Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

உலகை கவனித்தல்

‘மனசாட்சி கைதிகளுக்கு’ தைவான் வழங்கிய பொது மன்னிப்பு

“கட்டாய இராணுவ சேவைக்கு இணங்காததால் சிறைப்படுத்தப்பட்ட 19 ‘மனசாட்சி கைதிகள்’ உட்பட . . . 21 குற்றவாளிகளுக்கு [தைவானின்] ஜனாதிபதி சென் ஷ்வே-பியன் பொது மன்னிப்பு வழங்கினார்” என த சைனா போஸ்ட் அறிக்கை செய்கிறது. “மத சம்பந்தப்பட்ட காரணங்கள் நிமித்தம் கட்டாய இராணுவ சேவையில் சேர மறுத்ததால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 19 யெகோவாவின் சாட்சிகளும் சர்வதேச மனித உரிமை தினத்தன்று [டிசம்பர் 10, 2000] பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்படுவர்.” இந்த 19 பேரில் 14 பேர் நன்னம்பிக்கை உறுதிமொழியின் அடிப்படையில் ஏற்கெனவே விடுதலை பெற்றுவிட்டனர். இப்படி விசேஷ மன்னிப்பு அளிப்பது கடந்த பத்தாண்டுகளில் இதுவே முதல் தடவையாகும். “[யெகோவாவின்] சாட்சிகளும் சமாதானத்தை நாடும் அவர்களுடைய பணியும் என் நெஞ்சை வெகுவாய் கவர்ந்தது. . . . அவர்கள் சமாதானத்தைத் தெரிவு செய்வது மனிதரை உயர்வாய் மதிப்பதையே வெளிக்காட்டுகிறது. அதற்காகவே நாம் அவர்களுக்கு விசேஷித்த மரியாதை அளிக்க வேண்டும்” என யெகோவாவின் சாட்சிகளின் தரப்பில் வழக்காடிய சட்ட நிறுவனத்தின் வழக்குரைஞர் நைஜல் லீ சொன்னார். (g01 9/8)

சாக்லேட்​—⁠உடம்புக்கு நல்லதா?

சாக்லேட் உடம்புக்கு நல்லது என சிலர் சொல்வதாக நிஹோன் கேஸய் ஷிம்ப்யூன் என்ற ஜப்பானிய செய்தித்தாள் குறிப்பிடுகிறது. ஏன்? தமனிகளைக் கடினப்படுத்தும் நோயையும் புற்றுநோயையும் வராமல் தடுக்க உதவும் கோக்கோ பாலிஃபீனால் சாக்லேட்டில் உள்ளதே காரணம். மேலுமாக தடுப்பாற்றலை சமநிலைப்படுத்துவதிலும் உடலை உளைச்சலிலிருந்து குணமடைய உதவுவதிலும் சாக்லேட் மிக பயனுள்ளதாக இருப்பதாய் சொல்லப்படுகிறது. “பெருமளவு கோக்கோ கொட்டைகளோடு மிகக் குறைந்தளவு சர்க்கரையையும் எண்ணெய்யையும் சேர்த்து தயாரிக்கப்படும் உயர் தரமான சாக்லேட் பெரிதும் பயன்மிக்கது” என இபாராகி கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹிரோஷீகி இடாகூரா சொல்கிறார். எனினும், உடம்புக்குத் தேவையான “வெவ்வேறு பாலிஃபீனால்களை உடைய பச்சை, மஞ்சள் காய்கறிகளையும் புரதங்களையும்” சாப்பிடுவதன் அவசியத்தையும் அந்த பேராசிரியர் வலியுறுத்தினார்.(g01 9/8)

“புதிய காரின்” மணம்

கட்டடங்களின் இறுதி பூச்சுவேலைகளிலிருந்து வெளிப்படும் இரசாயனங்களின் மணம் சிலசமயங்களில் உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது; இது ஜப்பானில் “நோய்-வீடு சுகவீனம்” என குறிப்பிடப்படுகிறது. ஆனால் புதிய கார்களுக்குள் இருந்து அதிக செறிவுமிக்க இரசாயன நச்சுகள் வெளிப்படுவதாக த டெய்லி யோமியுரி என்ற செய்தித்தாள் அறிக்கை செய்கிறது. பொது நலத்திற்கான ஒசாகா ப்ரிஃபக்சரல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வாகனத்தை பரிசோதித்தார்கள்; உடல்நல மற்றும் பொதுநல அமைச்சகம் வீடுகளுக்காக நிர்ணயித்துள்ள வரம்புக்கும் மேல் சுமார் 34 மடங்கு அதிக செறிவுமிக்க, தீங்கு விளைவிக்கும் பொருட்கள் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். வாகனத்தை ஒரு வருடம் உபயோகித்த பின்னும் அதற்குரிய இரசாயன அளவு அதிகமாகவே இருந்தது. “அதிக நேரம் வாகனத்தினுள் இருக்கையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என தேசிய பொது உடல்நல நிறுவனத்தை சேர்ந்த இவாயோ உசியாமா குறிப்பிடுகிறார். எவ்வகையில்? “காரினுள் வெளிக்காற்று நன்கு உட்புக வசதி செய்கையில் வீட்டைக் காட்டிலும் சீக்கிரத்தில் அது காற்றோட்டமிக்கதாகும்” என அவர் சொல்கிறார்.(g01 9/8)

இன்னும் பேப்பருக்கு மவுசு

அலுவலகங்களில் முக்கியமாக கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதாலும் தகவல்களை மின்னியல் முறையில் சேகரிக்க முடிவதாலும் பேப்பர்கள் இனிமேல் அந்தளவுக்குத் தேவைப்படாது என சுமார் 25 வருடங்களுக்கு முன்பு கணிக்கப்பட்டது. எனினும் பேப்பர்களுக்கான தேவையோ தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வான்கூவர் சன் செய்தித்தாளின்படி ஜெராக்ஸ் மற்றும் ஃபேக்ஸ் இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் பேப்பரைப் பொறுத்ததில் 1992-⁠ல் உபயோகித்த அளவைக் காட்டிலும் 1999-⁠ல் கனடா நாட்டவர் 25 சதவீதம் அதிகமாக உபயோகித்திருக்கின்றனர். அதாவது, “பிள்ளைகள் உட்பட கனடா நாட்டவர் ஒவ்வொருவரும் வருடத்திற்கு 66 பவுண்டு (30 கிலோகிராம்) பேப்பர்” உபயோகிக்கின்றனர். அலுவலக பணியாளர்களிடம் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி, தகவல்களைத் தெரிந்துகொள்ள ஆரம்பத்தில் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்திய போதிலும் அவற்றை பேப்பர்களில் வாசிக்க மக்கள் விரும்புவது தெரிய வந்தது. சிறிய கம்ப்யூட்டர்களை வைத்திருப்பவர்களைப் பொறுத்ததிலும் இதுவே உண்மை என்கிறது சன். கம்ப்யூட்டர் திரையில் தாங்கள் படைப்பவற்றை எல்லாம் பிரின்ட் செய்ய விரும்புவதால் “பேப்பரை பெருமளவு உபயோகிப்பவர்கள்” ஆகிவிட்டனர் பிள்ளைகள்.(g01 9/22)