Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகமாக கவலைப்படுவதை நான் எப்படி நிறுத்துவது?

அதிகமாக கவலைப்படுவதை நான் எப்படி நிறுத்துவது?

இளைஞர் கேட்கின்றனர் . . .

அதிகமாக கவலைப்படுவதை நான் எப்படி நிறுத்துவது?

“ஓர் இளைஞன் அதிகமாக கவலைப்படுவது எதிர்காலத்தைப் பற்றித்தான். உங்களைப் பற்றியே நீங்கள் ரொம்ப கவலைப்படுவீர்கள். வீட்டைவிட்டு தனியாக போய்விட வேண்டுமா? பள்ளிக்குப் போக வேண்டுமா? முழுநேர ஊழியம் செய்ய வேண்டுமா? கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமா? இத்தனை விஷயங்களில் எதை செய்வது என்ற பயம் உங்களை கவ்விக்கொள்கிறது.”​—⁠ஷேன், 20 வயது.

நீங்கள் அதிகமாக கவலைப்படுகிறீர்களா? இளைஞர்கள் அநேகர் அதிகமாக கவலைப்படுகிறார்கள், பல்வேறு காரணங்களுக்காக கவலைப்படுகிறார்கள். பெற்றோருக்கு வழிகாட்டியாக வெளியிடப்பட்ட ஒரு செய்தி மடல் இவ்வாறு அறிக்கை செய்தது: “ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்பதே இன்றைய பருவ வயதினரின் முக்கிய கவலை என்பதை அண்மையில் உலகம் முழுவதிலும் 41 நாடுகளில் 15 முதல் 18 வயதுக்குள் இருந்த பருவ வயதினரிடம் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வு வெளிப்படுத்தியது.” அவர்களுடைய அடுத்த கவலை: பெற்றோருடைய உடல்நலம். தாங்கள் மிகவும் நேசிக்கும் ஒருவரை இழந்துவிடுவார்களோ என்ற கவலையும் முக்கிய இடம் வகித்தது.

“நிறைய மார்க் வாங்க வேண்டும்” என்பது ஐக்கிய மாகாணங்களில் உள்ள இளைஞர்கள் பலரின் கவலை என்பதை ஐ.மா. கல்வித்துறை நடத்திய சுற்றாய்வு கண்டுபிடித்தது. நிறைய பேர் ஷேனை (ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டவர்) போலவே நினைப்பதை அதே சுற்றாய்வு காட்டியது. அஷ்லி என்ற மற்றொரு பெண் இவ்வாறு கூறுகிறாள்: “என் கவலையெல்லாம் என்னுடைய எதிர்காலத்தைப் பற்றித்தான்.”

இன்னும் மற்ற இளைஞர்கள் தங்கள் சரீர பாதுகாப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். 1996-⁠ல் நடத்தப்பட்ட சுற்றாய்வின்படி, ஐக்கிய மாகாணங்களில் உள்ள சுமார் 50 சதவீத இளைஞர்கள் பள்ளியில் ஆபத்து அதிகமாகி வருவதாக நினைக்கிறார்கள். 80 லட்சத்திற்கும் அதிகமான பருவ வயதினர் (37 சதவீதத்தினர்) தங்களுக்குத் தெரிந்த ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்!

ஆனால் எல்லா கவலைகளுமே இத்தனை பயங்கரமானதாக இல்லை. அநேக இளைஞருக்கு தோழர்கள் சம்பந்தப்பட்ட கவலையே பெரிய கவலை. பெற்றோருக்காக இருக்கும் ஓர் ஆன்லைன் பத்திரிகை இவ்வாறு கூறுகிறது: “பருவ வயதினர் பாய் ஃப்ரெண்ட்ஸ் கேர்ல் ஃப்ரெண்ட்ஸ் இல்லையே என்றும் பல சமயங்களில் ஃப்ரெண்ட்ஸ் என்று யாரும் இல்லையே என்றும் கவலைப்படுகிறார்கள்.” மேகன் என்ற பருவ வயது பெண் இவ்வாறு கவலைப்படுகிறாள்: “பார்க்க எப்படி ஸ்டைலாக, பந்தாவாக இருப்பது? எனக்கும் சில ஃப்ரெண்ட்ஸ் வேண்டும்.” இதே போலத்தான் 15 வயது கிறிஸ்தவ இளைஞன் நத்தானியேல் கூறுகிறான்: “பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் ஸ்டைலைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இவர்களுடைய நடையும் பேச்சும் தோற்றமும் மற்றவர்களின் கண்ணுக்கு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியே கவலைப்படுகிறார்கள். மற்றவர்களுடைய கேலி கிண்டலுக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்கள்.”

பிரச்சினைகள்​—⁠வாழ்க்கையில் சகஜம்

கவலையில்லா வாழ்க்கை அமைந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் பைபிள் இவ்வாறு சொல்கிறது: “ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்.” (யோபு 14:1) பிரச்சினைகளும் அதோடு சேர்ந்துவரும் கவலைகளும் வாழ்க்கையில் சகஜம். ஆனால் கவலையும் சஞ்சலமும் உங்களை ஆட்டிப்படைக்க நீங்கள் அனுமதித்துவிட்டால் உங்களுக்கே பல இன்னல்களை வருவித்துக் கொள்வீர்கள். பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்.”​—நீதிமொழிகள் 12:⁠25.

உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்வதன் மூலம் அனாவசியமான கவலைகளை தவிர்த்துவிடலாம். பதினாறு வயது ஆனா சொல்கிறாள்: “கர்ப்பமாகிவிடுவோமோ அல்லது பாலுறவினால் கடத்தப்படும் நோய் வந்துவிடுமோ என்று என் வகுப்பு மாணவிகள் பலர் கவலைப்படுகிறார்கள்.” பைபிளின் ஒழுக்க தராதரங்களை நீங்கள் உறுதியாக பற்றிக்கொண்டிருந்தால் இந்தக் கவலையெல்லாம் உங்களுக்கு இருக்காது. (கலாத்தியர் 6:7) ஆனால் உங்களுடைய எல்லா பிரச்சினைகளுமே இந்த அளவுக்கு தெளிவாக அல்லது எளிதில் தீர்த்துக்கொள்ள முடிகிறதாக இருக்காது. அப்படியென்றால் அளவுக்கு மீறி கவலைப்படுவதை எப்படி நிறுத்தலாம்?

“அளவுடன் கவலைப்படுங்கள்”

அநேகர் கவலையால் வாழ்க்கை அப்படியே ஸ்தம்பித்துவிட அனுமதிக்கிறார்கள். ஆனால் கவலையை ஆக்கபூர்வமான செயலாக மாற்றுவதன் மூலம் ஒருவர் “அளவுடன் கவலைப்பட” முடியும் என பருவ வயதினருக்காக வெளிவரும் பத்திரிகையில் ஒரு கட்டுரை குறிப்பிட்டது! அதைச் செய்வதற்கு உதவியாக பைபிளில் அநேக நியமங்கள் காணப்படுகின்றன. நீதிமொழிகள் 21:5-ஐ ([பழமொழி ஆகமம்] தமிழ் கத்தோலிக்க பைபிள்) எடுத்துக்கொள்ளுங்கள்: “சுறுசுறுப்புள்ளவனின் சிந்தனைகள் எப்போதும் சுகத்தைத் தரும்.” உதாரணமாக, சபையிலுள்ள நண்பர்கள் சிலருக்கு ஒரு சின்ன பார்ட்டி வைக்க நீங்கள் விரும்புவதாக வைத்துக்கொள்வோம். இதற்காக நன்கு திட்டமிட்டால் கவலை பெருமளவு குறையும். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள், ‘நான் யாரை அழைக்கப்போகிறேன்? அவர்கள் எத்தனை மணிக்கு வரவேண்டும்? எத்தனை மணிக்குப் போகவேண்டும்? சிற்றுண்டிகள் எவ்வளவு தேவைப்படும்? எல்லாருக்கும் என்ன விளையாட்டுகள் பிடிக்கும்?’ இந்த எல்லா காரியங்களையும் நீங்கள் கவனமாக யோசித்து வைத்துக்கொண்டால், உங்கள் பார்ட்டி மிகவும் சுமுகமாக நடக்கும்.

ஆனால் காரியங்களை மிகவும் சிக்கலாக்கிக் கொண்டால் நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கும். விருந்தாளிகளுக்கு சாப்பாடு போடுவதற்காக தேவைக்கு அதிகமாக தன்னை வருத்திக்கொண்ட ஒரு பெண்ணுக்கு இயேசு கிறிஸ்து இந்த அறிவுரையை வழங்கினார்: “தேவையானது ஒன்றே.” (லூக்கா 10:42) ஆகவே ‘இந்தப் பார்ட்டி வெற்றிகரமாக நடப்பதற்கு உண்மையில் என்ன தேவை?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் ‘சிம்பிளாக’ வைத்துக்கொண்டால் கவலை குறைந்துவிடும்.

மற்றொரு கவலை பள்ளியில் உங்கள் பாதுகாப்பைப் பற்றியதாக இருக்கலாம். அங்கே நிலைமையை மாற்ற உங்களால் அதிகம் செய்ய முடியாதிருக்கலாம். ஆனால் நடைமுறையில் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்து உங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்” என்று நீதிமொழிகள் 22:3 கூறுகிறது. ஆபத்தான இடங்களை​—⁠ஒதுக்குப்புறமான இடங்களை மாத்திரமல்ல, அடங்காதவர்கள் பொதுவாக கூடும் இடங்களான கண்காணிக்கப்படாத இடங்களை​—⁠தவிர்த்துவிடுங்கள். இந்த இடங்களைத் தவிர்த்துவிட்டால் தொந்தரவுகளை தவிர்த்துவிடலாம்.

மற்றொரு கவலை பள்ளி பாடங்கள் பற்றியதாக இருக்கலாம். நிறைய வீட்டுப் பாடங்களை முடித்தாக வேண்டும், ஆகவே நேரத்தோடு முடிக்க முடியுமா என்ற கவலை உங்களுக்கு இருக்கலாம். பிலிப்பியர் 1:10-லுள்ள (NW) நியமம் மிகவும் பயனுள்ளது: ‘அதிமுக்கியமான காரியங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.’ ஆம், எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதைத் தீர்மானிக்க கற்றுக்கொள்ளுங்கள்! எந்தப் பாடம் அதிக முக்கியம் என்பதை கண்டுபிடித்து அதை முதலாவது செய்யுங்கள். அதன்பிறகு, அடுத்த பாடத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நாட்கள் செல்ல செல்ல, நிலைமையை சமாளித்துவிட ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஆலோசனை பெறுங்கள்

ஆரன் வாலிபனாக இருந்தபோது, முழுப் பரீட்சையில் பாஸாவதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டதால் அவனுக்கு நெஞ்சு வலியே வந்துவிட்டது. அவன் கூறுகிறான்: “என் பெற்றோரிடம் இதைப் பற்றி பேசினேன். அவர்கள் என்னை ஒரு டாக்டரிடம் அனுப்பினார்கள். என் இருதயத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்று அவர் உடனடியாக சொல்லிவிட்டு, கவலை எப்படியெல்லாம் உடலை பாதிக்கும் என்பதை விளக்கினார். பரீட்சைக்காக தயாரிப்பதில் என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்துவிட்டேன், இப்போது நான் என்னை கவனித்துக்கொள்வதைப் பற்றிதான் கவலைப்பட வேண்டும், அதுதான் முக்கியம் என்பதை என் பெற்றோர் எனக்கு எடுத்துச் சொன்னார்கள். என் கவலை மாயமாய் மறைந்தது, நெஞ்சு வலியும் போய்விட்டது; பரீட்சையையும் நல்லபடியாக எழுதினேன்.”

