முதியோரைப் பற்றிய பொய்களும் உண்மைகளும்
முதியோரைப் பற்றிய பொய்களும் உண்மைகளும்
முதுமை பற்றிய பொய்கள் ஏராளம். உலக சுகாதார நிறுவனத்தின் முதுமை மற்றும் ஆரோக்கிய திட்டம் வெளியிடும் “முதுமை—பொய்களை தகர்த்தல்” என்ற பிரசுரம் இந்த பொய்கள் சிலவற்றை அம்பலப்படுத்துகிறது. இதோ சில உதாரணங்கள்.
பொய்: தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில்தான் அதிக எண்ணிக்கையான முதியோர் வாழ்கின்றனர்.
உண்மை: உலகிலுள்ள 58 கோடி முதியோர்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில்தான் வசிக்கின்றனர். மருத்துவ வசதி, கழிவு நீக்கம், வீட்டு வசதி, ஊட்டச்சத்து போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதன் காரணமாக இந்த நாடுகளிலுள்ள அநேகர் முதிர் வயதுவரை வாழ்கின்றனர்.
பொய்: முதியோரால் எந்த பயனுமில்லை.
உண்மை: சம்பளமில்லாத அநேக வேலைகளை செய்வதன் மூலம் முதியோர் பெருமளவில் உதவியளிக்கின்றனர். உதாரணமாக, ஐக்கிய மாகாணங்களில் ஏறக்குறைய 20 லட்சம் பிள்ளைகளை அவர்களுடைய தாத்தா பாட்டிமாரே கவனித்துக் கொள்கின்றனர்; அவர்களில் 12 லட்சம் பிள்ளைகள் தங்கள் தாத்தா பாட்டிமாரின் வீட்டிலேயே வாழ்கின்றனர். இவ்வாறு முதியோர் தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு இருப்பிடம், உணவு, கல்வி போன்றவற்றை அளித்து, பாரம்பரிய மதிப்பீடுகளையும் ஊட்டி வளர்க்கின்றனர். அதன் மூலம் தாய், தந்தைமார்கள் தொடர்ந்து வேலைசெய்ய உதவுகின்றனர். அதைப்போலவே, முதியோரின் உதவி இல்லையெனில் தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளிலுள்ள அநேக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்பட முடியாது. அதிகம் தேவைப்படும் கவனிப்பாளர்களாகவும்கூட அவர்கள் சேவிக்கின்றனர். வளரும் நாடுகள் சிலவற்றில் வயது வந்தோரில் சுமார் 30 சதவிகிதத்தினருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதால், பாதிக்கப்பட்ட தங்கள் வயதுவந்த பிள்ளைகளை முதியோரே கவனித்துக் கொள்கின்றனர்; அவர்கள் மரித்த பிறகு அனாதையாகிவிடும் தங்கள் பேரப்பிள்ளைகளையும் அவர்களே வளர்க்க வேண்டியிருக்கிறது.
பொய்: தங்கள் வேலைகளை செய்ய முடியாத காரணத்தாலேயே முதியோர் அவற்றை விட்டுவிடுகின்றனர்.
உண்மை: முதிர்வயதின் காரணமாக வேலையை விடுவதற்கு பதிலாக அநேக சமயங்களில் போதிய கல்வி அல்லது பயிற்சி இல்லாத காரணத்தால் அல்லது ஏஜியிஸம் (முதியோருக்கு எதிரான தப்பெண்ணம்) காரணமாகத்தான் அவர்கள் வேலையை விட்டுவிடுகின்றனர்.
பொய்: முதியோர் வேலைசெய்ய விரும்புவதில்லை.
உண்மை: தொடர்ந்து வேலைசெய்ய முதியோருக்கு விருப்பமும் திறமையும் இருந்தபோதிலும் சம்பளம் கிடைக்கும் வேலைகளிலிருந்து அவர்கள் அடிக்கடி நீக்கப்படுகின்றனர். முக்கியமாய், வேலைவாய்ப்பற்ற சமயங்களில் வேலை தேடும் வாலிபருக்கு இடமளிக்கும் வண்ணம், சம்பளம் பெறும் வேலைகளிலிருந்து முதியோர் ஓய்வுபெற வேண்டும் என வாதாடப்படுகிறது. ஆனால், முதியோர் வேலையைவிட்டு சீக்கிரத்தில் நீங்கிவிட்டாலே வாலிபருக்கு வேலை கிடைத்துவிடும் என்று அர்த்தமாகாது. வேலை தேடும் ஒரு வாலிபனிடம், முதிர்ச்சி வாய்ந்த வேலையாளை மாற்றீடு செய்யுமளவிற்கு போதுமான திறமைகள் இருக்காது. அனுபவமிக்க, முதிர்ந்த வேலையாட்கள் இருப்பதே உற்பத்தியை காத்துவருவதற்கும் வேலையாட்களின் ஸ்திரத்தன்மைக்கும் உதவும்.
இந்த உண்மைகளை மனதில் கொண்டு இந்த உலகமானது முதியோரை, நன்றாக உபயோகிக்கக் கூடிய விசேஷித்த திறமைகளின் ஊற்றுமூலமாக கருத வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் (WHO) குறிப்பிடுகிறது. “தேசங்கள் . . . தங்கள் முதியோரை ஒரு பிரச்சினையாக அல்ல, ஆனால் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழியாக நோக்க வேண்டும்” என WHO-வின் முதுமை மற்றும் ஆரோக்கிய திட்டத்தின் தொகுதி தலைவரான அலெக்ஸான்டர் கலஷ் கூறுகிறார். அதுதானே உண்மை!(g01 8/8)