உலகிற்கு யார் உணவளிப்பார்?
உலகிற்கு யார் உணவளிப்பார்?
உயிரிகள் வாழும் உலகில் காணப்படும் பல்வகைமையை அழிப்பதற்கு பதிலாக, மனிதன் அதை பாதுகாக்க தொடங்குவானா? அதற்கு “கொள்கை அளவில் ஒரு பெரிய மாற்றம் தேவைப்படும்” என்று உயிரியலாளர் ஜான் டக்ஸல் கூறுகிறார். அப்படியொரு மாற்றம் நிகழவேண்டுமானால், “தாவர உயிரிகளின் பல்வகைமையால் கிடைக்கும் நன்மைகளை மனிதன் புரிந்துகொள்ள வேண்டும், நடைமுறையில் இருக்கும் பழக்கங்களை மாற்றிக்கொள்ள ஆசை இருக்க வேண்டும், புதிய அணுகுமுறைகளை பரிசோதித்துப் பார்க்க மனமிருக்க வேண்டும்” என்றும் கூறுகிறார்.
இப்படி பெரிய மாற்றங்கள் நிகழும் என்று நம்புவது பலருக்கு கடினமாக உள்ளது. பலர் டக்ஸலின் கருத்தை ஏற்றுக்கொள்வதுமில்லை. உயிரியலில் காணப்படும் பல்வகைமையின் நன்மைகளை மக்கள் இன்னும் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும் மற்ற விஞ்ஞானிகள் சிலர் அதை மிகைப்படுத்தி கூறுகின்றனர் என்றும் நினைக்கும் சுற்றுச்சூழியல் விஞ்ஞானிகளும் உள்ளனர். விஞ்ஞானிகள் இப்படி ஒரு பக்கம் தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்கிற அதே சமயத்தில், இத்துறையிலுள்ள சில வல்லுநர்களின் அபாய அறிவிப்புக்கு செவிசாய்க்காமல் இருந்துவிட முடியாது. உயிரியல் பல்வகைமையை இழந்துபோகிறோமே என்று மட்டும் அவர்கள் கவலைப்படுவதில்லை. இந்த இழப்புகளுக்குப் பின்னால் இருக்கும் பேராசையும் குறுகிய பார்வையும்கூட அவர்களை கலக்கமடையச் செய்கிறது. பல்வேறு எழுத்தாளர்களின் இந்தக் கருத்துக்களை கவனியுங்கள்.
“ஒரு நூற்றாண்டுக்கு முன்னால், இந்த கிரகமெங்கும் இருந்த கோடிக்கணக்கான விவசாயிகள் தாங்களே தங்கள் விதை பண்டகச் சாலையை கட்டுப்படுத்தி வந்தனர். . . . இன்று, விதை பண்டகச் சாலையைப் பெரும்பாலும் அறிமுகப்படுத்தி, மரபியல் நுட்பமுறையில் உருவாக்கி, தனி உரிமையை வைத்திருப்பது பன்னாட்டு கம்பெனிகளே. இவை அறிவியல் சொத்தாக தக்கவைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. . . . உடனடியாக கிடைக்கக்கூடிய லாபத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பையோடெக் தொழிற்சாலை, வழிவழியாக வரும் மரபணு சொத்தை அழித்துவிடுமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. எதிர்காலத்தில், எதற்கும் அசைந்து கொடுக்காத புதிய நோய்க்கு அல்லது சூப்பர் வைரஸுக்கு எதிராக பாதுகாப்பை அளித்து மிகுந்த மதிப்பைப் பெறப்போகும் அந்த மரபணு சொத்தையே அழித்துவிடலாம்.”—விஞ்ஞான எழுத்தாளர் ஜெரமி ரிஃப்கின்.
“முக்கியமாக கவனத்தில் வைக்க வேண்டியது உலக சந்தையும், தங்கு தடையற்ற வாணிகமும், பன்னாட்டு பொருளாதாரமுமே என்று மக்கள் தொடர்பு சாதனங்களில்
திரும்பத் திரும்ப தாரக மந்திரமாக கூறப்படுகிறது. செய்தித் துறை செல்வத்திற்கும் பெரிய கார்ப்பரேஷன்களுக்குமே முக்கியத்துவம் அளிக்கும்போது மத நம்பிக்கை போன்று இந்த பொருளாதார நம்பிக்கை அத்தனை ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது, இதை யாரும் எதிர்த்து கேள்வி எழுப்புவதுமில்லை.”—மரபியல் அறிஞர் டேவிட் ஸூசூகி.“மனித குலத்தின் ‘பொது பரம்பரை சொத்தாக’ இருக்கும் மரபணுக் குழுமம் அழிந்துபோகும் ஆபத்திலிருப்பதைக் குறித்து [வளர்ச்சியடைந்த நாடுகளின்] அரசாங்கங்களும் கார்ப்பரேஷன்களும் மிகவும் வருத்தப்படுவது” அவற்றின் மாய்மாலத்தை வெளிப்படுத்துவதாக சீட்ஸ் ஆஃப் சேன்ஜ்—த லிவிங் டிரெஷர் என்ற புத்தகத்தில் ஆசிரியர் கென்னி ஆஸபல் கூறுகிறார். நவீன விவசாய நுட்பங்களின் உபயோகத்தையும் ஒரு பயிரை மட்டுமே பயிர் செய்வதையும் ஊக்குவிப்பதன் மூலம் அவையும்கூட உயிரியல் பல்வகைமையை அச்சுறுத்திக் கொண்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.
