தின்னி கழுகுகளுடன் சேர்ந்து இவையும் திறந்தவெளிகளில் செத்துக் கிடக்கும் உயிரினங்களுக்காக நோட்டமிடுகின்றன. அப்படி ஒன்று கண்ணில் பட்டால் மிகவும் வலிமைமிக்க பிணந்தின்னி கழுகுகள் அவற்றின் வளைந்த பலமான அலகுகளால் சடலங்களை கிழிக்கும்வரை இந்த மரபோவ்கள் காத்திருக்கின்றன. சந்தர்ப்பம் கிடைத்ததும் மரபோவ் தன் கத்தி போன்ற நீண்ட அலகால் லபக்கென ஒரு துண்டை கொத்திக் கொண்டு ஒதுங்கி நின்றுவிடுகிறது. பின் அடுத்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறது. கழுகுகள் திருப்தியாக சாப்பிட்டு முடித்த பின்பு, இப்போது மரபோவ் மிச்சம் மீதி இல்லாமல் தின்று முடிக்கும் நேரம் வருகிறது. எலும்புகளைத் தவிர அவற்றால் விழுங்க முடிகிற அனைத்தையும் மரபோவ்கள் கபளீகரம் செய்துவிடுகின்றன. 600 கிராம் எடையுள்ள இறைச்சி துண்டுகளையும் சுலபமாக விழுங்கிவிடுகின்றன.

சமீப வருடங்களில் மரபோவ் தன்னுடைய குடியிருப்பு பகுதியைத் தவிர மற்ற பகுதிகளிலும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறது. அப்பறவைக்கு இப்போது மனித பயமே இல்லை; நகரம் முதல் கிராமம் வரை எல்லா இடங்களிலும் உள்ள குப்பைக் கொட்டும் இடங்களில் சர்வ சாதாரணமாக காணப்படுகிறது. அதன் பலன்? ஒரு சுத்தமான சுற்றுச்சூழல். கசாப்புக் கடைகளிலிருந்து வரும் கழிவுநீரிலுள்ள மிச்சமீதி துண்டுகளைக்கூட மரபோவ் விட்டுவைப்பதில்லை. இப்பறவை எதையும் தாங்கவல்லது என்பதை பின்வரும் உதாரணம் சித்தரிக்கிறது: மேற்கு கென்யாவிலுள்ள ஒரு கசாப்புக் கடையைச் சுற்றி ஏதேனும் துண்டு துணுக்குகள் கிடைக்காதா என நோட்டமிட்டுக் கொண்டிருந்த மரபோவ், ஒரு கசாப்பு கத்தியை அப்படியே விழுங்கி விட்டது. சில நாட்களுக்குப் பின்பு, அதே இடத்திற்கு அருகில் சுத்தமாக்கப்பட்ட பளபளப்பான கத்தி காணப்பட்டது. அதை கக்கிய அந்த மரபோவோ எந்தத் தீங்கும் இன்றி வழக்கம்போல் தன் வேலையைத் தொடர்ந்தது!

மரபோவின் எதிர்காலம்

இப்பறவை இனத்தைச் சேர்ந்த மிகப் பெரிய ஆசிய அட்ஜுடன்ட் நாரை மறைந்து வந்தாலும், மரபோவ் இனம் பெருகிவருகிறது. அதன் இயற்கை சூழலில் அதற்கு எந்த எதிரிகளும் இல்லை. கடந்த காலங்களில் அதன் பயங்கர எதிரி மனிதனே. பெரிய மரபோவை சுட்டு வீழ்த்தி அதன் பின்பகுதியிலுள்ள பட்டு போன்ற இறகுகளைப் பிடுங்கி பெண்களின் முக்காட்டை அலங்கரிப்பார்கள். உலகின் நாரைகள் தலைக் கத்தி கொண்டான்கள் மற்றும் கரண்டி மூக்கு நாரைகள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “கை விசிறியும் பெண்களின் நெஞ்சம் கவர்ந்த சில அலங்காரப் பொருட்களும் மிகப் பெரிய ஒல்லியான வெறுப்பூட்டும் தோற்றமுடைய ஊர்த்தோட்டியின் மென்மையான, அழகான இறகுகளால்தான் செய்யப்படுகின்றன என்பதை நம்பமுடியவில்லை.” அவற்றை பல வருடங்களாக கண்டபடி கொல்வது ஒரு வழியாக குறைந்திருப்பதால் அவற்றின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. மரபோவைப் பற்றி நாம் இதுவரை சுருக்கமாக பார்த்ததிலிருந்து இது இகழத்தக்கதும் மோசமாக விமர்சிக்கப்படத்தக்கதும் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. சுற்றுப்புறத்தை சுத்தம் செய்வதில் அதன் திறமையும் உழைப்பும் நமக்கு பெரிதும் நன்மை பயக்குகிறது. பறவைகளிலேயே மிக அழகாக இல்லாவிடினும் தன் தாழ்ந்த நிலையிலேயே படைப்பாளருக்கு மகிமை சேர்க்கிறது.​—சங்கீதம் 148:7, 10.(g01 8/8)

[பக்கம் 22-ன் படம்]

இப்பறவையின் தடித்த ஆப்பு வடிவ அலகு 30 சென்டிமீட்டருக்கும் நீளமாக வளரலாம்

[பக்கம் 2223-ன் படங்கள்]

மரபோவின் இறக்கைகள் 2.5 மீட்டருக்கும் அதிக நீளமானது

[படத்திற்கான நன்றி]

© Joe McDonald

[பக்கம் 23-ன் படம்]

மரபோவ் குஞ்சுகள் அருமையாக பராமரிக்கப்படுகின்றன

[படத்திற்கான நன்றி]

© M.P. Kahl/VIREO

[பக்கம் 24-ன் படம்]

மரபோவின் கழுத்திலுள்ள பையின் உயிரியல் செயற்பாடு யாருக்குமே தெரியாது

[பக்கம் 25-ன் படம்]

கூடு சிலசமயங்களில் தரையிலிருந்து 30 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது