Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அடிமை வியாபாரத்தை கடவுள் கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா?

அடிமை வியாபாரத்தை கடவுள் கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா?

பைபிளின் கருத்து

அடிமை வியாபாரத்தை கடவுள் கண்டும் காணாமல் விட்டுவிட்டாரா?

பெரிய பஞ்சு மூட்டைகளின் பாரம் அழுத்த, கூன்விழுந்த கருத்த மேனியுள்ள மனிதர்களின் உடல் வியர்த்துக்கொட்ட ஆடுமாடுகளைப் போல அவர்களை கப்பலில் ஏற்றுகிறார்கள். ஈவிரக்கமில்லாத மேற்பார்வையாளர்கள் தோல் சவுக்கால் அடித்து இவர்களை ஓட ஓட விரட்டி வேலை வாங்குகிறார்கள். கண்ணீர்விடும் தாய்மார்களின் கையிலிருந்து கதறியழும் குழந்தைகளைப் பறித்து ஏலத்தில் அதிக விலை கூறுபவரிடம் விற்கிறார்கள். அடிமைத்தனத்தைப் பற்றி நினைத்தவுடன் இந்த பரிதாபமான, கொடூரமான காட்சிகள்தான் மனதுக்கு வருகின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால், அடிமைகளை வைத்து வியாபாரம் செய்தவர்களும் அடிமைகளின் சொந்தக்காரர்களும் ஆழ்ந்த மதப்பற்றுள்ளவர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது. சரித்திராசிரியர் ஜேம்ஸ் வால்வின் இவ்வாறு எழுதினார்: “இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கணக்கான ஐரோப்பியரும் அமெரிக்கரும் அடிமைகளை ஏற்றிக்கொண்டு மேற்கத்திய நாடுகளை நோக்கி பயணிக்க ஆரம்பித்தவுடன் லாபகரமான, ஆபத்தில்லாத இந்த வியாபாரத்தை ஆசீர்வதித்தமைக்காக கடவுளைத் துதித்தனர்.”

அடிமை வியாபாரத்திற்கு கடவுளின் ஆதரவு உண்டு என்றுகூட சிலர் உறுதியாக கூறியிருக்கின்றனர். உதாரணமாக 1842-⁠ல் மெத்தடிஸ்டு புராட்டஸ்டன்டு சர்ச்சின் பொதுக் கூட்டத்தில், அடிமைத்தனம் “கடவுளே நியமித்த” ஒன்று என்று அலெக்ஸாண்டர் மக்கேன் கூறினார். மக்கேன் கூறியது சரியா? மக்கேனின் காலத்தில் அடிமை வியாபாரத்தில் மிக முக்கியமாய் உட்பட்டிருந்தபடி, பெண்கள் கடத்தப்படுவதையும் கற்பழிக்கப்படுவதையும் இரக்கமே இல்லாமல் குடும்பங்கள் பிரிக்கப்படுவதையும் கொடூரமாக அடிக்கப்படுவதையும் கடவுள் ஏற்றுக்கொண்டாரா? இன்று மிகவும் மோசமான நிலைமைகளில் அடிமைகளாக வாழ்ந்து வேலைசெய்யும்படி நிர்ப்பந்திக்கப்படும் லட்சக்கணக்கானோரைப் பற்றி என்ன? மனிதாபிமானமே இல்லாமல் மக்கள் நடந்துகொள்கையில் கடவுள் அதை பொறுத்து கொள்கிறாரா?

அடிமைத்தனமும் இஸ்ரவேலரும்

‘மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆளுகிறான்’ என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 8:9) வேறு செயல்களைவிட மனிதன் மனிதனைக் கொடுமைப்படுத்தும் இந்த அடிமைத்தன செயல்களில்தான் இது மிகவும் உண்மையாக உள்ளது. அடிமைத்தனத்தினால் இழைக்கப்பட்டிருக்கும் துயரங்களை யெகோவா தேவன் கண்டும் காணாதவர் போல் இல்லை.

உதாரணமாக, இஸ்ரவேலருக்கு ஏற்பட்ட இந்த நிலைமையை எடுத்துக்கொள்ளுங்கள். எகிப்தியர்கள் “சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக் கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது. “இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது.” அவர்கள் தவிக்கையில் யெகோவா அதைக் கண்டுகொள்ளாமல் இருந்தாரா? இல்லை, “தேவன் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.” அதுமட்டுமல்லாமல் யெகோவா தம்முடைய மக்களிடம் இவ்வாறு கூறினார்: “உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி” மீட்பேன்.​—யாத்திராகமம் 1:14; 2:23, 24; 6:6-8.

துஷ்பிரயோக அடிமைத்தனத்தின் மூலம் ‘மனிதனை மனிதன் ஆளுவதை’ யெகோவா அங்கீகரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் பிற்காலங்களில் அவருடைய மக்கள் மத்தியில் இந்த அடிமைத்தனத்தை கடவுள் அனுமதிக்கவில்லையா என்ன? ஆம், அனுமதித்தார். ஆனால், இஸ்ரவேலில் இருந்த அடிமைத்தனத்திற்கும் வரலாறு முழுவதிலுமாக இருந்து வந்திருக்கும் கொடூர அடிமைத்தனத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

எவராவது ஒரு மனிதனைக் கடத்திக்கொண்டு போய் அவனை விற்றால் அதற்கு மரண தண்டனை என்று கடவுளுடைய நியாயப்பிரமாணம் கூறியது. அதோடு, அடிமைகளைப் பாதுகாப்பதற்காக யெகோவா வழிநடத்துதல்களை அளித்திருந்தார். உதாரணமாக, ஒரு எஜமான் தன் அடிமையை ஊனமாக்கிவிட்டால், அவன் அந்த அடிமையை விடுதலை செய்ய வேண்டும். எஜமான் அவனை அடித்ததால் அவன் செத்துப்போனால் அந்த எஜமானுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. சிறைப்பிடித்து கொண்டுபோகப்பட்ட பெண்கள் அடிமைகளாகலாம் அல்லது மனைவிகளாகலாம். ஆனால் அவர்களை வெறும் உடல் இன்பத்திற்காக மாத்திரமே பயன்படுத்திக் கொள்ளக்கூடாது. நியாயப்பிரமாண சட்டத்தின் சாரம், உண்மை மனமுள்ள இஸ்ரவேலர் தங்கள் அடிமைகளை கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலையாட்களைப் போலவே அன்போடும் மரியாதையோடும் நடத்துவதற்கு வழிநடத்தியிருக்க வேண்டும்.​—யாத்திராகமம் 20:10; 21:12, 16, 26, 27; லேவியராகமம் 22:10, 11; உபாகமம் 21:10-14.

யூதர்கள் சிலர் தங்கள் கடன்களை அடைப்பதற்காக சக யூதர்களுக்கு தாங்களாகவே மனமுவந்து அடிமைகளானார்கள். இந்தப் பழக்கத்தினால் மக்கள் பட்டினியிலிருந்து பாதுகாக்கப்பட்டார்கள், உண்மையில் வறுமையிலிருந்து மீளுவதற்கு இது அநேகரை அனுமதித்தது. அதோடு, யூத நாட்காட்டியிலுள்ள சில முக்கியமான கால கட்டங்களில் அடிமைகள் விரும்பினால் அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். a (யாத்திராகமம் 21:2; லேவியராகமம் 25:10; உபாகமம் 15:12) அடிமைகளைப் பற்றிய இந்தச் சட்டங்களின் பேரில் குறிப்பு சொல்கிறவராய் யூத அறிஞர் மோசஸ் மீல்சினர் இவ்வாறு கூறினார்: “ஒரு அடிமை என்றைக்கும் மனிதனே; அவன் ஒரு நபராகவே கருதப்பட்டான். அவனும் இயல்பான மனித உரிமைகளை பெற்றிருக்கிறான், எஜமானுக்குக்கூட அந்த உரிமைகளில் தலையிடுவதற்கு உரிமை கிடையாது.” சரித்திர ஏடுகளை கறைபடுத்தியிருக்கும் உலகின் கொத்தடிமை பழக்கத்துக்கு எத்தனை நேர் எதிர்மாறாக உள்ளது!