சுற்றுச்சூழியல் நிபுணர்களின் பயங்கள் நியாயமானவையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், இந்தக் கிரகத்தின் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையோடிருப்பதை
நீங்கள் கடினமாக காண்பீர்கள். மனிதகுலத்தை பேராசை ஆட்டிப்படைப்பதால் அது இன்னும் எவ்வளவு காலம்தான் தாக்குப்பிடிக்கும்? இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருக்கும் பலர் அறிவியல்மீது நம்பிக்கை வைக்கின்றனர்.அறிவியலும் தொழில்நுட்பமும் நம்மை காப்பாற்ற முடியுமா?
அறிவியல் முன்னேற்றங்கள் அதிவேகமாகவும் அதிநுட்பமாகவும் நிகழ்ந்துகொண்டிருப்பதால் இந்த முன்னேற்றங்களின் லாப நஷ்டங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் அறிவியல் அறிஞர்கள் தவித்துக்கொண்டிருப்பது கவலை தருவதாக சமீபத்தில் ராயல் சொஸைட்டி ஆஃப் எடின்பர்க் கூறியது. “இயற்கை உலகைப் பற்றி மிகவும் குறைவான, அரைகுறையான உட்பார்வையைத்தான் விஞ்ஞானம் தருகிறது” என்று டேவிட் ஸூசூகி எழுதினார். “இந்தப் பூமியில் வாழும் உயிர் வகைகளைப் பற்றியோ, அவை எப்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கின்றன, ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதைப் பற்றியோ நமக்கு சரியாக தெரியாது.”
“மரபணு தொழில்நுட்ப சேர்க்கையால் உருவாக்கப்படும் உயிரிகளால் (Genetically Engineered Organisms [GEOs]) வரும் ஆபத்துக்களையோ அல்லது நன்மைகளையோ உறுதியாக சொல்வதற்கில்லை, எல்லா இடங்களிலும் அது ஒன்றுபோலவும் இருப்பதுமில்லை. . . . GEOs உட்பட, புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இனங்களால் சூழியல் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது” என்று சயன்ஸ் பத்திரிகை விளக்கியது.
நம்முடைய பல “முன்னேற்றங்கள்” உண்மையில் இருபுறம் கருக்குள்ள பட்டயமாகவே இருந்து வந்திருக்கின்றன. இவற்றால் சில நன்மைகள் கிடைக்கின்றன, அதே சமயத்தில் இவை மனிதன் ஞானத்தில் குறைவுபடுவதையும் அவனுடைய பேராசையையும் வெளிக்காட்டுகின்றன. (எரேமியா 10:23) உதாரணமாக, பசுமைப் புரட்சியால் ஏராளமாக உணவு உற்பத்தி செய்யப்பட்டு அநேகருக்கு உணவளிக்க முடிந்தபோதிலும், உயிரியல் பல்வகைமை இழந்து போவதற்கும் அது காரணமாக இருந்திருக்கிறது. பூச்சிக்கொல்லிகளையும், அதிக பணச்செலவை உட்படுத்தும் விவசாய நுணுக்கங்களையும் முன்னேற்றுவித்ததன் மூலம் பசுமைப் புரட்சியால் “பெரிய அளவில் தாவர உற்பத்தி செய்தவர்களும், வளர்ச்சி குறைந்த நாடுகளிலிருந்த மேல்தட்டு மக்களுமே மொத்தத்தில் பயனடைந்தார்கள், பொது மக்கள் இதனால் பயனடையவில்லை” என்று டாக்டர் மே-வான் ஹோ எழுதினார். உயிரியல் தொழில்நுட்பத்தை ஆதாரமாக கொண்ட விவசாயம் மாபெரும் சக்திவாய்ந்த தொழிலாக மாறி, உணவு உற்பத்திக்கு அதிகமாக விஞ்ஞானத்தையே சார்ந்திருக்கும் ஓர் எதிர்காலத்திற்கே நம்மை கொண்டு செல்கிறபோதிலும் இந்தப் போக்கே தொடர்கிறது.