கவலை உங்களை பாரமாக அழுத்திக் கொண்டிருந்தால் அதை அடக்கி வைத்துக்கொள்ள வேண்டாம். முன்பு பாதி மேற்கோள் காட்டப்பட்ட நீதிமொழிகள் 12:25-ஐ முழுமையாக வாசித்துப் பாருங்கள்: “மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும்.” இருதயத்திலுள்ள “கவலை”யைப் பற்றி நீங்கள் பேசினால்தான் உற்சாகமூட்டும் “நல்வார்த்தை” உங்களுக்குக் கிடைக்கும்!

முதலாவதாக, உங்கள் பெற்றோரிடம் கலந்து பேச நீங்கள் விரும்பலாம்; அவர்கள் உங்களுக்கு ஆலோசனைகள் தரலாம். உங்கள் கிறிஸ்தவ சபையிலுள்ள முதிர்ச்சிவாய்ந்த ஆட்கள் உங்களுக்கிருக்கும் மற்றொரு உதவி. பதினைந்து வயதுள்ள ஜனல் இவ்வாறு கூறுகிறாள்: “உயர்நிலைப் பள்ளிக்குப் போவது பற்றி எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. சபையிலுள்ள ஒரு மூப்பரிடம் மனம்திறந்து பேசும்வரை போதைப்பொருட்கள், செக்ஸ், வன்முறை இதையெல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறேன் என்று பயந்தேன். நடைமுறையில் பயனுள்ள ஆலோசனைகள் பலவற்றை எனக்கு அவர் கொடுத்தார். இதையெல்லாம் சமாளித்துவிடலாம் என்ற தைரியம் எனக்கு உடனடியாக வந்துவிட்டது.”

தள்ளிப்போடாதீர்கள்

சில சமயங்களில் நாம் செய்ய வேண்டிய சில காரியங்களை செய்ய விருப்பமில்லாதிருப்பதால் அதை தள்ளிப்போடுகிறோம். பத்தொன்பது வயதுள்ள ஷவோனுக்கு சக கிறிஸ்தவர் ஒருவரோடு மனஸ்தாபம் இருந்தது. அதை பேசி சரிசெய்துவிட வேண்டும் என்பது அவளுக்குத் தெரியும், ஆனால் அதை அவள் தள்ளிப்போட்டாள். “அதை அதிகம் தள்ளிப்போட போட என்னை அது அதிகம் தொந்தரவு செய்தது” என்று அவள் ஒத்துக்கொள்கிறாள். ஷவோனுக்கு மத்தேயு 5:23, 24-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. உடனடியாக பிரச்சினைகளைப் பேசி தீர்த்துக் கொள்ளும்படி அவை கிறிஸ்தவர்களை ஊக்குவிக்கின்றன. “கடைசியாக நான் அதை செய்தபோது எனக்கு நிம்மதியாக இருந்தது” என்று அவள் கூறுகிறாள்.

ஒரு வேலையை செய்ய பிடிக்கவில்லை என்பதால் அல்லது ஒருவரை நேருக்கு நேர் எதிர்ப்பட்டு பேசி தீர்ப்பது சங்கடமாக இருக்கும் என்பதால் நீங்கள் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறீர்களா? சீக்கிரத்தில் அதை செய்துவிடுங்கள், உங்களுக்கு இருக்கும் பல கவலைகளில் ஒரு கவலை குறைந்துவிடும்.

