Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

எமது வாசகடரிமிருந்து

எமது வாசகடரிமிருந்து

எமது வாசகடரிமிருந்து

அன்பற்ற திருமணங்கள் என்னுடைய மண வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விட்டிருந்தது. நானும் என்னுடைய கணவரும் ஒருவரையொருவர் நேசிக்காமல் ஏதோ பொறுத்துப் போவது போல்தான் இருந்தது. சில சமயங்களில் மண விலக்கு செய்தால் என்ன என்றும் நினைத்திருக்கிறேன். ஆனால் “மண வாழ்வை மணம்வீச செய்ய முடியுமா?” (பிப்ரவரி 8, 2001) என்ற தொடர் கட்டுரையின் உதவியால் எங்கள் அன்பு மீண்டும் மணம் வீச ஆரம்பித்திருக்கிறது.

இ. ஆர்., ஸ்பெய்ன் (g01 9/8)

நான் ஒரு கிறிஸ்தவ மனைவிதான், ஆனாலும் கடந்த ஒரு வருஷமாக என்னுடைய மண வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்குள்ளாகியிருக்கிறது. ஏனெனில் நானும் என்னுடைய கணவரும் ஒருவரையொருவர் மிகவும் புண்படுத்தும் விதமாக நடந்துகொண்டோம்; நாங்கள் சமரச நிலைக்கு மீண்டும் வருவது முடியாத விஷயம் என தோன்றியது. ஆனால் நான் அந்தக் கட்டுரைகளை வாசித்தபோது, ‘மனந்தளராதே!’ என யெகோவா என்னிடம் சொல்வது போல இருந்தது. ஒருசமயம் நாங்கள் கொண்டிருந்த அன்பு மீண்டும் மலருவதற்கு நான் உண்மையில் கஷ்டப்பட்டு முயற்சி செய்ய அது என்னை தூண்டியது. அதற்கேற்ப என் கணவரிடத்திலும் மாற்றத்தை பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். இந்தக் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் ஆசை தீர வாசிப்பேன்.

என். எச்., ஜப்பான் (g01 9/8)

என்னுடைய மண வாழ்க்கை சந்தோஷமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு பிரயோஜனமாக இருக்கும் என நினைத்து அந்தக் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதன் ஆரம்ப வார்த்தைகளிலுள்ள நடைமுறைக் குறிப்புகள் என்னுடைய திருமண பந்தத்தையே பலப்படுத்துவதாக இருந்தது.

எம். டி., இத்தாலி (g01 9/8)

என்னுடைய சபையிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரி, அவருக்கும் விசுவாசத்தில் இல்லாத அவருடைய துணைவருக்கும் இடையில் சச்சரவு ஏற்பட்டு வந்ததால் இருவரும் பிரிந்து விட்டதாக என்னிடம் சொன்னார். கொஞ்ச காலத்திற்குப் பின், நிலைமை இப்பொழுது எவ்வளவோ தேவலை என அந்த சகோதரி கூறினார். ஏனெனில் அவர் அந்தக் கட்டுரைகளை ஆர்வமாக “விழுங்கியிருக்கிறார்;” பிரச்சினையை தீர்ப்பதற்கு அவை பெரிதும் உதவி செய்திருக்கின்றன. குறிப்பாக பேச்சுத்தொடர்பு சம்பந்தப்பட்ட குறிப்புகள் பயனுள்ளவையாக இருந்தன எனவும் அவர் சொன்னார். அந்தச் சகோதரியும் அவருடைய கணவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்கிறார்கள்.

என். எஸ்., கனடா (g01 9/8)

வென்ட்ரிலாக்கிஸம் “பேசுவது யாரோ?” என்ற கட்டுரையை வாசித்து நான் மிகவும் குழம்பிவிட்டேன். (பிப்ரவரி 8, 2001) ஏவாளை வஞ்சிப்பதற்கு சாத்தான் பயன்படுத்திய முறையும் இதுதானே? வஞ்சனையும் தந்திரமும் கிறிஸ்தவ வாழ்க்கையின் பாகமாக இருக்கக் கூடாது.

பி. எச்., ஐக்கிய மாகாணங்கள்

ஏவாளை வஞ்சிப்பதற்கு சாத்தான் எந்த முறையைக் கையாண்டிருந்தாலும், அது உண்மையான வென்ட்ரிலாக்கிஸ கலையாக இருந்திருக்க முடியாது; ஏனெனில் இந்தக் கலைக்கு, குறிப்பிட்ட சுவாச மற்றும் குரல்வள நுட்பங்கள் தேவைப்படுகின்றன; ஆனால் சாத்தானோ ஓர் ஆவி சிருஷ்டி. பொழுதுபோக்கிற்காக வென்ட்ரிலாக்கிஸத்தை பயன்படுத்துவதைக் குறித்து பைபிள் எவ்வித ஆட்சேபணையும் தெரிவிப்பதில்லை. பைபிள் காலங்களில் சிலர் செய்தது போல் இப்படிப்பட்ட கலையை தீய எண்ணத்துடன் ஒருவரை வஞ்சிப்பதற்காகவோ ஆவியுலக தொடர்பு சம்பந்தப்பட்ட பழக்கங்களுக்காகவோ பயன்படுத்தினால் அது உண்மையில் தவறாகும். (ஏசாயா 8:19)​—⁠ED. (g01 9/8)

எனக்கும்கூட வென்ட்ரிலாக்கிஸம் என்ற கலை ரொம்ப பிடிக்கும். அநேக கிறிஸ்தவ பார்ட்டிகளில் இந்த நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறேன். அந்தக் கட்டுரை குறிப்பிட்டபடி, சப்தம் எங்கிருந்து வருகிறது என்பதை சரியாக கணிப்பதற்கான சக்தி மனித காதுக்கு இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் ஒரு மிருகத்தை நீங்கள் ஏமாற்ற முடியாது என்பதே ஆச்சரியத்திலும் ஆச்சரியம். பொம்மையை பயன்படுத்தி நான் என்னுடைய நாயிடம் பேசினால் அது அந்த பொம்மையை அல்ல என்னையே பார்க்கும். மிருகங்களுக்கு கூர்மையான காதுகளை யெகோவா கொடுத்திருக்கிறார்.

எல். ஆர்., ஐக்கிய மாகாணங்கள் (g01 9/8)

டீனேஜ் காதல் எனக்கு 15 வயது; “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு காதலிக்க வயசு பத்தாது என்று பெற்றோர் நினைத்தால்?” என்ற கட்டுரையை நான் வாசித்து மகிழ்ந்தேன். (பிப்ரவரி 8, 2001) ஓரினப்புணர்ச்சியை விரும்புவதால்தான் நான் காதலிப்பதில்லை என பள்ளியில் உள்ள சிறுவர்கள் சொல்கிறார்கள். காதலிப்பதற்கு பெற்றோர் என்னை அனுமதிப்பதில்லை என பொதுவாக கூறினாலும், அதைவிட சிறந்த பதிலை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றே எப்போதும் விரும்பினேன். இந்தக் கட்டுரையை வாசித்த பின்பு இப்போது அவர்களுடைய கேள்விகளுக்கு எப்படி பதிலடி கொடுக்கலாம் என்பதை அறிந்து கொண்டேன். டீனேஜர்களாகிய எங்களை நீங்கள் நினைவில் வைத்திருப்பதற்காக மிக்க நன்றி.

சி. ஜி., ஐக்கிய மாகாணங்கள் (g01 9/22)