ஆனால் இந்தப் பிரச்சினைகளைப் பார்த்து நாம் சோர்ந்துவிட வேண்டியதில்லை. உண்மையில் அவை மிக முக்கியமான ஒரு குறிப்பை நமக்கு உணர்த்துகின்றன. தற்போது இந்தக் கிரகத்தையும் அதன் வள ஆதாரங்களையும் நிர்வகித்துக் கொண்டிருக்கும் அபூரணமான மனிதரிடமிருந்து நாம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கக் கூடாது என்பதைப் புரிந்துகொள்ள பைபிள் நமக்கு உதவி செய்கிறது. இப்போதைக்கு, தோல்விகளும் தவறான நிர்வகிப்பும் மனித நிலைமையின் அங்கமாக ஆகியிருக்கின்றன. ஆகவே சங்கீதம் 146:3 இவ்வாறு புத்திமதி கூறுகிறது: “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” ஆனால் நாம் கடவுளை முழுமையாக நம்பியிருக்கலாம். (நீதிமொழிகள் 3:5, 6) நமக்கு உதவ வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது, அதற்கு வேண்டிய சக்தியும் அவருக்கு இருக்கிறது.—ஏசாயா 40:25, 26.
விரைவில் உயிர்த்துடிப்புள்ள செழிப்பான பூமி
பாழடைந்த ஒரு வீட்டை புதுப்பிப்பதற்கு முன்பு முதலில் அதிலிருந்து வேண்டாத பொருட்களை அப்புறப்படுத்துவோம். அதேவிதமாகவே, யெகோவா தேவனும் சீக்கிரத்தில் இந்தப் பூமியிலிருந்து எல்லா பொல்லாப்பையும் நீக்கிவிடுவார். நமது கிரகத்தையும் அதன் இயற்கை சொத்துக்களையும்—சக மனிதரையும்கூட—சொந்த நலனுக்காகவும் லாபத்துக்காகவும் சுரண்டிப் பிழைக்கத்தக்க ஏதுக்களாகவே நோக்கும் ஆட்களும் இதில் அடங்குவர். (சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 11:18) ஆனால் யாரெல்லாம் அவரை நேசித்து அவருடைய விருப்பப்படி செய்ய முயற்சிக்கிறார்களோ அவர்களை யெகோவா உயிரோடு பாதுகாப்பார்.—1 யோவான் 2:15-17.
அதன் பிறகு, பூமியும் அதிலுள்ள எண்ணிலடங்கா உயிரிகளும்—கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் உட்பட—கடவுள் ஏற்படுத்தும் அரசாங்கத்தால், அதாவது மேசியானிய ராஜ்யத்தால் ஆளப்படுவர். (தானியேல் 7:13, 14; மத்தேயு 6:10) அந்த ஞானமுள்ள அரசாட்சியில் பூமியில் விளைச்சல் எத்தனை அபரிமிதமாக இருக்கும்! சங்கீதம் 72:16 இவ்வாறு கூறுகிறது: “பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதன் விளைவு லீபனோனைப் போல அசையும்.” ஆம், உணவு இனிமேலும் சர்ச்சைக்கோ கவலைக்கோ உரிய விஷயமாக இருக்காது. மாறாக அது பாதுகாப்பாகவும் ஏராளமாகவும் இருக்கும்.
ஆகவே இந்த ஒழுங்குமுறை நம்பிக்கையற்ற மற்றும் நிச்சயமற்ற ஓர் இருளுக்குள் அதிகமதிகமாக மூழ்கிக்கொண்டிருக்கையில், யெகோவாவின் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் இங்கே இதே பூமியில் மகத்தான ஒரு எதிர்காலம் வரும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். யெகோவாவின் சாட்சிகள், மேம்பட்ட, நீதியுள்ள ஓர் உலகத்தை விரும்பும் அனைவரோடும் சந்தோஷமாக பகிர்ந்துகொள்ளும் ‘ராஜ்யத்தினுடைய நற்செய்தி’யில் இந்த நம்பிக்கை அடங்குகிறது. (மத்தேயு 24:14, NW) இந்த உறுதியான நம்பிக்கை இருப்பதால்—யெகோவா தம்முடைய மக்களுக்கு ஒரு தகப்பனைப்போல இருந்து கவனித்துக்கொள்வதால்—இப்போதேகூட நாம் ‘விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாய் வாழலாம்.’—நீதிமொழிகள் 1:33. (g01 9/22)
[பக்கம் 10-ன் படம்]
கடவுளுடைய ராஜ்யத்தில் உணவு பாதுகாப்பானதாகவும் ஏராளமாகவும் இருக்கும்
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
▲ FAO Photo/K. Dunn
[பக்கம் 9-ன் படத்திற்கான நன்றி]
◀ Tourism Authority of Thailand