சீரியஸான நிலைமைகள்

எல்லா நிலைமைகளையும் இத்தனை சுலபமாக சரிசெய்துவிட முடியாது. அப்துர் என்ற இளைஞனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனுடைய அம்மாவுக்கு புற்றுநோய். அம்மாவையும் தம்பியையும் இவன்தான் வேலைசெய்து காப்பாற்ற வேண்டும். தன் அம்மாவின் நிலைமையை நினைத்தால் அவனுக்கு கவலையாகத்தான் இருக்கிறது; ஆனால் அவன் இவ்வாறு சொல்கிறான்: “‘கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?’ என்று இயேசு சொன்னதன் குறிப்பை நான் புரிந்துகொண்டேன். நொந்து நூலாகிப் போய்விடுவதற்கு பதிலாக, இந்த நிலைமையை எப்படி முடிந்தவரை சமாளிக்கலாம் என்பதைப் பற்றி யோசிக்க பழகிக்கொண்டேன்.”​—மத்தேயு 6:⁠27.

வாழ்க்கையில் புயல்வீசுகையில் அமைதியாய் இருப்பதென்பது சுலபமல்ல. சிலர் வேதனையில் மிகவும் சோர்ந்துபோய் தங்களையே கவனித்துக்கொள்ளாமல், சாப்பிடவும் மாட்டார்கள். மனஅழுத்தத்தை சமாளிக்க உங்கள் பருவ வயதினருக்கு உதவுதல் என்ற ஆங்கில புத்தகம், அடிப்படையில் உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளாவிட்டால், “மனஅழுத்தத்தால் வரும் பாதிப்புகளை தாங்கிக்கொள்ளும் சக்தி உங்களுக்கு இருக்காது, உங்கள் உடல்நிலையும் மிகவும் மோசமடைய வாய்ப்பு அதிகமாகிறது” என்று கூறுகிறது. ஆகவே உங்கள் உடம்பை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். போதிய அளவு ஓய்வையும் ஊட்டச்சத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

பைபிளின் பின்வரும் ஆலோசனையை நீங்கள் பின்பற்றினால் உங்களுக்கு கிடைப்பது நிம்மதி. “கர்த்தர்மேல் [“யெகோவாமேல்,” NW] உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” (சங்கீதம் 55:22) ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஷேன் தன் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் கவலைப்பட்டான். “கடவுளுடைய வார்த்தையிலும் அவருடைய நோக்கங்களிலும் நான் என் கவனத்தை ஒருமுகப்படுத்த ஆரம்பித்தேன்” என்று அவன் கூறுகிறான். கடவுளை சேவிப்பதற்கு தன்னுடைய வாழ்க்கையை பயன்படுத்தினால் தன் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்பதை புரிந்துகொண்டான். (வெளிப்படுத்துதல் 4:11) “நான் என்னைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன்” என்று ஷேன் கூறுகிறான். “சிந்திப்பதற்கு இதைவிட அதிக முக்கியமான காரியங்கள் எனக்கிருந்தன.”

ஆகவே மிதமிஞ்சி கவலைப்படுவதாக உங்களுக்குத் தோன்றினால், உங்கள் பிரச்சினையை சமாளிப்பதற்கு ஆக்கபூர்வமான வழிமுறைகளைப் பற்றி யோசியுங்கள். முதிர்ச்சியுள்ளவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக யெகோவா ‘‘உங்களை விசாரிக்கிறவரானபடியால்” அவரிடம் உங்கள் கவலைகளைச் சொல்லுங்கள். (1 பேதுரு 5:7) அவருடைய உதவி உங்களுக்கு இருந்தால், நீங்கள் அளவுக்கு மீறி கவலைப்படுவதை நிறுத்திவிடுவீர்கள்.(g01 9/22)

[பக்கம் 13-ன் படம்]

உங்கள் கவலைகளை உங்கள் பெற்றோரிடம் கலந்து பேசுங்கள்

[பக்கம் 14-ன் படம்]

பிரச்சினைகளை நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக கையாளுகிறீர்களோ அவ்வளவு சீக்கிரமாக கவலைப்படுவதை நிறுத்திவிடுவீர்கள்