அடிமைத்தனமும் கிறிஸ்தவர்களும்

ரோம பேரரசின் பொருளாதார முறையில் அடிமைத்தனம் ஒரு பாகமாக இருந்தது; இதில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஆகவே கிறிஸ்தவர்கள் சிலர் அடிமைகளாக இருந்தார்கள், வேறுசிலர் அடிமைகளை வைத்திருந்தார்கள். (1 கொரிந்தியர் 7:21, 22) ஆனால் இயேசுவின் சீஷர்கள் தங்கள் அடிமைகளை மோசமாக நடத்தியிருப்பார்களா? நிச்சயமாக அப்படி நடத்தியிருக்க மாட்டார்கள்! ரோமரின் சட்டம் எதை அனுமதித்திருந்தாலும் சரி, கிறிஸ்தவர்கள் தங்கள் அதிகாரத்தின்கீழ் இருந்தவர்களை மோசமாக நடத்தியிருக்க மாட்டார்கள் என்று நாம் நிச்சயமாய் இருக்கலாம். கிறிஸ்தவராக மாறிய ஒநேசிமுவை ‘சகோதரனாக’ ஏற்றுக்கொள்ளும்படி பிலேமோனை அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். bபிலேமோன் 10-17.

மனிதரை மனிதர் அடிமைப்படுத்துவது மனித குலத்துக்காக கடவுளுடைய ஆதிநோக்கத்தின் பாகமாக இருந்ததா என்பதைப் பற்றி பைபிள் எந்த குறிப்பையும் சொல்வதில்லை. கடவுளுடைய புதிய உலகில் மனிதர்கள் சக மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பர் என்று எந்த பைபிள் தீர்க்கதரிசனமும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக வரப்போகிற அந்தப் பரதீஸில் நீதிமான் “தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”​—மீகா 4:⁠4.

பிறரை எந்த வகையிலும் மோசமாக நடத்துவதை பைபிள் ஆதரிப்பது கிடையாது. மறுபட்சத்தில் மனிதர்கள் மத்தியில் மரியாதையையும் சமத்துவத்தையும் அது ஊக்கப்படுத்துகிறது. (அப்போஸ்தலர் 10:34, 35) தாங்கள் எவ்வாறு நடத்தப்படும்படி விரும்புவார்களோ அவ்வாறே பிறரை நடத்தும்படி அறிவுறுத்துகிறது. (லூக்கா 6:31) அதோடு சமூக அந்தஸ்து எதுவாயிருந்தாலும் மற்றவர்களை தங்களைவிட மேலானவர்கள் என்று மனத்தாழ்மையுடன் கருதும்படியே கிறிஸ்தவர்களை பைபிள் ஊக்கப்படுத்துகிறது. (பிலிப்பியர் 2:3) இன்று, விசேஷமாக கடந்த நூற்றாண்டுகளில், பல தேசங்களில் காணப்படும் மோசமான அடிமைத்தனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த நியமங்கள் முற்றிலும் எதிர்மாறாக உள்ளன.(g01 9/8)

[அடிக்குறிப்புகள்]

a அடிமைகளில் சிலர் எஜமானரோடு எப்போதுமே தங்கியிருக்க நியாயப்பிரமாணம் வாய்ப்பளித்தது; இது, இஸ்ரவேலர் மத்தியில் இருந்த அடிமைத்தனம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

b அதைப் போலவே இன்று கிறிஸ்தவர்கள் சிலர் முதலாளிகளாக இருக்கின்றனர்; மற்றவர்கள் தொழிலாளிகளாக இருக்கின்றனர். முதலாளியாக இருக்கும் ஒரு கிறிஸ்தவர் தனக்கு கீழ் வேலை செய்பவரை எவ்வாறு மோசமாக நடத்தமாட்டாரோ அதேவிதமாகவே முதல் நூற்றாண்டிலிருந்த இயேசுவின் சீஷர்களும் தங்கள் வேலைக்காரரை கிறிஸ்தவ நியமங்களின்படி நடத்தியிருப்பார்கள்.​—⁠மத்தேயு 7:⁠12.